நிசப்த ரீங்காரம் • சிந்தனைத் தொடர் • பகுதி 11

பரமஹம்ச ரகசியம்

ஞானவள்ளல்

ண்பதுகளில் திரு வலம்புரி ஜானின் ‘தாய்’ வார இதழின் ஒரு சிறப்பிதழுக்காக எழுத்தாளர் ஆர். சூடாமணியிடம் ஒரு சிறு பேட்டி எடுத்தது நினைவு வருகிறது. மிக அருமையான மனிதர் அவர். அப்போதுதான் நான் இலக்கிய இதழ்களில் கதைகள் எழுத ஆரம்பித்தேன். பெரும் சுற்றிதழ்களில் அமோக வலம் வந்து, பிறகு புகழ்மோகம் விடுபட்டு நான் இலக்கிய இதழ்கள் பக்கம் என்னை அடையாளப் படுத்திக்கொள்கிற கவனத்துக்கு வந்திருந்தேன்.

தபால் தந்தித் துறையில் பணி அமருமுன்னால், என் கல்லூரிப் படிப்பு முடித்த ஜோரில், நான் கேரளம், கொல்லத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையமர்ந்தேன். என் மாமா பார்த்து அமர்த்திய வேலை அது. நன்றி மாமா. வேலை நேரம் தவிர கிடைத்த தனிமையில் நான் ஆங்கில நாவல்கள் வாசிப்பதை மேற்கொண்டபோது, அருமையான உலக இலக்கிய நூல்களைப் பரிச்சயப் பட்டேன்.

என் சித்தி மருமகள், அண்ணி திருமதி காயத்ரி ஹரிஹரன் மூலம் ஆங்கிலத்தில் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். நன்றி அண்ணி.

எழுத்தின் தாத்பரியம் என்ன, என கண் திறந்த வேளை எனக்கு அது. வணிக இதழ்க் கதைகளுக்கும், இலக்கிய முயற்சிகளுக்கும் என்ன வேறுபாடு? அவை என் கதைகளில் காண முடிகிற வேறுபாடேதான். முன்பு என் கதைகளில் சுவாரஸ்ய சம்பவங்கள், முடிச்சுகள், திருப்பங்கள் வைத்திருப்பேன். கடைசிவரை கதைகளில் பரபரப்பாக, வாசகன் எதிர்பாராத எதாவது நடக்கும். முடிவிலாவது அப்படி இருக்கும். அவனது கற்பனையை ‘ஹை ஜம்ப்’ தாண்டி ஒரு கதை சொல்ல முடிந்தால் அது எனது வெற்றி. அதுதான் வெற்றி… என இருந்தது நான் அறிந்த இளமை ததும்பும் எனது எழுத்துலகம்.

என் கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

எண்பதுகளின் கால கட்டம் அது. இந்த வாரம் என் கதை எந்த இதழில் வெளியாகும், அதற்கு ஓவியம் யார் வரைவார்கள், ம.செ., ராமு, ஜெயராஜ், லதா… என என் நண்பர்கள் பேசிக் கொண்டார்கள். பத்திரிகைகள் எனக்கு சன்மானம் அனுப்பின. நண்பர்களோடு நான் நிறைய சினிமா பார்த்தேன். உற்சாகமான பொழுதுகள். இந்த வாரம் என்னோடு என்ன சினிமா போகலாம்… எனவும் நண்பர்களிடம் யோசனை இருந்திருக்கலாம்.

ஆனால் உலக இலக்கியத் தடம் வேறு மாதிரி இருந்தது. சம்பவங்களை அல்ல, திறமையான எழுத்து மனிதர்களை அறிமுகப் படுத்தியது. வாழ்வின் விழுமியங்களை நோக்கிய ஆத்மாவின் தேடலைச் சொல்ல, அடையாளங் காட்ட முயன்றது. மனிதனை மானுடனாகப் பார்க்க அந்த எழுத்து ஆசைப்பட்டது.

நாம் அறிந்த உலகத்தைத் தான், ஆனால் அது, எழுத்து வேறு மாதிரி, கருணையோடு, நேசத்தோடு அறிமுகம் செய்தது. என்றால் அது நீதிபோதனையும் அல்ல. சத்தியத்தின் தரிசனம். வாழ்க்கை யதார்த்தம் என்பது என்ன? போலியான லட்சியப் பரவசத்தை நல்ல எழுத்து புறக்கணித்து விடும். சாமானியனின் கனவு காணும் தளத்தை அது நியாயப் படுத்தவில்லை. என்றாலும் அவனது வாழ்வு சார்ந்த நம்பிக்கையை அது குதறிப் போடவில்லை.

இந்த யதார்த்த சூழலைப் பிரதிபலித்தும், விலகியும் அது வாழ்வின் அடுத்த கட்டத்தைச் சுட்டிக் காட்ட வல்லது. ஆன்டன் செகாவ், ஹெமிங்வே போன்ற எழுத்துலவக மேதைகள் வாழ்க்கை என்றால் என்ன, என்று தங்களுக்குள் வைத்திருந்த மதிப்புகளை தங்கள் எழுத்தில் விவரப் படுத்துகிறார்கள். வாழ்க்கை சார்ந்து எழுத்தாளனுக்கு ஒரு சுய பார்வை விஸ்தாரம் உண்டு. அதுதான் அவன் கதைகளின் உயிர்நாடி, ஓர் எழுத்தாளனுக்கும் மற்றவனுக்கும் வித்தியாசம் இங்கேதான் காணக் கிடைக்கிறது.

வாழ்க்கை பல பரிமாணங்கள் கொண்டது. அது ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு முகம் காட்ட வல்லதாய் இருக்கிறது. அதுவே அதன் சுவாரஸ்யம். ஒரு செயலைச் செய்து ஒருவன் வெற்றி பெற்று விடுகிறான். இன்னொருவன் தோல்வி அடைகிறான். இதன் காரணங்கள் சுவாரஸ்யமானவை. எழுத்தாளன் இதை சிந்திக்கிறான். அவன் எழுத்து இப்படி யெல்லாம் சிந்திக்கக் தூண்டுகிறது.

ஹெமிங்வே ‘TO HAVE AND HAVE NOT’ என்று நாவல் ஒன்று எழுதினார். கடல் மீனவன் பற்றிய நாவல் அது. கடலில் மீன்பிடிக்கிற அனுபவம் வேண்டும் என்று ஒரு மீனவனுடன் படகில் சில மாதங்கள் கூடவே அவர் பயணம் செய்தார். கிட்டத்தட்ட அதற்கான சம்பவ வரிசையை அவர் மனதில் கொண்டு வந்துவிட்டார். ஒரு வேடிக்கை போல அவர் அந்த மீனவனிடம் “நான் இந்த மீனவ வாழ்க்கை பற்றி ஒரு நாவல் எழுதலாம்னிருக்கேன். என்ன தலைப்பு வைக்கலாம்?” என்று மீனவனைக் கேட்டாராம். மீனவன் வெட்கத்துடன் “எனக்கென்ன சாமி தெரியும்” என்று சொல்லியபடியே தன்யோசனையில் ஆழ்ந்தான். பிறகு பேசினான். “எனக்கு ஒரு ஆச்சர்யம் ஐயா. சில பேர் வாழ்க்கைல பிறக்கும் போதே எல்லா வசதியோடவும் சுகங்களோடவும் பிறந்து எல்லா சந்தோஷங்களையும் அனுபவிக்க வாய்க்குது. சில பேர் எந்த சுகமும் வசதியும் அனுபவிக்காமல் கஷ்டத்தோடவே வாழ்ந்திட்டு துக்கத்தோடவே செத்தும் போயிர்றாங்க.. அதான் ஏன்னு புரிய மாட்டேங்குது…” என்றானாம்.

ஹெமிங்வே அவன் நினைப்பிலேயே ‘TO HAVE AND HAVE NOT’ (இதை எப்படித் தமிழ்ப் படுத்துவது? – ஆசிகள் சாபங்கள்.) என்று தலைப்பு வைத்ததாகத் தெரிகிறது.

அதுவரை நான் எழுத்தில் காட்டிய வாழ்க்கை வேறு மாதிரியாய் இருந்தது. அத என் வாழ்க்கை போலக் கூட இல்லை, என நான் அறிந்துகொள்ள நேர்ந்து விட்டது. ஆக அதுவரையான என்னில் இருந்து இன்னொரு நான் வழி பிரிந்து என் எழுத்தில் இயங்க நேரிட்டது. முந்தைய நான் என் கற்பனை. இன்றைய நான் நிஜம். என்னை என் எழுத்தில் காண்க, என நான் கடைவிரிக்க ஆரம்பித்திருந்தேன்.

கொல்லத்தில் நான் ‘சைட் சூப்பர்வைசர்’ என ஒரு கட்டடம் கட்டும் வேலையில் இருந்தபோது, ஒரு சந்தர்ப்பத்தில் ஆரியங்காவு சுங்கச் சாவடியில் இருந்து எங்களுக்கு வந்த சரக்கு லாரியை பணம் கட்டி மீட்டுவர வேண்டி யிருந்தது. கதை அதுவல்ல. அந்த லாரியில் இரவு பதினோரு மணிவாக்கில் கொல்லம் திரும்புகிறோம். நான் எழுத வந்த புதிது அது. என் வயது 21.

இரண்டு ஆள் அணைத்தாலும் கட்டிப்பிடிக்க முடியாத பெரிய பெரிய மரங்களின் ஊடே சாலை. திடீரென்று அந்த மரத்தின் பின்னால் இருந்து ஓரு பெண் வெளிப்படுகிறாள். மெலிந்து வற்றிய தேகம். தன்னோடு உறவு கொள்கிறவர்களையும் அவள் அண்ணே, என்றுதான் அழைக்கிறாள். டிரைவர் சபலக்காரன். வண்டியை நிறுத்தி அவளை புட்டத்தில் அழுத்தி உள்ளே ஏற்றிக் கொள்கிறான்.

எனக்கா பரபரப்பு. நான் எழுத்தாளன். இந்தச் சூழலுக்கு அவள் எப்படித் தள்ளப்பட்டாளோ, என்ற கவலை. அவளிடம் ஆதுரமாக, அக்கறையாகக் கேட்க என்னிடம் எழுத்தாளனாகக் கேள்விகள். தயக்கத்தை உதறி முதல் கேள்வி, “நீ எப்படி இந்தத் தொழிலுக்கு…” என ஆரம்பித்தபோது அவள் ஒரு சிரிப்பு சிரித்தாள். உங்க கரிசன வெங்காயம் எல்லாம் தேவை இல்லை எனக்கு. தேவைன்னா வா, இல்லாட்டி நான் அடுத்த லாரி, அடுத்த ஆளைப் பார்க்கிறேன்… என்கிற மேட்டர்-ஆஃப்-ஃபேக்ட் சிரிப்பு.

எழுத்தாளனாக என் கனவும், அவளது வாழ்க்கையும்… இப்படி சந்தித்துக் கொண்டன.

ஒரு பொறுப்பு சுமக்காத இளைஞன் பக்குவப்பட்ட கால கட்டம் அது, என்றுகூடச் சொல்லலாம். தற்செயலாகப் போல நான் என் கதைகளின் களங்களை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தேன். வாழ்க்கை என்பது மனித ஆத்மாவின் யத்தனத் துடிப்பு. அதற்கு கனவுகள் உண்டு. ஆசைகள் உண்டு. முட்டு மோதல்கள், போராட்டங்கள் உண்டு. அவை வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குகின்றன.

ஆ, அர்த்தமற்ற சம்பவக் கோர்வை வாழ்க்கை. அது ஒரேவகை மலர் சேர்த்துக் கட்டிய மாலை அல்ல. அதில் கதம்பமாய்ப் பல மலர்கள், இடையே வெறும் நார் கூட இருக்கும். வாழ்க்கைக் கண்ணிகளின் இணைப்பு ஒழுங்கற்றது. ஆனால் நாம் தொடர்ந்து வாழ வேண்டி யிருக்கிறது. அர்த்தமற்ற இந்த வாழ்க்கைக் கண்ணிகளை அர்த்தப் படுத்திக்கொள்ள வேண்டி யிருக்கிறது. அறிவு அப்படித்தான் நமக்கு வழி சொல்கிறது. வாதழ்க்கையை அர்த்தப் படுத்திக்கொள்ள, பூரணப் படுத்திக்கொள்ள இலக்கியம் உறுதுணையாய் இருக்கிறது. சிந்தனையைத் தெளிவாக்கிக் கொள்ள, எதிர்காலத்தில் நம்பிக்கை கொள்ள, தோல்விகளில் இருந்து புத்துணர்ச்சி கொள்ள இலக்கியம் பயிற்சி தருகிறது.

ஆர்.சூடாமணியிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறேன். அப்போதுதான் வழக்கமான என் சிறுகதைப் பாணியில் இருந்து, அதைக் கடந்த நிலையில் புதிய தளங்களில் யதார்த்த பாணிக் கதைகளுக்கு நான் வந்திருந்தேன். கணையாழி போன்ற இலக்கியப் பத்திரிகைகள் வாசிக்கிறேன். ஒரு சிறுகதை ‘மறதி’ எழுதி கணையாழி இதழுக்கு அனுப்ப அது பிரசுரம் ஆகி, அந்த மாதத்தின் சிறந்த கதை என இலக்கியச் சிந்தனை பரிசு பெறுகிறது. எனக்கு அது புது அனுபவம். என் கதையைத் தேர்வு செய்தவர் எழுத்தாளர் திலீப்குமார். நன்றி ஐயா. அதுவரை நான் என் எழுத்தில் காட்டிய சொல் அழுத்தங்கள் கரைந்து இயல்பான நடையும், மெலிதான நகைச்சுவையும் என்னை அறியாமல் என் எழுத்தில் புகுந்து கொள்கிறது.

என் கதைக் களங்களைக் கேட்ட சூடாமணி புன்னகையுடன், நீங்க வித்தியாசமா சிந்திக்கறீங்க, என்று பாராட்டி என்னை ஆச்சர்யப் படுத்தினார். அப்போது எனது முதல் சிறுகதைத் தொகுதி ‘அட்சரேகை தீர்க்கரேகை’ வெளியான நேரம். அந்தத் தலைப்பே அவருக்குப் பிடித்திருந்தது. அதில் உள்ள ‘கமா கோலன் முற்றுப்புள்ளிகள்’ கதையை எடுத்துச் சொன்னேன். அந்தப் புத்தகத்தை லா.ச.ராமாமிருதம் வெளியிட்டார். விழாத் தலைமை க.நா.சு. ஒத்துக்கொண்ட அவர்கள் பெருந்தன்மை வாழ்க.

கமா கோலன் முற்றுப்புள்ளிகள், கதையில் போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஒருவனின் அடுத்தடுத்த நாட்களின் மனநிலை தான் களம். போதை என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது. எழுத்தின் போதைதான் நான் அறிவேன். முதல்நாள் ஒரு வக்கிரத்துடன் மனம்போலக் கூத்தாடுகிறான் அவன். வாழ்க்கையை கடைசி மிடறு வரை அனுபவிக்கிறேன்… என ஆட்டம் போடுகிற அவன், மறுநாள் காலை எழுந்ததில் இருந்து அழ ஆரம்பிக்கிறான். நேற்றைய நாளை நான் வீணாக்கி விட்டேன். இனி ஒவ்வொரு விநாடியையும் வீணாக்காமல் நற் சிந்தனையுடன் ஒழுக்கத்துடன் வாழ்வேன்… என பிரார்த்தனை செய்கிறான்…

இப்போது அந்தக் கதை வாசிக்கச் சிரிப்பாய் இருக்கிறது. படு செயற்கையான சொல் அடையாளங்கள். அதில் மேற்கோள் பாணியில், காலை சூரிய ஒளி அப்படி விழுகிறது. அந்தி சூரிய ஒளி இப்பிடி விழுகிறது, என அலட்டல் வேறு. சரி. காலில் சுட்டுக் கொள்ளாமல் வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டவர் உண்டா?

தீபம் இலக்கிய இதழில் பிறகு ‘கூட்டம்’ என ஒரு கதை எழுதியது நினைவு வருகிறது. ஜனத்தொகை பெருகிக் கொண்டே போகிறது. எங்கே போனாலும் பெருங் கூட்டமான உலகம். இப்படியே போனால் உலகம் என்ன கதி ஆகும்… என யோசித்த ஒருநாளில் பிறந்த கதை அது. எங்கே பார்த்தாலும் கூட்டம். நெருக்கடி. அடைசலான மனித முகங்கள், என சலித்துப்போன கதாநாயகன். கூட்டங்களைத் தவிர்க்க முயல்கிறான் அவன். அவன் வேலைக்குப் போனாலும் பஸ்சேற முடியாமல் முண்டியடிக்கிறது பெருந் திரள். சந்தையில் கூட்டம். கோவிலில் கூட்டம். ஒரு நண்பனைப் பார்க்கப் போனால் அவன் வீட்டில் எதோ விசேஷம் முடிந்து சிறு அறையில் போர்க்களத்தில் இறந்து கிடக்கிற சடலங்கள் போல நிறையப் பேர் சிறு அறையில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நண்பனே கதவை ஒருபாதி மாத்திரம் திறந்துகொண்டு வெளியே வந்து பேசுகிறான். ஒரு சினிமா பார்க்க என்று போனால் டிக்கெட் எடுக்க்வே பெரு வரிசை நிற்கிறது. உணவு விடுதிக்கு சாபபிடப் போனால், சாப்பிடுகிறவர் பின்னால் பந்திக்குப் போல நிற்கிற நபர்களைப் பார்க்கிறான். சரி. வீட்டுக்குப் போகலாம் என பஸ்சில் ஏறி அந்தத் திரளில் மூச்சுத் திணறி பாதி வழியில் ஓடும் பஸ்சில் இருந்து குதிக்க முயற்சி செய்கிறான். கால் இடறி அப்படியே நடுத் தெருவில் விழ, “என்னாச்சி? என்னாச்சி?” என அவனைச் சூழ்ந்து கொண்டது பெருங் கூட்டம், என்பதாக முடியும் கதை.

சூடாமணி இந்தக் கதையை வாசித்திருந்தார். “அது நீங்க தானா?” பயத்துடன் தமைலயாட்டினேன். “நல்ல கதை” என்று அவர் பாராட்டியபோது பறக்கிற மாதிரி இருந்தது.

அவரது பேட்டியில் என்ன கேட்டேன், என்ன பிரசுரம் ஆனது எல்லாம் நினைவில் இல்லை.

பிற்காலங்களில் கதைகள் எழுதுகையில் என் ஒரு தனி அடையாளம் இருக்கிற அளவில் முயற்சி செய்ய அவரது அந்தப் பாராட்டு கை கொடுத்தது. பலமுறை பலர் கூறிய கதையேதான் நான் கையில் எடுத்தாலும், அதில் இதுவரை பிறர் காட்டாத புதிய இடங்களைச் சுட்டிக் காட்ட நான் பயிற்சி மேற்கொண்டது முக்கியம். எதாவது ‘என்’ செய்தி இல்லாமல் அந்தக் கதை நான் எழுதுவதின் நியாயம் பெறாது, என தீர்மானம் செய்து கொண்டேன்.

பிரதான கதையைக் கிளை பிரிந்து சில குட்டிக் கதைகள் உள்ளே வைத்தேன். நிகழ்ச்சிகயின் உணர்வுத் தீவிரத்தைச் சொல்ல சம்பவங்கள் கொண்டுவந்தேன். ஒரு கதை. ’ஊரில் அப்பா இறந்து விடுகிறார். மனைவி குழந்தையுடன் இங்கே வாழ்கிற அவனுக்கு சேதி வருகிறது. காலையில் ‘இங்கே’ அவனது வேலைகளை விட்டுவிட்டு உடனே எப்படிக் கிளம்புவது, என்று அவனுக்கு முதல் யோசனை. தன் அப்பா மரணத்துக்கு அவனுக்கு அழுகை வரவில்லை, என அவனுக்கு திடீரென்று புரிகிறது. இதுகுறித்து அவனுக்கு வருத்தமாய் இருக்கிறது.

இந்த உணர்வு நிலையைச் சொல்ல ஒரு காட்சியமைப்பை நான் ஏற்படுத்திக் கொண்டேன். ஊருக்குக் கிளம்புகிறான் அவன். எதிர்வீட்டில் திண்ணையில் ஒரு பெரியவர். அவருக்குக் காது கேட்காது. இந்த வேளைகெட்ட வேளையில் ராத்திரியில் அவசரமாக அவன் எங்கே கிளம்புகிறான், என விசாரிக்கிறார் அவர்.

“அப்பா செத்திட்டார்…”

“அப்பா?”

“செத்திட்டார்… செத்திட்டார்” என்று அவர் காதருகில் கத்தினான் அவன்.

உலகத்திலேயே தன் தந்தையின் மரணத்தை இத்தனை சத்தமாய் அறிவித்த முதல் ஆள் நான்தான். அவனுக்கு வெட்கமாய் இருந்தது. கிழவர் மேல் அவனுக்கு ஆத்திரம் வந்தது.

சொல் அழுத்தமான பழைய கதைகளைத் தவிர்த்து, வாழ்வின் கவித்துவத்தை எழுத்தில் சித்திரப்படுத்த நான் முன்வந்தேன். சூழலின் இதம், தண்மை அல்லது வெப்பம் வாசகனை எட்ட வேண்டுமானால் அந்தச் சூழலை ஒரு கவித்துவ எழுச்சியுடன் நான் அடையாளப் படுத்த வேண்டும். அது என் பாணி என்று வடிவமைத்துக் கொண்டேன்.

கன்னத்தில் ஷேவிங் சோப்புடன் பார்க்க கிறிஸ்துமஸ் தாத்தா பொல இருந்தான்.

எண்ணெயில் பஜ்ஜி எக்சர்சைஸ் செய்வது போல மார்பை விரித்தது.

தீபம் இருபதாண்டு நினைவு சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதை ‘இயேசுவின் சிலுவையை இறக்கி வையுங்கள்’ முதல் பரிசு பெற்றது. கவிஞர் வைரமுத்துவுக்குப் பிடித்த கதை அது. வறுமைசூழ்ந்த எளிய குடும்பத்துக் கதை அது. முதிர்கன்னி அக்கா. வேலைக்குப் போகிறாள். தங்கை தானும் கல்லூரி வரை படித்து பின் வேலை என்று போய்வருகிறாள். தங்கை ஒரு பையனைக் காதலித்து தன் அப்பா அம்மாவிடம் அவனைக் கூட்டிவந்து அறிமுகம் செய்கிறாள்.

உனக்கு முன்னாடி அக்கா ஒருத்தி கல்யாணத்துக்கு இருக்கா, அவளுக்கு முந்தி நீ அவசரப் படறே, என்ன இருந்தாலும் அக்காவோட தியாகமும் பொறுப்பும் உனக்கு வராது. நீ சுயநலப் பிசாசு… என்று திட்டுகிறார் அப்பா. தங்கைக்குக் கோபம் வருகிறது.

“எது நல்ல விஷயம், எது தியாகம்… எல்லாம் நாமளா சொல்றது தாம்ப்பா. அக்கா இந்தக் குடும்பத்துக்காக தன் ஆசைகளை அடக்கிக் கொண்டு நீங்க கல்யாணம் பண்ணி வைப்பீங்கன்னு காத்திட்டிடருக்கா. அது தியாகம்னு நீங்க சந்தோஷப் படறீங்க. பாராட்டறீங்க…

“… அக்கா இந்தக் குடும்பத்துக்காக விட்டுக் குடுக்கறா. நீங்க பாராட்டறீங்க. நான்? நான் என் காதலுக்காக, என் குடும்பத்தை விட்டுக் கொடுக்கறேன். என் கணவர் பாராட்டுவார். இதுல எது உசத்தி. எது தாழ்த்தின்னு யார் முடிவு பண்றது?”

பரிசளித்த தீபம் இதழுக்கு நன்றி. அதில் அந்த இளமைக்கே உள்ள வேகமான வரி ஒன்று உண்டு.

அம்மா எதிரே எந்த இளைஞன் வந்தாலும் இழுத்திப் போர்த்திக்கொண்டு அவனை அவமானப் படுத்துவாள்.

மேடையிலேயே இதை மேற்கோள் காட்டிப் பேசினார் வைரமுத்து.

இளமை வேகத்தின் கதை இது.

இது எழுதி பத்து பதினைந்து வருடங்கள் கழித்து இன்னொரு கதை எழுதினேன். தினமணி கதிர் இதழில் வெளியான கதை.

திருமணம் முடித்தும் மனைவியிடம் ‘உறவு’ கொள்ளாமல் பணம் பணம் என்று வியாபாரத்தில் ருசி கண்ட கணவனின் கதை. மனைவி கர்ப்பம் ஆகிறாள். அப்போது கணவனுக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் வருகிறது. “இந்தக் குழந்தைக்குத் தந்தை யார்?” என்று அவன் கேட்கிறான். “நீங்கதான்…” என அவள் சொல்ல அவன் “துரோகி” என்று ஆத்திரமாய்க் கத்துகிறான். அப்போது அவள் சொல்லும் பதில் இதுதான்.

“கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் வேறொரு ஆம்பளைகிட்ட குழந்தை பெத்துக்கிட்டதா நீங்க துரோகின்னு கத்தறீங்க. அப்படின்னா… நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே, அது இதைவிடப் பெரிய துரோகம் இல்லையா?”

ராமகிருஷ்ண பரமஹம்சரின் நுட்பமான குட்டிக் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் ஒன்று இது.

மீன் விற்கிற ஒருபெண் ஒரு தலைச்சுமை மீனைப் பக்கத்து ஊரில் விற்றுவிட்டு நடந்தே தன் ஊர் திரும்புகிறாள். இடையே வயல்காட்டில் மல்லிகைச் செடிகள் விளைந்து கொல்லென்’று பூத்துக் கிடக்கின்றன. வயலின் நடுவே ஒரு குடிசையில் மல்லிகைமொக்குகளைப் பறித்து அம்பாரமாய்க் குவித்து வைத்திருக்கிறார்கள். மீன்காரி திரும்பும்போது வழியில் சரியான மழை. சட்டென அந்த இரவில் ஒதுங்க இடம் இல்லாமல் அந்தக் குடிசையில் ஒண்டினாள் மீன்காரி. அன்று இரவு அங்கே தங்கவிட்டு காலையில் ஊர் திரும்பிப் போகலாம் என்று அங்கேயே படுத்துக் கொண்டாள். அறையின் பூக்குவியலில் இருந்து எங்கும் கிளம்புகிறது வாசனை. அந்த வாசனையில் அவளால் தூங்க முடியவிபல்லை. சட்டென்று அவள் ஒரு காரியம் செய்தாள். அவள் வைத்திருந்த அந்த மீன்கூடையை எடுத்து முகத்தில் கவிழ்த்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

அவளுக்குப் பழகிய மீன் வாசனை.

என்ன அழகான கதை!

கலப்புத் திருமணம் பற்றி நான் எழுதிய ஒரு சிறுகதையை பாலுமகேந்திரா ‘அப்பா’ என்ற தலைப்பில் குறும்படமாகத் தயாரித்து இயக்கினார். சன் தொலைக்காட்சியில் ‘கதைநேரம்’ என ஒளிபரப்பானது அது. அதில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஒரு குறுங் கதையை வசனம் எனப் பயன்படுத்தி யிருப்பேன்.

“எதோவொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கறியே. அவ என்ன ஜாதிடா?”

“பாத்து நீங்களே சொல்லுங்கப்பா.”

“தெரியலியே.”

“பாத்தா தெரியலன்னா விட்ருங்கப்பா. ஜாதில என்ன இருக்கு?”

பாலு மகேந்திரா வெகுவாக இந்த வசனத்தை ரசித்து தன் குறும்படத்தில் பயன்படுத்தினார். அது பரமஹம்சரின் வசனம் என்பது பரம ரகசியம்.

•••

 

Comments

Popular posts from this blog