சிறுகதை - லா ரி
சிறுகதை லாரி • எஸ். சங்கரநாராயணன் து ணிகள் என்று எடுத்துக் கொள்ள அதிகம் இல்லை. ஒரு கதர் வேட்டி, அரைக்கை ஜிப்பா. பொடி மட்டை, அது இல்லாமல் முடியாது. எடுத்துக்கொண்டார். பரபரவென்று பட்டையாய்த் திருநீறு பூசினார். கிளம்பிவிட்டார். வெளிய ரொம்ப குளிராக் கெடந்தது. செருப்பில்லாத கால்களில் பருக்கைக் கற்கள் குத்தின. இங்கேயிருந்தது கூத்தப்பாலம் மெய்ன் ரோடு வரை செண்மண் ரோடுதான். ஒரு சின்ன மழைக்கும் நாறிப்போகும். மனுசன் நட்க்க ஏலாது. மணி ஒண்ணு இருக்குமா? பன்னிரண்டு எப்பிடியும் தாண்டிருக்கும். தெரு நீண்டு வெறிச்சுக் கிடந்தது. சக்கரக் கோனார் தொழுவத்தில் சிவத்த நாய் குளிருக்காக எருமை மாட்டோடு ஓட்டிப் படுத்திருந்தது. உண்மையில் குளிர் அதிகம்தான். காலை எட்டிப் போட்டு நடக்கையில் வேட்டி விலகி, முன்வந்த காலில் குளிர் ஆவேசமாய்ப் பாய்ந்தது. காதிலிருந்து பீடியெடுத்துப் பற்ற வைத்தவாறே ‘ஓஹ்’ என்றபடி வானத்தைப் பார்த்தார். உப்புக் கட்டிய நார்த்தங்காய் மேகத் துணுக்குகள். குலுக்கி வீசப்பட்ட நட்சத்திரச் சோழிகள்... காற்றின் ஜில்லிப்பு தாங்காமல் முண்டாசை அவசரமாய்க் கீழே இறக்கி விட்டுக் காதுகளை ப