
shortstory ஊதல் உதைபட வாழ்தல் எஸ். சங்கரநாராயணன் அ வன் தம்பி. அவள் அக்கா. அவனது நடவடிக்கைகளை அவள் கண்காணித்தாள். வயசுக் கோளாறு இது. பெரியவர்களிடம் நின்று பேசுகிறானில்லை. மதிப்பு மரியாதை எல்லாம் போச்சு. அலட்சியமாய் பதில் சொல்கிறான். அவனது நடவடிக்கைகள் திருப்திகரமானதாய் இல்லை. இதை விடக்கூடாது. அவனைத் திருத்துகிற, வழி நடத்துகிற, கண்டிக்கிற பொறுப்பு எனக்கு இருக்கிறது. நான் அவன் அக்கா. கல்லூரிக்குப் போய்க் கொண்டிருந்தாள். பெட்டிக் கடைப் பக்கம் பிரகாசம். தம்பி. அங்கே அவனுக்கு என்ன வேலை? பார்த்தும் பாராதது போல் நிற்கிறான். கூட யார் யார்? ஓரக்கண்ணால் சிறிது எரிச்சலுடன் பார்த்தாள். அந்தக் காலர் பனியன் - நான் பார்க்கிறதில் சுவாரஸ்யப்பட்டு, உற்சாகமாய் சூயிங்கம் மெல்கிறான். ராஸ்கல். ‘பிரகாசம்?’ சற்று தள்ளி நின்று கொண்டு கூப்பிட்டாள். அவன் அதை எதிர்ப்பார்க்கவில்லை. திரும்பி, கிட்டே போக யோசித்து, வராமல், என்ன, என்று பார்த்தான். என்ன இங்கே நிக்கறே - ‘பள்ளிக்கூடம் இல்லியா?’ என்று கேட்டாள். ‘மதிய எக்சாம்’ ‘அப்ப படிக்க வேண்டாமா?’ ‘படிச்சிட்டேன்’ ‘ஒ...