வள்ளுவர் கம்பர்
மற்றும் சங்கரநாராயணன்

மூத்த மகனின் திருமணத்தன்று வெளியிட என்று இப்படியாய், நான் அவ்வப்போது திருமணம்சார்ந்து எழுதிய கதைகளைத் தொகுக்கத் திட்டம் வகுத்துக் கொண்டேன்.
காலத்தின் ஓட்டம் அத்தனை சீரானது என்று சொல்ல முடியாது. காலம் சீராய் ஓடலாம். 24 மணித்தியாலங்கள் சேர்ந்தது ஒருநாள், என்கிற அளவில் அதன் ஒழுங்கு அமைந்திருக்கலாம் தான். ஆனால் நம் மனம் சில இடங்களில் சற்று நிதானித்துப் பயணப்படுகிறது. திருப்பதி நடைப்பயணத்தில், படிக்கட்டில் ஏறிச்செல்கையில் சில இடங்களில் நாம் உட்கார்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, பின் மீண்டும் மலையேறுவது போல.
இந்த வைபவம் திருமணம்... அதைப்பொருத்த மட்டில் திருமண நாளை விட அதன் முந்தைய பிந்தைய நாட்கள் மகத்துவம் வாய்ந்தவை. அவை திருமண நாளை அழகுபடுத்துகின்றன, ஒரு ராகத்தின் ஆலாபனை போல!
இதில் காதல்திருமணங்கள் இன்னும் சிறப்பு என்று சொல்லலாம். காதல், திருமணத்திற்கான ஆலாபனை தானே!
அரிதாரம் பூசிக்கொள்கிறது காலம்.
திட்டமிட்டு வருவதா காதல்? திடீர் மழை போல, நாம் இங்கேயும் ஒதுங்கமுடியாமல், அங்கேயும் நிற்க முடியாமல்... குடையை விரிக்கு முன் முழுக்க நனைத்து விடுகிறது காதல்.
மழையை ரசி
குடையைத் தள்ளுகிறது
காற்று.

உடம்பில் எங்காவது வலி என்றால் மனசை எந்தச் சிந்தனையிலும் ஊன்ற விடாமல் மூளை திரும்பத் திரும்ப அந்த வலியை நோக்கியே குவியும். காதலும் அதைப்போலத்தான். அது இதயத்தின் ஓர் இன்ப இம்சை. அதை மற என்றால், மறக்க யத்தனிப்பதே அதை மறக்க முடியாமல் அடித்துவிடுகிற சிந்தை விந்தை. சட்டென உலகம் அழகாகி விடுகிறது அப்போது. காதல் வாழ்வில் பிடிப்பைத் தருகிறது. வாழ அது நமக்குக் கற்றுத் தருகிறது. கையிருப்பைத் தாண்டி வாழ்வு இன்னும் மிச்சமிருப்பதாக காதல் சொல்கிறது. அது நிஜமா கற்பனையான பிரமையா. அதல்ல. அப்படியாய் வாழ்க்கையை விரித்துக் காட்டிவிடுகிறது அது. காதல்...
காதல் வயப்பட்டவரை அடையாளங் காணுதல் எளிது. ஒரு பூசிய ஒளி அந்த முகங்களில், யாருக்கும் அவர்களை 'எங்கப்பா குதிர்க்குள்ள இல்லை' என்பதைப் போல, காட்டித் தந்துவிடும். காதலர்கள் தங்கள் காதலை ரகசியமாய் வைத்திருப்பதாக எண்ணிக் கொள்வது வேடிக்கை தான்.
மகா உடற்பயிற்சி அது. ஐம்புலன்களும் காதலில் பரபரப்பு காட்டுகின்றன!
திருமணங்கள் காதலில் நிச்சயிக்கப் படுகின்றன. பெற்றோர் பார்த்து அமைத்துத் தந்த திருமணங்களும் அவ்வண்ணமே. திருமணத்தின் பின்னான காதலால் அவை நிச்சயம் பெறுகின்றன. உறுதி பெறுகின்றன.
எந்த நொடியில் காதல் உள்ளே புகுந்தது என்று காதல் வயப்படும் எவராலும் சொல்லக் கூடுவதில்லை. அவன், அல்லது அவள், யார் முதலில் அதை வெளிப்படுத்துகிறார்கள் என்பது கூட முக்கியமில்லை. மற்றவர் வெளிப்படுத்தவில்லை, அவ்வளவுதான். ஆனால் அவர்களும் உட்படுத்தி யிருந்தார்கள், அதுதான் விஷயம்!
வள்ளுவரின் காமத்துப்பால் மகா சுகம். வாசுகி கொடுத்து வைத்தவள். சொல்கிறார் வள்ளுவர்... ஒரு பார்வை, ஒரேயொரு பார்வை, அவள் பார்த்தாள். ஒரு படையே என்மீது மோதியது போலிருந்தது. மோதலில் பிறந்த காதல்! இதில் அவள் முதலில் பார்த்ததாய் ஒரு காட்சி. கம்பர்? அவர் வேறு ரகம். அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள். இதில் முதல்பார்வை தொடுத்தவன் அவன்.
உணர்வுகள் ஊர்வலம் கிளம்பினால் காதல் கட்டவிழ்த்துக் கொள்கிறது.
1981. இப்போது BSNL,   அப்போதைய தபால் தந்தித் துறை - பணியேற்கு முன்னான பயிற்சியாக ஒன்பது மாதங்கள். எங்கள் குழாமில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து, ஆண்கள் பெண்கள் என இரு பாலரும். ஒரு அபூர்வக் கூட்டணி அது. எங்கள் பயிற்சி ஆசிரியர் திரு சேதுராமன். (வணக்கம் ஐயா. உங்களைப் பற்றி ஒரு பிடிக்காத விஷயம் சொல்லப்போகிறேன்.) ஆண்கள் தனி, பெண்கள் தனி, என இரு குழுக்களாக எங்களைத் துண்டாடினார் அவர். ஒரு பிரிவு காலையிலும், மறுபிரிவு மதியத்திலும் என வகுப்புகள். பயிற்சி முடிவுநெருங்குகையில் திடீரென எங்களை அழைத்துக்கொண்டு ஒரு உல்லாசப் பயணம் கிளம்பினார் திரு சேதுராமன்.
மகாபலிபுரம். மிச்சமிருக்கும் சில சிலைகளைப் பார்க்கவே விநோதமாகவும் வருத்தமாகவும் இருந்தது. பல சிலைகள் உடைந்து சிதிலமாகி யிருந்தன. ஒரு விக்கிரகம். நாங்கள் நின்று அதைப் பார்த்தபடி யிருந்தோம். அந்தக் கேள்வியை அப்போது அவர், திரு சேதுராமன் கேட்டிருக்கக் கூடாது. கேட்டார். காதலின் முதல் துளி வானத்தில் இருந்து விழக் காத்திருந்த வேளை போலும் அது.
இது என்ன சிலை சொல்லுங்கள் பார்க்கலாம்.
யாருக்கும் பிடிபடவில்லை. எந்தச் சிலை பற்றியும் கேள்வி கேட்காத திரு சேதுராமன். அப்போதே நான் கதைகள் எழுத ஆரம்பித்திருந்தேன். எங்கள் குழுமத்தில் எல்லார்க்கும் அது தெரியும். எல்லா சக பயிற்சியாளர்களிலும் என்னைப் பற்றிய ஓர் ஓரக்கண் கவனம் விழுந்திருந்தது. அது எனக்கு ஒரு கிறுகிறுப்புடன் இருந்த காலம்.
ஷங்கரநாராயணா, இது என்ன சிலை? உனக்குக் கூடவா தெரியல?
ம்ஹும்.
அர்த்தநாரிஸ்வரர், என்றார் திரு சேதுராமன்.
சரியாப் பாருங்க சார். சிலை ஒருபக்கம் உடைஞ்சிருக்கப் போறது, என்றேன்.
சிறு சிரிப்புடன் அவளும் நோக்கினாள். அண்ணலும்...
ஒரு பார்வை. ஒரேயொரு பார்வை. ஒரு படையே என்மீது மோதினாப் போல...
திரு சேதுராமன் மகாபலிபுரத்தில் இருந்து கிளம்பும் வரை வேறு கேள்வி கேட்கவே இல்லை.
என் மகன், பிரசன்னா, இப்போது மணமகன். அவனிடம் வேறு கதை இருக்கிறது...
காதலில் சில விசித்திரங்கள். ஒன்று அங்கே முத்தம் கடனாகவே வழங்கப்படுகிறது. அதைத் தீர்க்கவே முடிவது இல்லை.
இரண்டாவது ஆச்சர்யம். காதல் - இதில் இடைவேளை தான் முற்றும்!
*
storysankar@gmail.com

91 97899 87842 

Comments

Popular posts from this blog