14 12 2019 ஜெயந்தி
ஜெகதீஷின் ‘ரெஜிஸ்தர் ஆபிஸ் மசிகுண்டு’ சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டு விழாவில் வாசித்தளித்த
உரை.
ஓடிக் கொண்டிருக்கும் நதி
எஸ்.சங்கரநாராயணன்
அறிவிற் சிறந்த
இந்த அவைக்குத் தலை வணங்குகிறேன். தோழி ஜெயந்தி ஜெகதீஷ் எனக்கு ‘வாசிப்போம்’ குழுவின்
முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாளராக அறிமுகம் ஆனவர். ஓரளவு சுய சிந்தனையும், நோக்கும்
போக்கும் கொண்டவராகவே தெரிந்தது. இந்த ஆண்டின் எங்கள் ‘இருவாட்சி இலக்கியத் துறைமுகம்’
பொங்கல் மலரில் அவர், அண்ணாச்சி கி.ரா.வின் பெண் பாத்திரங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதி
யிருக்கிறார், நான் கேட்டபடி.
நல்ல கட்டுரை
அது.
பெண்கள் தங்களைப்
பற்றிப் பேச வேண்டும். பேச முன்வர வேண்டும். அவர்கள் ஆண்கள்காட்டும் பெண்களைப் பற்றியும்
பேச வேண்டும். ஆண்களின் கதைகளில் ஆண்கள் தங்களைவிட பெண்களையே அதிகம் பேசுகிறார்கள்,
உற்சாகமாக... என பல சமயம் நான் நினைப்பது உண்டு. அவை எல்லாமே ஓரளவு (வாய் பிளந்த) யூகங்கள்
தான், என்றும் யோசிப்பது உண்டு. பெண்கள் தங்களைப் பற்றி எழுத முன்வர வேண்டும்.
எழுத்தில் பெண்
எழுத்து ஆண் எழுத்து என்று உண்டா, என்றால் ஏன் இல்லாமல், என்றுதான் நான் சொல்வேன்.
உன் எழுத்துக்கும் என் எழுத்துக்குமே வித்தியாசம் உண்டு, என்றாகிற நிலையில், வெவ்வேறு
பால் எழுத்துக்கு அவசியம் ஆறு என்ன, நூறு வித்தியாசம் இருக்கிறது. இல்லாமல் அந்த எழுத்தின்
நியாயம் குறைவு பட்டதாகவே கொள்ள முடியும்.
எனது எழுத்தின்
ஆரம்ப காலங்களில் ஒரு பெண் வாசகர் சொன்னார். “உன் எழுத்தில் ஆண்வாடை அடிக்கிறது. குறைத்துக்
கொண்டால் நல்லது” என்றார். தூக்கிவாரிப் போட்டது எனக்கு. “என்னாச்சி?” என்று கேட்டேன்
கவலையாய். “மொட்டைமாடிக்குப் போய் சட்டையைக் கழற்றிவிட்டு காற்றாட உட்கார்ந்தான் -
என எழுதுகிறாய். ஒரு பெண்ணின் கதையில் ஆணைப் பற்றிய வர்ணனை கூட இப்படி அமையாது” என்றார்.
ஒரு பெண்ணின் பார்வை அது. அது முக்கியம். ஆண் பாத்திரம் அப்படி அமைவது சரிதானே, என
நான் வியாக்கியானம் பண்ண மாட்டேன்.
உலகப் பொதுவான
எழுத்து நோக்கி நகர்வது நல்ல விசயம் தான். அதற்கு தன்சார்ந்த விவரணைகளில் துலக்கம்
வந்து, பிறகு அதை மீற வேண்டி யிருக்கிறது.
அருமையான தோழி
ஜெயந்தி. மிகத் தாமதமாகவே அவர் எழுத வந்திருக்கிறார். இரண்டு கவிதைத் தொகுதிகள். பிறகு
இதோ இந்தச் சிறுகதைத் தொகுதி. ஆரம்ப எழுத்தின் அத்தனை அழகோடும், சில பலவீனங்களோடும்
அது அமைந்திருப்பது வியப்புக்குரியது அல்ல. குழந்தையின் நடையை ரசிக்க வேண்டும். அதன்
யத்தனங்கள் அத்தனையும் அழகு அல்லவா. அதன் பாவனைகள் இன்னுமான பயணத்தின் முதலடிகள் எனவே
கொள்ள முடியும் அல்லவா?
‘ரெஜிஸ்தர் ஆபிஸ்
மசிகுண்டு’ என்ற தலைப்பிலேயே மனதைப் பறி கொடுத்துவிட்டு இந்தக் கதையை தாமதமாகவே எழுதினேன்,
என்கிறார் அவர்.
தொகுப்பின் முன்னுரை
என்கிற ‘சிலம்பு சுத்தலில்’ அவர் “ரகசியங்களைப் பேச வந்தேன்,” என்று பிரகடனப் படுத்துகிறார்.
இலக்கியம் என்பதே, கலை என்பதே ரகசியத்தைப் பேசுவதுதான் ஒருவகையில். பிறர் அறியாத ஒன்று
நமக்குச் சிக்குகிறபோது அதை வெளிப்படுத்த உள்ளே மூச்சு தவிக்கிறது. கதவைத் திறக்கச்
சொல்கிற பூனைப் பிராண்டல் அது. பகிராமல் அது அமைதி பெறாது.
உண்மையில் எந்த
ரகசியமும் ரகசியம் அல்ல. அது பகிரப்படும் போது, அந்த விஷயம் பற்றி நீ அறிந்திராத அல்லது
யோசித்திராத ஒன்றை அது சொல்கிறது. கலை அப்படிப் பிறந்தது தான்.
இதை ஜெயந்தி
முதல் தொகுப்பிலேயே அறிந்து பிரகடனப் படுத்துவது நல்ல விஷயம்.
அடிப்படையில்
இவர் கவிஞராக இருக்கிறதால் கதைக்கூறுகளில் கவிதை அடையாளங்களைத் தேடுவது என்பது ஒரு
வாசகனுக்கு அடக்க முடியாத ஆர்வத்தைக் கிளறி விட்டு விடுகிறது. ஒரு பெண் எழுத்து என்கிற
ஆர்வம் போலவே இதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாசிக்கும் போது முன் அனுமானங்கள்
கூடாது, என்பார்கள். ஆனால் முன் அனுமானங்கள் தானே வாழ்க்கைக்கு அழகு கூட்டுகின்றன.
பொண்ணு பார்ப்பதை விட, பார்க்கப் போகுமுன் கற்பனைக்கு அத்தனை வேலை கொடுக்கத் தானே செய்கிறார்கள்.
கற்பனையும் நிஜமும்
ஒரு நேர்கோட்டில் தொடுகிற கணங்கள் கவிதை. அல்லது கலையின் பிறப்பிடம் அது. கனவு அல்ல
கலை. நிஜமும் அல்ல. இரண்டுக்கும் நடுவே இரண்டுமாக அமைவது கலை. அதில் இருந்து கற்பனைக்கும்
பயணிக்கலாம். நிஜத்தோடும் கை குலுக்கலாம், உங்கள் வசதிப்படி.
சிறுகதையின்
இலக்கணம் பற்றி முன்னுரையில் பேசுகிறார் ஜெயந்தி, தான் புரிந்து கொண்டபடி. அதற்கு இந்தக்
கதைகளில் மெனக்கிடவும் செய்திருக்கிறார். தனது காயங்கள் இவை, என்கிறார். இவர் என்றால்
இவருடையதாகவோ இவர் அறிந்த காயங்களாகவோ அவை இருக்கலாம்.
ஒரு கற்பனையை
உண்மையை நோக்கி நகர்த்திச் செல்வதும், ஒரு நிஜத்தை எதிர்காலம் நோக்கி அடையாளப் படுத்துவதுமாக
கலை பணி செய்கிறது. வாசகன் வாசிக்குந் தோறும் அந்தப் படைப்பில் இருந்து ஒரு சிந்தனை
அலை எழுந்து வாசகனை நனைக்கிறது. கடலை, அதன் அலையை, அதன் ஸ்பரிசத்தை இன்னும் இன்னுமாக
மீண்டும் மீண்டுமாக அது வாசக மனதில் நிகழ்த்துகிறது.
சரி. ஜெயந்தியின்
முதல் சிறுகதைத் தொகுதி என்ற அளவில், இவருக்கு இலையில் பரிமாற என நிறைய நிறைய இருப்பதை
உணர முடிகிறது நமக்கு. சொந்த வாழ்க்கை என்கிற நெருக்கடிகள் தவிர்த்து வேறு தளங்களில்
இயங்க அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது தெரிகிறது. அவரது உலகம் நான்கு சுவர்களுக்கு
வெளியே இருக்கிறதாக அவர் நம்புகிறார். அதுதான் உண்மையும் கூட. உலகம் நான்கு சுவர்களுக்குள்
ஒருபோதும் அடைபடுவது இல்லை.
சன்னலுக்கு வெளியே
வானம்.
கண்ணை விரித்து
நாலு திசையிலும் அவதானம் செய்கிறார் ஜெயந்தி. ரெஜிஸ்தர் ஆபிஸ் மசிகுண்டு அவருக்கு ஒரு
கதை சொல்கிறது.
ஒரு பேரிளம்
பெண். முதிர் கன்னி. திருமணம் திகையாமல் அவரே திகைத்து நிற்கிற பெண். அவளைப் பார்க்கிறபோது
ஒப்புவமையாக ‘கொப்பரை’ என்று ஒரு சொல் ஜெயந்திக்கு சிந்தனை அலையில் காலில் தட்டுகிறது.
அவை கவிதைக் கணங்கள். இவற்றை ஒரு கதையாக மேலதிக உணர்ச்சிப் போக்குடன் அவர் சித்திரமாக்கிப்
பார்க்கிறார். ஒரு சித்திர வரைதல் போலவே அவர் தன் கதைகளில் இயங்குவதாக நான் பார்க்கிறேன்.
கவிஞர்களின்
இயல்பு அதுவாக இருக்கலாம்.
தனுஷ்கோடியின்
அழிவு பற்றி ஒரு கதை வருகிறது. இணை பிரியாக் காதலர்கள். கடைசிவரை அவர்கள் கருத்தொருமித்து
வாழ்வதாகச் சொல்லி, இறுதியில் காதலன் தாத்தா இறந்துவிட, கூடவே பாட்டியும் மரணிக்கிறாள்.
காவிய சோகம். பாட்டிக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து விடுகிறார் ஜெயந்தி. கவிஞர்கள்
உணர்ச்சிப் பெருக்காளர்கள். அடிக்கடி அவர்கள் நதியில் ‘ஆடி பதினெட்டு’ நிகழும்.
ஆனால் ஜெயந்தியிடம்
வாழ்க்கை சார்ந்த கறாரான தராசு இருக்கிறதா, என்றால் இல்லை என்றே கணிக்கிறேன். வேண்டுமா?
தேவை இல்லை... என அவர் நினைக்க உரிமை உண்டு. ஜெயந்தி ஓடிக் கொண்டிருக்கும் நதி. வாழ்க்கை
அனுபவங்களின் கலவை. கதம்பச் சோறு அது. அது எங்கேயும் தேங்கிவிடாமல் கடைசிவரை ஓடி சமுத்திரத்தில்
கலந்து விடும். கலக்க வேண்டும், என்பது அவரது ஆசை.
அதை இந்தத் தொகுதி
தரும் செய்தியாக நாம் உணரலாம்.
உவமைகள் தெரிவில்
அதிக கவனம் ஜெயந்தி செலுத்தலாம் என்று சொல்லத் தோன்றுகிறது. உவமைகளின் பயன்பாட்டில்,
அதன் நவீனத்துவத்தில், ஒரேயொரு ஒப்புமை அம்சம் போதாது. தவிரவும் அந்த வாக்கியத்தின்
உணர்வுச் சூழலோடு பொருந்தாத உவமைகள் வாசகனை திசைதிருப்பி விடும். ஒட்டுமொத்தமாக ஒரு
உணர்வுச் சூழலை வாசகனுக்குக் கைமாற்றுவது படைப்பின் வேலை.
நிறுத்தற் குறிகளின்
பயன்பாடும் இங்கே முக்கியம். ஒரு பத்தியின் நீளம் உட்பட அநேக உத்திகள் வாசகனுக்கு உணர்வுக்
கடத்திகளாக விளங்குகின்றன. இவை படைப்புலகின் ரகசியம். ஜெயந்தி தேறி வருவார்.
கவிதை அல்ல சிறுகதை.
வேறு வடிவம் அது. உணர்ச்சிகளின் மிகை கவிதைக்கு அழகு. வீணையின் ஒரு ஸ்வர மீட்டல் கவிதை.
சிறுகதை என்பது ஒரு ராகத்தின் சாயல் என்று சொல்லத் தோன்றுகிறது. மிகையான அலங்காரக்
கற்பனைகள் கதைகளில் வாசகனுக்கு ஒரு போலியான உணர்வுக் கொந்தளிப்பைத் தந்து விடக்கூடும்.
அல்லது அப்படி போலியான உணர்வு மிகுதியைத் தான் வணிகப் பத்திரிகைக் கதைகள் பெரும் வரவேற்புடன்
தூண்டி விடுகின்றன என்கிற கருத்தையும் நினைவில் கொள்ளலாம்.
ஒரு பெண். தனது
மாதவிடாய்க் காலங்கள் ஓயும் நேரத்தில் படும் வலிகள் என்று காட்ட வருகிறார் ஜெயந்தி.
ஒரு பெண்ணாக அதை இன்னும் துலக்கிக் காட்டுவார் என கவனம் குவிகிற சமயம், கதை திடீரென்று
தன் உடம்போடு அவர் உரையாடுகிறதாக மாறுகிறது. எத்தனை காலம் தொடர்ந்து துடிப்புடன் இயங்கினாய்
நீ. உனக்கும் ஓய்வு வேண்டாமா, என்று நீ கேட்பது எனக்குப் புரிகிறது... என்கிற மாதிரியாய்
இறுதிப் பகுதி அமைகிறது.
பாலகுமாரன் போன்றவர்கள்
இப்படி மிகை நவிற்சியை பெரும் சுற்றிதழ்களில் கையாள்வார்கள். பிரச்னையை, அதன் தீவிரத்
தன்மையை விலக்கிச் சொல்வது சரியா என்று தெரியவில்லை. உங்கள் உரிமை அது, என்று விட்டுவிட
என்னால் முடியவில்லை. பாலகுமாரன் எழுதுவார் - கடற்கரையில் நின்றபடி அவர் பார்க்கிறார்.
பாறையில் ஓங்கி அறைந்துவிட்டுச் செல்லும் அலையைப் பார்த்து என் மனசெல்லாம் வலிக்கிறது,
என்பார். உங்கள் கரிசனத்துக்கு அளவே இல்லையா என்று கேட்கலாம் போலிருந்தது அதை வாசிக்க.
ஜெயந்தி, முன்புபோல அத்தனை குழந்தைகளா இந்தக் காலப் பெண்கள் பெற்றுக் கொள்கிறார்கள்?
அந்தக காலத்தில், வேறு ‘என்ட்டர்டெய்ன்மென்ட்’ இல்லாத காலத்தில் அத்தனை குழந்தைகள்
பிறந்தன.
வலிகளை ஏற்றுக்
கொள்ளப் பழகுதல் நல்ல விஷயம் தான். ஆனால் இந்த விஷயத்தில், ஓய்வு என்று தனியே எதற்கு?
பேசாமல் சும்மா இருப்பதே ஓய்வுதான். அந்தப் பெண் தன்னுடன் பேசுவதற்கு பதில், ஓய்வு
தேவை, என்று தன் கணவனுடன் பேசலாம்!
இருக்கட்டும்.
முதல் தொகுதி என்ற அளவில் மேலும் துள்ள யத்தனிக்கிற அந்த ஆர்வம் வரவேற்புக்குரியது.
வாழ்க வளர்க, என வாழ்த்துவதே எனது கடமை என இக்கணத்தில் உணர்கிறேன்.
அத்தோடு, விமரிசனங்களை
கவனியுங்கள். அதை மறுக்க உங்களுக்கு சுதந்திரம் உண்டு. நானே இப்படி மறுத்து தலையை இட
வலமாக உதறி வளர்ந்தவன் தான். சாமர்செட் மாம் “எழுத்தாளனுக்குத் தான் சிலை வைப்பார்கள்.
எந்த விமரிசகனுக்காவது சிலை வைத்திருக்கிறார்களா?” எனக் கேலியடிப்பார். திசைகள் பல
என்பதைப் போலவே எண்ணங்களும் வண்ணங்களும் ஆளுக்காள் தேர்வு மாறும். உலகத்து இயற்கை அது.
அதுதான் இயற்கை.
அனைவருக்கும்
வணக்கம்.
* * *
storysankar@gmail.com
91 97899 87842 / whatsapp 91 94450 16842
பெண்கள் எழுதினாலும் ஆண்கள் உருவாக்கிய பெண் பாத்திரங்களை அல்லது பெண்மீதான உயர்வான பார்வையை முன்மாதிரியாகக் கொண்டே பெரும்பாலான பெண் எழுத்தாளர்களும் எழுதுவார்கள் என நினைக்கிறேன். சுருக்கமாகச் சொன்னால் பெண் எழுதிய கதையை பெயரில்லாமல் வெளியிட்டால் அது ஆண் எழுதியது போலவே இருக்கும்.
ReplyDeleteyes -
Deletebut as a person of lady gender how she differs that a critic should be able to aobsorb....