ஊர் அப்படி
இவர் இப்படி
சித்தன் பிரசாத்



அதிபுத்திசாலியாக வாழ்தல் சாத்தியமா? இருக்கலாம்! மனதின் 'ஆக்ஸிலேட்டர் பெடலை', வண்டியின் அடித்தளம் கடந்து, தரையையும் குடைந்து அழுத்திச் சென்று வரலாற்றின் பக்கங்களைப் பலர் நிரப்பியிருக்கின்றனர். நரம்பியல் இயந்திரத்தை அதிவேகமாக விரட்டி, மூளையின் 'கியர்பெட்டி'யும், 'சேஸிசு'ம் சிதறி சாலையோரம் கிடக்க, அதைப் பார்த்தவாறே, விரைந்தவர்கள் இந்த அதிபுத்திசாலிகள்!

முதலாம் நோர்டன். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சக்கரவர்த்தி/ மெக்ஸிகோவின் பாதுகாவலர் - இவ்வாறு பொறிக்கப் பெற்றிருந்தது அவரது கல்லறையில்!

சான் ஃபிரான்சிஸ்கோ மாநகரத்திற்குத் தெற்கே சில கிலோமீட்டர்கள் தொலைவில் கொல்மா என்கிற குறுநகரம். கொல்மாவில் உள்ள வுட்லான் கல்லறைத் தோட்டத்தில் உள்ள இந்த நினைவுச்சின்னத்தைக் காண வருடம்முழுவதும் பலர் வந்தவண்ணம் இருக்கிறார்கள். ஜனாதிபதியும், பிற செனட்டர்களும் அமெரிக்க மக்களால் தேந்தெடுக்கப் படுகிறார்கள் என்கிற அமெரிக்க வரலாறு அறிந்தவர்க்கு இது ஆச்சரியத்தை அளிக்கும். அமெரிக்காவிலாவது சக்கரவர்த்தியாவது!

ஆனால், உண்மை! 1859 செப்டம்பர் 17 அன்று ஜோஷ்வா அப்ரஹாம் நோர்டன் தன்னை அவ்வாறு பிரகடனப்படுத்திக் கொண்டார். சான் ஃபிரான்சிஸ்கோ பத்திரிகைகளை இப்பிரகடனச் செய்தியைப் பிரசுரிக்கும்படி அவர் கேட்க, அவை மறுத்துவிட்டன. யதார்த்தத்தில் யார் இவர்? 1819ல் இங்கிலாந்தில் பிறந்த அவர் ஏராளமான பணத்துடன் அமெரிக்கா வந்திறங்குகிறார். இங்கு சில தவறான வணிக முதலீடுகளில் அப்பணத்தை இழந்துவிடுகிறார். அதன்பின்னர் அவரது நடவடிக்கைகளில் மாறுதல் ஏற்படுகின்றது. அதன்பிறகு அவர் பழைய நோர்டனாக மாறவேயில்லை. அவர் யதார்த்த உலகில் வாழவேயில்லை. ஆனால், அவர் வன்முறையாளரோ அபாயகரமானவரோ அல்ல. எது தன்மனப் புனைவு, எது உண்மை, என்பதைப் பிரித்தறியும் திறனை அவர் இழந்துவிட்டார். அதன்பின்னரே அவர் தன்னை அமெரிக்காவின் சக்கரவர்த்தியாகப் பிரகடனம் செய்தது. அத்துடன் நீலநிற இராணுவ உடையையும் அணிய ஆரம்பித்தார். சான் ஃபிரான்சிஸ்கோ இராணுவத் தளத்தின் ஒரு வீரர் பொன்னிறத் துணிப்பட்டையையும், பொத்தான்களையும் அளிக்க, அவரது சீருடை அவர் ஒரு இராணுவத் தளபதியோ அல்லது அரசனோ அல்லது சக்கரவர்த்தியோ என்கிறதான தோற்றத்தை அளித்தது. குறுகிய காலத்திலேயே அவர் மாநகரம் முழுதும் அறியப்பட்டவரானார். எப்போதும் சீருடையும் உயரமான தொப்பியும் அணிந்து வலம்வரும் அவரை மக்கள் காணும்போது ஒரு அரசருக்குரிய மரியாதையை செலுத்த ஆரம்பித்தனர்.

சக்கரவர்த்தி நோர்டன் கையில் ஒருபோதும் பணம் இருந்ததில்லை. அவருக்குத் தேவையும் இருந்ததில்லை. உணவுவிடுதிக்குச் சென்றால் அவருக்கு இலவசமாகவே உணவளித்தார்கள். கடைகளிலிருந்து ஏதாவது தேவைப்பட்டால் அதுவும் அவருக்கு இலவசமாகவே அளிக்கப்பட்டது. சில நேரங்களில் அவருடையபடம் அச்சடிக்கப்பட்ட அவருடைய சொந்த பணத்தாளையும் கொடுப்பார். சில பல்பொருள் அங்காடிகள் 'சக்கரவர்த்தி முதலாம் நோர்டன் உத்தரவின் படி' என்று அறிவிப்புப் பலகையும் மாட்டத் தொடங்கின. அமெரிக்கச் சக்கரவர்த்தி ஒப்புதலின் பேரில் துவங்கப்பட்ட கடை என்று பொருள் அளித்த அந்த அறிவிப்பு வைத்தவர்களின் வணிகம் அதிகரிக்கவும் உதவி செய்தது.

நோர்டன் தனது அரச கட்டளைகளை சான் ஃபிரான்சிஸ்கோவின் பத்திரிகைகளுக்கு அனுப்பத் துவங்கினார். அவை அரச Decrees என்றழைக்கப் படலாயின. பத்திரிகைகள் அவற்றைப் பிரசுரிக்கத் துவங்க, வாசகர்கள் அவற்றை நகைச்சுவையாக எதிர்கொண்டனர். பத்திரிகைகளை நோர்டனின் அரச கட்டளைகளை வாசிக்கவென்றே ஜனங்கள் வாங்கவும் ஆரம்பித்தனர்.

பல கட்டளைகள் பொதுமக்களை சிந்திக்கவும் வைத்தன. உதாரணத்துக்கு ஒன்று: ஜான் பிரௌன் ஒரு புரட்சிக்காரன். அடிமைகளை விடுவிக்க என போர் ஒன்றைத் துவக்க முயற்சி செய்கிறான். ஆனால் அவனுடன் இருந்தவர்கள் வெறும் பதினேழு பேர்தான். வெர்ஜினியா மாநில கவர்னர் வெஸ் அவனைச் சிறைப்பிடித்து தூக்கிலிட உத்தரவிடுகிறார். உடனே நோர்டனின் அரச கட்டளை பறக்கிறது; கவர்னர் வெஸ் அவர்களைத் தான் தனது உத்தரவின் மூலம் உடனடியாக அவரது பதவியிலிருந்து நீக்குவதாக! வெறும் பதினேழு பேர்களுடன் புரட்சியை ஆரம்பித்த ஜான் ஒரு மனநோயாளி. அவனை மனநிலை மருத்துவமனைக்கு அனுப்பியிருக்க வேண்டும். தூக்கிலிட்டிருக்கக் கூடாது என்பது நோர்டனின் வாதம். ஏராளமான பொதுமக்கள் நோர்டனின் வாதத்தை ஆதரித்தனர். பின்னாட்களில் அமெரிக்க சிவில் யுத்தம் தொடங்குவதற்கு ஜான் பிரவுனின் மரணமும் ஒரு காரணமாக அமைந்தது.

மற்றொரு சுவாரஸ்யமான அரச கட்டளை சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்தின் பெயர் குறித்தானது. பலரும் சான் ஃபிரான்சிஸ்கோ என்கிற பெயரைச் சுருக்கி ஃபிரிஸ்கோ என்று அழைக்கலாயினர். சக்கரவர்த்தி நோர்டனுக்கு இந்த சுருக்கிய பெயரில் உடன்பாடில்லை. அப்படி எவராவது பெயரைச் சுருக்கி பயன்படுத்தினால் இருபத்தைந்து டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என சக்கரவர்த்தி ஆணை இடுகிறார். இன்றளவும் சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்துக்கு வருகை தருபவர்களிடம் பெயரைச் சுருக்கி ஃபிரிஸ்கோ என்றழைக்க வேண்டாமென அந்நகரத்தார் கேட்டுக் கொள்கின்றனர்.

சக்கரவர்த்தி நோர்டனின் மிகப் பிரபலமான ஆணை ஒன்று: ஓக்லாந்து நகரத்திலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாவுக்கு ஒரு பாலம் அமைக்க வேண்டும் என மாநகர நிர்வாகிகளுக்கு சக்கரவர்த்தி நோர்டனால் உத்தரவு அனுப்பப்பட்டது. நகர நிர்வாகிகள் அவ்வாணையைக் கண்டுகொள்ளவில்லை. கோபமுற்ற சக்கரவர்த்தி நகர நிர்வாகிகளைப் பணியிலிருந்து நீக்குவதாக அறிவிக்கிறார். நிர்வாகிகளுக்கும் சரி, பாலம் குறித்தும் சரி, ஒன்றும் நடந்துவிடவில்லை. ஆனால், நோர்டன் இறந்து பற்பல ஆண்டுகளுக்குப் பின்னர், சக்கரவர்த்தி நோர்டன் ஆணையில் குறிப்பிட்டிருந்த அதே இடத்தில் சான் பிரான்சிஸ்கோ ந்கரிலிருந்து ஓக்லாந்த்தை இணைக்கும் பாலம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்துசெல்லும் அப்பாலம் இன்று BAY BRIDGE என்றழைக்கப் படுகிறது.

சான் ஃபிரான்சிஸ்கோ அப்போதுதொட்டே சைனாக்காரர்களின் வசிப்பிடமாக இருந்து வந்திருக்கிறது. இன்றும் அப்படியே. சக்கரவர்த்தி நோர்டனுடனான ஒரு நிகழ்வு சைனாக்காரர்கள் தொடர்புடையது. நோர்டனின் காலத்தில் ஐரோப்பாவிலிருந்து குடியேறியிருந்த பலருக்கும் சைனாக்காரர்களைக் கண்டால் பிடிக்காமல் இருந்தது. அவர்களில் சிலர் ஒன்றுசேர்ந்து சைனாகாரர்  எதிர்ப்புக் குழு ஒன்றை ஒருங்கிணைத்தனர். சான் ஃபிரான்சிஸ்கோவில் சைனாக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாக அவர்கள் கருதினர். அதனால் சைனாக்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வன்முறையில் ஈடுபட தீர்மானித்தனர். இந்த விவரம் மாநகரில் பலருக்கும் தெரிந்திருந்தாலும், அந்த திட்டமிடப்பட்ட வன்முறையை நிறுத்திட யாரும் எதுவும் செய்யவில்லை.

அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடத்திலிருந்து கும்பலாகப் புறப்பட்டு சைனாக்காரர் வசிக்கும் பகுதிக்குச் சென்றனர். நெருங்கிய போது, இருட்டில், சாலையின் குறுக்கே அவர்கள் முன்னேற்றத்தைத் தடை செய்தவாறு ஒரு தனி நபர் கைகளைக் கட்டிக் கொண்டு, தலை குனிந்து, பிரார்த்தனை செய்வது போல நிற்பதைக் கண்டனர். உருவம் அசையவுமில்லை; பேசவுமில்லை! கூட்டம் அப்படியே நின்று கவனிக்க, இருட்டில், நீலச் சீருடையும், பொன்னிறப் பட்டையும், மின்னும் பொத்தான்களும் தெரிந்தன. கூட்டமும் ஒன்றும் சொல்லவில்லை. எதுவும் செய்யவுமில்லை. மெதுவாகக் கலைந்து, திரும்பி நடக்கலாயினர். சக்கரவர்த்தி நோர்டன் தனி ஒரு ஆளாக  நின்று திட்டமிடப்பட்ட வன்முறையைத் தடுத்துவிட்டார்!

ஓர் இரவு, நகர்வலம் வந்து கொண்டிருந்த அமெரிக்கச் சக்கரவர்த்தி நோர்டனை சான் ஃபிரான்சிஸ்கோ காவல்துறையில் புதியதாக இணைந்திருந்த வீரர் ஒருவர் கைது செய்துவிட்டார். தன்னை அமெரிக்காவின் சக்கரவர்த்தி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் சமுதாயத்துக்குக் கேடு விளைவிப்பவராகவே இருப்பார் என்று அந்த இளம் காவல்வீரர் எண்ணினார். சிறிது நேரத்திலேயே காவல் நிலையத்துக்கு நீதிபதியும், காவல் உயரதிகாரியும் வந்து சேர்ந்தனர். 'எனக்குத் தெரிந்து சக்கரவர்த்தி நோர்டன் எவரையும் துன்புறுத்தியது கிடையாது' என்று சொன்ன நீதிபதி தவறுக்கு வருத்தம் தெரிவித்து உடனடியாக சக்கரவர்த்தியை விடுவிக்குமாறு உத்தரவிட்டார். அன்றிலிருந்து மாநகர காவல்துறையினர் சக்கரவர்த்தி ஜோஷுவா நோர்டனை எங்கு கண்டாலும், மிலிட்டரி சல்யூட் அளித்து மரியாதை தெரிவிக்கலாயினர்.

1880 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் தியதி அன்று வழக்கம் போல தன்னுடைய நகரத்தை மேற்பார்வை செய்தவாறு வந்த சக்கரவர்த்தி நோர்டன் கலிஃபோர்னியா வீதியில் செல்லும்போது சுருண்டு விழுந்தார். பொதுமக்கள் விரைந்து வந்து பார்க்க, சக்கரவர்த்தி ஜோஷுவா நோர்டன் இறந்து போயிருந்தார்.

அடுத்த நாள் சான் ஃபிரான்சிஸ்கோ கிரானிக்கல் என்கிற செய்தித்தாள் முகப்பில் நான்கு வார்த்தைகள் ஃபிரென்சு மொழியில் அச்சிடப் பட்டிருந்தன. ஜிபிணி ரிமிழிநி மிஷி ஞிணிகிஞி! சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்தின் பிரதான குடிமகனாக அவரைச் சித்தரித்த செய்தித்தாள் நோர்டன் இறக்கும்போது அவரிடம் ஈமச் சடங்குக்கான பணம் கூட இல்லை என்று தெரிவித்திருந்தது. உடனடியாக சான் ஃபிரான்சிஸ்கோ மாநகரின் பெருவணிகர் குழாம் ஒன்றிணைந்து சக்கரவர்த்தி நோர்டனின் ஈமச்சடங்கின் செலவுக்கான பணத்தினை அளிக்க அடக்கநாள் அன்று முழு நகரமும் கடைஅடைப்பு செய்து மரியாதை தெரிவிக்க, கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர்களுக்கு மேல் நோர்டனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். நோர்டனைப் போன்றே உலகின் ஏனைய இராஜாக்களும், சக்கரவர்த்திகளும் கருணையுடனும் நேர்மையுடனும் நடந்துகொண்டால் உலகம் இன்னும் சிறந்த இடமாக அமையும் என ஒரு நாளிதழ் தெரிவித்தது.

இன்றும்கூட சில கடைகளும், சிற்றுண்டி விடுதிகளும் 'மாட்சிமைக்குரிய முதலாம் நோர்டன் சக்கரவர்த்தி அவர்களின் ஒப்புதலோடு' என்கிற அறிவிப்புப் பலகையை வைத்திருக்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஜோஷுவா நோர்டனின் கல்லறையில் அவர்கள் ஒன்று சேர்கின்றனர். பின்னர் அருகிலுள்ள சத்திர விடுதியில் கூடி நோர்டனின் நினைவைக் கொண்டாடுகின்றனர். அங்கு செயல்படும் -காம்பஸ் விடஸ் என்கிற வரலாற்று அமைப்பினைச் சேர்ந்தவர்கள் இவர்கள். சான் ஃபிரான்சிஸ்கோ மாநகர மக்கள் அமெரிக்காவின் முதலாம் சக்கரவர்த்தி நோர்டனை இவர்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

நம்முடைய வரலாற்றை சரிவர நேர்மையாகக் கூடப் பதிவு செய்யாத நம் அவலம் ஒரு புறம் இருக்கட்டும். 'மதராஸப் பட்டணத்தின் சக்கரவர்த்தி நான்' எனக் கூறிக் கொண்டு யாராவது நம்மிடையே நடந்தால் நாம் என்ன செய்வோம்? அல்லது 'நான் தான் இராஜராஜ சோழன்' என்று யாராவது கூறிக் கொண்டால்......? இன்றைய நம் அரசு/ நிர்வாகம் என்ன செய்யும்? நம் காவல்துறைதான் என்ன செய்யும்? இவற்றிற்கான விடைகளை நான் சொல்ல வேண்டும் என்பதேயில்லை. நாம் அறிவோம்!

2
நம்முடைய காவல்துறையும், நம் அரசு/ நிர்வாகமும் மட்டுமல்ல, உலக அளவிலும் இதுவே காட்சி! நமது யுகமாயினி இதழில் தொடர்பத்தி எழுதிய நாகரத்தினம் கிருஷ்ணா பதிவிட்டதை இங்கு பொருத்திப் பார்ப்பது சரியாக இருக்கும். ஆண்டு 1997. பிரான்சு நாட்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். பிலிப் பெர் என்பது அவர் பெயர். ஆனால் ரோஜெர் மர்த்தென் என்கிற பெயரைப் புனைந்துகொண்டு சார்த்துவாஸ் என்கிற குறுநகரத்திற்கு வருகிறார். அங்கு 'அதிவேக சாலை' திட்டமொன்று பாதியில் நிறுத்தப் பட்டிருந்தது. அப்பிரதேசத்தில் காணப்படும் வண்டினம் ஒன்று இந்தச் சாலை அங்கு வருவதினால் அழிந்துவிடும் எனச் சுற்றுச்சூழல் அமைப்பினரால் எதிர்க்கப் பெற்று கைவிடப்பட்ட திட்டம் அது. ரோஜெர் மர்த்தென் என்கிற பெயரில், அப்பணியை மீண்டும் எடுத்துச் செய்யவிருக்கும் பொதுப்பணித் துறையின் அதிகாரி என்று தன்னை ஊராட்சித் தலைவரிடமும் இதர நிர்வாகிகளிடமும் பிலிப் பெர் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ஊராட்சித் தலைவரும், முக்கிய நிர்வாகிகளும் முழுக்க முழுக்க இவரை நம்புகிறார்கள். சாலை போடுவதற்கான எந்திரங்களும், பிற பொருட்களும் ஊராட்சி நிதியுடன் கொண்டுவரப்பட்டு சாலையும் போட்டு முடிக்கப்பட்டது. ஊர்ப் பொதுமக்கள் இவரை இரட்சகராகக் கொண்டாடியதோடு அவர்களின் ஒருமித்த ஆதரவின் முன் சுற்றுச்சூழல் அமைப்பினரும் எதுவும் செய்யமுடியாமல் போனது. இறுதியாக, சாலை முடிந்து பயன்பாடு துவங்கவிருந்த நேரத்தில் வந்தார்கள் அரசு அலுவலரும் காவல்துறையும். பிலிப் பெர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என அவர்கள் கூறவும் ஊரார் திகைத்துப் போயினர். பிலிப் பெர் கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.

பின்னால் இந்நிகழ்வு குறித்து அவரிடம் விசாரித்த போது 'சாலைபோடும் அந்தக் காலகட்டத்தில் தான் முற்றிலும் இன்னொரு மனிதனாக வாழ முடிந்தது' என்றார். ஆனால், அந்த நிதியில் தனக்கென்று எதையும் ஒதுக்கிக்கொள்ளாதது மட்டுமல்ல, பணி முடிந்ததும் அங்கிருந்து அவர் ஒளிந்து ஓடிச்செல்லவும் இல்லை! சரி, சாலை? மிகச் செம்மையாகப் போடப்பட்டிருந்த அந்தச் சாலையை முறையற்ற வழியில் இடப்பட்டது என்று சொல்லி அரசு உடைத்து நீக்கியது; பொது மக்களின் பணம்தானே! அவ்வூர் மக்களின் நிர்பந்தத்தினால் அரசு நிர்வாகம் மீண்டும் சாலையைப் போட்டுக்கொடுத்தது வேறு கதை!

3
சிமியோன் எல்லெர்டன் (1696?-1799). பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உடற்பயிற்சி வெறியர். நீண்டதூரம் நடப்பதில் நாட்டமுள்ளவர். அதனால் தன் ஊரிலுள்ளோருக்கான சிறு சிறு பணிகளை மேற்கொண்டு நீண்டதூரம் நடந்தே செல்பவர். குறிப்பாக துர்ஹாம் ஊரிலிருந்து லண்டன் வரை நடந்தேசென்று திரும்புவார். வரும் வழியில் சாலையோரத்திலிருந்து எடுக்கும் கற்களை தலையில் சுமந்து வருவார். இப்படிக் கொண்டுவந்த கற்களைக் கொண்டு தனக்கான ஒரு வீட்டையே அவர் கட்டிக் கொண்டார். ஆனால், அதற்குப் பின்னும் அவரால் சுமையின்றி நடக்க முடியாமலே போக, 1799 இல் இறக்கும் வரை, அவர் தன் தலையில் கற்சுமையைச் சுமந்தவாறே வாழ்ந்தார்.

4
கலை, ஓவியம், எழுத்து என எந்த ஒரு படைப்புத் துறையிலும் பிரபலமல்லாத சிலர் இவ்வாறு தங்கள் மாறுபட்ட செய்கையினால் பிரபலமாகி உலக வரலாற்றில் மறையா இடம் பிடித்தார்களெனில் படைப்புத்துறை சார்ந்த பிரபலங்கள் சிலர் தங்கள் தனிப்பட்ட வாழ்வுடன் படைப்புலக வாழ்வுமென முழு வாழ்க்கையையும் இவ்வாறே 'தனக்குள் இன்னொருவனாக' வாழ்ந்து இருக்கிறார்கள்.

'ஸ்பூனரிசம்' என்பது  வில்லியம் ஆர்ச்சிபால்ட் ஸ்பூனர் என்கிற ஆக்ஸ்ஃபோர்ட் பேராசிரியர் ஒருவர் பெயரால் உருவாகி மொழி இலக்கணத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 'Go and shake a tower' என்று பேராசிரியர் ஸ்பூனர் சொன்னார் என்றால் "go and take a shower" என்கிற பொருளைத் தருவதாகிறது. இதனாலேயே புகழடைந்த ஸ்பூனர் உரையாற்றுகின்றார் என்றால், அன்றைய தினத்தில் அவர் என்ன தவறாகச் சொல்லப்போகிறார் என்பதைக் கேட்பதற்காக அரங்கில் கூட்டம் கூடிவிடுமாம். ஒருமுறை அவர் தன்னுடன் பணிபுரியும் ஒருவருக்கு கடிதம் எழுதுகிறார். அதில், தான் செய்துகொண்டிருக்கும் பணியில் அந்த நண்பரின் உதவி தேவைப்படுவதாகச் சொல்லுகிறார். ஆனால், அக்கடிதத்தின் பின்குறிப்பில் அப்பிரச்சனை தீர்வு பெற்று விட்டதாகவும் அதனால் நண்பர் வர அவசியமில்லை எனவும் எழுதுகிறார்! அவருக்குக் கிடைத்த இந்தப் புகழ் அவருக்கு ஒப்புதல் இல்லை எனினும் அவருடைய இறுதிநாட்களில் அவர் மனம் திறந்து பேட்டிகள் அளித்தார். அவருடைய புகழ்பெற்ற ஸ்பூனரிசம் சில:

"Mardon me padam, this pie is occupewed. Can I sew you to another sheet?"
(Pardon me, madam, this pew is occupied. Can I show you to another seat?)
"Let us glaze our asses to the queer old Dean"
(raise our glasses to the dear old Queen)
"We'll have the hags flung out"
(flags hung out)

5
நம் பள்ளிக்கூடங்களில் இன்றளவும் சொல்லித்தரக்கூடிய ஒன்று பிதாகரஸ் விதி. கணிதத்திற்கு பிதாகரஸ் இவ்விதியை அளித்ததோடு இயற்கை நிலைப்பாட்டுக்கும் கணிதம் மூலம் விளக்கமளிக்கலாம் என்றார். இதுவே பின்னர் இயற்பியல் என உருவாயிற்று. அத்துடன் பிளேட்டோ உருவாக்கிய குடியரசுக் கோட்பாடுகளுக்கும் பிதாகரஸ் பின்னூக்கியாக இருந்தார்.

இதெல்லாம் சரி! பிதாகரஸ் வேறு என்ன செய்தார். தன்னுடையமதம் என தனியாக ஒன்றை அவர் உருவாக்கினார். அதன் முக்கிய நம்பிக்கைகள் இரண்டு.

ஒன்று: ஆன்மா மீண்டும் அவதரிக்கக்கூடியது.
இரண்டு: அவரைக்காய் தீய சக்தி கொண்டது.

பிதகாரனிசத்தின் 'பத்து கட்டளை'கள் :
எக்காரணம் கொண்டும் அவரைக்காய் உண்ணக்கூடாது;
படுக்கை விரிப்புகளிலும் தலையணையிலும் மனித உடல் ஏற்படுத்தும் மேடு பள்ளங்களை எப்போதும் சரிசெய்ய வேண்டும்;
எக்காரணம் கொண்டும் குறுக்குச்சட்டத்தை தாண்டிக் கடக்கக் கூடாது;
முக்கியச் சாலைகளில் நடக்கக்கூடாது;
குவார்ட் பானத்தின் மீது உட்காரக் கூடாது;
தீயிலிருந்து பானையை எடுத்தபிறகு அதன் சாம்பலில் பானை இருந்த தடம் இருக்கக்கூடாது;
கூரையின் கீழ் குருவிகள் கூடு கட்ட அனுமதிக்கலாகாது;
இரும்பைத் தவிர வேறு எதைக்கொண்டும் நெருப்பைத் தூண்டக் கூடாது!

பிதகாரனிசத்தின் மதப்பிரிவு இரண்டு செயல்களுக்காகப் பாராட்டப் பட்டது. ஒன்று சைவ உணவு; இரண்டு அகிம்சை! ஆனால், முரண் என்னவென்றால், தன்னுடைய பிதகாரஸ் விதி ஏற்கப்பட்டு பாராட்டப்பட்டதும் அவர் என்ன செய்கிறார்.... எருது ஒன்றை வெட்டி அனைவருக்கும் விருந்து கொடுத்தார்; சைவஉணவுப் பிரச்சாரம் அன்றைய விருந்தில் எருதுடன் செத்துப்போயிற்று! இறுதியில் சண்டை ஒன்றில் இறந்தும் போகிறார்; அத்துடன் அவரும் அவரது அகிம்சையும் மடிந்தன! பிதகாரஸ் விதி மட்டும் அவர்பெயர் தாங்கி இன்னும் வாழ்கிறது!

6
கவி லார்ட் பைரன் ஆங்கில இலக்கியத்தில் க்ஷேக்ஸ்பியருக்கு அடுத்தார்போல் வைத்துக் கொண்டாடப்படுபவர். அவருடைய பதினான்காம் வயதில், மற்ற சிறுவர்களைப்போல களித்துக் கொண்டிருக்காமல், தன் முதல் கவிதையைப் பிரசுரிக்கிறார். ஆங்கில இலக்கியம் கற்ற பெண்களை ஈர்ப்பதற்கு இன்றும் கூட பைரனின் டான் யுவானைப் பயன்படுத்துபவர்கள் உண்டு. பைரனின் கிறுக்குத்தனம் அவர் கேம்ப்ரிட்ஜ் பலகலைக்கழகம் வந்ததும் தொடங்குகிறது. கல்லூரி விதிகள் அனுமதிக்காததினால் பைரன் தன்னுடைய வளர்ப்பு நாயைத் திருப்பி அனுப்பும்படி பணிக்கப்படுகிறார். வளர்ப்பதற்கு ஏதாவது வேண்டும் என விழைந்த பைரன், கல்லூரி விதிகளை அச்சு வேறு ஆணி வேறாக அலசுகிறார். விதிகளில் எங்குமே வெளிப்படையாகக் குறிப்பிடப்படாத பெயர் - கரடி!

ஒரு கரடி இப்போது பைரனுடன் அவரது கல்லூரி விடுதி அறையில் தங்கத் துவங்குகிறது. ஒரு பொறுப்பான வளர்ப்பாளராக பைரன் கரடியைக் கூட்டிக்கொண்டு விடுதிக்குப் புறத்தே உலா செல்கிறார். சக மாணவர்களும் பேராசிரியர்களும் பயந்து அலறுகின்றனர். நிர்வாகம் அழைத்து விசாரிக்க, பைரன் தன் கரடிக்கும் ஒரு மாணவ இடம் தரும்படி விவாதம் செய்கின்றார்.

இந்த நடவடிக்கைகள் கல்லூரியுடன் முடிந்து போனதா என்ன? அவருடைய மாளிகைக்கு வந்துபார்த்த நண்பரொருவர் "அந்த மாளிகையில் அவரது பணியாட்களுடன், பத்து குதிரைகள், எட்டு பெரிய நாய்கள், மூன்று குரங்குகள், ஐந்து பூனைகள், ஒரு பருந்து, ஒரு கழுகு, ஒரு காக்கை...... இவற்றில் குதிரைகளைத் தவிர மற்றவை அனைத்தும் மாளிகையினுள் படுசுதந்திரமாக வளைய வருகின்றன; கட்டுப்பாடற்ற சண்டைகள் கூச்சலுடன்!" என்று எழுதுகிறார்.

'ஃபிரான்கின்ஸ்டைன்' எழுதிய மேரி ஷெல்லியின் கணவர் பெர்சி ஷெல்லி  "இப்போது பைரனின் மாளிகை மாடிப்படிகட்டுகளில் ஐந்து மயில்கள், இரண்டு கினியா கோழிகள், ஒரு அரேபிய கொக்கு இவற்றைக் கண்டேன்... நோவாவின் ஆர்க் போலத் தோன்றியது" என்று எழுதுகிறார்.

இந்த விலங்குப் பண்ணையிலிருந்து முதிர்ச்சி பெறும் பைரன் அடுத்த நகர்வாக யுத்தகால கப்பல் தளபதியாக மாறுகிறார். தனக்குச் சொந்தமான ஏரியின் ஓரத்தில் இரண்டு கோட்டைகள் கட்டுகிறார். ஏரியில் மாதிரி சிறுகப்பல்கள் (மினியேச்சர்!) படையொன்றை செய்து மிதக்கவிட்டார். அவருடைய கோட்டையில் ஒளிந்துமறைந்து கொண்டு அவர் கட்டளைகள் பிறப்பிக்க, படகு ஒன்றில் படுத்துக் கொண்டிருக்கும் பைரனின் பணியாள் ஜோ முர்ரே, பைரனின் சொற்படி மினியேச்சர் கப்பல்களைச் செலுத்திக்கொண்டே தன்னுடைய வாயினால் பீரங்கி ஒலிகளை எழுப்பிக் கொண்டிருப்பார். இந்தக் கேளிக்கையில் ஈடுபட, ஜோ எவ்வளவு சம்பளம் பெற்றார் என்பதற்கான பதிவுகள் இல்லை!

7
உலக நுண்கலை வரலாற்றில் புகழ் வாய்ந்த ஓவியர், சிற்பி, கட்டடக்கலை வல்லுனர் மைக்கலேஞ்சலோ! சிஸ்டைன் ஆலயத்தின் கூரையில் உள்ள கடவுள் ஆதாமைப் படைக்கிறார் ஓவியம் உலகப்புகழ் வாய்ந்தது. உலக ஓவியர் வரிசையில் முக்கியமான இடம் வகித்தாலும் மைக்கலேஞ்சலோ ஓவியத்தை விட சிற்பத்தையே அதிகம் நாடினார். டேவிட் சிற்பம் உலகத்தரம் வாய்ந்த ஒன்று! புனித பீட்டர் தேவாலயம் அவருடைய கட்டடக்கலைத் திறமைக்கு இன்றளவும் சான்று!

மைக்கலேஞ்சலோவின் மாறுபட்ட குணங்களில் முக்கியமானது தன் உடலைச் சரிவரப் பேணாதது. குளிப்பது அபூர்வம் என்றால், உடை மாற்றுவதென்பதே கிடையாது. காலில் உள்ள பூட்ஸ் உட்பட போட்ட உடையுடனே உறங்கவும் செய்வார். அவருடைய சீடர்களில் ஒருவர் சில நேரங்களில் காலின் பூட்ஸைக் கழட்ட நேரிடும் போது, பாம்பு சட்டையை உரிப்பது போல, அவருடைய கால் தோலும் பூட்சுடன் சேர்ந்து உரிந்து வரும் என்கிறார்

இப்படியான பழக்க வழக்கங்கள் மற்றவர்களை அவருக்கு ஆட்டிசம் என்கிற மனநோய் இருக்குமோ என்று ஆலோசிக்க வைத்தது. அத்துடன் மற்றவர்களுடன் நெருங்கி உரையாடும் மனநிலை இருந்ததேயில்லை அவரிடம். அப்படியே நேர்ந்தாலும் பாதியிலேயே திரும்பி விலகிச்சென்று விடுவார். உறவினர் எவருடைய இறுதிச் சடங்குக்கும் அவர் சென்றதுகூடக் கிடையாது. குளித்தாரோ இல்லையோ, நகம் வெட்டிக் கொண்டாரோ இல்லையோ, ஆட்டிசமோ இல்லையோ, இப்படியாக அவர் தன் பணிகளிலேயே வெறித்தனமாக மூழ்கிக் கிடந்தார் என்பதினால் தான், இன்று உலகம் வியக்கும் ஒரு ஓவியராக, சிற்பியாக நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது சாத்தியப்பட்டது.

8
ராபர்ட் லோமாஸ் அவர்களால் 'இருபதாம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவர்' எனப் புகழப்பட்டவர்; ரேடியோ, (.சி.) மின்சாரம், கம்ப்யூட்டர், ரோபாட்டிக்ஸ், ரேடார், பேலிஸ்டிக்ஸ், நியூக்ளியர் இயற்பியல் போன்றவற்றின் கண்டுபிடிப்புக்கும் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்கு அளித்தவர்: நிக்கோலா டெஸ்லா. மைக்கலேஞ்சலோவுக்கு நேர் எதிர். உடற்தூய்மை மீது வெறித்தனமான கவனம் செலுத்துபவர். கிருமிகள் தொற்றிவிடுமோ என அஞ்சி சிறிதளவு தூசி ஒட்டியிருந்தால் கூட அதைத் தொடமாட்டார். பொறியியலாளராக இருந்தும் வட்டவடிவமான எதையும் தொடமாட்டார்

அவருடைய மற்றொரு வழக்கமாக அவரை ஆக்கிரமித்திருந்தது எண் மூன்று! எந்த கட்டடத்தினுள்ளும் புகுமுன் மூன்றுமுறை அதைச் சுற்றிவந்த பின்பே நுழைவார். விடுதியில் அறை எடுத்தால் அது மூன்று அல்லது மூன்றால் வகுபடக் கூடியதாக இருக்க வேண்டும். உண்ணும்போது அருகில் பதினெட்டு கைகுட்டைகள் இருந்தாக வேண்டும்.

9
ஏசு கிருஸ்து பிறப்பதற்கு நானூற்றைம்பது வருடங்களுக்கு முன்பே பிறந்தவர் எம்பிடோக்கிள்ஸ். ஒளி ஒரு வேகத்துடன் பயணிக்கிறது; உலகம் உருண்டையானது; எதுவுமில்லாதது அல்ல காற்று - காற்றும் ஒரு பொருளே; பின்னாளில் உருவான பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டுக்கு பண்படுத்தப்படாத வடிவத்தைத் தந்தவர். ஆனால், எம்பிடோக்ளஸ் தன்னை ஒரு கடவுள் என்றே நம்பினார். நிரந்தர ஆயுள் படைத்தவர் என்று கருதினார். எரிமலை வாயில் குதித்து தன்னால் மீண்டு வரமுடியுமென கூறினார். நம்பிக்கையற்றவர்களுக்கு நிரூபிப்பதற்காக எட்னா எரிமலையில் குதித்தார்; திரும்பவில்லை! இதை சோகத்துடன் கண்டிருந்த கவி ரிச்சர்ட் ஓஸ்போர்ன் சொல்லுகிறார்"Great Empedocles, that ardent soul; // Leapt into Etna, and was roasted whole"

இந்த மாதிரியான அதிபுத்திசாலிகளாகவும் சற்றே மனப்பிறழ்வுக்கு ஆட்பட்டவர்களாகவும் உள்ளவர்களை சமீப காலமாக காணக் கிடைப்பதில்லையே ஏன்? ஏதோ ஒரு 'சிண்டிரோம்' அல்லது 'டிஸார்டர்' பெயரைச் சொல்லி முடக்கப்பட்டு விடுகிறார்கள் போலும். வருத்தத்திற்கு உரியதுதான். சமூகம் மேன்மேலும் அறிவியல் பகுத்தறிவுக்கு ஆட்படும் நிலையில் இத்தகைய அதிபுத்திசாலிகள் மீதான சகிப்புத்தன்மையும் அதற்கேற்றார் போல் குறைந்து கொண்டேதான் வருகிறது.


Comments

Popular posts from this blog