short story - கண்ணாடி - சைலபதி - artist Jeeva

சிதம்பரம் கண்ணாடியைக் கொண்டுவைத்த நாளிலிருந்து அதோடுதான் அதிகநேரம் செலவழித்தார். உள்ளாடைகளோடு நின்று தன்னுடல் அழகு பார்ப்பது, அடிக்கடித் தலையைச் சீவிக்கொள்வது என்று கண்ணாடி முன் வந்து நின்றபடி இருந்தார். மாறாக மீனாட்சிக்குக் கண்ணாடி ஒரு தொந்தரவாக மாறிப்போனது. அது அவளின் வடிவமற்றதாக மாறிக்கொண்டிருக்கும் அவள் உடலை இன்னும் பூதாகாரமாகக் காட்டியது அல்லது அவளுக்கு அப்படித் தோன்றியது.
கண்ணாடி
சைலபதி
                                      
காலை ஐந்தரை. இந்தநேரத்தில் அவளை மொபைலில் அழைப்பது யார் என்று சிதம்பரத்துக்கு மனதுக்குள் குருகுருத்தது. நேற்றும் இதேநேரம் போன் வந்தது அவளுக்கு. அவள் தொலைபேசியைப் படுக்கையிலேயே போட்டுவிட்டு முகம்கழுவப் போனாள். அவள் உள்ளே சென்று தாழிடும்வரை காத்திருந்து அவசர அவசரமாக போனை எடுத்து அழைப்பு வந்த எண்ணைத் தேடினார். ஆனால் முன் ஜாக்கிரதையாக மீனாட்சி அழைப்பு வந்த தடத்தை அழித்துவிட்டிருந்தாள்.
கோபம் வந்தது. எவ்வளவு திமிராக நடந்துக்கொள்கிறாள். இன்றைக்கு உண்டு இல்லை என்று பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் மீனாட்சி பாத்ரூமிலிருந்து வெளியேவந்த கணத்தில் இருந்து வேகவேகமாகக் காலை நடைப்பயிற்சிக்குக் கிளம்பிப் போனாள். சிதம்பரம் விழித்திருக்கிறார் என்றோ அவருக்குச் சொல்லவேண்டும் என்றோ அவள் எண்ணவே இல்லை. அவர் கோபம் அதன் உச்சபட்ச கொதிநிலையை எட்டியிருந்தது. ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை.
எழுந்துகொண்டார். படுக்கைக்கு எதிரிலிருந்த ஆளுயரக் கண்ணாடியில் அவர் முகம் தெரிந்தது. ஒரு வாரமாக சவரம் செய்துக்கொள்ளாததால் வெள்ளையும் கறுப்புமாகத் தாடி வளர்ந்திருந்தது. மீசை வரைக்கும் சாயம் அடித்துக்கூட ஒரு மாதம் ஆகிறது. தலைமயிரும் வெளுக்கத் தொடங்கி விட்டதன் காரணமாக தொடர்ந்து அரித்துக்கொண்டே யிருந்தது. தேவையில்லாமல் அடிக்கடி சொறிந்துக்கொண்டார். பின்பு அது ஒரு வாடிக்கை போல ஆகிவிட்டது. வளர்ந்திருந்த தலை முடிக்கும் தாடிக்கும் அவரை அவருக்கே பிடிக்கவில்லை.
ஆனால் மீனாட்சி இந்த இரண்டு மாதத்தில் எவ்வளவு மாறிவிட்டாள். அவள் மாறியதுகூடப் பெரிதில்லை. எவ்வளவு நிர்த்தாட்சண்யமாக சிதம்பரத்தைக் கடந்து போகிறாள். சிதம்பரத்தால் அதைத் தாங்கவே முடிய வில்லை. சிதம்பரம் இரவுகளில் உறங்கிப் பல நாட்களாகிறது. ஏன் உறங்கவில்லை என்று அவளும் கேட்கவில்லை. அவள் குளிக்கிறாள், எங்கோ கிளம்பிப்போகிறாள். மாலை வருகிறாள். சமைத்துச் சாப்பிடுகிறாள். இரவானதும் உறங்கிவிடுகிறாள். அங்கு ஒரு மனிதன் இருப்பதைக் கூட அவள் அறியவில்லை என்பதாக இருந்தது அவள் நடவடிக்கைகள். போதாக்குறைக்கு கிளம்பும்முன்பு அந்த ஆளுயரக் கண்ணாடியில் தன்னைப் பார்த்து தன் அழகினைத் திருத்திக் கொண்டு சொல்கிறாள். அவருக்கு கண்ணாடியை உடைத்து எறிந்து விட்டால்கூடத் தேவலாம் என்று தோன்றியது.
ளுயரக் கண்ணாடிகள் என்றால் மீனாட்சிக்கு அவ்வளவு பிரியமில்லை. இப்பொழுது என்றில்லை. இளமையின் காலத்தில் கூட அவள் அதை வெறுப்பாள். முகம் பார்க்கும் அளவிற்கான கண்ணாடியைத்தான் அவள் தன் அறைகளுக்குள் அனுமதிப்பாள். எப்பொழுதாவது உடையைச் சரி செய்துகொள்ள அல்லது புடவைக்குப் பொருத்தமான ஜாக்கெட்தானா என்று அறிந்துகொள்ள மட்டும் அவள் பீரோவில் இருந்த பெரிய கண்ணாடியை நாடுவாள். அவர்தான் கொஞ்சமும் கேட்காமல் ஆளுயரக் கண்ணாடியைப் படுக்கைக்கு எதிரிலேயே கொண்டுவந்து வைத்தார். மீனாட்சியின் எதிர்ப்பை அவர் பொருட்படுத்தவேயில்லை.
மீனாட்சி அதை வெறுக்க அவள் உடல்கூட ஒரு காரணம். கடந்த ஐந்து வருடத்தில் மீனாட்சியின் உடல் மிகவும் பெருத்துவிட்டது. என்னன்னவோ காரணங்கள். முதல் பெண் உமையாள் பிறந்தபின்பு மூன்று அபார்ஷன்கள். அதைத் தொடர்ந்து வள்ளி பிறந்தாள். அடுத்து ஒரு பையன் வேண்டுமென்று அவருக்கு ஆசை. மேலும் ஒரு அபார்ஷன். இனி தன்னால் முடியாது என்று மீனாட்சி ஆபரேஷன் செய்துகொண்டாள். அப்புறம்தான் அவள் உடல் இப்படி ஊதத் தொடங்கிவிட்டது. மூத்தவளுக்குக் கல்யாணம் ஆகி விட்டது. சின்னவள் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறாள்.
சிதம்பரம் அப்படியில்லை. அவருக்கு மட்டும் வயது ஆகவேயில்லை. அவர் இன்னும் கொஞ்சமும் ரசம்போகாத கண்ணாடியின் பளபளப்போடே இருந்தார். தலையும் மீசையும் மட்டும் நரைத்திருந்தது. அதை அவர் கறுப்பாக்கிக் கொண்டார். மீனாட்சி அவர் பக்கத்தில் நின்றால், அவரது அக்கா போல இருப்பாள். வெளியே போகும்போதும் வரும்போதும் சிதம்பரம் ஒரு இடைவெளியிலேயே நடந்துவருவார். அதை அவள் பெரிதுபடுத்துவதேயில்லை.
சிதம்பரம் என்று இல்லை எந்த ஆணும் தனக்கு வயதாகிவிட்டதாகக் கருதுவதில்லை. ஐம்பது வயதிலும் அறுபது வயதிலும் கூட அவர்களுக்குள் தங்கள் ஆண்மை பற்றிய பெருமை தலைக்கேறிக் கிறுகிறுத்துக் கிடக்கும் ஆண்களை அவள் அறிவாள். பெரும்பாலான பிரச்சனைகளைத் தவிர்க்கும் மனோபாவம் கொண்டவர்கள் அதைக் கடந்துவிடுகிறார்கள். ஆனால் ஒருசிலர் எப்பொழுதும் எந்தச் சூழலிலும் கண்ணிலும் பேச்சிலும் ஒரு வலையோடே சுற்றுகிறார்கள். சிதம்பரம் அப்படிப்பட்ட ஒருவர்தான் என்பதை மீனாட்சி அறிவாள். ஆனால் அதை அவள் பெரிதுபடுத்துவது இல்லை. மேலும் கொழுத்த விலங்கின் உடல்போல மாறிவிட்ட தன்னோடு சிதம்பரம் பழையபடி காதல்மொழி பேசவேண்டும் என்று எண்ணுவது எவ்வளவு மடமை என்று எண்ணிக் கொண்டாள் அவள்.
சிதம்பரம் கண்ணாடியைக் கொண்டுவைத்த நாளிலிருந்து அதோடுதான் அதிகநேரம் செலவழித்தார். உள்ளாடைகளோடு நின்று தன்னுடல் அழகு பார்ப்பது, அடிக்கடித் தலையைச் சீவிக்கொள்வது என்று கண்ணாடி முன் வந்து நின்றபடி இருந்தார். மாறாக மீனாட்சிக்குக் கண்ணாடி ஒரு தொந்தரவாக மாறிப்போனது. அது அவளின் வடிவமற்றதாக மாறிக்கொண்டிருக்கும் அவள் உடலை இன்னும் பூதாகாரமாகக் காட்டியது அல்லது அவளுக்கு அப்படித் தோன்றியது. சிதம்பரம் வேண்டுமென்றேதான் இந்தக் கண்ணாடியைக் கொண்டுவந்து இங்கு வைத்திருக்கிறார் என்று அவள் நம்பினாள். எப்படியோ போய்த் தொலையட்டும் என்று விட்டுவிட்டாள். உடைமாற்றும் கணங்களில் கண்ணாடியின் மீது புடவையையோ அல்லது துணியையோ போட்டு மறைத்துவிட்டு உடை மாற்றினாள். கண்ணாடியில் அவளைப் பார்க்க நேர்கிற போதெல்லாம் சிதம்பரத்தின் அழகுபடுத்திக் கொண்ட முகம்தான் அவளுக்குத் தெரிந்தது. மீனாட்சி அதை வெறுத்தாள்.
அரசல்புரசலாக செய்திகள் வந்தபோதெல்லாம் அதை அவள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவேயில்லை. அலுவலகத்தில், கூட வேலை பார்க்கும் ஒரு பெண்ணோடு சிதம்பரம் சுற்றுவதாகச் சொன்னார்கள். அவள் ஒன்றும் சின்னவயதுப் பெண்ணில்லை என்றாலும் நடுத்தரவயதைச் சேர்ந்தவள். அழகிதான். அவளை ஒரு திருமண நிகழ்ச்சியில் மீனாட்சி பார்த்திருக்கிறாள். அவளைக் குறித்த வேறு விவரங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது. சிதம்பரம் அவளுக்குப் பணத்தைத் தண்ணீரைப் போல வாரி இறைப்பதாகவும், அதனால் அவள் அவருக்கு இணங்கி இருப்பதாகவும் சொன்னார்கள்.
உபரியான எல்லாம் எவ்வளவு சிக்கல்களை உருவாக்குகிறது. உபரியாகப் பெருத்துவிட்ட தன்னுடல், உபரியாக நிலைத்துவிட்ட சிதம்பரத்தின் இளமை, உபரியாகச் சேர்ந்திருக்கும் சிதம்பரத்தின் சொத்துஞ் இப்படித் தேவைக்கு அதிகமாய் இருக்கும் எல்லாவுமே பிரச்சனையாய் மாறி விடுகிறது. உபரியானவைகளை முறைப்படுத்தத் தெரியாதவர்கள் அதை வீணடிக்கிறார்கள் அல்லது அவற்றுக்குள்ளாகவே சிக்கிக்கொள்கிறார்கள். உபரிகள் ஒரு வெள்ளம் போல அவர்கள் வாழ்க்கையை இழுத்துச் செல்கிறது. அவர்களின் வாழ்க்கை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி உபரிகளின் போக்கில் அல்லது அதன் கரைவில் முடிவடைகிறது.
மீனாட்சிக்கு ஆச்சரியமான ஆச்சரியம். சிதம்பரம் ஒன்றும் மனைவியைத் தவிர வேறு பெண்ணை ஏறெடுத்துப் பாராத ராமன் இல்லை. ஆனாலும் இந்த வயதில் அவருக்கு ஒரு பெண்ணிடம் ஈடுபாடு தோன்றியிருக்கிறது என்பதே அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னை நினைத்துக் கொண்டாள். கடந்த ஆறு மாதங்களாக அவள் உடல் நோய்களால் அலைக்கழிக்கப் படுகிறது. மாதவிடாய் கூட நின்றுவிட்டதோ இல்லையா என்று தெரியவில்லை. டாக்டர் எல்லாப் பரிசோதனைகளையும் செய்யச்சொல்லிவிட்டு “இந்த வயசு அப்படி“ என்று சொல்லி முடித்தாள். இந்தக் காலகட்டத்தில் சிதம்பரம் வேறு இப்படிக் கூத்தடிக்கிறார்.
ஆண்களின் உடல் எவ்வளவு ‘சிக்கல் இல்லாததாக‘ இருக்கிறது? அவர்களுக்குள்ளே தங்கள் உடல் குறித்து எப்பொழுதும் இரகசியமாகப் பேசிக் கொள்ளும் கணங்கள் என்று ஒன்று உருவாவதேயில்லை. நோய்கள் என்று வந்து சிக்கல்கள் தோன்றினால் அன்றி அவர்கள் உடல் அவர்களை வேறு எந்தமாதிரியும் துன்புறுத்துவதில்லை. ஆனால் பெண்களின் உடல்சார்ந்த உலகம் மிகவும் வேதனையும் இரகசியமுமானது. பெண் என்றால் அழகு, இலட்சணம், தாய்மை, என்பதைத் தாண்டிய அதன் சுமையை ஆண்கள் ஒருபோதும் அறிந்துகொள்ள முடிவதேயில்லை.
மீனாட்சி, அவர் யாரோடும் போகட்டும் என்பதாக விட்டுவிட்டாள். ஆனால் சிதம்பரம் அப்படி விட்டுவிடவில்லை. மீனாட்சி அப்படி ஒதுங்கிக் கொண்டதைத் தனக்கான பெரும் வெற்றியாக, பெருமையாக அவர் நினைத்தார். பெருமையின் நிறைவில் மீனாட்சியைச் சீண்டத் துவங்கினார். மீனாட்சியின் உடல் குறித்த கேலிப் பேச்சுக்களையும் அவளது இயலாமையையும் துடிப்பான தனக்கு அது இணையில்லாமல் போன விதத்தையும் அவர் நாளெல்லாம் பேசிக்கொண்டிருந்தார். எவ்வளவு பேச்சைத்தான் தாங்குவாள் ஒரு பெண்? மீனாட்சி கொஞ்சம் எதிர்க்குரல் எழுப்ப ஆரம்பித்தாள்.
“நான் ஏன் இப்படி ஆனேன்? ஆம்பளப்பிள்ளை ஆம்பளப்பிள்ளைன்னு நீங்க ஆடல? யாருக்காக அத்தனை கருக்கலைப்பு நடந்தது? யாருக்காக மாத்தி மாத்தி ஊசி போட்டுக்கிட்டேன்? எதுக்கும் நீங்க பொறுப்பு இல்லைங்கிற மாதிரிப் பேசாதீங்க. கட்டிகொடுத்த ஒருபெண்ணும் கட்டிக்கொடுக்கிற வயசுல ஒரு பெண்ணும் இருக்காங்கங்கிறத மறந்திறாதீங்க”
எதிர்த்துப் பேசியதற்க்காக சிதம்பரம் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மீனாட்சி அடிபட்ட பாம்பினைப்போல தனது வலைக்குள் தன்னைச் சுருட்டிக்கொண்டாள்.
சாவதில் என்ன இருக்கிறது? ஒரு கணம் முடித்துக்கொண்டு விடலாம். ஆனால் இந்த ஆம்பளைக்கு ஒரு சூடு போடாம செத்துறக்கூடாது. வயசுல அவரைவிட ஏழு வருஷம் குறைச்சல். இது கூடத் தெரியவேண்டாம், கண்டுக்கிடாமக் கிடக்கிறவள அப்படியே விடவேண்டியதுதானே. அதை விட்டுட்டு அவளையே துன்புறுத்தினா? இப்பவெல்லாம் அடிக்கடி அவர் கை நீள்கிறது. சர்க்கஸில் மிருகங்களை சாட்டையின் சுழற்சிக்குப் பழக்குவது போலப் பழக்க விரும்புகிறார். தப்பு மிகப்பெரிய தப்பு, நான் என்ன மிருகமா, அடிக்குப் பழக்க? மீனாட்சி தனக்குள்ளாகக் குமுறிக்கொண்டிருந்தாள்.
அப்படியான ஒரு நாளில்தான் சாலையில் அவள் இளமைக்காலத் தோழியைச் சந்தித்தாள். அவள்தான் அடையாளம் கண்டுகொண்டாள். அவள் கல்லூரிக் காலங்களில் பார்த்த மாதிரி அப்படியே இருந்தாள். மீனாட்சிக்கு வெட்கமாக இருந்தது.
“மீனு , உன் ஐஸ் அப்படியே இருக்கு, அதைப் பார்த்ததும் தான் உன்னை கண்டுபிடிச்சேன்”
மீனாட்சிக்கு அவள் உண்மை சொல்கிறாளா பொய் சொல்கிறாளா என்று தெரியவில்லை என்றாலும்  தன்னிடம் அவள் பொய் சொல்வானேன். தனது கண்களைப் பெரிய அழகான கண்கள் என்று. சிதம்பரம் கூட அந்தக்காலத்தில் அதை அடிக்கடிச் சொல்வது ஞாபகம் வந்தது.
சீ! மீண்டும் மீண்டும் அவர் நினைவே வருகிறது.
“இன்னுமா என் கண்கள் அழகாக இருக்கிறது?” மீனாட்சி சிறுபிள்ளையைப் போலக் கேட்டாள்.
“அதிலென்ன சந்தேகம், நீ கொஞ்சம் எடை போட்டுவிட்டாய்”
மீனாட்சி குறுக்கிட்டு ,” கொஞ்சம் இல்லை நிறையஞ்”
“இருக்கலாம், ஆனால் உன் கண்கள் இன்னும் அதே அழகோடுதான் இருக்கிறது. ஆமாம் என்ன பெரிய எடை போடுவிட்டாய்? நீ மட்டும் கொஞ்சம் முயன்றால் எடையைக் குறைத்து பழைய மீனுவாக மாறிவிடலாம். அதிகபட்சம் ஆறுமாதம். அப்புறம் சொல்லு.  எப்படியிருக்கிறார் உன் கணவர் சிதம்பரம்?”
மீனாட்சிக்கு அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தோன்றவில்லை. மீண்டும் மீண்டும் நான் ஏன் எடையைக் குறைக்க முயலவேயில்லை? என்று தனக்குள்ளாகக் கேட்டுக்கொண்டாள். அன்றைய நாளின் மாலையில் அருகிலிருந்த ஜிம் ஒன்றிற்குச் சென்று விசாரித்தாள். நாளைமுதல் சேரலாம் என்று சொன்னார்கள். ஜிம் உள்ளே இருந்த சுவரின் போஸ்டரில் ஒரு பெண் தன் இடுப்பை இன்ச் டேப்பால் அளந்து கொண்டிருந்தாள். டேப் சரியாக இருபத்தி எட்டில் இருந்தது. மீனாட்சி அந்த அளவிற்குப் பேராசை இல்லை என்பதை தனக்குள்ளாக ஒப்புக்கொண்டாள். வெளியெ வரும்போது ஒரு புது நம்பிக்கை பிறந்திருந்தது.
றுமாதத்தில் அவள் ரொம்பவும் மெலிந்துவிடவில்லை. ஆனால் அவள் உடல் அவள் சொன்னபடி கேட்கிறது. தீவிரப் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என அவள் தன்னால் முடிந்தவரை முயன்றாள். இத்தனை வருடம் தான் ஒரு மனுஷி என்பதை அறியாமல் வாழ்ந்துவிட்டதற்காக வருந்தினாள்.  நிச்சயம் இதெல்லாம் சிதம்பரத்தின் காதல் பார்வையைத் தன்மேல் விழச்செய்ய அல்ல என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.
எல்லாவற்றையும் சிதம்பரம் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். மீனாட்சி இப்பொழுதெல்லாம் பொருத்தமான உடைகளைத் தேர்வு செய்து அணிந்து கொள்கிறாள். உடல் வேறு இளைத்து அழகாகியிருக்கிறாள். எப்பொழுதும் ஒரு முக இறுக்கத்தோடு வீட்டில் அடைந்துகிடந்த மீனாட்சி இல்லை இவள் என்பது புரிந்தது. சிதம்பரம் இப்பொழுது மீனாட்சி என்ன செய்கிறாள் என்பதை அறிந்துக்கொள்ளவே பாதி நேரத்தைச் செலவிட்டார். அவள் அறியாமல் பின் தொடர்கிறார். அவளோடு பேசும் ஆண்களை எல்லாம் கவனிக்கத் தொடங்கினார். அவள் சென்றுவரும் ஜிம்மின் மாஸ்டர் ஒருவன் அவள் கைகளைத் தேவையில்லாமல் பிடித்து அடிக்கடி உலுக்குவதைக் கவனித்தார். வாசலில் நிற்கும் போதே இப்படிச் செய்தால் உள்ளே போய்விட்டாலோ?... என்பதாகக் கற்பனைகளை விரித்தார்.
சிதம்பரம் கொஞ்சம் கொஞ்சமாக மழையில் உருக்குலையும் ஒரு மண் பாண்டம் போலக் கரைந்து கொண்டிருந்தார். மீனாட்சி இதை எல்லாம் அறியாமல் இல்லை. அவளுக்கு வியப்பாக இருந்தது. சிதம்பரம் தனக்குச் செய்ததில் ஐந்து சதம் கூட அவருக்கு இன்னும் நிகழவில்லை. அதற்குள்ளாக ஏன் உடைந்துபோகிறார்? பெண் எதிர்த்து ஒரு சிறு விரலை அசைத்தால் கூட ஆண்கள் தாங்கமாட்டார்கள் போல் இருக்கிறதே.. காதல்தான் இல்லை, நம்பிக்கை கூடவா இல்லை? மீனாட்சிக்கு சிதம்பரம் மேல் இப்பொழுதுதான் கோபம் வந்தது.
அவருக்கு இப்பொழுதெல்லாம் அவளைக் கண்காணிப்பதைத் தவிர வேறு வேலையே இல்லை. இரவுகளில் விழித்துக் கிடக்கிறார். பகலில் பின் தொடர்கிறார். கண்ணாடியில் முகம் பார்க்கிறபோது அவருக்கு மீனாட்சியின் முகம் நினைவுக்கு வந்தது. கையில் கிடைத்த பொருளை எடுத்து அதன் மேல் வீசினார். நல்ல விலை உயர்ந்த கண்ணாடி உடையவே இல்லை.
அன்று காலையில் மீனாட்சிக்கு செல்போன் வந்தது. ஜிம் மாஸ்டர் தான் செய்திருந்தான். நேற்றெல்லாம் அவன் அதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.
“அக்கா, ஜிம் வொர்கவுட் தனி, ஆனா மார்னிங் வாக் ரொம்ப முக்கியம். அதுதான் உடம்ப ஆரோக்கியமா வச்சிக்கும். நாளைக்குக் காலைல போன் பண்ணி குட்மார்னிங் சொல்லுவேன், மரியாதையா எழுந்து வாக்கிங் போங்க” என்றான். சொன்னபடியே அழைத்து ‘அக்கா குட் மார்னிங்’ என்றான்.
மீனாட்சி பதில் வணக்கம் சொல்லிவிட்டு முகம் கழுவப் போனபோதுதான் சிதம்பரம் கேட்டார்.
“யார் போன்ல?”
மீனாட்சி பதில் சொல்லவில்லை. புன்னகையுடன் போனைக் கட்டிலில் போட்டுவிட்டுப் போனாள்.
*
நன்றி – சங்கு காலாண்டிதழ்
Shylapathi
Mob 97899 92848Comments

Popular posts from this blog