புதுத் தெரு கதவிலக்கம் 1 - சிறுகதை

பு து த்  தெ ரு

கதவிலக்கம் 1
*
எஸ். சங்கரநாராயணன்

*
பேப்பரில் விளம்பரம் பார்த்துவிட்டு ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். எப்படியும் அந்தப்பகுதி புரோக்கர்கள் தலையீடு இல்லாமல் கிரயம் பேசிவிட அவர் தீர்மானம் பண்ணிக் கொண்டிருந்தார். அவரது முழு சேமிப்பும் இதில் கிடக்கிறது. பார்த்துப் பார்த்துக் கட்டியிருந்தார். தன் காலம் முடியும் வரை அதை விற்க நேராது என்றுதான் நம்பியிருந்தார். “என்ன சாமி, வூட்டைக் குடுத்துர்றாப்லியா?” என்றபடியே சின்னக்கண்ணு வந்து பல் குத்தியபடியே வீட்டைப் பார்த்தான். செய்தித்தாள் பார்த்துவிட்டு வந்திருந்தான் போல. அந்தப் பகுதி புரோக்கர் அவன். குடித்திருக்கலாம். அதுபற்றி என்ன, இந்தக் காலத்தில் குடி சகஜமாகித் தான் விட்டது!
“இல்லியே? யார் சொன்னா?” என்றார் அவர். “அக்ஹ்” எனச் சிரித்தான் சின்னக்கண்ணு. “நம்மை மீறி இந்த ஏரியாவுல எந்தக் காரியமும் நடக்காது சாமி...” அவன் சிரிப்பு ரொம்ப விகாரமாய் இருந்தது. சாதாரணமாய்ப் பேசுகிறானா மிரட்டுகிறானா என்றே தெரியவில்லை. வேண்டாத பகை, புகைய ஆரம்பிக்கிறதோ என்று பயமாய் இருந்தது.
அவனைப் பார்த்ததும் வாசலில் நின்றிருந்த இந்து உள்ளே போய்விட்டாள். அவருக்குத் தனித்து விடப்பட்டாப் போலிருந்தது. “சொல்லு சாமி. நல்ல ஆளா நான் கூட்டியாறேன்...” என்றபடியே பல் குச்சியை வெளியே தூ என துப்பினான். “தேவைன்னா பாத்துக்கலாம்” என்றார் அவர் மையமாய். “பாரு... வீடு பழைய வீடு. கேட்டியா? ஒரு வெள்ளை கூட அடிக்கல்ல. வெளிச்சமே உள்ள வராம ஜிலோன்னு இருட்டிக் கெடக்கு...” அவருக்குக் கோபம் வந்தது. “இதாம்ப்பா என் வீடு. அது அப்படியே இருக்கட்டும்” என்றார். தன் வீட்டைக் குறை சொல்வது அவருக்குத் தாளவில்லை.
“என்ன விலை சொல்றே?” அவர் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். “நான் பாத்துக்கறேன் சின்னக்கண்ணு.” அவன் விடுவதாய் இல்லை. “எங்களை மாதிரி பேரம்பேசி இதை விக்க உன்னால முடியாது சாமி. நீ என்ன விலை சொல்றியோ, அதைவிட அதிக விலைக்கு நாங்க விப்போம். எங்களால முடியும். கேட்டியா?” “வேணாம்.” “என்ன வேணாம்?” “நான் பாத்துக்கறேன் சின்னக்கண்ணு” என்றபடி அவரும் உள்ளே வந்தார். நெஞ்சு படபடவென்று வந்தது.
“பேப்பர்ல போட்டால் எல்லாரும் தான் வந்து பார்ப்பாங்க” என்றாள் அம்மா. “இவனுங்க இனி அடிக்கடி இந்தப் பக்கம் சுத்த ஆரம்பிச்சிருவாங்கடி. அதான் பிரச்னை. வர்ற பார்ட்டிங்களை, வாங்க நான் கூட்டிப்போயிக் காட்டறேன்னு, கூடவே வருவாங்க. நாம கமிஷன் தராட்டியும், எங்களைப் பகைச்சிக்கிட்டு இங்க நீங்க இருந்துருவீங்களா, அது இதுன்னு அவங்ககிட்ட மிரட்டி கிரட்டிக் காசு வாங்குவாங்க.”
“ச். நம்ம வேளையே சரியில்லை. எல்லாத்தையும் அனுபவிச்சிதான் ஆகணும். இல்லாட்டி கூட... காதுங் காதும் வெச்சா மாதிரி வீட்டை வித்துற முடியுமா? நாலு பேர் வந்து வீட்டைப் பார்ப்பாங்க. விசாரிப்பாங்க. குறை நிறை சொல்வாங்க. அதெல்லாம் நாம கேட்டுக்கிட்டுதான் ஆகணும்” என்றாள். அவர் அவளைப் பார்த்தார். “நாம நம்ம வீட்டை உசத்தியா நினைச்சிருப்போம். வாங்க வர்றவன் கண்ணுக்கு இதுல உள்ள நொட்டை தான் தெரியும்.” அவள் அத்தனை தெளிவாகப் பேசியது அவருக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அம்மா எதற்கும் கவலைப்பட மாட்டாள். ஒரு வகையில் அவள் அப்படி இருக்கிறது அவருக்குப் பிடித்திருந்தது. நாம பயப்பட, கூடவே அவளும் பயமுறுத்தினால் எப்படி?
விற்கிறது, என்றானபின் இதை வெள்ளையடிக்கவோ, பராமரிக்கவோ பணம் செலவழிக்க மனம் ஒப்பவில்லை. அந்த சின்னக்கண்ணு சொன்னாப்போல வெள்ளையடித்தால் இன்னுங் கொஞ்சம் பளிச் என்று காணும். வெளிச்சமும் உள்ளே இன்னும் துலக்கம் பெறும். வீடு சார்ந்து அவரிடம் இப்போது ஒரு இருட்டு தான் இருந்தது உள்ளே. அதை, அந்த மனதின் இருளை வீடு பிரதிபலித்தாப் போலிருந்தது. அத்தனைக்கு ஒண்ணும் துக்கப்படவோ, அதைரியப் படவோ, வேண்டுமா என்ன, எனத் தனக்குள் கேட்டுக் கொண்டார். என்ன, கொஞ்சம் வெளிக் கடன் அதிகமாகி விட்டது. அவசரப்பட்டு விருப்ப ஓய்வு என்று வந்திருக்க வேண்டாம். ரெண்டாம் பெண் கல்யாணத்தின் போது ஓய்வு காலப் பணம் பயன்படும் என வெளியே வந்திருந்தார். எல்லாம் சரிதான். இப்போது... வீட்டை விற்றுவிட்டால் நிலைமை கட்டுக்குள் வந்து விடும் என்றுதான் இருந்தது. ஆனால் அதைப் பிரிவது தான் அத்தனை சுலபமாய் இல்லை.
அந்த வீட்டை வாங்கும்போது வீட்டின்மேல் கடன் வாங்கித்தான் உள்ளே வந்தார். முதலில் அதுவே மலைப்பாய் இருந்தது. அலுவலக நண்பர்கள் உற்சாகப் படுத்தினார்கள். அதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதிருந்தது அவருக்கு. சொந்த வீடு உள்ளே சில வெளிச்சங்களைப் பாய்ச்சத்தான், பீய்ச்சத்தான் செய்கிறது. ஒரே வருடத்தில் இவள் குழந்தைப்பேறு அடைந்தாள். அலுவலகத்தில் எல்லாரும் கிண்டல் செய்தார்கள். அவருக்கே அவர்களைச் சந்திக்க வெட்கமாகவும், ஆனால் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இப்படிக் கேலிகளுக்கு அவர் பழகியவர் அல்ல. எதையும் வந்தபடி அனுபவிப்பவர் அவர். அதன் ருசியை அடிநாக்கில் சேமித்து அனுபவிக்கிறாப் போல சிலர் முகம் நிறையச் சிரிப்புடன் வார்த்தையாடுவார்கள். சதா இப்படிச் சிரிக்க எப்படி முடிகிறது அவர்களால், என்று ஆச்சர்யப்படுவார் அவர். ஆனாலும் உள்ளே உயிர் வளர வளர மனைவி மகா அழகாகிப் பொலிந்தாள். அவர் கண்ணே கூசும் போலிருந்தது.
வீட்டின் ஞாபகங்கள் வர ஆரம்பித்தாலே அந்த நல்ல காலங்கள் அலையோங்கி விடுகின்றன. இந்து கல்யாணத்தின் போது நல்ல மழை. வெளியே தெருவில் தண்ணீர் வந்திருந்தது. மைதிலியை இதோ உள்ளறையில் வைத்துதான் பெண் பார்த்தார்கள்... என நிறைய ஞாபகங்கள் வீட்டோடு பிணைந்தவைதானே? பண அளவில் பெரிய சுதந்திர உணர்வு எல்லாம் வரவில்லை. ஆனால் இவள் நல்ல சிக்கனம். தேவைக்கு மேல் அவள் ஆசைப்படுவது இல்லை. பக்கத்து வீட்டுப் பெண் எப்படி இருக்கிறாள், என எட்டிப் பார்த்து, ஒப்பிட்டுப் பார்த்து, பெருமூச்சு விடுவது இல்லை. கணவன் கொண்டுவந்த சம்பளத்தில் திருப்திப் பட, குடும்ப லகானை இழுத்துப் பிடிக்க அவள் கற்று வைத்திருந்தாள். அவள் இல்லாட்டி என் கதி என்ன, என நினைக்கவே அவருக்குத் திகைப்பாய் இருக்கும். அவள் யோசனை இல்லாமல் அவர் எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டார்.
அவளிடம் எளிய சந்தோஷங்கள் இருந்தன. நன்றாகப் பாடுவாள். வெள்ளிக்கிழமைகளில் பூஜை விளக்கேற்றி எதிரே அமர்ந்து நாலு ஸ்லோகம் சொல்வாள். அபிராமி அந்தாதி பாடுவாள். குறையொன்றுமில்லை, ராஜாஜி பாடல் பிடிக்கும். வெள்ளைத் தாமரை, பாரதி பாடல், ஆபேரி பாடுவாள். இந்துவின் பெண் ஸ்ரீதேவிக்கும் அவள் சில பாடல்கள் சொல்லிக் கொடுத்தாள். ஸ்ரீதேவிக்கு சபைக் கூச்சம் எல்லாம் இப்பவே இல்லை. அவள் குரல் எடுக்கும் எடுப்பில் அந்த லயிப்பு தெரிகிறது. அப்பா இல்லாத குழந்தை. நல்லபடியா கரை சேர வேண்டும். குழந்தை பற்றிய கவலை வந்ததும் அவர் முகம் இறுக்கமாகி விட்டது.
வீட்டை விற்றே ஆக வேண்டியிருந்தது. இந்துவின் கணவன் இறந்து விட்டான். விபத்து. திடீரென்று போன் வந்து அவரும் மனைவியும் மதுரைக்கு ஓடினார்கள். தலையில் அடி. சேர்த்தது பெரிய ஆஸ்பத்திரி. செலவு தண்ணீராய்க் கரைந்தது. இந்துவின் நகை அத்தனையும் விற்றுக் கூட பணங் கட்ட முடியவில்லை. அவ்வளவு செலவு செய்தும் அவன் பிழைக்கவில்லை. அவன் மேல் தான் தவறு என்று வந்து அடித்த லாரிக்காரன் சொல்லிவிட்டான். அடித்துச் சொல்லிவிட்டான். மாப்பிள்ளை ஓட்டிப்போன வாகனமே யமகா. லாரி பெரிய புள்ளியின் லாரி. அவர்களுக்கு பண பலம் இருந்தது. அலுவலகத்தில் இருந்து பெரிசாய் உதவி கிடையாது. அவளுக்கு அங்கே வேலை தருகிற அளவிலும் எந்த ஏற்பாடும் யாரும் முன்னெடுக்கவில்லை.
திடீரென்று இந்துவுக்கு எல்லாமே இருட்டாய்ப் போனது. விறுவிறுவென்று எல்லாம் முடிந்து நிதானித்தபோது இந்து அவர்களுடன் வந்திருந்தாள். இனி அவள் திரும்ப கணவன் வீட்டுக்குப் போக வழி இல்லை. அதை எதிர்பார்க்கவும் இல்லாமல் ஆயிற்று. அவளிடம் இதைப் பேசவே இன்னும் காலம் எடுக்கும் என்றிருந்தது. சின்னப் பெண்தானே? கல்யாணம் ஆகி ஆறு ஏழு வருடங்கள் கூட ஆகவில்லை. ஸ்ரீதேவி. ஒரு பெண் குழந்தை. மூணு வயசு இன்னும் ஆகவில்லை. அது சுவாமி முன் அமர்ந்து ‘குறையொன்றுமில்லை’ பாடிக் கொண்டிருக்கிறது பாவம்.
அவளைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்க வேண்டும். எப்படியும் இந்துவின் யோசனை பற்றிப் பேசியாகி வேண்டியிருந்தது. டிசம்பர் மாசம் இது. ஜனவரியில் பிள்ளைகளுக்கு சேர்க்கை விண்ணப்பம் தர ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு டொனேஷன் அது இது என்று தயாராய் இருக்க வேண்டும். இவள் வேலை கீலை என்று எதும் பார்க்கப் போகிறாளா என்ன ஏது, எதுவும் தெரியாது. தெரிந்தவர்களிடம் சொல்லி வைக்கலாம். படித்திருக்கிறாள். என்றாலும் வெறும் டிகிரி என்பது இந்தக் காலத்தில் பத்த மாட்டேன் என்கிறது. பள்ளிக்கூடத்தில் கிளார்க் வேலை அது இது என்று பார்த்தாலும் என்ன பெரிசாய்ச் சம்பளம் கிடைத்து விடும். பெண்களே, வீட்டில் இருப்பதற்குப் போய் வரலாம் என்கிற அளவில் தான் இப்படி வேலையை ஏற்றுக் கொள்கிறார்கள். குழந்தை இருக்கிறது அவளுக்கு. பெண் குழந்தை. அதை வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து கட்டிக் கொடுக்க வேண்டும். பெரும் சுற்று இருக்கிறது இந்துவுக்கு. இப்படியே முடங்கிக் கிடக்க முடியுமா என்ன?
அவருக்கு ரெண்டாவதும் பெண். இந்துவை விட இவள் நல்ல அழகு. மூக்கு குத்திக் கொண்டது தனி எடுப்பாய் இருந்தது மைதிலிக்கு. ப்ளூ ஜாக்கர் மூக்குத்தி. தனக்குக் கல்யாணத்தில் போடவில்லை, என அக்காவுக்கு இப்ப வருத்தம். எப்போ? கல்யாணம் ஆகி, கணவன் செத்து, பிறந்த வீடு வந்த இந்த நிமிஷம். மைதலி குழந்தையுண்டாகி தாய் வீடு வந்திருந்தாள். இந்த வீடு அவளுக்கு, மைதிலிக்கு வசதிக் குறைவாய் இருந்தது. அதைச் சொல்லியும் காட்டினாள். வீட்டுக்கு வெளியே கழிவறை. ராத்திரி வீட்டைவிட்டு வெளியே வந்து தோட்ட வெளியில் நடந்து கழிவறை வரை போக அவள் சிரமப்பட்டாள். சில்லென்ற அந்த இரவின் அமைதி அவளுக்கு என்னவோ போலிருந்தது. இந்நாட்களில் மைதிலி ஓசைகளுக்குப் பழகி, வெளிச்சத்தில் பழகி, மௌனத்தையும், இருளையும் வெறிக்க ஆரம்பித்திருந்தாள். மௌனமான வாழ்க்கை வாழப்படாத வாழ்க்கையே, என்று நினைத்தாளோ என்னவோ.
கல்யாணத்துக்கு முன்பிருந்தே அவள் இப்படியொரு வெளி வாழ்க்கைக்கு உள்ளூற ஆசைப்பட்டுப் பறந்து போய் இருக்கலாம். திரும்ப இந்த வீடு வந்தது அவளுக்கு ஒப்பவில்லை. வீட்டுலயே குளியல் அறையும் கழிவறையும் சேர்த்தாப்போல ஒரு அறை கட்டிறலாம், என அவள் சொல்லிக்கொண்டே யிருந்தாள். அதற்குப் பணம்? உங்க வீடு, நீங்க செய்யுங்க. உங்க வீட்டுக்கு நீங்கதானே செய்ய வேண்டும்? வெடுக்கென்று வார்த்தைகளை வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாக வீசுவாள் அவள். வெட்டு அல்ல வேட்டு. சதா யாருடனாவது அவள் அலைபேசியில் பேசிக்கொண்டே யிருந்தாள். சில பெண்களுக்கு, கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்குப் பின், என இரு பருவங்கள் அமைந்து விடுகின்றன.
முதல் பிரசவம் பெண் வீட்டில் தான் பார்க்க வேண்டும். மாமியார்க்காரி அட்வைஸ். மாப்பிள்ளையின் யோசனை என்ன தெரியவில்லை. தன் அப்பா செய்வார், என ஒரு வீம்பில் இங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள் மைதிலி. அப்பாவுக்கு இதுபற்றி எதுவும் பேச இல்லை. அவர்கள் வசதிக்கு அவர்களே பார்த்துக் கொண்டிருக்கலாம். கல்யாணம் ஆகிப் போனாலும் இந்துவாவது வருடம் ஒருமுறை என்று வந்து அப்பா அம்மாவைப் பார்த்துவிட்டுப் போவாள். கல்யாணம் ஆன இரண்டு வருடத்தில் மைதிலி அவர்களை மறந்தே விட்டாப் போல இருந்தது. இப்போது ஒரு வீம்பு. “நீங்க நல்லபடியா பிரசவம் பார்த்து அனுப்பினால் தான் அந்த வீட்டில் எனக்கு கௌரவமா இருக்கும் அப்பா” என்றாள் மைதிலி.
ட்வின்ஸ் என்று டெஸ்டில் தெரிந்தது. ரெட்டைக் குழந்தைகள் என்றால் எப்படியும் சிசேரியன் தான், என்றார்கள். ஒரு குழந்தை ஒத்துழைக்கிறாப் போல அடுத்தது வெளியே வர ஒத்துழைக்க வேண்டுமே? அதைப் பெற்றவள் சமாளிக்க வேண்டுமே? அத்தோடு இப்போதெல்லாம் பிரசவம் என்றாலே சிசேரியன் என்கிற காலம். டாக்டர்கள் சொல்வது இருக்கட்டும். இவர்களுக்கே பிரசவ வலி பற்றி பயம். குழந்தை பிறக்கிற நேரம் பற்றிய பயம். அவர்களே நேரங் குறித்து, சிசேரியன் செய்கிற காலம். சிசேரியன் என்றால் ஒரு லட்சம் வரை கூட செலவாகி விடுகிறது, என்பது தான் அவரது முதல் கவலையாக இருந்தது.
இந்துவின் கணவன் வகையில் ஆஸ்பத்திரி செலவுக்கே அம்பதாயிரம் வரை தன் வீட்டின் பேரில் கடன் பெற்றுத் தான் சரிக் கட்டினார். அவன் இறந்து அலுவலகத்தில் இருந்து சிறு தொகை வந்தது. இந்து சொன்னாளா, அலுவலகத்திலேயே யோசித்துச் செய்தார்களா தெரியவில்லை. அதை குழந்தை ஸ்ரீதேவி பெயரில் டெபாசிட் செய்தார்கள். குழந்தையின் எதிர்காலம் முக்கியம் இல்லையா, என்கிற யோசனை அவர்களுக்கு. இங்கே நிகழ்காலமே இருட்டிக் கிடந்தது. செலவழித்த பணத்தைப் பெண்ணிடம் எப்படி திரும்பிக் கேட்பது? அடுத்தவள் வேறு, பிரசவம் என்று, ரெட்டைக் குழந்தை, வந்து நிற்கிறாள். அம்மாதான் யோசனை சொன்னாள். “வேற வழி இல்லை. திரும்பத் திரும்ப கடன் வாங்கிட்டிருக்க முடியாது. யாரும் தரவும் மாட்டார்கள். கைல வெண்ணெயை வெச்சிக்கிட்டு நெய்க்கு அலைஞ்ச கதையா இருக்கு. பேசாமல்...” அவரைப் பார்த்தாள். “வீட்டை... வித்துறலாம்.” சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிப் கொண்டாள்.
செய்தித்தாளில் விளம்பரம் தந்தார் அவர். ஐந்து வரிக்கே ஆயிரக் கணக்கில் கேட்டார்கள். விண்ணப்ப படிவத்தை நிரப்பும் போது கை நடுங்கியது லேசாய். அழுகை வந்தது. எதையும் விற்பது சுலபம். வாங்குவது அத்தனை சுலபமா என்ன? இனி நமக்கு, இத்தனை வயதுக்குப் பிறகு, சொந்த வீடு பிராப்தம் இருக்குமா? பலவித யோசனைகள். வியாழக்கிழமை எழுதித் தந்தார். ஞாயிறு இதழில் வெளி வந்தது விளம்பரம்.
எத்தனை விதமான அழைப்புகள். அலைபேசியில் வந்து கொண்டே யிருந்தது. ‘‘வெஜிடேரியன்சுக்குத் தான் தருவேன்,’’ என அவர் சொன்னபோது இவள், மைதிலி இடை மறித்தாள். “நாமளே போயிறப் போறோம். அப்பறம் என்ன வெஜ் நான்வெஜ்?” அவளிடம் யாரும் பேச முடியாது. அவள் நினைத்து விட்டால் அது சரி, அதுதான் சரி, என்கிற ரகம். எல்லாரும் அப்பா அம்மாவை விட அதிகம் படித்தவர்கள் இல்லையா?
பைக்கில் ஒரு பையனும், கூட அவன் அப்பாவும் போல. பையனின் சம்பளத்தில் வீடு பார்க்கிறார்கள். இன்கம் டேக்ஸ் குறைய லாம் என்கிற அவரவர் கணக்குகள். அந்த அப்பாவுக்குப் பையனையிட்டு ஒரே பெருமை. “நான் ஃப்ளாட் புதுசாப் பார்க்கலாம்னு இருந்தேன். அப்பா தனி வீடுங்கறார். நாமளா கட்ட முடியாது. நல்லபடியா கட்டின வீடு தான் நமக்குத் தோதுங்கிறார்.” அவர்கள் ஃப்ளாட் வாங்கப் போகிறார்களா, தனி வீடா, அதுவே விளங்கவில்லை. அவர்களே இதுபற்றி முடிவு எதுவும் எட்டவில்லை. ரெண்டையும் பார்ப்போம், என்கிற மனநிலையில் இருந்தாப் போலிருந்தது. வந்தார்கள். வீட்டைச் சுற்றிப் பார்த்தாக்ரள. அவர்களே பேசிக் கொண்டார்கள். “எல்லா ரூமும் சின்னச் சின்னதா இருக்குப்பா” என்றான் அவன். இது வேணாம், ஃப்ளாட்தான், என அவன் மனசில் நினைத்திருக்கலாம். பரவாயில்லை. பார்த்தால் வெஜிடேரியன்ஸ் என்று தோணியது. “என்ன சார்?” என்று கேட்டார் அப்பா. தலையை மாத்திரம் அசைத்துவிட்டுப் போய்விட்டார்கள்.
ஒரு ஆள் வந்து “வாஸ்து படி இல்லியே?” என உதட்டைப் பிதுக்கினான். தன் வீட்டைப் பற்றி அவர் நல்லவிதமாக நாலு வார்த்தை எடுத்துச் சொல்ல விரும்பினார். இப்படியெல்லாம் அவர் பேசியதே கிடையாது. கூச்சமாய் இருந்தது. யாராவது வீட்டைக் குறை சொல்கையில், அதை மறுத்துக் கூட பேச முடியவில்லை. அசட்டுச் சிரிப்பு சிரிக்கத்தான் முடிந்தது அவரால். இந்து இதில் எல்லாம் கலந்து கொள்ளவே இல்லை. அவள் பொதுவாகவே அதிகம் பேச மாட்டாள். அதிலும் மைதிலி பிரசவம் என வந்து உட்கார்ந்த கணம் அவள் இன்னும் அசௌகர்யமாய் உணர்ந்தாப் போலிருந்தது.
அந்தப்பெண் ஸ்ரீதேவிதான் பாவம். அதற்கு நடக்கிற எந்த விஷயமும் பெரிசாய் பாதிக்கவில்லை. பாட்டி ஸ்லோகம் சொல்கையில், கூட வந்து உட்கார்ந்தது. பாடினால் கூடவே பாடியது. நல்ல ஞாபக சக்தி அதற்கு. உள்ளறைகளில் கரியோ சாக்பீசோ வைத்து கோடு கோடாய் இழுத்தது. மலை. சூரியன். தென்னை மரம். கூரை போட்ட வீடு. அதன் கற்பனை விரிந்தபடியே இருந்தது. இப்படி சுவரில் கிறுக்குகிறதே என்று இருந்தது அவருக்கு. அதுவும் வீடு விற்கிற நேரத்தில். அதை ஒருத்தர் சொல்லவும் சொல்லிவிட்டார். அதே சமயம் குழந்தையைக் கடிந்து கொள்ளவும் மனம் இல்லை. அங்கே இருந்தவர்களில் விகல்பம் அற்று நடமாடிக் கொண்டிருந்கும் ஒரே ஒளி அதுதான். அதையும் அமர்த்தி விட வேண்டுமா? வெளித் தோட்டத்தில் மஞ்சள் கனகாம்பரம். முள் படாமல் பறித்து கூடையில் ஏந்தி உள்ளே பாட்டியிடம் சேர்த்தது அது. இந்துவுக்குக் குழந்தையையிட்டுப் பெருமைதான்.
சிலர் விலை அதிகம், என்றார்கள். “இங்கத்தைய இப்பத்தைய ரேட் தான் சார்” என்றார் அவர். “இடிச்சிக் கட்டினால் கூட இது லாபம் தான் சார்.” என்றார் புன்னகையுடன். “இடிச்சி அப்பறம் கட்டறதுக்கு மனையாவே வாங்கிறலாமே?” என்றார்கள். அவருக்கு பதில் தெரியவில்லை. பேரம் படிகிறாப் போலவே இல்லை. சிலர் “ரெடி கேஷ்” என்றதும் சிரித்தார்கள். “முழு பணமும் வெச்சிக்கிட்டு ஆரு வீடு வாங்கறா?” என்றார்கள். “நீங்க இந்த வீட்டை ரெடி கேஷ்லயா கட்டினீங்க?” என்று எதிர்க் கேள்வி கேட்டார்கள். பழக்கம் இல்லாத வேலை. அக்ரிமென்ட் அது இது என்று இழுத்துக் கொண்டிருப்பதில் அவருக்கு பயம். குளிருக்கு பயந்தால் நதியில் இறங்க முடியுமா, என்றும் பட்டது.
திரும்பத் திரும்ப தோல்வியையே சந்தித்தார்கள். “இப்ப ரியல் எஸ்டேட் அத்தனை விருத்தியா இல்லை” என்றார்கள். உண்மை, பொய் என்பதைத் தாண்டி, பேச்சு சாமர்த்தியத்தில் காரியங்கள் நடந்தன. அவருக்கு இந்த உலகமே மலைப்பாய் இருந்தது. மைதிலியோ இன்னும் உள்பக்கமா நல்ல ஃப்ளாட், அட்டாச்ட் பாத்ரூமுடன் வாடகைக்குப் பார்த்துக் கொள்ளும் யோசனைக்கு வந்திருந்தாள். அவளோ இந்துவோ இந்த வீட்டை விற்பதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லையோ, என்று இருந்தது அப்பாவுக்கு.
அந்தச் சின்னக்கண்ணு, ஒருநாள் அவன் ஒரு ஆளைக் கூட்டி வந்தான். அவனை உள்ளே விடவா வேண்டாமா, என்றே அவருக்குக் குழப்பம். ஆனால் பத்து நாளாகி விட்டது. இருபது பேர் வரை வந்து பார்த்தும் ஒண்ணும் திகையவில்லை. மனைவியைப் பார்த்தார். அவள் தலையாட்டினாள். “சாமி இவங்க கலெக்டராபிசுல வேலை. ஏற்கனவே ஊர்ல வீடு இருக்கு. நம்ம சிட்டில ஒண்ணு இருக்கட்டுமேன்னு பார்க்கறாங்க” என அறிமுகம் செய்தான். வருகிற லஞ்சப் பணத்தில் வாங்குவார்களாய் இருக்கும். அவர் தலையாட்டினார். உள்ளே வந்த ஜோரில் சின்னக்கண்ணு பேச ஆரம்பித்தான். அவன் குரலின் நம்பிக்கை. நம் வீட்டை நம்மை விட நன்றாக அவன் அறிந்து வைத்திருந்தாப் போலிருந்தது.
“சாமி நல்ல சம்பிரதாய ஆள் பாத்துக்கிடுங்க. எல்லாரும் வீட்டுக்குள்ளியே குளியல் அறை, டாய்லெட்னு கட்டிக்கிறாங்க. என்ன அசிங்கம் அது. சாமி பாத்தீங்களா? தனியே இடைவெளி விட்டுக் கட்டியிருக்காங்க. சென்னையில் அதுவும் இப்பிடி ஏரியாவுல இப்படி வீடு கிடைக்குமா? தினசரி பூஜை புனஸ்காரம் செய்யப்பட்ட வீடு...” என்றபடியே அம்மாவைக் காட்டினான். “அம்மா ரொம்ப ஆசாரம்” என்றான் நேரில் பார்த்தாப் போல. அப்படியே அவரிடம் திரும்பி, “இங்கயிருந்து அம்பது அடில பஸ் ஸ்டாப்பிங். பஜார். காய்கறி மார்க்கெட் எல்லாமே கிட்டத்ல. நல்ல வசதி உங்களுக்கு. வாசல்ல தெருவிளக்கு இருக்கு பாருங்க. நல்ல பாதுகாப்பு. உள்ள லைட்டே பொட வேண்டாம். தெருவிளக்கு வெளிச்சமே ஜன்னல் தாண்டி உள்ள வரும்.” சின்னக்கண்ணு அடுக்கிக் கொண்டே போனான். அவருக்கு நம் வீட்டில் இத்தனை சிறப்பம்சங்களா என்று இருந்தது. “வீட்டை ஒரு கோட் வெள்ளை அடிச்சிட்டா அப்படியே யூஸ் பண்ணலாம். வேற செலவு கிலவு ஒண்ணுங் கிடையாது. சாமி எல்லா பத்திரமும் பக்காவா வெச்சிருக்கார். தொந்தரவு இல்லாத பார்ட்டி” என்றான் ரொம்பத் தெரிந்தவன் போல.
வந்தவர் என்னவோ யோசித்தாப் போலிருந்தது. “ஐயா மெட்ராஸ்ல எங்க போனாலும் தண்ணி கிடையாது. 250 அடி 300 அடி தோண்டறாங்க. நம்ம வீட்ல கிணறுதான். தண்ணி அமிர்தமா இருக்கும். குடிச்சிப் பாக்கறீங்களா? எந்தக் கோடைக்கும் கிணறு வறண்டது இல்லை. பக்கத்து வீடுகள்ல இருந்து குடிக்கவும் சமைக்கவும் இந்தக் கிணத்துத் தண்ணிதான் சேந்திக்கிட்டுப் போறாங்க. சாமிக்குப் புண்ணியம்” என மேலும் ஆரம்பித்தான்.
அவர்கள் போனபின்னும் அவன் ஆளுமை அந்த அறைகளில் இருந்தது. பிரமிப்பாய் இருந்தது. இந்துவே புன்னகை செய்தாள். மைதிலி “பேசாமல் அவன்கிட்ட விட்ருங்கப்பா. ஒரு பெர்சன்ட், ரெண்டு பெர்சன்ட் கேப்பான். ஆனால் வீட்டை வித்துருவான்” என்றாள். ஆனால் அந்தப் பேரம் படியவில்லை. ரொம்பக் குறைச்சிக் கேட்டார்கள். “சாமி ரெடி கேஷ் பார்ட்டி. நீங்க அக்ரிமெனட் போட்டு நாலு மாசம் ஆறு மாசம்னு காத்திருந்து, அவன் பேங்க் வாசலுக்கு ஏற யிறங்க... எந்த வில்லங்கமும் இல்லை” என்றெல்லாம் சின்னக்கண்ணு ஆசை காட்டினான். வேண்டாம், என்றுவிட்டார் அவர்.
விளம்பரம் தந்த இந்த இருபது நாளில் எத்தனையோ விதமான மனிதர்களை சந்தித்தாகி விட்டது. நேரில், அலைபேசியில் என்று வித விதமான அனுபவங்கள். ஆனால் வீடு விற்கப் படவில்லை. “நாம அவசரப் பட்டாப்ல எல்லாம் நடந்துறாது” என்றாள் அம்மா. அதற்குள் “பாட்டி நல்லாயிருக்கா?” என்றபடி ஒரு துண்டை புடவையாய் மேலே சுற்றிக்கொண்டு வந்து நின்றது ஸ்ரீதேவி. அதைப் பார்த்துவிட்டு எல்லாரும் சிரித்தார்கள். “அப்பா சின்னக்கண்ணு அடுக்கினாப் போல அடுத்த பார்ட்டி கிட்ட நீங்க அடுக்கிப் பேசுவீங்களா?” என்று கேட்டாள் இந்து. “அத்தனை விசேஷமான வீட்டை நானே விக்க மாட்டேன்” என்றார் அப்பா.
ரெண்டு நாளில் அந்த அம்பதாயிரம் கடனுக்கே மாதத் தவணை கட்ட வேண்டும். தலைக்குமேலே வெள்ளம் ஓடுமுன் சமாளிக்க வேண்டும், என்று இருந்தது அவருக்கு. ஒரு பையன் இருந்திருக்கலாம். பாதி பிரச்னையை அவன் வாங்கிக் கொள்வான். அதுகூட ஒரு யூகம் தான். பெத்தவர்களின் கடன் பற்றியெல்லாம் பிள்ளைகள் இந்தக் காலத்தில் கவலைப் படுகிறார்களா என்ன? இதெல்லாம் உன் கடமை தானே, என அவபர்கள் பேசுகிற காலம் இது.
ஒரு படகுக்கார் வந்து வீட்டு வாசலில் நின்றது. டிரைவர் வந்து கதவைத் திறந்துவிட மகா வெள்ளை உடைகளுடன் ஒருவர் இறங்கினார். கூடவே அவரது மனைவி. நடுத்தர வயது. குளிர் கண்ணாடி அணிந்திருந்தாள். பட்டுப்புடவை. உடம்பெங்கும் தகதகவென்று நகை. ஒளி துள்ளியது அவளிடம். மைதிலி அவர்களைப் பார்த்து பிரமித்தாள். “வீடு விலைக்கு...?” என அவர்கள் ஒரு தயக்கத்துடன் விசாரித்தார்கள். “வாங்க வாங்க” என மைதிலி அவர்களை உள்ளே அழைத்தாள். காலை நேரம். வீடே பராமரிப்பில்லாமல் கிடந்தது. உள்ளே யிருந்து துண்டைப் புடவையாய்க் கட்டிய ஸ்ரீதேவி எட்டிப் பார்த்தது.
அவர்களை உட்கார வைக்கவே யோசனையாகி விட்டது. “இருக்கட்டும்” என கைகாட்டி மறுத்தார் அவர். கையில் தங்க வாச். மற்ற கையில் தங்க பிரேஸ்லெட், என அவரும் ஜ்வலித்தார். அம்மா அப்போது தான் குளித்துவிட்டு வந்திருந்தாள். உள்ளே வந்த பெண் அவளுக்கு வணக்கம் சொன்னாள். அம்மாவுக்கு அவர்களைப் பார்த்ததும் திகைப்பாகி விட்டது. இத்தனை வசதியும் பணமும் உள்ள மனிதர்களை அவள் சந்தித்ததே இல்லை. அவர்களைத் தாண்டி, வாசலில் பெரிய கார்.., அதையும் பார்த்தாள்.
அவர்களைப் பார்த்ததுமே அப்பாவின் குரல் அடங்கி ஒலித்தது. “என்னோட முழு சேமிப்பும் போட்டு இந்த வீட்டைக் கட்டினேன்” என்பதாக நெகிழ்ச்சியுடன் ஆரம்பித்தார் அவர். “இவ இந்து. மூத்த பெண். அவளுக்கு ஒரே பொண்ணு ஸ்ரீதேவி. இங்க வாடி...” அவளைத் தன்னருகே கூட்டிக் கொண்டார். “இவங்க என் கூடத்தான் இருக்காங்க.” வந்த பெண் சுவரைப் பார்த்தாள். தாத்தாவுக்குச் சங்கடமாய் இருந்தது. தென்னை மரம். சூரியன். “இதெல்லாம் நான் வரைஞ்சது” என்றாள் ஸ்ரீதேவி. “பழைய வீடுதான்” என்றார் தாத்தா. “இன் ஃபாக்ட் இங்க வந்த பிறகுதான் இவங்களே, என் ரெண்டு பொண்ணும் எனக்குப் பிறந்தாங்க.” வந்த பெண் தலையாட்டினாள். அப்பாவின் பேச்சு அவர்களுக்கு எந்த அளவில் சுவாரஸ்யப்படும் என்று மைதிலிக்குப் புரியவில்லை. எப்படி விசாரித்து, ஏன் இந்த வீட்டுக்கு விசாரிக்க வந்தார்கள், என்று தெரியவில்லை.
பேரம் படியாது, என்றுதான் அம்மாவுக்கும் இருந்தது. அவர்கள் நிலை எங்கே? இந்த வீடு எவ்வளவிலும் அவர்களுக்கு தகுதிப்படாது, என நினைத்தாள். குறையொன்றுமில்லை, பாடல் அவளுக்கு ஞாபகம் வந்தது. இப்படியொரு வாழ்க்கை வாழவே அதிர்ஷ்டம் வேண்டும். “இப்ப இவ பிரசவம்னு வந்திருக்கா” என்றார் அப்பா. அந்தப் பெண் மைதிலியைப் பார்த்தபடியே தலையாடினாள். “வயிறு பெரிசா இருக்கே? எத்தனை மாசம்?” என்று கேட்டாள். “ஃபெப்ருவரி முதல் வாரம் வாக்கில்னு டாக்டர் சொல்றார். ட்வின்ஸ்!” என மைதிலி வெட்கமாய்ச் சிரித்தாள். கர்ப்பிணிப் பெண்கள் எத்தனை அழகாகி விடுகிறார்கள், என்று அப்பாவே ஆச்சர்யப்பட்டார்.
அம்மா வந்திருந்த பெண்ணிடம் போய், “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” என்று புன்னகையுடன் கேட்டாள். அந்தப் பெண். அவள் முகம் சட்டென சின்னதாகி விட்டது. அவரும் அதுவரை காத்த கம்பீரம் இறங்கி தலையைக் குனிந்து கொண்டார். “வேண்டாத கோயில் இல்லை. கேட்காத தெய்வம் இல்லை...” என்றாள் அந்தப் பெண். கண்ணில் கண்ணீர் முட்டி நின்றது. “கவலைப் படாதீஙக” என்றாள் அம்மா வந்தவளின் கையைப் பிடித்துக¢ கொண்டு. “இது ராசியான வீடு” என்றார் அப்பா. அந்தப் பெண் தலையாட்டினாள். கண்ணைத் துடைத்துக் கொண்டாள். “விலையைக் கேட்டு முடிச்சிருங்க” என்றாள் அவள் தன் கணவரைப் பார்த்து. ஸ்ரீதேவியைக் கிட்டே அழைத்தாள் அவள். அந்த வாஞ்சையில் ஸ்ரீதேவி அவள்கிட்டே நெருக்கமாய் வந்து ஈஷியது.
•••
(நன்றி - பேசும் புதிய சக்தி – சனவரி 2016 இதழ்

+ 91 9789987842

Comments

Post a Comment

Popular posts from this blog