DINAMANI DEEPAVALI MALAR 2016
*
காந்தி கண்ணாடி
எஸ். சங்கரநாராயணன்
 குன்றத்தூர் தாண்டி சேட்டின் தனி பங்களா. சினிமா படப்பிடிப்புகள் நிறைய அங்கே நடக்கின்றன. எல்லா இந்திய மொழியிலும் அங்கே வந்து படம் எடுக்கிறார்கள். இந்தமொழி இயக்குநர் அந்தமொழிப் படத்தில் வேலை செய்கிறார். கையில் துட்டு நிறைய வந்தவுடன் படம் எடுத்து நஷ்டப்பட நிறையப்பேர் வந்துவிட்டார்கள். காரணம் படம்எடுப்பதில் படம்எடுப்பதைத் தாண்டி அநேக சமாச்சாரங்கள் இருக்கின்றன.
தவிரவும் இதில் பணம் சம்பாதித்தால் திரும்ப நஷ்டப்பட்டு ஓட்டாண்டி ஆக்கித்தான் அது உன்னை வெளியே விடும். பணம், பண வெறி, வெற்றிக்கான வெறி… என்று உக்கிரமாகிக் கொண்டே போகும். விளக்கின் அபார வெளிச்சம் பண்ணும் வேலை அது. அதனால் வரும் புகழ் தரும் போதை அது. புகழைத்தந்து அதை அது அடுத்து பிடுங்கிக்கொண்டும் விடுகிறது. தொழில் அப்படி. இதில் இன்னொரு வேடிக்கை ஒரு படம் ஜெயித்தால் அது ஜெயித்த காரணம் யாருக்குமே புரிபடுவதே இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். தாங்கள் கண்ட காரணத்தில் அடுத்து உடனே படங்கள் தந்து அவர்கள் பாவம் அழிந்தும் போகிறார்கள்.
அதனால் படம் எடுத்து ஜெயிப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு பிரமை சேர்ந்துகொண்டு, ஜோசியர்களிடம் ஓடுகிறார்கள் சினிமாக்காரர்கள்.
பெரியதிரை தாண்டி, சின்னத்திரையின் ஆளுமையும் பெரிது. இப்போது தொலைக்காட்சித் தொடர்கள் அதிகரித்துவிட்ட காலம். சந்தையில் கிளிசரின் எல்லாம் விலை ஏறிவிட்டது.
ஆக அந்த பங்களா எப்பவும் பரபரப்பாக இருந்தது. தேவைப்பட்டுக் கொண்டே இருந்தது. கல்யாண மண்டபங்கள், இப்படி சினிமா வாடகை பங்களாக்கள், கல்யாண பார்ட்டிகளுக்கு வாடகைக்கு விட ஒரேநாள் வாடகைவீடுகள் என நகரத்தில் என்னென்னவோ நடக்கிறது. பலசரக்கு வாங்கக்கூட மொபைல் ஆப்ப் வந்தாயிற்று. சம்பாதிக்க ஆயிரம் வழிகள் தோன்றிக்கொண்ட இருக்கின்றன. ஆட்டோ தாண்டி ஷேர் ஆட்டோக்கள் வந்தாயிற்று. கமிஷன் பெற்றுக்கொண்டு கரன்ட் பில் கட்டித் தருகிறார்கள்.  வீடு வீடாய் ஏறி விசாரித்து குடிதண்ணீர் கேன்கள் விற்கிறார்கள். தோசை மாவு விற்கிறார்கள்.
பெரிய பங்களா. சினிமா எடுக்க என்றே அது இப்போது வடிவமைப்பு கொண்டுவிட்டது. அத்தனை பகட்டோடும் வெளிச்சத்திலும் ஒரு மனுசன் வாழ முடியாது. ஒரேசமயம் இரண்டு படங்கள் கூட அங்கே எடுக்கலாம். கீழே, மேல்தளம் 1, மேல்தளம் 2 என விரிந்த வசதிகள். கலைப்பொருட்களும் அங்கேயே வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். பாடம்செய்யப்பட்ட மான், காட்டெருமை. அந்தக்கால பெண்டுல கடிகாரம். தொலைபேசிக் கருவி. கிராமஃபோன் ரெகார்டுப் பெட்டி, மார்கோனி ரேடியோப் பெட்டி, பூங்கொத்து ஜாடிகள், சரித்திரகால நிகழ்கால நவீன பின்னணி ஓவியங்கள்… இப்படி. தவிர கதையின் தேவைப்படி கூண்டுக்கிளி, ஊஞ்சல் தனிக் கணக்கு. கேட்டால் தருவார்கள்.
சிலசமயம் ஒரே படத்துக்கு இரண்டு மூன்று இடங்களில் அதே பங்களாவில் படப்பிடிப்பு நடந்தது. ச்சீட்டிங் ஷாட். படம் பார்க்கையில் அந்தக் காட்சிகள் வெவ்வேறு இடத்தில் வேறு வேறு வீட்டில் எடுத்தது போல் தெரியும். அப்படித் தோன்றவைக்க தேர்ந்த கலைஇயக்குனர்கள் இருக்கிறார்கள். கைல வாட்ச் கட்டினால் நல்லவன். தாயத்து கட்டியிருந்தால் வில்லன்!
ஒரு அறையில் மேசை நாற்காலிகள் சுவரின் சித்திரங்கள் எல்லாம் பார்க்க நகரச் சாயல் (வாட்ச்) தந்தால், அடுத்த அறையையே அவர்கள் கிராமத்து வீடாக (தாயத்து) உருவாக்கினார்கள். அந்த அறையில் கோட் சூட் அணிந்த ஒருத்தர் கதாநாயகியின் காதலை நிராகரித்தால், வாட்ச் கட்டிய வில்லன்! அடுத்த அறையில் கதாநாயகனின் ஏழைத்தாய் காதில் பாம்படம் ஆட “குருவி உத்திரத்துக்கு ஆசைப்படலாம். கோபுரத்துக்கு ஆசைப்படலாமா?” என்று வசனம் பேசினாள். மூணு டேக்கிலும் அவள் தப்புத் தப்பாகப் பேசினாள். நகரத்துப் பெண் ஒருத்திக்கு பாம்படம் மாட்டி வசனம்பேச வைத்தால், அவளுக்கு தமிழே ‘தமில்’ என்று வந்தது. பாட்டுக்கு அவர்கள் அலகிய தமில் மகல் இவல், என்றே வாயசைக்கிறார்கள். டப்பிங்கில் சரிசெய்து கொள்ளலாம், என்று இயக்குனருக்கு ஒரு நம்பிக்கை. வேறு வழியில்லை. இவர்கள் ஏன் இப்படி பட்டணத்துக்கட்டைகளை நாட்டுக்கட்டைகளாக ஆக்குகிறார்கள், பாவாடை தாவணி பாத்திரத்துக்கு வட நாட்டில் இருந்து முஷி மோஷி என்ற பெயருடன கதாநாயகி வருகிறாள்… இவங்கள் கேட்ட கவர்ச்சியை அவள் தாராளமாகத் தருகிற காரணமா இது?
அடுத்த மொழியில் கதாநாயகி தமிழ்ப் பெண். அவள் தெலுங்கை என்ன பாடு படுத்துகிறாளோ தெரியவில்லை.
அப்பாவை எதிர்த்துக்கொண்டு கதாநாயகி காதலன் வீட்டுக்கே புறப்பட்டு வந்து விட்டாள்… அடுத்த அறை தானே?
தமிழ் தவிர மலையாள தெலுங்கு கன்னடப் படங்களும் எடுக்க இங்கே வந்தார்கள். ஒரே கதையை முதலில் தமிழில் வசனம் பேசி நடிகர் நடிகை நடிக்க, அடுத்து அதே காட்சியை வேறு மொழியில் வேறு நடிக நடிகை வசனம் பேசி, இருமொழிப் படப்பிடிப்பு கூட நடந்தது. மொழிக்கு ஏற்ப நடிக நடிகையின் உடையலங்காரமே ஹேர்ஸ்டைலே மாறியது ஒரு மொழியில் கதாநாயகன் என்றால் மீசை வேண்டும். அடுத்த மொழியில் மழுங்கச் சிரைத்து மீசையில்லாமல் இருக்க வேண்டும். கதாநாயகன் பண்ணுகிற ரௌடித்தனங்களுக்கும் அந்தந்த மொழியில் விசில் பற்க்க தனித்தனி இலக்கணங்கள் உண்டு. ஒரே நாயகன் இரு மொழிகளிலும் பேசி நடித்தால் இந்தமொழிக்கு என்று அவசரமாக ஒட்டுமீசை வைத்துக் கொண்டான். பார்க்க வேடிக்கை. அந்தந்த நடிகரின் பாணி, மொழிக்கு மொழி வேறு மாறியது. இந்த மொழியிலும் அந்த மொழியிலும் வேறு வேறு மாதிரியாக அது நடித்துக் காட்டப்பட்டது. ஒரே இயக்குனனே, ரெண்டு மொழிக்கும் வேறுவேறு மாதிரி நடித்துக் காட்டியது தான் அதில் உச்சம். ஆனால் ரெண்டு படத்துக்கும் ஒரே தொழில்நுட்பக் கலைஞர்கள்தான். ஒரே இயக்குநர், ஒரே தயாரிப்பாளர் தான். ஒரே கலைஇயக்குனர். அல்லது அவர்கள் மாத்திரம் மாறினார்கள்.
மொழி மாற நடிக நடிகை மாற கலை இயக்குனர்கள் கிடுகிடுவென்று அந்தந்த மொழிச்சாயலைப் பின்புலமாக உருவாக்கிக் காட்டியது பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது. ஒரு கல்லூரி ஹாஸ்டல் ஆண்கள் அறை என்றால் சுவரில் தமிழ்க் கவர்ச்சிக்கன்னிகள் படம். அடுத்த மொழிக்கு எனும்போது மற்ற மொழியின் கவர்ச்சிக் கன்னிகள் படமாக உடனே மாற்றப் பட்டன… பக்திப் படம் என்றால் சுவரில் இருந்த ஸ்ரீரங்கப் பெருமாள், திருப்பதி வெங்கடேசப் பெருமாளாக மாறினார். மலையாளத்தில் பத்மநாபஸ்வாமி!
சில படங்களில் ஒரே காமெடி நடிகன் ரெண்டு மொழியிலும் நடித்தான். ஹிட்லர் போல மீசை வைத்தால் சனங்கள் சிரித்து விடுவார்கள் என்பது சினிமா நம்பிக்கை. ஹிட்லரைக் கேவலப் படுத்துகிறான்கள் இப்படி. தெருநாய்க்கு சீசர், நெப்போலியன் என்று பேர் வைக்கிறார்கள் இல்லியா? அதைப்போல… அந்த காமெடி நடிகன், அவனது நடிப்பைப் பார்த்தால் ரெண்டு மொழியிலுமே யாருக்கும் சிரிப்பு வருமா என்று சந்தேகமாய் இருந்தது. ரௌடித்தனம் பண்ணி பொண்ணுகளைக் கலாய்க்கிறான்களாம்.
சேட்டு பங்களா பரந்த காம்பவுண்டுச் சுவர் எழுப்பிய கான்கிரீட் தோட்டம். அல்லது தோப்பு. உள்ளே பெரிய தண்ணித்தொட்டி சைசில் ஜெனரேட்டர். கோவில் மண்டபத்தில் யானை போல. படப்பிடிப்பு காலங்களில் ஜெனரேட்டர் ராட்சச நாய் போல உரும ஆரம்பித்து தெருக் கடைசி வரை அந்த இரைச்சல் கேட்கும். ‘இங்கே புகைபிடிக்கக் கூடாது’, என எழுதிப் போட்டிருக்கும். அது சமூக அக்கறையினால் அல்ல. உள்ளேயே கதாநாயகனின் பணக்கார அப்பா பைப்பில் புகைபிடித்தபடி (அப்படியானால் கெட்டவன்) வசனம் பேசினார்.
அடுத்த அறையில் பீடி புகைந்தது. இவன் ஏழை. பீடி குடித்தாலும் நல்லவன். மனசின் ஆதங்கத்தில் பிடிக்கிறான் என சனங்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். சிலசமயம் இந்த ஏழையும் அந்தப் பணக்காரனும் நேருக்கு நேர் மோதும் காட்சி கதையில் வரும். அப்போது ஏழை அவர் கிட்டேபோய் அவர் மூஞ்சியில் பீடிப் புகையை விட்டபோது சனங்கள் சிலிர்த்துக் கை தட்டினார்கள்.
சினிமாவுக்கு என்று நிறைய சாமர்த்தியங்கள் உண்டு. குழந்தையுடன் தாய் என்றால் அவள் புடவை கட்டிக்கொள்ள வேண்டும். சுடிதார் போட்டுக்கொள்ளக் கூடாது. அதேபோல போலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்க பெண் வந்தால் சுடிதார் அணிந்தால் பெண்ணியக் காட்சி. புடவை கட்டினால் அவள் நல்லவள். ஆண் ஒருத்தன் அவளைக் கொடுமைப் படுத்துகிறான். உள்ளே இன்ஸ்பெக்டர் சீருடையில் இருந்தால் கடமை தவறாதவர். சாதா உடையில் இருந்தால் அன்பும் பாசமும் நிறைந்த பொறுப்பான அப்பாவான அதிகாரி… வசனங்களும் அப்படி ஒத்திசையும்.
பூஜை அறையில் பெண் தலையில் ஈரத் துண்டுடன் தான் பூசை செய்ய வேண்டும். வில்லன் எதாவது யோசனையாய் இருந்தால் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே யோசிக்க வேண்டும். அல்லது சாய்வு நாற்காலி அது ஆடிக் கொண்டே யிருக்கும்… அவனைச் சுற்றி வெளிச்சம் சற்று சிவப்புத் தீற்றலாய் இருந்தால் நல்லது.
தெரு பூராவும் படப்பிடிப்பு சாதனங்களை ஏற்றி வந்த மினி வேன், சினிமாக்காரர்களை அழைத்துவந்த கார்கள், சாப்பாட்டு வாகனம் என நிற்கும். என்ன நடக்கிறது, எந்த நடிகை வருகிறாள் எதுவுமே தெரியாது. வாசலில் செக்யூரிட்டி உண்டு. யாரையும் அவன் உள்ளே அனுமதிக்க மாட்டான். துட்டு புழங்கும் இடம்னா அப்படி சில பந்தாக்கள் வேண்டித்தான் இருக்கிறது. செக்யூரிட்டி கார்கள் வந்தால் மட்டும் சல்யூட் பண்ணி உள்ளே அனுப்புவான். ஆட்டோவில் யாரும் வந்திறங்கினால் அல்லது நடந்து வந்தால், விசாரித்து தன் கூண்டில் இருந்து உள்ளே இன்டர்காமில், இன்னார் என பெயரைச் சொல்லிப் பேசுவான். அனுமதி கிடைத்தால் உள்ளே அனுப்புவான். அன்றைக்கு ரஜினி, அந்தப படத்தில் ஏழை வேஷம். வீட்டிலேயே மேக் அப் போட்டுக் கொண்டு வந்தார். தெரு எல்லையில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்து வந்தார். செக்யூரிட்டி உள்ளே நுழையவிட மறுத்துவிட்டான். ஓடிவந்த இயக்குனன் “வேஷம் கச்சிதமாப் பொருந்தியிருக்கு சார்” என அவலரை சமாதானப் படுத்தி உள்ளே அழைத்துப் போனான்…
இதெல்லாம் நடந்ததா விளம்பரத்துக்கான கதையா தெரியாது. குருவியார் தினத்தந்தியில் இப்படி யெல்லாம் செய்தி எழுதுகிறார்.
படப்பிடிப்பு நடக்கையில் வாசலில் பெரும் சனங்கள் வேடிக்கை பார்க்க என கூடிவிடுவதும் உண்டு. அவர்கள் செக்யூரிட்டியிடம் “என்ன படம்? என்னமொழிப் படம்?” என்று கேட்டார்கள்.
“ஜாவ் ஜாவ்” என்றான் அவன்.
“இந்திப் படம்டா இது!” என்றான் ஒருவன்.
பங்களாவை வாடகைக்கு விட்டிருக்கிறார் சேட். இந்தப்பக்கம் அவர் அநேகமாக வருவது கிடையாது. வாடகை பேச விசாரிக்க படப்பிடிப்புக்குத் திறந்துவிட காசி என்று ஒரு ஆள் சம்பளத்துக்கு இருக்கிறான். சில படங்களில் அவசரத் தேவைக்கு என வரும் உதிரிப் பாத்திரங்களில் அவனும் தலைகாட்டுவான். கல்லூரி மாணவர்கள் மத்தியில் கூட ஒரு மாணவன். ஆஸ்பத்திரியில் “அப்பா போயிட்டியா,“ என அழும் கதாநாயகனுடன் கூட ஒருவனாக இருப்பான். ஆஸ்பத்திரியாக அந்த பங்களாவின் ஒரு அறை மாறியிருந்தது என்று தனியே சொல்லவேண்டியது இல்லை. கலைஇயக்குனன்களும், காஸ்டியூம் ஆட்களும் எப்பவும் தயார் நிலையில் காத்திருந்தார்கள். டாக்டர் கோட்டு, வக்கீல் கோட்டு, நர்ஸ் உடை. குளூக்கோஸ் ஏற்றும் உபகரணங்கள். ஆஸ்பத்திரி அடையாளம் என்று ஒரு குழந்தை ஷ்ஷ், பேசக்கூபடாது என எச்சரிக்கும் படம். ஒரு பாத்திரத்தில் சிவப்பு கலக்கி ரத்தம் என வைத்திருப்பார்கள்.
மரணம். இயக்குனர் கட் சொன்னதும் இறந்துகிடந்த அப்பா எழுந்து காபி வரவழைத்துக் குடித்தார். சாவு வீட்டுக்கு வந்தால் காபி குடிக்காமல் கிளம்பக் கூடாது. பிணத்தைத் தூக்கிச் செல்ல என தமிழ்ப் பாடை ஒன்றும் தெலுங்குப் பாடை ஒன்றும் கலைஇயக்குனன் தயாராய் வைத்திருந்தான்.
“சீக்கிரம் குடிங்க. இன்னொரு டேக் போகலாம். திரும்ப சாகணும்” என்றான் உதவி இயக்குனன். நல்லவேளை, இந்தஆள் சிக்கினார். இல்லாட்டி இவனையே படுக்கவைத்து துணி போர்த்தியிருப்பார்கள்…
அவசரம் என்றால் சினிமாவில் என்னவெல்லாம் செய்வார்கள். பஸ்சில் போகும் பெண்ணின் பின்னால் தெருவில் காதலன் ஓடும் காட்சி. இவனை கையைமாத்திரம் ஒரு வளையல் போட்டு பஸ்சில் இருந்து வெளியே நீட்டி நடிக்க வைத்தார்கள் ஒருதரம்.
வருங்கால இயக்குனன் என சந்தானகிருஷ்ணனுக்குக் கனவுகள் இருந்தன. எழுத்து இயக்கம் கிருஷ், என அவன் கனவு கண்டான். என்ன இந்த டைரக்டர், இந்தக் காட்சியை இதைவிட அர்ருமையா நான் எடுப்பேனே… என தனக்குள் நினைத்தபடி அவன் வளையவந்து கொண்டிருந்தான். கிளாப் போர்டு அவன் கையில் இருந்தது. படப்பிடிப்பு சமயத்தில் அவனின் தரத்தைப் பார்த்து மற்ற சிறு நடிக நடிகைகள் இவனது வருங்காலப் படத்தில் தனக்கு எதும் வாய்ப்பு தருவான் என்று புன்சிரிப்பு காட்டினார்கள். துணை நடிகைகளோ அவனை ஒரு போதைப்பார்வை பார்த்தார்கள். பெரிய நடிகைகளை அவனே போதைப்பார்வை பார்த்தான்.
அது இயக்குனனுக்குப் பிடிக்கவில்லை. அவனது சமீபத்திய படம் சரியாக விலைபோகவில்லை. திரையரங்கிலும் போன ஜோரில் ஜகா வாங்கியபின் அவன் கொடி இறங்கி நிலைமை மாறியிருந்தது.
ஏழுமணி கால்ஷீட் என்றால் எல்லாரும் அங்கே ஆறரை மணிக்கே கூடவேண்டும். காலை டிபன் எல்லாருக்கும் பரபரப்பாக விநியோகம் ஆகிக் கொண்டிருக்கும். எல்லாருமே முடுக்கிவிட்ட தயாருடன் இருப்பார்கள். பெரிய நடிகை நடிகன் என்றால் தனி கவனிப்பு நடக்கும். அவன் அல்லது அவள் மேக் அப் போட்டுக்கொண்டபடியே “இன்னிக்கு என்ன ஷாட்?” என்பான். என்பாள்.
அன்றைய காட்சியை அருகே இருந்து இயக்குனன் விளக்குவான். “நீங்க ஹால் சோபாவுல உட்கார்ந்திருக்கீங்க. அப்பதான் கதாநாயகி குளிச்சிட்டு ஈரப்பாவாடையோட குளியல் அறையில் இருந்து வெளிய வந்து தன் அறைக்கு ஓடுவா…”
“குளிக்கப் போகும்போது மாத்துடிரஸ் எடுத்துக்கிட்டுப் போகலையா அவ?”
“அண்ணே அதான் ஈரமாயிட்டது…” என்றான் உதவி இயக்குனன் சாமர்த்தியம் போல. எல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள், இயக்குனன் தவிர. உதவி இயக்குனன் கிருஷ் தனியே இந்தக் கதாநாயகனிடம் என்னவோ பேசுகிறான். கதை கிதை சொல்றானா தெரியவில்லை. கிருஷ் தற்செயலாகத் திரும்பினான். துணை நடிகை ஒருத்தி அவனைப் பார்க்க நட்புடன் சிரித்தாள். அவன் ராத்திரி ஃப்ரியாக இருப்பானா தெரியவில்லை.
அந்தப்படத்தின் நாயகிக்கும் நாயகனுக்கும் ‘இது’ என்று ஒரு பத்திரிகை எழுதியதில் நாயகனின் மனைவி அவனை செம டோஸ் விட்டிருந்தாள். நாயகி பக்கத்திலேயே மேக் அப் போட்டுக் கொண்டிருந்தாலும் அவள்பக்கம் பார்வையைத் தவிர்த்தான் அவன். மேலும்தகவல் சேகரிக்க என்று ரகசியமாய் இருவருமே கண்காணிக்கப் பட்டார்கள்.
காட்சிக்காக ஒரு டீப்பாயில் செய்தித்தாள் ஒன்று கிடந்தது. அதை இயல்பாக அவன் வாசித்தபடி இருக்க வேண்டும். இப்போது கதாநாயகி ஈரப்பாவாடையுடன் தன்னறைக்கு ஓடவேண்டும். குளியல் அறையில் இருந்து ஹால் வழியாக சினிமாவில்தான் ஓடுவார்கள்…
நடிகன் டீப்பாயில் கிடந்த பழைய செய்தித்தாளை தற்செயலாகப் பிரித்து பார்த்தான். அவனையும் அந்த நடிகையையும் பற்றிய கிசுகிசு வந்த பக்கமே அவன் கண்ணில் பட்டது. சட்டென்று அதை மூடினான். “இத்தனை பழைய பேப்பராவா வெப்பீங்க. இன்னிக்குப் பேப்பர வைக்கக் கூடாதா?” என்றான் அவன். காட்சியில் எந்த நாளத்திய பேப்பர் என்று தெரியாது என்கிற அலட்சியம் எல்லாருக்கும்.
இன்னிக்கு இவளுக்குக் குளிக்கிற காட்சி. வீட்டில் குளித்துவிட்டு வந்தாளா தெரியவில்லை. அவள் ஆளே கருப்பு. முகம் தாண்டி உடம்பில் கை கால் தொடைகளில் எல்லாம் அவளுக்கு சிவப்பு ஏற்றிக் கொண்டிருந்தார்கள். எதுவரை பவுடர் ஏற்றுகிறார்களோ அதுவரை கேமெராவில் அவள் உடம்பு காட்டப்படும்… அந்தப் பக்கம் திரும்பக் கூடாது என்று சிரமப்பட்டான் அவன். இருந்தாலும் அவனால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் சொன்னான்.
“டைரக்டர் சார்… இப்ப அவங்க… அதாவது நான் ஹால்ல சோபாவுல உட்கார்ந்திருக்கேன். அப்ப அவங்க குளிச்சிட்டு ரைட் டு லெஃப்ட் வராங்க… இல்லியா?”
“எஸ் எஸ்” என்றான் இயக்குனன்.
“அதைக் கொஞ்சம் மாத்தி, நான் லெஃப்ட் டு ரைட் வரேன். அப்ப அவங்க ரைட் டு லெஃப்ட் என்ட்ரி… டமார்னு ஒரு மோதல்… எப்பிடி இருக்கும்?”
நல்லா இருக்கும், அதாவது உனக்கு!
இயக்குனனுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை. ஏற்கனவே இப்பிடி ஆளுக்குஆள் கதையை மாற்றி அது மகா கந்தலாகி விட்டிருக்கிறது. போன படம் வேறு அவனுக்கு சரியாகப் போகவில்லை. ஆனால் இந்த நடிகன், இவனது போன படம் வெற்றி. சூப்பர் ஹிட். ஆகவே நாயகியை இவன் இப்படி ஹிட் செய்தாலும் தப்பு இல்லை தான்.
“நீங்க சொல்ற மாதிரியே வெச்சிக்கலாம் சார்” என்றான் அவன்.
சினிமாவுக்குக் கதை சொல்லப் போனால் இதான் நிலைமை. காந்தி கண்ணாடி என்கிட்ட இருக்கு, என்றானாம் ஒருத்தன். இதுவா? இதைப் பாத்தா அப்பிடித் தெரியல்லியே, என்றான் மற்றவன். இதுதான் அது. முதல்ல பிரேமை மாத்தினேன், அப்பறம் வில்லையை மாத்தினேன்… என்று பதில் சொன்னான் முதல் ஆள்.
சில சமயம் படப்பிடிப்பு ராத்திரி கூட நீளும். அதற்கு எல்லாருக்கும் சம்பளம் அதிகம். தயாரிப்பாளர் பகலில் சொன்னநேரத்தில் படப்பிடிப்பை முடிக்கத் துடிப்பார். தலைக்குத் தலை பேட்டா எகிறும் இப்போது. அடுத்தநாள் காலையில், வேறு இடத்தில் இதே படத்தின் படப்பிடிப்பு இருக்கும். இன்றைக்கு எப்ப முடிந்து நாளைக்கு திரும்ப ஏழு மணிக்கு எல்லாரையும் கூட்ட வேண்டும்… புரொடக்சன் பார்க்கிறவர்கள் திகைப்பார்கள்.
“சார் ஒரு லிஃப்ட் காட்சி எடுக்கணும் சார்…” என்றான் இயக்குனன். “நாயகன் ஓடி வருகிறான். அவன் வந்து ஏறுமுன் லிஃப்ட் கதவு மூடி மேலே போக ஆரம்பித்துவிடுகிறது…” இரண்டு தெர்மோகோல் அட்டைகளைக் கருப்புக் காகிதம் சுற்றி கேமெராவுக்கு ரெண்டு பக்கமுமாக வைத்தான் ஒளிப்பதிவாளன். நடிகன் ஓடிவர கருப்பு தெர்மோகோல் அட்டைகள் மெல்ல அருகருகே நகர்ந்து காமெராவின் ஒளிப்பாதையை மூடின. லிஃப்ட் மூடுகிறாப்போல படத்தில் இது காட்டப்படும்.
அதைவிட வேடிக்கை. ரயில் இல்மலேயே ரயில் காட்சி எடுக்கிறார்கள். சினிமா காமெராவின் தண்டவாளத்தைக் காட்டுவார்கள். ஒரு புதரைக்காட்டி அதில் வெளிச்சம் இருட்டு என மாறி மாறிக் காட்டுவார்கள். திரையில் இந்தக்காட்சிகள் வருகையில் பின்னணியில் ரயில் சத்தம் தருவார்கள். அதுபோதும். பார்க்க ரயில் போகிறாப் போலவே தெரியும். மாடு இல்லாமலேயே பால் கறக்கத் தெரிந்தவர்கள் சினிமாக்காரர்கள்…
வீட்டைப் பராமரிக்கிற காசிக்கு இது இருபத்திநாலு மணி நேர வேலையாக இருந்தது. முதல் குழு இரவு பதினோரு மணிக்குக் காலிபண்ணிப் போனால் மறு குழு மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் வந்து இறங்கிவிடும். அதற்குள் வேலையாட்களை வைத்து வீட்டைச் சுத்தம் பண்ணித் தயாராக்க வேண்டும். உதவிக்கு என்று நாலைந்து வேலையாட்கள் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக் வேலை மராமத்துக்கு என்று ஒருத்தன் மற்றும் வாசல் செக்யூரிட்டி என இருந்தார்கள். இவர்களுக்கு வருடம் 365 நாளில் ஒருநாளும் ஓய்வு கிடையாது. ஞாயிறுகளில் கூட படப்பிடிப்பு நடந்தது. சினிமா என்றோ தொலைக்காட்சித் தொடர் என்றோ இருந்துகொண்டே இருக்கும்.
காசி ஓய்வுக்கு ஏங்கினான். தன் அலுவலக அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது தான் திடீரென்று ஒரு ‘சேதி ரிப்பன்’ ஓடியது. ஃப்ளாஷ் நியூஸ். வேறு ஊரில் படப்பிடிப்பின் போது விபத்து. நடிகன் ஒருவன் இறந்து போனான். எல்லா சானல்களும் பரபரத்தன. தொலைக்காட்சி செய்திகளில் மாற்றி மாற்றி விபத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். “நாளைக்கு படப்பிடிப்பு இருக்காது சித்து” என்றான் காசி. செக்யூரிட்டி அவனைப் பார்த்துச் சிரித்தான். அதில் மகா ஆசுவாசம் இருந்தது. “நாளைக்கு என்ன பண்ணப் போறே சித்து?” என்று கேட்டான் இவன். “படுத்து நிம்மதியாத் தூங்கணும்…“ என்றான் செக்யூரிரட்டி. இருவரும் சிரித்தார்கள்.
செய்தி வந்ததும் மாலை ஆறு மணிக்கே பங்களாவில் பேக் அப் சொல்லி விட்டார்கள். எல்லாரும் சின்னதாய் கருப்புப் பட்டை குத்திக்கொண்டார்கள்.
“நானும் தூங்கணும். காலைல லேட்டா எழுந்துக்கலாம்” என்றபடி காசி போய் தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்தான். ஜெனரேட்டர் உருமலை நிறுத்தியதில் மொத்தத் தெருவுக்குமே அமைதி சூழ்ந்தது.
*

91 97899 87842 chennai india

Comments

Popular posts from this blog