மோ யான் 2012ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற சீனர். நல்வாழ்த்துக்கள்.


த வ ளை க ள்

மோ யான்


தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்


வெளிப்படையாக நான் சொல்லவில்லை யானாலும் அத்தையின் கல்யாண யோசனைகளையிட்டு எனக்கும் உடன்பாடு இல்லை. அப்பா, என் சகோதரர்கள், அவர்களின் மனைவிமார்கள்... அவர்களுக்கும் அப்படித்தான் இருந்தது. எங்கள் பார்வையில், அட அந்தாள் ஒத்து வராது, என்றே நாங்கள் எல்லாருமே அபிப்ராயப்பட்டோம்.

                எங்கள் சிறு பிராயத்தில் இருந்தே, அத்தைக்கான நல்ல மாப்பிள்ளை யார், என்று நாங்கள் யோசித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறோம். வாங் சியோதியுடன் அவளது திருமணம் குடும்பத்துக்கே நல்ல பேர் தந்துவிட்டு, அதுவே மகா களங்கத்தையும் கொணர்ந்தது. அடுத்த துணை யாங் லின். மகா பொருத்தமான ஆசாமி அவன் என்று சொல்லமுடியா விட்டாலும், அவனது உத்தியோகம் அவனுக்கு புருஷ லெட்சணம் தந்தது. அட இழவே, அவள் பேசாமல் குன் ஹியையே கூட கல்யாணம் கட்டியிருக்கலாம். அவள்மேல் கிறங்கிக் கிடந்தான் அவன். இந்த ஹாவ் தஷோவுக்கு அவன் தேவலையாய் இருந்திருக்கும்... அவள் கிழட்டு மருத்துவச்சியாகவே காலந் தள்ளுவாள், அதற்கேற்ப தன்னைத் தயார் பண்ணிக் கொண்டிருப்பாள், என நாங்கள் நினைத்திருந்தோம். எங்களில் யார் அவளை அவளது வயசுக் காலத்தில் வைத்துக்கொள்வது என்றெல்லாங் கூட நாங்கள் பேசிக்கொண்டோம். ஆனால் முன் அறிவிப்பு கூட இன்றி, அவள் ஹாவ் தஷோவைக் கல்யாணம் பண்ணிக்கொண்டாள். நானும், சிங்கக்குட்டியும் அப்போது பெய்ஜிங்கில் வாழ்ந்து வந்தோம். எங்கள் காதுகளையே நம்ப முடியாமல் வந்தது சேதி. அபத்தமான நிகழ்காலத்துக்குத் தரையிறங்கியபோது ரொம்ப வருத்தமாய் இருந்தது.

                சில வருடங்களுக்குப் பிறகு அத்தை நிலவின் குழந்தை, என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்தாள். சிற்பி ஹாவ் தஷோ பற்றிய நிகழ்ச்சி. ஆனால் காமெரா அவளையே காட்டிக்கொண்டிருந்தது. உற்சாகமாகப் பேச்சு கொடுத்தபடி அவள் பத்திரிகையாளர்களை ஹாவின் கூடத்துக்கு அழைத்து வந்தாள். அவரது பட்டறை, களிமண் உருவச் சிலைகளின் சாமான் அறை என்று சுற்றிக் காட்டினாள். அவரோ தான் வேலைசெய்ய அமரும் பெஞ்சில் அக்கடா என உட்கார்ந்திருக்கிறார். கண் எங்கோ வெறிக்கிறது. முகத்தில் எந்த பாவமும் இல்லை. கனவு காணும் கிழட்டுக் குதிரை. பெரிய கலைஞர்கள் எல்லாருமே இப்படியே கனவு காணும் கிழக்குதிரையாகத்தான் ஆகிவிடுகிறார்கள். ஹாவ் தஷோ என்ற அந்தப் பெயர் தெரிந்தபெயர் போலவே என் காதுகளில் ஒலித்தது. அவரை அதிக தடவை நான் பார்த்ததும் இல்லை. சித்தி பையன் சியாங்குவான் விமானியாகத் தேறியதற்கு ஒரு விருந்து அளித்தபோது பார்த்தது, அதற்குப்பிறகு இப்போது தான் தொலைக்காட்சியில் பார்க்கிறேன். தலையும் தாடியும் வெளுத்திருந்தன. ஆனால் அதே வஜ்ரம் பாய்ந்த உடல்வாகு. ராட்சச உருவம் அது.

                அந்த நிகழ்ச்சியில் தான் அத்தை அவரை ஏன் கல்யாணம் செய்துகொண்டாள் என்று தெரியவந்தது. அத்தை ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து ஆழமாய் இழுத்தாள். சோகம் அப்பிய குரலில் பேச ஆரம்பித்தாள். திருமணங்கள்... அவை சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன. நான் இப்படிச் சொல்வதால், இலட்சியத் துடிப்பை நான் முடக்கி அஸ்து பாடுகிறதாக நீங்கள், இளைஞர்கள் எடுத்துக்கொள்ளத் தேவை இல்லை. ஒரு காலத்தில் நானும் இந்த பொருள்முதல் வாதத்தின் வாதி தான். பிரதிவாதி அல்ல. ஆனால் கல்யாணத்தைப் பொருத்தவரை.... நீங்க லிபியை நம்பியாகணும். இவரையே கேளுங்களேன். ஹாவ் தஷோவைக் காட்டினாள். என்னை தன் மனைவியாக இவர் என்றைக்காவது... கற்பனையாவது பண்ணிப் பார்த்திருப்பாரா?

                  1997ல்... அப்ப எனக்கு வயசு 60, என் அதிகாரிகள் என்னை, எனக்கு இஷ்டமானாலும் இல்லாவிட்டாலும், ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொல்லிச் சொன்னார்கள். அப்பவே ஓய்வு வயசு தாண்டி அஞ்சு வருஷம் ஆயிட்டது. இனி ஓய்வும், வேலையும் ஒண்ணுதான் எனக்கு, என்றேன் நான். வீட்லயும் நான் கொட்ட கொட்ட எதாவது குடாஞ்சிகிட்டிருப்பேன், என்றேன்.

                உங்களுக்குத் தெரியுந்தானே? ஹுவான் ஜுன், அந்த நன்றிகெட்ட தறுதலை... அவன்தான், ஹெக்ஸ் கிராமத்தின் ஹுவாங் பியோட மகன்... அவனுக்கு பிரசவம் பார்த்தவளே நான்தான். பூசணின்னு அவனுக்குப் பட்டப்பேரு.... மருத்துவப்பள்ளியில் கொஞ்ச நாள் அவனும் குப்பை கொட்டிவிட்டான். படிச்சிட்டு வெளிய வந்தநாளில், அவன் உள்ள போனானே அப்ப எந்தளவு அறிவு இருந்திச்சோ, அதே தான் இருந்தது. விருத்தியாகவே இல்லை. அவன் கத்துக்கவே இல்லை. ஊசி போடச்சொன்னால் தமனியைத் தேடு தேடுன்னு தேடுவான். ஸ்டெதாஸ்கோப்பை மாட்டிக்கிட்டு இதயத் துடிப்பு பார்க்கத் தெரியாது. நாடி பத்தி, இன்ச், பார், கியூபிட்... எந்தவொரு வார்த்தையும் அவன் கேள்விப்பட்டதே கிடையாது!

                ஹா ஆஸ்பத்திரி இயக்குநர் பதவிக்கு அவனைக் காட்டிலும் பொருத்தமா வேற யாரு இருக்கா? அவனை மருத்துவப் பள்ளிக்கே நான்தான் சுகாதாரக் குழுவின் இயக்குநர் ஷென் கிட்ட நல்லவார்த்தை சொல்லி சிபாரிசு பண்ணி அனுப்பி வெச்சேன்... ஆனால் அவன் இங்க பொறுப்பேத்தவன், என்னை வெறுப்பேத்தினான். என்னை மதிச்சானா அவன்? அவமதிச்சான். அறிவோ சாமர்த்தியமோ இல்லாமல், காக்கா பிடிச்சே, லஞ்சம் பரிசுன்னு ஆளுகளைக் கைக்குள்ள போட்டுக்கிட்டே காலத்தை ஓட்டினான் அந்தத் தறுதலை சிகாமணி. இதுல பொம்பளை விஷயத்தில் வேற அவனோட சில்மிஷங்கள்....

                அத்தை நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். ஆத்திரத்துடன் தரையை உதைத்தாள். ஹ்ம். நான் எவ்வளவு பெரிய முட்டாள், என உருமினாள். பெருச்சாளியை மடில நானே கட்டிக்கிட்டாப் போல... ஆஸ்பத்திரியின் அததனை பொண்ணுகிட்டியும் அவன் வாலாட்டித் திரிய நானே இடங் கொடுத்திருக்கேனே... வாங் சியோமை, வாங் கிராமத்தின் சின்னப் பொண்ணு அவள், பதினேழு வயசு... மென்மையான அடர்த்தியான கூந்தல் அவளுக்கு. அழகான வட்ட முகம். தந்தம் மாதிரி வழவழன்னு சருமம். அவ புருவம் அசைஞ்சால் பட்டாம்பூச்சி பறக்கும்! அவ கண்ணே பேசும். இயக்குநர் ழாங் யிமோன் பார்த்தால் உடனே நடிக்க வெச்சிருப்பார். காங் லியோ, ழான் சிவி போன்ற நடிகைகள் எல்லாம் அவகிட்ட பிச்சை வாங்கணும். அம்மா தாயே அழகு போடும்மா...

                ஆனால் அட இழவே, அவளை முதலில் யார் பார்த்தது? இந்த பொம்பளைப் பொறுக்கி பூசணித் தடியன்... இவளைப் பார்த்ததும் அவனே வாங் கிராமத்துக்குப் போனான். நாக்கில் சர்க்கரையத் தடவி, அவள் அப்பா அம்மா கிட்ட அளந்தான். பெண்களின் பிரச்னைகளுக்கு மருத்துவம் பார்க்க அவளை 'என்னிடம்' கற்றுக்கொள்ள அனுப்பிவைக்க 'இவன்' சிபாரிசு. ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதாப் போல. அவள் என் மாணவின்னு என்கிட்டே சொன்னான். ஆனால் ஒத்த நாள் கூட அவள் என்னுடன் இல்லை. அந்த பெண்பித்தன் தன்னோடவே அவளை இருத்திக்கிட்டான். பகலில் துணை. ராத்திரி இணை! இந்தக் கண்றாவியோட விட்டானா, பகல்லயுமே அவன் ஆட்டம் ஆரம்பிச்சாச்சி. சனங்களே பாத்திருக்காங்க.

                ஆடி அடங்கினாப் போல ஆயிட்டதும், ஊர்ப்பக்கமாப் போய்வருவான்... பொதுப் பணத்தில் பெரிய அதிகாரிகளுக்கு விருந்து. பெரிய நகரமா பார்த்து இடமாற்றம் எதும் வாங்கிக்கலாமான்னு ஒரு இது. அட அவன் மொகரைக்கட்டையைப் பாத்திருக்கீங்களா. நீளமான, கழுதை முகத்தான். கரு உதடுகள். வாய் உள்ளண்ணமெல்லாம் ரத்தச் சிவப்பு. அந்த மூச்சே விஷ மூச்சு. இந்த மூஞ்சியை வெச்சிக்கிட்டு மருத்துவக் குழுவின் உதவி இயக்குநர் பதவி கூட வாங்கறதா இருந்தான் அவன்.

                விருந்துன்னு போறபோதெல்லாம், வாங் சியோமை, அவளையும் விருந்து, குடின்னு ஆட்டிவெச்சான். அதிகாரிகளுக்கும் கேளிக்கை காட்டினான். யார் கண்டா, அவளை அவர்கள்கூட கூட்டிக்கூட கொடுத்திருப்பான் அவன்... கேடுகாரன். அதான் அவன். மகா கேடுகாரனாக்கும் அவன்...

                ஒருநாள் அந்தக் கெடுவான் என்னை அவன் அலுவலகத்துக்கு வரச் சொன்னான். ஆஸ்பத்திரியில் வேலைசெய்கிற எந்தப் பொண்ணுமே அவனிடம் வேலைசெய்ய பயந்தார்கள். நான் பயப்படவில்லை. ஒரு சிறு கத்தி. எப்பவும் தயாரா வெச்சிருப்பேனாக்கும் நான். அந்த நாயை ஒரே குத்து, தயங்க மாட்டேன் நான்.

                தேநீர் ஊற்றியபடியே புன்னகை செய்கிறான். தேநீர் கோப்பையை சிறு மரத்தட்டின் மேல் வைத்தான். என்ன விஷயம், என்னை எதுக்குக் கூப்பிட்டு விட்டீர்கள், இயக்குநர் ஹுவாங்? சொல்லுங்க, என்றேன். ஹி ஹின்னு இளிக்கிறான். பெரிம்மா, என்றான். நானா, இந்த சனியம் பிடிச்சவனுக்கா, என்றிருந்தது.

                பெரிம்மா. நீங்கதான் என் அம்மாவுக்குப் பிரசவம் பார்த்தது. இப்ப பெரியவனா வளர்ற வரை உங்களுக்கு என்னைத் தெரியும். ஏன், நான் உங்க மகனாக் கூட இருக்கலாம் இல்லையா? ஹி ஹி.

                அத்தனை பேர் எனக்கு வேணாம் ஐயா. இந்தப் பெரிய ஆஸ்பத்திரிக்கு நீங்க இயக்குநர். நான் ஒரு சாதாரண பெண் மருத்துவச்சி. நீங்க என் பிள்ளையா இருந்தால், அந்தப் புகழ்லியே நான் செத்திருவேன். அதனால, அதெல்லாம் வேணாம். என்னை எதுக்குக் கூப்பிட்டீங்க. அதைச் சொல்லுங்க.

                இன்னும் இன்னுமா அவன் இளிக்கிறான். ஒரு வெட்கங்கெட்ட காரணம் அது. அதைச் சொல்லத்தான் அத்தனை நெளிசல்.

                மேல் அதிகாரிகள் கொஞ்சம் முந்தியோ பிந்தியோ பண்ற அதே தப்பு... நான் பண்ணிட்டேன். என் அஜாக்கிரதை. வாங் சியோமை கர்ப்பமாய் இருக்கிறாள்.

                வாழ்த்துக்கள், என்றேன். சியோமை வயிற்றில் இப்ப உங்க நச்சு விதை... ஆஸ்பத்திரியில் புதிய பாரம்பரியம் தழைக்கப் போகிறது.

                கிண்டல் பண்ணாதீங்க பெரிம்மா. ரெண்டுநாளா எனக்கு கையும் ஓடல்ல காலும் ஒடல்ல. நான் சாப்பிடல்ல. தூங்கல்.

                அவனா, மலைமுழுங்கி... சாப்பிடல, தூங்கலன்றான். நம்ப முடியுதா அதை.

                இவ என்ன சொல்றா, என் மனைவியை விவாகரத்து பண்ணுன்றா. மாட்டேன்னா, ஒழுக்க ஆணையத்தில் புகார் குடுப்பேன்னு மிரட்டறா.

                அஹாங், என்றேன். இந்தக்காலத்தில் உங்களைப்போல பெரிய அதிகாரிகள் மத்தியில் ரெண்டாந் தரம் ரெண்டாந் தாரம் எல்லாம் சகஜந்தானே? ஒரு தோட்டவீடு வாங்க, அவளைக் அங்க குடி வைக்க... சோலி முடிந்தது.

                கேலி வேணான்னேனே பெரிம்மா. துட்டு வசதி இருந்தாலுங் கூட, ரெண்டாந் தாரம், மூணாந் தாரம்னு என்னால வெச்சிக்க முடியாது.

                முடியாட்டி, நேரா போயி, விவாகரத்து வாங்கிக்கங்க... என்றேன். அவன் கழுதைமுகம் முன்னும் நீளமாய் நெளிந்தது.

                பெரிம்மா, உங்களுக்கே தெரியும். என் மாமனார், பன்னிக்கறி போடற மச்சினர்மார்... மகா கோபக்காரர்கள். இதைக் கேள்விப்பட்டாலே என் உசிர் என்னிது இல்லை...

                ஆனால் நீங்க ஒரு இயக்குநர். அதிகாரியாக்கும்...

                ச், போதும் பெரிம்மா, என்றான். உங்க பிராயத்துக்கு நான் சின்ன ஆஸ்பத்திரியின் சோப்ளாங்கி இயக்குநர்...¢ வெறும் பதர். சாவி... ஆக, என்னைக் கிண்டல் பண்றதுக்கு பதிலா, எனக்கு உதவி எதும் செய்யக்கூடாதா... என்றான்.

                உங்களுக்கு நான் என்ன உதவி செய்யறது.

                வாங் சியோமைக்கு உங்ககிட்ட நல்ல மரியாதை, எத்தனையோ தரம் உங்களைப் பத்தி ரொம்ப மதிப்பாய்ப் பேசியிருக்கிறாள். நீங்க சொன்னால் அவள் கேட்பாள்...

                நான் என்ன செய்யணுன்றீங்க?

                அவகிட்ட அபார்ஷன் பண்ணிக்கறதைப் பத்தி பேசிப்பாருங்க.

                பூசணி ஹுவான், என பல்லை நரநரத்தேன். இந்த மாதிரி கொடூர
காரியங்களில் இனி நான் கையை அழுக்காக்கிக்கொள்ளப் போவதில்லை. என் உத்தியோகத்தில் இதுவரை ரெண்டாயிரத்துக்கும் மேலான அபார்ஷன் நான் செய்துவிட்டேன். இதுக்கும் மேல... வேணாம் எனக்கு. அவ பிரசவிக்கிற வரை காத்திருங்கள். அப்பா ஆகுங்கள். சியோமை ரொம்ப அழகான பெண். அவ வழியில் உங்கள் குழந்தையும், அது பெண்ணோ பையனோ, அழகாய்த்தான் இருக்கும். அதைப் பார்த்தாலே உங்களுக்கு சந்தோஷமாய் இருக்கும். நீங்க போயி, அவகிட்ட சொல்லுங்க... அவளுக்கு நானே என் கையால் பிரசவம் பார்க்கிறேன்...

***
சொல்லிவிட்டு திரும்பி நடந்துவிட்டேன். நான் பேசியதில் எனக்கு சந்தோஷம் தான். ஆனால் என் அலுவலகம் வருமுன்னால் அந்த உணர்வு கரைந்துபோனது. ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்கிறேன். எனக்குள்ளே இருள் கவ்வியது. பூசணி போல யாருக்கும் ஒரு வாரிசு பெற தகுதி இல்லை. இந்தப் பெண் சியோமை... அவனது குழந்தையைச் சுமப்பதாவது, என்ன கேவலம்! இந்த மாதிரி ஆளுங்களின் வாரிசுகளை நிறைய நான் பிரசவம் பார்த்திருக்கிறேன்.. அந்தக் குழந்தைகள் அப்பனுக்குத் தப்பாத பிள்ளைகளா, நல்லவங்களாகவோ, கெட்டவர்களாகவோ... உருவாகிறதையும் பார்த்திருக்கிறேன். நாம வளர்க்கிறதில் இருக்கிறதை விட, அவர்கள் அப்படிப் போகிறதின் சூட்சுமம்... பிறப்பில் இருக்கிறதாகத் தான் தோன்றுகிறது. அட அப்படியெல்லாம் இல்லை, என்றெல்லாம் வாதம் செய்யலாம்... ஆனால் என் அனுபவம் இதுவே.

                பூசணியின் பிள்ளையை ஒரு புத்த கோவிலில் வைத்துப் புனிதப்படுத்திப் பார்க்கலாம். அங்கே இருந்தாலும் அவன் ருத்ராட்சப் பூனையாய்த்தான் இருப்பான். சியோமையை யிட்டு எனக்கு ரொம்ப வருத்தம்தான். அவகிட்ட நான் எப்பிடி என் யோசனைகளைச் சொல்லப் போகிறேன்... ஆனால் அந்தப் பாதகன் இந்தப் பிரசனையில் இருந்து அத்தனை சுலபமா தப்பிச்சிறக் கூடாது. அதனால் என்ன ஆயிரும், லோகத்தில் இன்னொரு மோகானந்தா... ச். வந்தா வந்துட்டுப் போகட்டும்.

                ஆனால் சியோமை, அவளே என்னிடம் வந்தாள். என் காலைக் கட்டிக்கொண்டு அழுகையோ அழுகை. என் உடையெல்லாம் ஈரமாகிவிட்டது. அத்தே, என அவள் தேம்பினாள். நான் அவர் வலையில் விழுந்திட்டேன் அத்தை. என்னிடம் அவர் கதை கதையா அளந்தார். ஐய, அவர் எட்டுபேர் தாங்கும் பல்லக்கு அனுப்பி அழைச்சாலும் நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். இதைக் கலைச்சிற எனக்கு ஒத்தாசை பண்ணுங்க அத்தை. இந்த விஷ விதை... எனக்கு வேணாம்...

                ஆக, விஷயம் இப்படியாய் ஆனது... அத்தை இன்னொரு சிகெரெட் பற்றவைத்துக் கொண்டாள். புகையை நிதானமாக வெளியேற்றினாள். மகாப் பிரளயமாய் புகைமேகம் அவளையே மறைத்துவிட்டது. அந்தக் கருவைக் கலைக்க நான் அவளுக்கு உதவினேன். ரோஜா மொட்டு விரியுமுன்பே கசக்கி வீசியெறியப் பட்டாப் போல, ச்... வாங் சியோமை. அத்தை கையை உயர்த்தி கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். அப்ப எனக்குள் பிரதிக்ஞை. இனி இந்தக் காரியத்தை, இனி நான், என் கையால் செய்யமாட்டேன். இனியும் இப்படி காரியங்களை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. யாருக்குமே இதை இனி நான் செய்யக் கூடாது. அட சிம்பன்சிக்குப் பொறந்ததாகக் கூட இருக்கட்டும். அதை அழிக்கற சோலி எனக்குத் தேவையில்லை. வாக்வம் பாட்டிலில் சதையை உறிஞ்சும் அந்தச் சத்தம்... என் இதயத்தையே யாரோ பிசைகிறாப் போலிருக்கும் அது. அழுத்தி அழுத்தி என் இதயம் பிசையப்படுகிற பிரம்மாண்ட வலி. என் உடம்பே குளிர்ந்து வியர்த்து பொறி பறக்கறாப்ல ஆயிட்டது. அந்தக் கருக் கலைப்பை முடிச்ச மாத்திரத்தில் நான் அப்படியே தரையில் நிலைகுலைந்து விழுந்துவிட்டேன்.

***
ம். நீங்க நினைக்கறது சரி தான். பேசும்போது நான் அத்தனை கோர்வையா பேசறதில்லை. எங்கியோ சுத்தி என்னென்னவோ பேசிர்றேன். வயசாயிட்டது. இத்தனை வளவளப்புக்கும் பிறகு, ம், இன்னும் நான் ஹாவ் தஷோவைக் கல்யாணம் கட்டிக்கிட்டது ஏன், அதைச் சொல்லவில்லை.

                ம். பதினைஞ்சாம் நாள். சந்திர ஆண்டின் ஏழாம் மாசம். நான் பணி ஓய்வை அறிவித்தேன். அந்தப் பாதகன் பூசணி ஹுவாங் என்னைக் கூடவே வெச்சிக்கலாம்னு கெஞ்சி முட்டினான். ஓய்வு எடுத்துக்கங்க பெரிம்மா, ஆனால் மாச சம்பளம், எட்டுநூறு யுவான்... அது வரட்டுமே. பணி ஓய்வுன்னு போறா மாதிரி காட்ட வேணாம்ன்றான். அவன் மூஞ்சில காறித் துப்பினேன். ஏல உனக்காக ஒழைச்சி ஓடாத் தேய்ஞ்சாச்சி, போதும்ல. இந்த ஆஸ்பத்திரிக்கு இத்தனை வருஷமா வரவு வந்த துட்டில், பத்துக்கு எட்டு யுவான் என் வேலையால் வந்ததாக்கும். உனக்கு நன்றி இருந்தால் நினைச்சிக்க அதை. சுத்துவட்டார பொம்பளையாள்களோ பெண்களோ இங்க மருத்துவம் பார்க்கன்னு வராங்கன்னா அவங்க என்னைப் பார்க்க வர்றாங்க. ஏல எனக்கு துட்டு பெரிசா இருந்தால் தினத்துக்கு ஆயிரம் நானே சுயமா காசு தேத்திருப்பேன்.

                ... மாசம் எட்டுநூத்தில் ஏல உன்னால என்னை வேலை வாங்கிற முடியும்னு நினைக்கியா? வெளிய இறங்கி பிரசவம் பார்த்தால் இதைவிட அதிகம் சம்பாதிக்கலாம். என் பாதி வாழ்க்கை பிறத்தியானுக்கு ஓடியாடியே போயிட்டது. இனி மீதி வாழ்க்கைய எனக்காக நான் வாழணும். கயோமி நகராட்சி பக்கமா வீட்டைப்பார்க்க வடகிழக்கா நான் போறேன்...

                அதுலயும் அந்தக் கடைசி ரெண்டு வருஷம் அவன் என்னைப் படாதபாடு படுத்திட்டாப்ல. ஆனால் நான் பனங்காட்டு நரியாக்கும். அதுக்கெல்லாம் அசர்ற ஆள் கிடையாது. சின்னப் பெண்ணா இருக்கறப்ப ஜப்பானியக் கிராதகர்கள் கிட்டகூட நான் பயந்தது இல்லை. இப்ப என் இத்தனை வயசில் இவன் என்னைப் போட்டுப்பார்க்க நினைச்சால்... ம். ம். திரும்ப நான் எங்கியோ போயிட்டிருக்கேன்ல... நம்ம கதைக்கு வருவம். நான் ஏன் ஹாவ் தஷோவைக் கல்யாணம் கட்டிக்கிட்டேன்? அது தெரியணும்லியா உங்களுக்கு?

***
அந்தக் கதையை நான் தவளைகள்லேர்ந்து ஆரம்பிக்கணும். நான் என் பணி ஓய்வை அறிவிக்கிறேன். என் பழைய சகாக்கள் அன்றைக்கு ராத்திரி எனக்கு விருந்து கொடுத்தார்கள். விருந்தின் முடிவில் நான் குடிச்சிருந்தேன். முழு கிண்ணங் கூடக் காலி பண்ணவில்லை. ஆனால் அது மட்டமான நாட்டுச் சரக்கு. விடுதிக்காரரின் பையன் சி சியோக், அறுபத்திமூணில் சக்கரைவள்ளிப் பஞ்சம் வந்ததே அதின் குழந்தை சி ஹெய்சுவா, அவர்கள்தான் ரொம்ப காட்டமான சரக்கு என்று உலகாங்கி மதுவை எடுத்து, என்னை மரியாதை செய்கிறதாகச் சொல்லி, உடைத்தார்கள். ஆனால் அது போலி ஐட்டம். போதையில் என் தலை கிர்ரென்றது. விருந்தில் எல்லாருமே மங்கலாய்த் தெரிந்தார்கள். என்னால் நிற்கவே முடியவில்லை. சி விளோக் அவனுக்கு வாயில் நுரை தள்ளி கண் செருகியது...

அத்தை தள்ளாடியபடியே விடுதிக்கு வெளியே வந்தாள். ஆஸ்பத்திரி படுக்கையறையை நோக்கி நடந்தாள். அதாவது அப்படித்தான் உத்தேசமாய் நடந்தாள். சகதியான சந்து அது. ரெண்டுபக்கமும் தலை உயரத்தில் முள்கம்பி வேலி. தேங்கிக்கிடந்த குட்டைகளில் நிலவொளி கண்ணாடிபோல் மினுங்கியது. ஒருபக்கத்தில், பிறகு மறுபக்கத்தில் என்று தவளை தேரைகளின் கொரக் கொரக் ஒலிகள் எழும்ப ஆரம்பித்தன. சப்த நாராசம். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும், முன்னும் பின்னும்... வகைதொகை யில்லாத கோரஸ் அது. நாலா பக்கம் இருந்தும் விட்டுவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்த ஒலிகள்... இப்போது திடுமென்று ஒருசேர ஒரே ஆர்ப்பரிப்பாய்க் கேட்டன. சுனாமி போல அலை அலையாய் அந்தப் பேரொலி எழும்பி வானத்தையே நிறைத்தது. சட்டென எல்லா ஒலிகளுமே நின்று ஒரு மகா அமைதி. சிறு பூச்சிகளின் ஒலி தவிர உலகில் வேறு ஒலிகளே இல்லை.

                ... எய்யா இத்தனை வருஷ என் மருத்துவச்சி அனுபவத்தில், பழக்கமில்லாத... ஆளரவம் அற்ற பிரதேசங்களில் அகாலங்களில் போய் வந்திருக்கேன்... நான் பீதியடைஞ்சதே கிடையாது. ஆனால் அந்த ராத்திரி... அவளுக்கு குப்னு ஆயிட்டது. தவளை இரைச்சலை டிரம், தப்பு அடிகளாய்த்தானே சொல்வார்கள்... அந்த ராத்திரி அந்த இரைச்சல் மனித இரைச்சலாய்க் கேட்டன அவளுக்கு. ஆயிரக்கணக்கான புதிய சிசுக்கள் ஓலமிடுவது போல. வாஸ்தவத்தில் அவளுக்கு மிகவும் பிடிச்ச ஒலிகளில் ஒன்று இது. புதுக்குழந்தையின் அழுகை. ஒரு மகப்பேறு மருத்துவருக்கு ஆத்மாவை சிலிர்க்க வைக்கிற இசை இதைத் தவிர வேறு எது இருக்கவியலும்?

                உள்ளேபோயிருந்த மட்டரக சரக்கு உடம்பையே விரைக்கச் செய்திருந்தது. ஆனால் போதையில் என் மனம் கிலேசமடைந்திருந்ததாய் நினைச்சிக்க வேணாம், என்றாள் அத்தை. சரக்கு வியர்வையா வெளிய வழிஞ்ச பிறகு... லேசான தலைவலி... ஆனால் மனசு தெளிந்துவிட்டது. அந்த சேற்றுப் பாதையில் அப்போதைய அவள் யோசனையெல்லாம் இந்தத் தவளைக் கொரகொரப்பில் இருந்து தப்பிப்பதே. ஆனால் அதான் எப்படி, விளங்கவில்லை. அவள் என்னதான் தப்பித்தோட முயன்றாலும் அந்த க்ரோக் க்ரோக் கோஷம்... அவளைத் துரத்தி வந்தது. நாலாபுறம் இருந்தும் எட்டு திக்கில் இருந்துமாய் அவளை அமுக்கின அவை.

                அத்தை ஓட நினைத்தால்... கால்கள் ஒத்துழைக்கவில்லை. சகதியோடு அவள் ஷு ஒட்டிக்கொண்டிருந்தது. காலை பிரித்துத் தூக்கவே முடியவில்லை. நிலாவெளிச்சத்தில் வெள்ளிநிற நாடாக்களில் சகதி ஷுவைக் கட்டினாப் போல. மேலும் மேலும் நாடாக்கள் இறுக்கியபோது, அத்தை ஷுக்களையே உரித்து எறிந்துவிட்டு வெறுங் காலுடன் நடக்க முற்பட்டாள். ஆனால் இப்போது பாதமே சகதியில் சிக்கி உருவ வராமல் தவித்தது.

                அத்தை சொன்னாள். நான் அப்படியே மண்டிபோட்டேன். உள்ளங்கையாலும் முட்டியாலும் தவழ்ந்துபோக ஆரம்பித்தேன். என்ன அபத்தம்னெல்லாம் யோசனை இல்லை. கைகால் பாதம் உள்ளங்கை கெண்டைச்சதை வரை சகதி அப்பல்... அப்பதான்... என நிறுத்தினாள் அத்தை. எத்தனைன்னு எண்ணவே முடியல. அத்தனை தவளைகள்... வேலியின் மகா இருட்டில் இருந்தும், லில்லி இலைகளில் இருந்தும்... துள்ளி வெளியே பாய்ந்தன. விதவிதமான நிறத்தில் தவளைகள். சில இளம் பச்சை. பொன்மஞ்சள். இஸ்திரி பெட்டி அளவு பெரிய தவளை கூட இருந்தது அப்பனே. சின்னச் சின்னதுன்னா பேரிச்சம்பழ அளவில் நிறைய. அதுங்களோட கண்ணு பொன் மினுங்கல். சில கண்கள் சிவப்பு அவரைக்கொட்டை.

                கடல் அலைபோல அவை என்னை நோக்கி எழுச்சியுடன் வந்தன... அந்தக் குரலில் எத்தனை கோபம், ஆக்ரோஷம்ன்றே?... எல்லாமாக அவளது தோலை வாயால் கடித்து நகத்தால் கிழிக்கிறாப் போல இருந்தது. அவள் முதுகில், கழுத்தில், தலையில் எங்கும் தவளைச் சவாரி. என்ன கனம் இவை. அப்படியே என்னை மண்ணோடு அழுத்திருமாய் இருந்தது ஐயா... அதுகள் என்னைப் படுத்தியதே அதில் கூட நான் அத்தனை பதறவில்லை... ஆனால் ஜில்லிட்ட அதுகளின் ஸ்பரிசம். வழவழ தோல் தீண்டல். என் மேலெல்லாம் ஒண்ணுக்கு. யார் கண்டா விந்தைக் கூட அவை பீய்ச்சியிருக்கலாம்.

                எனக்கு பாட்டிக்கதை ஒண்ணு ஞாபகம் வந்தது அப்போது, என்றாள் அத்தை. நதிக்கரையில் உறங்கிவிட்ட ஒரு பெண், உறக்கத்தில் ஆழ்ந்தபோது, பச்சை அங்கி வாலிபன் ஒருவனுடன் கனவில் சல்லாபம் செய்கிறாள்... அவள் கண் விழிக்கையில் கருவுற்றிருந்தாளாம். அவள் பிரசவித்தபோது தவளைகள் பிறந்தவனவாம்.

                பதறி ஒரே துள்ளலில் அத்தை அந்த தவளைகளை ஒட்டிய சகதியாய் உதறினாள். ஆனால் எல்லா தவளைகளையும் உதற அவளால் முடியவில்லை. சில அவளது உடையோடு ஒட்டிக்கொண்டன. தலைமுடியோடு சில. காதுகளில் சில வாயால் கவ்வியபடி தொங்கின. பெரிய பெரிய தோடுகள் போல...

                அத்தை ஓட ஆரம்பித்தாள்... அந்த சகதி காய ஆரம்பித்திருந்தாப் போலிருந்தது. ஓடிய வசத்தில் அத்தை உடம்பை உதறிக்கொண்டாள். துணிகளைக் கிழித்தெறிந்தாள். தோலை ரெண்டு கையாலும் சுரண்டி வழித்தெறிந்தாள். ஒவ்வொரு தவளையைப் பிடிக்கையிலும் வீரிட்டபடி விசிறியடித்தாள். காது குண்டலங்கள். சின்னவாயால் பால் உறிஞ்சும் குளுவான் கவ்வல் கவ்வியிருக்கும் தவளைகளைப் பிய்த்து வீசியபோது காதே கிழிந்தது...

                ஐயோ என பதறி பரிதவித்து அலறி அத்தை ஓடினாள். ஆனாலும் அந்த நினைவுகளை உதற முடியவில்லை. திரும்பிப் பார்த்தபோது, ஹா நெஞ்சை அடைக்கிறாப் போலிருந்தது... ஆயிரம் பத்தாயிரக் கணக்கான தவளைகள் படையெடுத்தாப் போல அவளைத் துரத்தி வருகின்றன... க்ராக் க்ராக். தவளைப் படை பராக் பராக். இரைச்சலான துள்ளல்கள். ஒன்றுடன் ஒன்று மோதி விழுந்தன. கும்பலாய் அப்பி அப்படியே துள்ளின.

                தெருவுக்கு வந்தாலும் தெருப்பக்க தவளைகள் அவளை வழிமறித்தன. தவளைத் தாக்குதல். அத்தை சொன்னாள்... அதுங்க என் அழகான சில்க் கவுனையே நார் நாராய்க் கிழிச்சி எறிந்தன, ஐயா... அவை அந்த துணிக் கிழிசல்களை நாடாக்களாக அப்படியே முழுங்கினாப் போலிருந்தது. அவள் உதறியபோது அப்படியே வெளிறிய வயிற்றுப்பாகங் காட்டி மல்லாக்க விழுந்தன அவை.

                நினைவுகள் பிடி கழன்றிருந்தன. தன் நிர்வாணமே உறைக்கவில்லை. நதிக்கரை வரை அத்தை ஓடி வந்திருந்தாள். நதியில் சின்ன கல் பாலம். வெள்ளியாய் வெளிச்சம் அதைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. பாலத்தை நோக்கி அப்படியே முண்டக்கட்டையாய்ப் போய்ச்சேர்ந்தாள். யாரோ ஆம்பளை. தலையில் கூம்பு வடிவில் மூங்கில் தொப்பி. மழைஅங்கி. நடுப்பாலத்தில் அவர் உட்கார்ந்து... எதையோ பரசிவிட்டபடி...

                அப்புறம் தெரிந்தது. ஒரு களிமண் பிசைவை அப்படி ஒண்ணுபோல பரசிக்கொண்டிருந்தார் அவர். 'நிலவின் குழந்தை' செய்யணுமானால் அந்தக் களிமண்ணை இப்படி நிலவில் உலர்த்தணும். அதை பிறகு தான் தெரிந்துகொண்டேன். யார் அவர், தெரியாது. அப்ப அதை நான் சட்டை பண்ணவில்லை. அவர் யாராய் இருந்தாலும், எனக்கு அவர்தான் புகலிடம்... அத்தை நேரே அவர் கைகளில் அடங்கினாள். அவரது உடைகளை நெகிழ்த்தி, தன் வெற்று மார்புகளை அவருடன் கதகதப்பாய் இழைத்துக் கொண்டாள். எத்தனை வெடவெடத்து ஈரமாய் இருந்தாள் அவள். தவளைகளின் மோசமான நெடி முதுகுப் பக்கம். அவள் கதறினாள். உதவி... பெரியாம்பளை... என்னைக் காப்பாத்துங்க! அப்படியே சரணாகதி நிலையில் தன்னை ஒப்படைத்தாள் அவள்.

***
அத்தையின் விஸ்தாரமான விவரணைகள் எங்கள் முதுகுத்தண்டை சிலிர்க்க வைத்தன. காமெரா இப்போது ஹாவ் தஷோ பக்கம் வந்தது. இப்பவும் அவர் அதேபோல சிலையாய் உட்கார்ந்திருந்தார். அடுத்து அவர் செய்த களிமண் உருவங்களை கிட்டத்தில் காட்டிச்சென்றது காமெரா. அந்த கல் பாலம் அதுவும் உருவாகி யிருந்தது. பிறகு திரும்ப காமெரா அத்தையிடம் வந்தது...

                கண்திறந்து பார்த்தபோது, நான் அவரின் செங்கல் எடுத்த மேடையில் படுத்திருந்தேன். ஆம்பளை உடைகள் அணிந்திருந்தேன். ரெண்டு கையாலும் எனக்கு அவர் ஒரு கிண்ணம் அவரை சூப் தந்தார். அதன் வாசனையே என்னை திரும்ப உலகத்துக்குக் கொண்டுவந்தது. ஒரு கிண்ணம் சூப் குடித்தவுடனேயே நன்றாக வியர்த்துவிட்டது. உடம்பே ரொம்ப எரிந்து வலித்தது... பிரக்ஞையே இப்போது தான் வந்திருந்தது. அந்தப் பதற்றம் துடிதுடிப்பு மெல்ல அடங்க ஆரம்பித்திருந்தது இப்போது. உடம்பு பூராவும் கீறல்கள். ஜுரங் கூட இருந்தாப் போலிருந்தது. என்னென்னவோ பினாத்திக் கொண்டிருந்தேன் போல.

                ஆனால் எல்லாம் ஒரு சடங்கைப் போல, அவரது சூப்பை அருந்தியபோது முடிவுக்கு வந்தது. தோலிலும் உள் எலும்புகளிலும் வலி. மறுபிறவின்றாங்களே, அதைப் பத்திக் கேள்விப் பட்டிருக்கிறேன். எய்யா, இதுவே எனக்கு மறு பிறவி தான்... உடம்புல தெம்பு சேர்ந்ததும் நான் அவரிடம் சொன்னேன். பெரியாம்பளை, நாம கலியாணங் கட்டிக்கிடலாம்.


மூலம் சீன மொழி
Extracted from Frogs by Mo Yan. Translated in English by Howard Goldblatt.
courtesy Granta

storysankar@gmail.com – M 91 97899 87842

Comments

Popular posts from this blog