
உவகச் சிறுகதை / ஜப்பான் நன்றி - மகாகாவி ஜனவரி 2019 இதழ் ஜே யாசுனாரி கவாபாட்டா தமிழில் எஸ். சங்கரநாராயணன் வை கறைப் பொழுதில் இருந்தே ஜே உரக்கப் பாட ஆரம்பித்திருந்தது. மழைத் தடுப்பான கதவுகளை அவர்கள் ஒதுக்கித் திறந்தார்கள். பைன் மரத்தின் கீழ்க் கிளையில் இருந்து மேலெழுந்து அது பறந்ததை எல்லாரும் பார்த்தார்கள். ஆக அது திரும்பி வந்திருந்த மாதிரிதான் பட்டது. காலை உணவுவேளையின் போது அதன் சிறகடிப்பு கேட்டது. “ஐய அந்தப் பறவை ஒரு இம்சை.” தம்பி எழுந்துகொண்டபடியே சொன்னான். “சரிடா சரிடா” என அப்பத்தா அவனை அடக்கினாள். “அது தன் குஞ்சைத் தேடுதுடா. நேத்து அதன் குஞ்சு கூட்டில் இருந்து கீழ விழுந்திட்டது போல. நேத்தி அந்தி சாயறவரை அது இங்கிட்டும் அங்கிட்டுமா பறந்துக்கிட்டே யிருந்தது. குஞ்சு எங்கன்னு அது இன்னும் கண்டுபிடிக்கலையோ என்னவோ? ச். என்ன நல்ல அம்மா அது, இல்லே? காலை வெளிச்சம் வந்த ஜோரில் திரும்ப என்ன ஏதுன்னு பாக்க வந்திருக்கு.” “அப்பத்தா அழகா எல்லாம் புரிஞ்சிக்கறா” என்றாள் யோஷிகோ. அப்பத்தாவின் கண்கள் ஒண்ணும் தரமில்லை. ஒரு பத்து வருசம் முன்னாடி அவள் ‘நெஃப்ரைட்டிஸ் ஒன்’ வந்து சிரமப்...