NAVINA VIRUTCHAM 100TH ISSUE SHORT STORY

மு து வே னி ல்
எஸ். சங்கரநாராயணன்
 ஸ்ரீநிதிதான் அவன்மேல் ஆசைப்பட்டாள். ராஜாராமனுக்கு காதல் ஒரு விநோதமான அனுபவமாய் இருந்தது. அவள் திடீரென்று அவனிடம் இப்படிப் பேசுவாள் என அவன் எதிர்பார்க்கவே இல்லை. (ஒருவேளை அவள் இப்படிச்சொல்ல அவன் அடிமனசில் ஆசைப்பட்டும் இருக்கலாம்.) அவனும் ஸ்ரீநிதியும் பக்கத்துப் பக்கத்து அலுவலகங்களில வேலை பார்க்கிறார்கள். பத்துபதினைந்து அலுவலகங்கள் இயங்கும் பெரியவளாகம் அது. மதியநேரம் சிலசமயம் சாப்பாடு எடுத்து வரவில்லை என்றால் அவன் கேன்ட்டீன் போக நேர்ந்தால் அவளை அகஸ்மாத்தாக சந்திப்பது உண்டு. வாய்வலிக்கிற அளவு எப்பவும் ஸ்ரீநிதி சிரித்துக்கொண்டே இருந்தாள். மாலை மூணரைமணி வாக்கில் தேநீர்நேரம் என்று அவன் கான்ட்டீன் வந்தால் தவறாமல் அவளும் வருவாள். அவள்அலுவலகத்தில் இருந்து சன்னல்வழியாக கான்ட்டீன் தெரிந்தது. அவனை அவள் பார்த்துவிட்டு தற்செயல்போல வருகிறாள் என்று பிறகு தெரிந்துகொண்டபோது வேடிக்கையாய் இருந்தது. பிறகு அவனே கான்ட்டீன் சன்னல்பக்கம் வந்து நின்றபடி மேலேபார்க்க ஆரம்பித்தான். தன் செயலையிட்டு அவனுக்கே சிறிது வெட்கமாகவும் இருந்தது. ராஜாராமன் ஒழுக்கமான பையன். அப்பா அம்மாவுக்கு அடங்கிய பிள்ளை. அவனா இப்படியெல்லாம் செய்கிறான்? நண்பரகள் யாரும் கேள்விப்பட்டால் நம்பக்கூட மாட்டார்கள். அவனே தன்னை நம்பாத கணங்கள் அவை!
பெரிய இடத்துப் பெண் அவள். ஸ்ரீநிதி. அவளது பக்டடான உடைகளே கண்ணைத் திகட்டியது. நகப்பூச்சு பளீரென்று இருக்கும். கண்ணில் மைதீட்டாமல் வரமாட்டாள். ஸ்ரீநிதி அழகுதான். என்று நினைத்துக்கொண்டான். அழகான பெண்கள், தாங்கள் அழகாய் இருக்கிறோம், என்பதைத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். அதை இன்னுமாய் எப்படி அழகுபடுத்திக் கொள்ளவேண்டும் என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. தனக்கு ரொம்பத் தெரிந்தாப்போல இப்படியெல்லாம் அவன் யோசிக்க ஆரம்பித்திருந்தான், சிறிது வெட்கத்துடன்.
தன் கல்யாணம்பற்றி அவனுக்குப் பெரிதாய் யோசனை இல்லாதிருந்தது, அதுவரை. சி.ஏ. படித்துக்கொண்டிருந்தான். வேறு யோசனை பெரியதாய் இல்லை. இன்ட்டர் தாண்டியிருந்தான். அலுவலகநேரம் தவிர கோச்சிங்கிளாஸ் போக வேண்டியிருந்தது. மும்முரமாய்த் தன்னைத் தயாரித்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஒருவேளை அந்தப் பரபரப்பும் மனக் கசகசப்பும் தான் சிறு ஆசுவாசம் வேண்டி சன்னல்வழியே மேலேபார்க்கத் தூண்டியேதா. முதலில் அவள்தான் அவனைக் கண்ணால் பின்தொடர ஆரம்பித்தாள். பிறகு அவனும்… என்பது தான் விஷயம். நல்ல சிவந்த பிள்ளை. இயல்பான அமைதி. அதிகம்பேசாத நிதானம். மழுமழுவென்று ஷேவ் எடுத்த கன்னத்துப் பச்சை தனி மெருகு. சிவத்த உடலில் கைகாலில் முளைத்திருந்த சிறு உரோமங்களே தனி எடுப்பாய் பளபளவென்று இருந்தன. தலைக்குத் தேய்த்துவிட்டு மிச்ச எண்ணெயை கைகால்களில் தடவிக் கொள்ளும் பழக்கம் இருக்கிறதோ என்னவோ? பளீரென்ற வெண்பல் வரிசை. அந்த உதடுகளின் சிவப்பான சிவப்பு ஆளைக் கிறங்க வைத்தது… எல்லாம் பின்னொரு நாளில் அவள் அவனிடம் சொன்னாள், சிறு நாணத்துடன்.
அவள் அலுவலகத்தில் நிறையப் பெண்கள். ஒரே கலகலப்பாய் இருந்தது அவர்கள் அலவலகம். ஒரு பெண் என்றால் அமைதி. கூட இன்னும் ஒரேஒரு பெண் என்றாலும் வெடிச்சிரிப்பு  சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். காரணமே கிடையாது. ஒருத்தி காதில் புது ரிங் ஒன்று மாட்டி வந்திருந்தாள், அவள் உள்ளேநுழையும் போதே ஹுவென்று கொக்கரிப்பு. புதுப்புடவை எவளாவது கட்டிவந்தால் நியூ பின்ச் என்று அவளை ஆளுக்காள் கிள்ளியெடுத்து விடுகிறார்கள்… சளசளவென்று பேசிக்கொணடே யிருந்தாள் ஸ்ரீநிதி. உலகம் இத்தனை உற்சாகமானதாகவும் பரபரப்பானதாகவும் அவன் உணர்ந்ததே இல்லை.
ஒரு சினிமா காம்ப்ளெக்சில் ஸ்ரீநிதி தோழி ஒருத்தியுடன் எதோ திரைப்படத்துக்கு வந்திருந்தாள். ராஜாராமனும் போயிருந்தான். சட்டென அவள் திரும்பினாள். அவள்கையில் காபி கோப்பை. அவன் அவளைப் பார்த்தான். அவன்கையில் காபி கோப்பை. நேருக்குநேர் பார்க்க நேர்ந்தது. “ஹலோ” என்றாள் அவள். சற்று தயங்கி அவன் புன்னகைத்தான். “டீ நான் சொல்லல்லே?” என்று தன் தோழியிடம் திரும்பினாள். “ஹு” என்று அவள் ஒரு சத்தங் கொடுத்தாள். “சனியனே… இது தியேட்டர்!” என்று அவளை அடக்கினாள் ஸ்ரீநிதி. “இது சரியான இடமா, இது சரியான நேரமா தெரியாது… ஆனால் இதைவிட வேறு சந்தர்ப்பம் கிடைக்குமா தெரியல்ல” என்றாள் ஸ்ரீநிதி. சிறிது வெட்கப்பட்டு நிறுத்தினாள். “ஏண்டி உன்னை லவ் பண்ண அவருக்குக் கசக்குதா?” என்றாள் அந்தத் தோழி.
தன் காதுகளையே நம்ப முடியாத தருணங்கள். “இந்தப் பெண்கள்… படித்தார்கள். வேலைக்கு வந்தார்கள். பிறகு முற்றுமாக தாங்கள் சுதந்திரப்பட்டு விட்டாப்போல, எல்லா வாசல்களையும் திறந்துவிட்டு விடுகிறாப்போல இயங்க ஆரம்பிக்கிறார்கள்… என்று அவனுக்குத் திகைப்பாய் இருந்தது. எவ்வளவு மமதை இவளுக்கு. இவள் ஒருவனைக் காதலிப்பதாய்ச் சொல்லிவிட்டால் உடனே அவன் கிறங்கி பின்னேயே வாயைப் பிளந்துகொண்டு வந்துவிடுவான், என என்னவோர் தினவு… ஆனால் அவன்? அவனுக்கு அது பிடித்துத்தானே இருந்தது. இளமையை ஊற்று போல சோடாநுரை போல பொங்கி வழியவிடுகிறார்கள் இவர்கள், என்று இருந்தது. அந்தத் தோழியை அடக்கவேண்டும் என்பதே அவனுக்கு முதல்யோசனை. “இவ யார் இடைஞ்சலா?” என்றான சிரித்தபடி. அந்தத் தோழியின் முகம் மாறியது. “சாரி. ஜஸ்ட் கிடிங்” என்றான். தானே அறியாமல், தான் அந்தக்காதலை அங்கீகாரம் பண்ணிவிட்டது குறித்து அவனுக்கு வெட்கம் ஏற்பட்டது. மண்கோபுரத்தில் மோதியிருந்தது காதல் அலை.
வாழ்க்கை ஆனால் வேடிக்கையான ஒன்றா? வேடிக்கைதான் வாழ்க்கையா? அவள்கூட இருக்கிற அந்தநேரங்கள் தவிர உலகம் வேறுமாதிரியாக இருந்தது. சி.ஏ. பாடங்கள் தொடர்ந்து அவன் வாசிக்க அசைபோட நிறைய இருந்தன. எங்காவது தனியார் கம்பெனி ஆடிட்டுகளுக்கு என்று பயிற்சிக்காகப் போய்வர வேண்டியிருந்தது. ஆடிட்டரே அனுப்பினார். அதில் புதிதாய் எதையாவது கற்றுக்கொண்டு அல்லது கண்டுபிடித்து தன் பாஸிடம் பேர்வாங்க ஆசைப்பட்டான். அவர்கள் மேசையில் வைத்திருக்கும் ஃபைல்களில் கடைசியில் இருந்து அவன் சரிபார்க்க ஆரம்பித்தான்!
அவளைப் பிரிந்திருந்த கணங்கள் துயரமானவை. வேலை செய்துகொண்டிருக்கும் போதே அவளிடம் இருந்து ஒருநாளைக்கு நாலு தடவையாவது அலைபேசி அழைப்பு வந்தது. சாப்ட்டீங்களா? என்ன பண்ணிட்டிருக்கீங்க? அது அவனுக்குப் பிடிக்காமலும் இல்லை. இன்னிக்கு நான் என்னகலர் டிரஸ் பண்ணிட்டிருக்கேன் சொல்லுங்க பாப்பம்?... என அவசியமான கேள்விகள் கேட்டாள். “நீங்கஇல்லாமல் நீங்கபார்க்காமல் எனக்கு டிரஸ் பண்ணிக்கவே பிடிக்கல,” என்றாள் தாபமாய். அவனும் ஒரு உலுக்கலில் “என்கூட நீ இருக்கறச்ச டிரஸ் எதுக்குடி உனக்கு?” என உளற, அவளது செல்ல ச்சீ…. என்னடா நடக்குது இங்கே? அவனுக்கே தலைக் கிறுகிறுப்பாய் இருந்தது. அதுஅப்படியே வேகம்பெற்று ஒரு ஹோட்டல் தனியறையில் அவளுக்கு அவன், தைரியமாய் அவளை அருகே இழுத்தணைத்து ஒரு அழுத்தமான முத்தங் கொடுத்தான். “இதுக்கு இத்தனைநாள் எடுத்துக்கிட்டியேடா?” என்று உதட்டைத் துடைத்துக்கொண்டு சிரித்தாள் நிதி.
வயசான அப்பா அம்மா. ஒரு அக்காவுக்குக் கல்யாணம் பண்ணி அதில் கொஞ்சம் கடன் இருந்தது. அவன் மாதாமாதம் அடைத்துக் கொண்டிருந்தான். அவள் பிரசவம் என்று வந்தபோது அவன் வேலைக்கு வந்திருந்தான். குடும்பப் பொறுப்புகள் அறிந்தவன், என ராஜாராமனையிட்டு அவர்களுக்குப் பெருமை. கோவில் பிராகாரத்தில் உட்கார்ந்து எழும்போதும், கல்யாணம் கார்த்திகை என்று பெண்கள் கூடும் வைபவங்களிலும் அம்மா செண்பகவல்லியின் கொடி பறந்தது. அப்பா தினசரி காலை வாசலில் உட்கார்ந்து செய்தித்தாள் (வெளிக்காற்றுக்கு அது லேசாய் மடிய ஒரு உதறு உதறி சரிசெய்வார்.) வாசிப்பதில் ஒரு நிமிர்வு இருந்தது. பிள்ளைகளை அவர் அருமையாக வளர்த்திருக்கிற பெருமிதம் அது.
ராஜாராமனின் நடவடிக்கை வாடிக்கையாக இல்லை. சிறு மாற்றங்கள் இருப்பதை முதலில் கண்டுகொண்டது அம்மாதான். அவன் வீட்டில் இருக்கும்போதே அடிக்கடி அவனுக்கு அலைபேசி அழைப்புகள் வந்தன. அதில் எண்ணைப் பார்த்ததும் அவன் முகம் பிரகாசம் அடைவதைப் பார்த்தாள் அம்மா. ஆனால் அதுகுறித்து கலவரப்பட ஒண்ணும் இல்லை. சின்னப்பிள்ளை அது. அவன் வயசு அப்படி. அதை ரொம்ப நாம கண்டுக்கக் கூடாது. இப்பவே அவனுக்கு பெண்தர நிறைய இடங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. “என்ன செண்பகம், நீ பிடி குடுக்க மாட்டேங்கறியே? எங்க சொந்தத்துலயே எத்தனையோ நல்ல நல்ல வரன் இருக்கு” என்று அவளிடம் சொல்கிறவர்களை, “எனக்கும் ஆசைதாண்டி இவளே, இவன்தான் சி.ஏ. முடிக்கணும்னு மும்முரமா இருக்கான். அதற்கப்புறமாப் பாக்கலாம் கல்யாணம்ன்றான்… அதுவும் சரியாத்தான் இருக்கு” என்று பதில் சொன்னாள். அதிலும் அந்தப் பெருமிதம் இருந்தது.
அப்பாதான் விசாரித்தார் அவனிடம். ரொம்பப் பெரிய இடமாய் இருந்தது. அதுவும் அந்தப்பெண் வெடுக் வெடுக்கென்று எல்லாத்தையும் போட்டேன் உடைத்தேன் என்று பேசியது அவருக்கு ரசிக்கவில்லை. மாமனார் மாமியார் என்கிற ஒட்டுதலோ மரியாதையோ அவளிடம் இருந்ததா என்பதே சந்தேகமாய் இருந்தது. அவன் வேலைமுடிந்து வீட்டுக்குவந்து முகம் கைகால்கூட கழுவிக் கொண்டிருக்க மாட்டான். அலைபேசியில் கூப்பிட்டு விடுகிறாள். ஓயாத சளசளப்பு. அவன் ஒரு வார்த்தை பேசுமுன் ஒன்பது வார்த்தை அவள் மேகமாய்க் கொட்டித் தீர்க்கிறாள். அவள்அப்பா வங்கியில் தலைமையதிகாரியாக ஓய்வு பெற்றவர். அம்மாகூட எதோ வங்கியில் அதிகாரியாக இப்பவும் இருக்கிறாள். பெசன்ட் நகரில் பெரிய பங்களா. வேலைக்காரர்கள் எடுபிடிகள் இருக்கிறார்கள். துரும்பைக்கூட நகர்த்தாமல் வாழ்ந்தார்கள் எல்லாரும். கார் இருக்கிறது. தினசரி ஸ்ரீநிதி ட்டூவீலரில் அலுவலகம் வருகிறாள். ராஜாராமன் பஸ் தான். அவசியம் என்றால் தான் ஷேர்ஆட்டோ. செலவுதான். அவசரத்துக்குப் பரவாயில்லை. அப்பா விநாயகமூர்த்திக்கு யோசனையாய் இருந்தது. இது… சரியா வருமா?
“அவளுக்கு நம்ம குடும்பம் பத்தித தெரியும் அப்பா. நான் சொல்லிட்டேன்” என்றான் புன்னகையுடன். தன்வீட்டைப் பற்றிப் பேச்செடுத்தாலே அவள் அதிக அக்கறை காட்டவில்லை, என்று நினைக்க உள்ளே வருத்தமாய் இருந்தது அவனுக்கு. “வீட்ல எங்க அப்பாஅம்மா கூட இருக்காங்க. நீ விடாமல் ஃபோன்ல பேசித் தள்ளுறே. அவங்க என்ன நெனைச்சிப்பாங்க நிதி?” என்று ஒருமுறை தயக்கத்துடன் கேட்டான். “அதுங்களுக்கு என்ன, கிழடு கட்டைங்க… காதலைக் கண்டாங்களா, கருமாதியைக் கண்டாங்களா?” என்றவள், “சாரி, ஒரு ஃப்ளோல வந்திட்டது…” என்றாள். “உங்ககூட நான பேசறதுக்குக் கூட அவங்ககிட்ட அனுமதி கேட்கணுமா என்ன? நல்லாருக்கே, நீங்க பேசறது எனக்கு விளங்கல்ல… உங்களுக்கே இது நியாயம்னு படுதா? இது எந்தக் காலம்? இன்னுமா அவங்க… அவங்களை விடுங்க, நீங்களும் இன்னுமா அப்படியே இருக்கீங்க?” விடாமல், அவனைப் பேசவிடாமல் பேசினாள் அவள்.
“உங்களைப்பத்தி நல்ல அபிப்ராயம் வெச்சிருக்கா அப்பா அவ. அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரியா வரும்” என்றான சிரித்தபடி. இதைச் சொல்ல கொஞ்சம் பதட்டமாய்த் தான் இருந்தது. ஒரு சிக்கலை அவிழ்க்க முடியாமல் முயற்சிசெய்து அதன்உள்ளேயே சிக்கிக் கொள்வதைப் போல இருந்தது அவனைப் பார்க்க. விநாயகமூர்த்தி தலையாட்டினார். ஒரு பெருமூச்சு விட்டார். “செண்பகம்… நம்மபிள்ளை யாரையும் அதிரடியாப்பேசி எதுத்துப்பேசி வளரல. இந்தமாதிரி ஆமபளைங்களை இந்தப் பெண்கள் சட்னு பிடிச்சிக்கறாங்க…” என்றவர் தன்னைச் சமாளித்துக் கொண்டு “நீ என்னைப் பிடிச்சிக்கலையா?” என்றார் சிறு சிரிப்போடு. என்றாலும் அந்தச் சிரிப்பில் வேடிக்கையம்சம் இல்லை. “பிடி சிக்கலை” என்றாள் செண்பகவல்லி. அவளுக்கும் சிரிப்பு வரவில்லை.
ஒருநாள் அவள் அவனை அழைத்துப்போய் நல்ல உடைகள் வாங்கித்தந்தாள். “ஏன் இதுக்கென்ன?” என்று தன் உடையைக் காட்டினான் ராஜாராமன். “இதுக்கென்ன?” என்று அவள் தன்கையில் இருந்ததைக் காட்டினாள். “நல்லாதான் இருக்கு” என்றான். “அப்ப எடுத்துக்கோங்க. உள்ளேபோய் போட்டுப் பாக்கணும்னா பாத்துட்டுவாங்க.” அவன் புது பேன்ட்டை அணிந்துகொண்டு உடைமாற்றும் அறையில்இருந்து வெளியேவந்தான். கண்ணாடியில் பார்த்தால் நன்றாகத்தான் இருந்தான். விலை அதிகம்தான். அவள் பில்போடச் சொல்லி தன் கார்டை நீட்டினாள். “அந்தந்த வயசில் அனுபவிக்க வேண்டியதை அனுபவிச்சிறணும்” என்றாள் ஸ்ரீநிதி. அவளது பிறந்தநாள் என்று அவளுக்கு அவன் தங்கநிற வாட்ச் ஒன்று பரிசளித்து, அவன் வாழ்நாளிலேயே அதிகமான செலவு அது, அப்படியே ஒரு ஹோட்டலில் அவளுக்கு விருந்தும் அளித்தான். சம்பளத்தில் குறையும். அது பெற்றவர்களுக்குத் தெரியும். சமாளிக்க வேண்டும்.
காதல் மகா வேகமாய் அவர்களை இயக்கியது. என்ன இவள் இவ்வளவு வாசனையாய் இருக்கிறாள்!… எங்காவது தனிமை கிடைக்காதா, அந்தரங்கமான பொழுதுகள் அமையாதா, என ஒரு தாகம் வாட்டியெடுத்தது அவர்களை. அவளே அவனை இறுக்கி ஒருமுத்தம் தந்துவிட்டு “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா” என்றாள் தாபமாய். அவனுக்கு ஒரு பெரும்பாரம் தன்மீது கவிவதை உணர முடிந்தது. எல்லா ஆண்களுக்கும் இப்படி பாரம்ஏற்கிற காலம் என்று இருக்கிறது. நம் பண்பாட்டு அமைப்பில் ஆண் என்பவன் குடும்பத்தலைவன். அவனது கட்டளைகளுக்குப் பெண் காத்திருந்து அவன்பின்னால் வருகிறவளாக இருக்கிறாள்…
அப்பா அம்மாவிடம் கல்யாணம் பற்றிப் பேச்செடுத்தான். “ராஜா, நீ பெரிய பிள்ளைதான். உனக்குத் தெரியாதுன்னு நாங்க பேச வர்ல்ல. ஆனால் காதல்ன்றது ரொம்ப வேகமா மனுசாளைச் சரிச்சிப் போட்டுரும்…” என்று செண்பகவல்லி ஆரம்பித்தாள். “உம்பிள்ளை ஏற்கனவே சரிஞ்சாச்சி. இனி பேசிப் பிரயோசனம் இல்லடி” என்றார் விநாயகமூர்த்தி. “சரி. இப்ப என்ன? கல்யாணம் பண்ணிக்கிட்டு… நீ அந்தப் பொண்ணோட இங்கவந்து தங்கமுடியுமா? இந்தவீடு வசதிபத்துமா அவளுக்கு?” என்றார் அப்பா நேரடியாக. அவனுக்குத் திகைப்பாய் இருந்தது. கலயாணம் ஆகவேண்டும், என்பதுதாண்டி அதற்கு அடுத்தநாள் பற்றியேகூட தான் யோசிக்கவில்லை, என்று தன்மீதே திகைப்பாய் இருந்தது அவனுக்கு. காதலின் கிறுகிறுப்பு படுத்தும் பாடு அது. “இங்கதான் இருக்கணும்” என்று தயங்கி சிரித்தான். “நாங்க வேற எங்க போவோம் அப்பா?”
“அதெல்லாம் அவகிட்ட தெளிவாப பேசினியா?” என்று கேட்டார் அப்பா. “இதுல அவசொல்ல என்ன இருக்கு, எனக்குப் புரியல” என்றான் ராஜாராமன். “உனக்குப் புரியல, அதான் நாங்களும் சொல்றோம்…” என்றாள் அம்மா. அப்பறம் மேலே யாரும் எதுவும் பேசவில்லை. அவன் பேசஆரம்பித்தாலே அப்பாவும் அம்மாவும் மடக்குகிற மாதிரியே மேலடி அடிப்பதாக இருந்தது அவனுக்கு. ஒருவேளை அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஏன் இவர்களும்தான், எனக்குக் கல்யாணம் என்கிற அளவில் சிறிது நெகிழ்ந்துகொடுக்கலாமே, ஏன் கூடாது… என நினைத்தான். லேசாய் முதன்முறையாய் தனக்கு ஒரு சுயநலமான ஆவேசம் வருவதையும் அவன் கவனித்தான். “நாங்க எங்கவாழ்க்கை பூராவுமே பிள்ளைகளுக்காக வாழ்ந்தவங்கடா” என்பதுபோல அவர்கள் ஆரம்பிக்கலாம். எப்பபாத்தாலும் அவங்களைப் போல ஆமையாய் ஆசையை உள்ளிழுத்துக்கொண்டே வாழ், என்ன அறிவுரை இது..
அவ என்னடான்னா, “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா” என்கிறாள். “ஹனிமூன் நைனிடால். கல்யாண நாள் குறிச்சிட்டால், ஃப்ளைட் டிக்கெட் போட்டுறலாம்” என்கிறாள். ஷேர்ஆட்டோவில் ஏற யோசிக்கிறவன் அவன். என்றாலும் இந்த அதித வீக்கம்… கொஞ்சம் பயமாயும், பரபரப்பாயும் பிரமிப்பாயும் இருந்தது அவனுக்கு. எதாவது சொன்னால், “அந்தந்த வயசுல அததை அனுபவிக்க வேண்டாமா?” என்று அவனையே கேட்கிறாள். “உங்க அம்மா அப்பான்னு ஆரம்பிக்க வேணாம். அவங்களுக்கு ஹனிமூன்னா என்னன்னே தெரியாது” என்கிறாள் சிரிப்புடன். தன் அப்பா அம்மாவை அவள் மட்டந்தட்டியே எப்பவும் பேசுகிறாள். பணம் இல்லாவிட்டாலும் எத்தனை சிக்கனமாய் குழந்தைகள்மேல் அக்கறையாய் அவர்கள் இழுத்துப்பிடித்து என்னையும் அக்காவையும் கொண்டுவந்தார்கள், இவள் அறியமாட்டாள். தியாகம் போன்ற வார்த்தைகளுக்கு இவளுக்கு அர்த்தமே கிடையாது. “என்ன யோசிக்கறீங்க?” என்று கேட்டாள் ஸ்ரீநிதி. “ஒண்ணில்ல” என்றான். “உங்க அப்பா அம்மா… எனக்குப் புரியுதுங்க” என்றாள். “அவங்க வாழ்க்கைவசதிப்படி அவங்க நடந்துக்கிட்டாங்க. உங்களை வளர்த்தாங்க. நாங்க வேறமாதிரி வசதியமைப்புல இருந்து வேறமாதிரி வளர்றோம். இதுல என்ன குழம்பிக்க இருக்கு?” என்றாள். “அப்ப கஷ்டப்பட்டோம்னு இப்பபேசி என்ன பண்ண? இப்ப நாம வசதியா வாழக்கூடாதாமா? இது என்ன நியாயம்? சொல்லுங்க” என்றாள். அவளுக்கு என்ன பதில்சொல்ல என்றே திகைப்பாய் இருந்தது.
ராஜாராமன் சி.ஏ. தேறினான். அதில் ஸ்ரீநிதியின் பெற்றோர்களுக்கு ரொம்ப சந்தோஷம். “எங்க நிதியும் அண்ணா யுனிவர்சிடில கோல்ட் மெடலிஸ்ட்” என்றார்கள் பெருமையுடன். “தெரியும்” என்றான் அவனும் சிரிப்புடன். சி.ஏ. தேறும்வரை கல்யாணம்பற்றியும், அவளது பெற்றோர்களைப் பார்ப்பதுபற்றியும் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்திருந்தான். அவன் அவர்களைப் பார்க்கப் போயிருந்தபோது அழகாய் பட்டுப்புடவை உடுத்தி காத்திருந்தாள் ஸ்ரீநிதி. கொள்ளை அழகாய் கல்யாணப்பெண்ணாய் இருந்தாள் அவள். இத்தனை அதிர்ஷ்டக்காரனா நான் என்று திகைப்பாய் இருந்தது. சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு வாஷ்பேசினில் கைகழுவப் போனபோது கூடவே வந்தாள். நறுக்கென்று அவளை இடுப்பில் ஆசைதீரக் கிள்ளினான். நியூ பின்ச்… என்றான். அட நாயே, அப்பா அம்மா இருக்காங்க. இல்லாட்டி இங்க ரகளையே நடந்திருக்கும்… என்றாள் அவள் அடக்கத்துடன்.
முதல்பார்வையிலேயே அவர்களுக்கு அவனைப் பிடித்திருந்தது. இவளுக்கு அனுசரித்துப்போக அவன் சரியான தேர்வுதான். ஸ்ரீநிதி புத்திசாலிதான், என அவர்கள் நினைத்திருக்கலாம். அவளது அப்பா பஞ்சாபகேசன் (பஞ்சாப் நேஷனல் பேங்க்) வந்து பிரியமாய்க் கைகுலுக்கியபோது சற்று முன்குனிந்து பணிவைக் காட்டிக்கொண்டான். அவரேசொல்லி நல்ல கம்பெனி ஒன்றில் அவனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. விநாயகமூர்த்திக்கும் அதில் சந்தோஷம்தான். “சரி. உனக்கு நல்லகாலம் ஆரம்பிச்சாச்சி போலடா” என்று மனசாரச் சொன்னார். பெரியவர்கள் சந்தித்துப் பேச கல்யாண ஏற்பாடுகள் செய்வதில் முனைந்தார்கள். செண்பகவல்லிக்கு கோயில் பிரகாரத்தில் தோழிகளுடன் பேச விஷயம் இருந்தது.
ஸ்ரீநிதி அவனை அழைத்துப்போய் ஒரு வீட்டைக் காட்டினாள். ராஜாராமனும் அவன் அப்பாஅம்மாவும், எப்பவாவது வந்தால் அக்காவும், இருந்த வீட்டைவிட அது பெரியது. அவர்கள் ரெண்டு பேருக்கு மிக அதிகம். குளிரூட்டப்பட்ட படுக்கையறை. “வாடகை எவ்வளவு?” என்று கேட்டான் தயங்கி. “அதைப்பத்தி என்ன?” என்றாள் ஸ்ரீநிதி. “உங்க வீட்டுக்கு நீங்க போயிட்டு வர்றளவு கிட்டே. நானும் இப்படியே போயிட்டு வரலாம்… எப்பிடி?” என்றாள். இதை அப்பா எதிர்பார்த்திருந்தார். இவன்தான் அதெல்லாம் இல்லை, கல்யாணம் ஆனபின் அவள் நம்மோடுதான் இருப்பாள், என மேலடி அடித்தவன். அப்போதைக்கு அப்பாவை அடக்கும் வார்த்தையே அது. அது அவனுக்கும் தெரியும்… இப்போது விஷயம் அதன் முகூர்த்தத்துக்கு வந்துவிட்டது.
“வீடு…” அப்பா திரும்பினார். “என்ன வீடு?” என்றார். “வாடகைக்கு…” என்றான் தயங்கி. “ஏன் இந்த வீட்டுக்கு என்ன?” என்றார். “நாம வீடு மாத்தறமா?” என்றார். “இல்ல. நாங்க மட்டும்…” என்று சொல்லுமுன் குரல் உடைந்துவிட்டது. அப்பா பேசவில்லை. “இதைத்தானேடி நான் சொன்னேன் அன்னிக்கு இவன்கிட்ட” என்று சட்டென குரல் எடுத்தார் விநாயகமூர்த்தி. “இவன் பாத்திருக்க மாட்டான். அவதான் பாத்து இவனைக் கூட்டிப்போய்க் காட்டியிருப்பா… அப்படித்தானேடா?” என்றாள் அம்மா. அவனுக்கு என்ன செய்ய புரியவில்லை. “ஏம்மா நாங்க வசதியா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கல்லியா?” என்று சட்டென அவன் குரலை உயர்த்தினான். பிரமிப்புடன் அவனைப் பார்த்தார்கள் அவர்கள். “நீங்க சின்ன வீட்டில் அடங்கி ஒடுங்கி கஷ்டப்பட்டால் நாங்களும் அதேமாதிரிதான் வாழணும்னா எப்பிடி?” அவர்கள் ஆடிப்போனார்கள். “என்னடா அது? நாங்க அப்பிடிச் சொன்னமா?” என்றார் அப்பா. “ஏன் உனக்கு இப்படியெல்லாம் தோணுது?” என்று எழுந்து அவன்அருகில் வந்தார். அவனால் அவரை நேரேசந்திக்க முடியவில்லை. சற்று பின்னகர்ந்து தன் அறைக்குப் போய்க் கதவைச் சாத்திக்கொண்டான்.
தான் மெல்ல ஸ்ரீநிதி போலப் பேச ஆரம்பித்திருப்பதாக அவனுக்கு திடீரென்று தோன்றியது.

91 97899 87842

Comments

Popular posts from this blog