நன்றி காணிநிலம் சிற்றிதழ்
இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2018
பெற்ற எழுத்தாளரின் சிறுகதை


எழுத்தாளருடன் ஒரு மாலை
ஓல்கா தோகர்சுக் (போலந்து)
ஆங்கிலத்தில் ஜெனிஃபர் குரோஃப்ட்
ஆங்கிலம் வழி தமிழில் எஸ்.சங்கரநாராயணன்
---- 
வளது சிறந்த யோசனைகள் இராத்திரிகளில் அவளுக்கு வாய்த்தவையே. பகலைவிட இராத்திரியில் என்னவோ அவள் ஆளே வேறு ஆளாகிப் போனாப் போல. அதைச் சொன்னால், சும்மா அப்படியே சொல்லிட்டிருக்கே, என்றிருப்பான் அவன். நான் என்கிறாப் போல தன்னை முன்னிறுத்தி வேறெதாவது பேச ஆரம்பித்திருப்பான். நான்... பகலில் தான் தெளிவாக சிந்திக்கிறேன். அதுவும், காலைகளில்... எனது முதல் காபியை நான் அருந்திய பிறகு... நாளின் முதல் பாதியில்...
தற்செயலாக, (ஓ கடவுளே, என்னவோர் சங்கடமான தற்செயல் அது) செய்தித்தாளில் அவள் வாசித்தாள். பெர்சியா, அலன்ஸ்டெயின்  என்று அவன் பயணம் மேற்கொள்ள விருக்கிறான். அவளுக்கு அத்தனை கிட்டத்தில் வருகிறான் என்பது அவளது தூக்கத்தைக் கெடுத்து விட்டது. எல்லாமே ஒட்டுமொத்தமாக அவளிடம் திரும்ப வந்து சேர்ந்தாற் போலிருந்தது. திரும்பி வந்தன என்றுகூட இல்லை. அவை அவளுடனேயே நினைவுமங்காமல் இருக்கின்றன. அப்படியே மல்லாக்கப் படுத்துக் கொண்டபடி மனசை எல்லா விதங்களிலும் அமைதிப்படுத்த முயற்சி செய்தாள். ரயில் நிலைய நடைமேடை. எதோவொரு நகரம். எதிர்த்திசையில் அவன். அவளைப் பார்க்கிறான். அவன் முகத்தில் வியப்பு, சிறு அதிர்ச்சியாகவும் இருக்கலாம். அப்படியே நிற்கிறான். வெறித்த பார்வை. சற்றே உயரெழும்பிய அவளது தொப்பித் துகில். அவனது துல்லியமான நம்பிக்கையான பார்வை... ஒருமுறை அந்தப் பார்வையைச் சந்தித்தபோது அவளுக்கு ஜிவ்வென்ற பரபரப்பு. அவன் உருவம் அல்ல, அவனது அந்தப் பார்வை... அதற்கே இப்படி. அல்லது ஒருவேளை எல்லாமே தானோ என்னவோ. எதோ சந்தைப்பகுதி வெயிலில் அவள் நடந்து போகிறாள். (அலன்ஸ்டெயின் சந்தை, அது எப்பிடி இருக்குமோ?) இப்போதும் அவன்... எதிர்ச்சாரியில் இருந்து, ஒரு பெண்ணையும் ஆணையும் பின்தொடர்ந்தாப் போலப் போகிறான். அவளை அவனுக்குத் தெரிகிறது என்பதை அவள் உணர்கிறாள். எனெனில்... அவளைப் பார்த்ததில் அவன் முகம் நிறம் வெளுத்துப் போகிறது. “மன்னிக்கணும்...” என அவன் சங்கடத்துடன் மற்றவர்களிடம் சொல்கிறான்.  பளீரென்ற அவன் தொப்பியை தலையில் இருந்து எடுக்கும் அவன் கையில் நடுக்கம். (அவன் முடி அடர்த்தி குறைந்து விட்டதா? அத்தனை காலம் கடந்திருக்கிறதா என்ன?) அவள் கை நீட்டுகிறாள். தன்-நிதானம் உள்ளவள் அவள். அவனைச் சந்திப்பதற்காக அந்தச் சத்தைப் பகுதிகளில் அதுவரை சுற்றித் திரிந்தவள். அலன்ஸ்டெயின், எப்படி பெரிய ஊரா? ஒருவேளை அது பிரம்மாண்டமான நகரமாக இருந்தால்... மே மாத சனத்திரளில் அவர்கள் ஒருவரையொருவர் கடந்து போக நேரிடலாம்.  ஒருவேளை அவர்கள் அவனை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு சாரட்டில் விடுதிக்கு அழைத்துப் போய்விடவும் கூடும். ம். ஒருவேளை அங்கே ஒரு சந்தையே கூட இருக்கிறதோ இல்லையோ. அப்போது ஒருவேளை மழை எதுவும் பெய்து கொண்டிருக்கலாம். அட அவனே வராமல் போகலாம். அவன் மனைவிக்கு உடம்பு சுகமில்லமல் ஆகிப்போய் பயணத்தையே தவிர்த்து விடலாம். தனது புத்தக விஷயமாக அவன் ஜெர்மனியில் மேலும் தங்கியிருக்க நேரலாம். படித்த மனிதர்கள் எல்லாருமே அறிந்திருக்கிற அளவு அவன் பெரிய எழுத்தாளன். ஒருவேளை அப்படி யில்லாமல், அவள்தான் அவனது ஒவ்வொரு விஷயத்தையும் இப்படிக் கூர்ந்து கவனிக்கிறாளோ? அவனைப் பற்றி அச்சில் வருகிற சின்னத் தகவலைக் கூட அவள் விடாது கவனிக்கிறாள். அவனது இரட்டைப் புத்தக நாவல், அது கண்டிப்பாக புத்தகக் கடையில் இருக்கும் என்கிற உறுதி அவளுக்கு. கடையில் அந்தப் புத்தகம்... கடைக்காரரிடம் வேறு என்னவோ பேசியபடியே, கையுறை அணிந்த கைகளால் அந்தப் புத்தகத்தின் அட்டையை வருடித் தருகிறாள்.
காலையில் அந்த யோசனையெல்லாம் மகா அபத்தமாகப் பட்டது. அவள் காலையுணவுக்காக சமையலறைக்கு வந்தாள். ஜோகன் அவளை இடுப்போடு அணைத்துக் கொண்டான். அவள் அதரங்களில் முத்தமும் கொடுத்தான். குழந்தைகளுக்கு சங்கீத வாத்தியார் ஒருமணி நேரத்தில் வந்து விடுவார். மிதமாய் வேகவைத்த முட்டை நுனியை அவள் உரிக்க ஆரம்பித்தாள். விரல்கள்...  மெலிந்து ரத்தசோகையாய், அவளுடைய விரல்களா அவை? யாருடையதோ போல. வலிகாண்டாப் போல பெருமூச்சு எழுந்தது அவளில். தானேயறியாதபடி அவள் பேசினாள். நான் எங்க அப்பாகூடப் போயி கொஞ்ச நாள் இருந்திட்டு வரலாம்னு பாக்கறேன். தான்சிக் நகரத்துக்கு... கைக்குட்டையால் உதட்டைத் துடைத்துக்கொண்ட அவளது கணவன், அவனிடம் ஆச்சர்யம் எதுவும் காணப்படவில்லை. மேசையில் இருந்து பின்சரிந்து கொண்டபடி சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான். வேலையாளிடம் சன்னலைத் திறந்துவிடச் சொன்னான். தெருவில் இருந்து உணவு அறைக்குத் தெருவின் இரைச்சல்கள், வாகனச் சத்தங்களும் குதிரையிழுக்கிற டிராம்களின் ஓசைகளும் புகுந்தன. கூடவே வாசலில் வெல்வட் லைலாக் மலர்களின் முகிழ்வின் வாசனையையும்...
தொப்பிகளை எடுத்துப்போகும் பெட்டிக்குள் பரந்த விளம்புடைய ஒரு நார்த்தொப்பி. ஓர் அடர்வண்ண ஜார்ஜெட் மேலாடை. நெஞ்சுப்பகுதியில் நெளிகள் தைத்த வெள்ளை ரவிக்கை. கையணி. கைப்பெட்டியுடன் பெரிய பயணப் பெட்டி. பட்டன் வைத்த காலணிகள். வெல்வெட் சல்லாத் துணியில் பொதிந்த நறுமண திரவியப் புட்டி. ஜோடி ஜோடிக் கையுறைகள். துணிமணிகள். தான்சிக் ஊரில் இருந்து அவள் அலன்ஸ்டெயினுக்குப் பயணச்சீட்டு வாங்கினாள். ஒரு மூணு மணிநேரம் போல அவள் பெட்டிக்கடை யருகே காத்திருந்தாள். ஓய்வறைக் கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்து அதிர்ந்தாள். அதைவிட இளமையானவளாய்த் தன்னையிட்டு நினைத்திருந்தாள் அவள். ரயிலில் செல்கையில் கைப்பெட்டியில் இருந்து ஒரு பழைய பத்திரிகையை எடுத்து அதில் வந்திருந்த அவன் கதையை எடுத்து வாசித்தாள். ஏற்கனவே பல தடவை வாசித்த கதைதான். ஒருகாலத்தில் அதன் அத்தனை வரிகளும் அவளுக்கு நினைவில் இருந்தன. இப்போது வாசிக்கப் புதுசாய் இருந்தது.
அட, அற்புதம்! அலன்ஸ்டெயினும் வெனிசும் ஒருமாதிரி ஒத்துப் போன சாயல்களுடன் இருக்கின்றன.  பத்து வருடத்தில் அவை இரண்டும் ஒரு தொடர்ச்சியின் இரு ஓரங்கள் போல ஆகிவிட்டன. அவள் வாழ்க்கையின் சில பகுதியோடு முதுகெலும்பாக அவை பின்னிக் கொண்டாற் போல. வடக்கு தெற்கு போல. மதியமும் நடுஇரவும்... வெடிப்புகளாகவும் ததும்பல்களாகவும்... கடந்துபோன காலமாகவும், காலமற்றதாகவும்... அவளைத் திரும்பிப் பார்க்கவும், எதிர்காலத்தை நோக்குகிற அளவிலும் நினைவுகள். ஏடாகூடங்களின் சங்கமம்.
கடற்கரையில் முதல் தடவை அவனைப் பார்க்கிறாள். பளீரென்ற அவனது உடைகள். பிரகாசமான அவனது தொப்பி. அது அவன்தான். அவளுக்கு ஞாபகம் இருக்கிறது. யாரையுமே ஒரேயொரு தடவை பார்த்தாலும் அவளுக்கு மறக்காது. கடற்கரையில் அவன் அலட்சிய பாவனையுடன், இளமையாக... பரஸ்பர அறிமுகம் ஆனபின், அவன் ஒரு முகமூடிக்காரன் என்று பட்டது. “நான் ஓர் எழுத்தாளன்” என்கிறான். ஆனால் அது அவளுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை அப்போது. அவன் தெளிவாக இல்லை. அவனை அவளால் கண்ணுக்குக் கண் பார்க்க முடியாதிருந்தது. இருவரையும் அறிந்த ஒரு நபர் தனது நாற்காலியில் இருந்து மெல்ல முன்னெழுந்து, அவன் தேறாதவன்... என்பதாகச் சொல்கிறார். அவனது விடுதியில் முதன்முறையாக அவனது குளியல் அறையை அவள் பார்த்தாள். அதுவரை அவனை அறியாமல், அப்போது தான் தெரிந்து கொண்டாற் போலிருந்தது. அந்த நெருக்கமான அந்திப்பொழுது, கவன அலட்சியமான  ஆனால் பிரியமான கணங்கள்... அவனது உடல் சார்ந்த அவளது பிரக்ஞை. அவனுக்குள் அவள். ச். விடுதியின் குளியல் அறை... குளியல்தொட்டி மீது அவன் வீசியெறிந்த துண்டு. அவனது சவர உபகரணங்கள். பிரஷ். அதன் பிடி நீர் பட்டுப்பட்டு உடைந்திருந்தது. சோப்புப் பெட்டி மரத்தாலானது. அசையா நிலையில் விலங்குகள். மனித உடம்பின் சாட்சி அடையாளங்கள். அவன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கையில் அவற்றைத் தொட்டுப் பார்க்கிறாள். ஒருவேளை விழித்து தான் இருக்கிறானோ. அவளுக்குக் காத்திருக்கிறானா என்ன? (அந்த அதிகாலை அமைதி, ஒரு காதல் வயப்பட்ட மாலைக்குப் பிறகு, அது சங்கடப் படுத்துகிறது.) திடீரென்று உடம்பு தூக்கிப் போடுகிறது. அந்த ஜில்லிட்ட கண்ணாடி முன் குனிந்துஅழுது கரையலாம் போலிருக்கிறது.
அந்தக் கணத்தை அவள் எப்பவுமே திரும்ப மனதில் ஓட்டிப் பார்த்தாள். அது அவளது காதலின் ஆரம்ப கட்டமாக இருக்கலாம். காதலாவது யாது? ஒருத்தரைப் பத்தி அறிந்து கொள்ள ஆரம்பிப்பது... அல்லவா? அந்தக் காரணுத்துக்காகத் தானே சனங்கள் மற்றையாளின் உடம்பைப் பற்றி ஆசைப்படுகிறார்கள். அது சுகத்துக்காக அல்ல. ஒருவரையொருவர் இன்னும் நெருக்கமாக, மேலும் நெருக்கமாக, ஆனவரை நெருக்கமாக அறிந்துகொள்வதே அது. உடலின் வளைவுகளின் வாசல் ... அதன்வழி எல்லைகளை முட்டிக் கடத்தல்... அந்தரங்கமானவற்றை அறிகிற தேடல் அது.
அலன்ஸ்டெயின் நிலையம் அவள் நினைத்ததை விடச் சின்னதாய் இருந்தது. ஒரு சிறு கணம் அவளில் திகில். ரயில்ப் பிடிகளை அழுத்திப் பிடித்தபடி இறங்கினாள். ஆனால் வாகனம் அவளை நகரத்தின் சிறந்த விடுதிக்கு அழைத்துப் போனபோது அவளுக்கு அபார தன்னம்பிக்கையும் துணிவும் உலகைச் சமாளிக்கிற சக்தியும் வந்தாற் போல உணரத் தலைப்பட்டாள். சனமெல்லாம் உரு சிறுத்து, நீள அகல இருபரிமாண அளவாகி... ஒன்றும் அறியா அப்பாவிகள் அவர்கள். என்ன தெரியும் அவர்களுக்கு. ஒரு யந்திரத்தின் மென்மையான உள் பாகங்கள். எளிய அவர்களின் பெட்டிக் கடைகள், அவர்கள் பேச்சில் சூதுவாது எதுவுமே இல்லை. கோப்பையில் இருந்து காபியை அருந்துவதைத் தவிர வேறெதுவும் அறியா வாய்கள் அவை. அவர்களுக்கு மற்றவர் பற்றி அக்கறையில்லை. அவர்களுக்கு அவர்கள்தான் முக்கியம். வேடிக்கையானவை அவர்களது நித்தியப்படி காரியங்கள். கையில் புட்டிகளும் இறுக்கிப் பிடித்த சாமான்களுமாய் வெற்று முதுகுடன் தலையில் தொப்பியோடு அவர்களின் நடை. வீட்டுக்குள் அடைந்த அசுவாரஸ்யமான மாலைகள். கிழிந்த மெத்தையுடன் சோபாக்கள். எதையும் பகுத்தறிந்து யோசிக்கும் திறனற்ற அவர்கள். அனுபவங்களோடு அடுத்த வரி பேசத் தெரியாது. சிறிய பொம்மைகள். வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆம்பளை போல உடல் பரத்தி  அமர்ந்திருக்கிறாள். அந்த மகா சனங்களை அவள் நேசித்ததாகவே தோன்றியது. பாவம் அவர்கள், என்கிற எண்ணம் அவளுக்கு இருந்தது. ஆனால் அது இரக்கம் அல்ல. பாச உணர்வே. குழந்தைகளுக்கு பெற்றவர்கள் தரும் பாடங்கள், பயிற்சிகள், அவற்றின் நோக்கம் பிள்ளைகளுக்குத் தெரியுமா? அதுமாதிரியான உணர்வு இது. அம்மாவுக்கும் பிள்ளைக்குமான உறவு. சற்று பின்னகர்ந்து தன்னை உயரமாக்கிக் கொண்டாள். வெளியே இன்னும் நன்றாகப் பார்த்தபடி வந்தாள். அவள் மனசுக்குள் சனங்களுக்கான தீர்மானங்கள் வகுக்க ஆரம்பித்திருந்தாள். நிமடந்தோறும், காட்சிதோறும், சம்பவந்தோறும்... இப்படி இது, இப்படி அமைய வேண்டும் இது...
விடுதி. மனசில் ஏற்கனவே முடிவுசெய்து வைத்திருந்த பேரைக் கையெழுத்திட்டாள். கவனம் இல்லாதது போல வரவேற்பாளனிடம் “பிரபல எழுத்தாளர் ‘ட்டி’ - இந்த விடுதியில்தான் இன்றைக்கு இரவு தங்குகிறாரா?”
துடைக்கப்படாத கண்ணாடியுடன் முகத்தை அசுவாரஸ்யமாகத் தூக்கி அவளைப் பார்த்தான் அவன். அந்த எழுத்தாளர் அங்கே தங்குவதில் அவனுக்கு இருந்த பெருமையை அவனால் மறைக்க முடியவில்லை.
“ஆமாமாம். நாளைக்கு அவர் ஒரு வாசிப்பு நிகழ்த்துகிறார். இசையும் இலக்கியமும், என்பது பற்றி. நாளை மதியம்...” என்றான் அவன். பிறகு சற்று முகம்மாறி தொடர்ந்து பேசினான், “உங்ககிட்ட வேண்டிக் கேட்டுக்கறேன். அவர் இங்க தங்கறதை யாரிடமும் சொல்ல வேண்டாம். இந்தப் பக்கத்துல அவர் வேற எங்க தங்க முடியும்? இங்க அவருக்காக ஒரு ‘சூட்’ - மகா அறை - நாலைஞ்சு நாளாகவே தயாரா இருக்கு.”
ஒரு சாவி ரோமன் எழுத்து 1 போட்ட ஆணியில். முதல் தளமா இருக்கும். காட்டினான். “அவரோட வாசகர்கள்... அவரை அமைதியா விடுவாங்களா சந்தேகந்தான் எங்களுக்கு.”
“அந்தளவு பிரபலமானவரா?” என்று கேட்டாள்.
“என் மனைவி அவரது எல்லா எழுத்தையும் வாசிச்சிருக்கா” என்றான் அவன், அதைவிட தெளிவான பதில் எப்படி அவன் சொல்ல முடியும், என்பது போல.
“பெர்லின் ரயில் எப்ப வருது?” என்று அவள் கேட்டாள். “அதில் வரும் ஒருத்தருக்காக நான் காத்திருக்கிறேன்.”
அவளை ஏற இறங்கப் பார்த்தபடியே அவன் நேரத்தைச் சொன்னான்.
அறை ஒண்ணும் சொல்லுந் தரமில்லை. இரண்டு கண்ணாடிக் கதவுகள் பிரதான தெருவைப் பார்க்கத் திறந்தன. ஜன்னல் மேடையில் வெளியே புறாக்கள்.
முகம் கழுவி ஒரு கெட்டியான துண்டால் துடைத்துக் கொண்டாள். மேல்சட்டையை மாற்றிக் கொண்டாள். தலையை வாரி கண்ணாடி முன்நின்று அதை கவனமாகத் தொகுத்து கொண்டை ஊசி செருகிக் கொண்டாள். கண்ணாடி அவளுக்கு உயரமாய் இருந்தது. அவளது கண்ணும் நெற்றியுமே அதில் தெரிந்தன. விரலில் நறுமணத் திரவியத்தை எடுத்து மேலுக்குப் பூசிக் கொண்டாள்... இன்னும் நிறைய நேரம் இருந்தாற் போலப் பட்டது. வெளியே ஒரு சுற்று போய்வரலாம். கடைத்தெருவில் எதாவது சாமான் வாங்கலாம். அட கடைக் கண்ணாடிகளில் என் உருவம் பதியட்டுமே. இந்த ஊர் பஜார், அதையுந்தான் பார்க்கலாம். நிழற்குடையடியில் எலுமிச்சை பருகுவோம். ஆனால் தலையில் தொப்பி மாட்டியவள் வெளியே வந்து கைப்பெட்டியுடன் அப்படியே விரிப்பு விரித்து மல்லாக்கப் படுத்தாள். மேற்கூரையின் சிறு கீறல்கள் தெரியாத பாஷையின் எழுத்துக்கள் போலிருந்தன.
நாள்பூராவும் அவர்கள் நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள். வெனிஸ் ஒரே வியர்வைக் கசகசப்பும் ஈரமுமாய். கால்வாய்கள் சாக்கடை நாறியது. சற்று எட்டி நடைபோட்டே ஒருவரை ஒருவர் பிடிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் எங்கேயோ போகிறார்கள் என்ற பாவனையும் தான். “நமக்கு எப்பவுமே இந்த அவசரம்” என அவர்கள் பெருமூச்சு எடுக்கிறார்கள். சிரித்துக் கொள்கிறார்கள். விஷயம் என்னன்னால், அந்த நடை... அதில் அவர்கள் கைகள் உரசிக் கொள்ளலாம். தோள்கள் லேசாக இடித்துக் கொள்ளலாம். இடைப்புகும் காற்று அவர்களின் வாசத்தை ஒருவர் மீது மற்றவர்க்கு உணர்த்தலாம். ஒருத்தரை ஒருத்தர் நேரடியாகப் பார்ப்பது இல்லை. தோளுரசும் நெருக்கத்தில் அவர்கள் ஒருத்தை ஒருத்தர் கவனம் செய்து கொள்கிறார்கள். அதெப்பிடி சாத்தியம். தன் குடும்பம் பற்றி அவன் பேசிக் கொண்டே வருகிறான். அதில் அவளுக்கு வியப்பு. அதுமாதிரி அவளுக்குச் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை. ஆனால் அவன் தொடர்ந்து பேசியபடியே... குரலால் தன் இருப்பைத் தெரிவிக்கிறான் போலிருக்கிறது. வியாபாரத்தில் பிரசித்தி பெற்ற தன் மூன்னோர்களின் மரபணுவைச் சுமந்தவன் அவன். அவன் குலத்துப் பெண்கள் பிள்ளையைப் பெத்துப் பெத்து இடுப்பொடிந்து போனார்கள். ஆ அந்தப் படுபாவிக் குழந்தைகள். மீசையெடுத்த நடுத்தர வம்சம்... அதைப்பற்றிய பெருமை. காலத்தின் மனிதர்கள்... என்கிறான். அவர்களில் ஒருத்தன் எழுத்தாளன் ஆக்விட்டதால் அப்படிச் சொல்ல வந்தானா? மூதாதையரின் பெயர்கள், அவர்கள் சொன்னதாகச் சொல்லப்பட்டவற்றை உற்சாகமாகப் பேசினான். அவர்களின் கைக்கருவிகள், அவர்களின் விநோதப் பழக்கங்கள்... அவனாகவே ஒவ்வொருத்தருக்கும் ஒரு குணாம்சத்தை தாராள மனசோடு வழங்கினான். அவளுக்கு நம்பிக்கைப் படவில்லை. அவன் குலத்தில் எலலாருமே அத்தனை சுவாரஸ்யமானவர்களா? சாத்தியமா என்ன? உலகம் ஒரு திரண்ட கூட்டம். அதில் தன்னடையாளம் உள்ளவர்கள் சிலர், மிகச் சிலர்... அவளைப் பொறுத்த மட்டில், சனங்கள்... ஓர் அலை போல. அதில் சனங்களிடையே வித்தியாசங்கள் கிடையா. அவள் நேசம் கொண்ட மனுசர்கள் தவிர. எல்லாரையும் நேசிப்பது யாராலும் முடியாத காரியம்.
எங்காவது காப்பி விடுதியில்... காலியாகக் கிடக்கும் கடற்கரை நாற்காலிகளில் அமரலாம். கடற்கரை வேலிப்படல்களில் அமரலாம். அந்நேரங்களில் அவர்கள் ஒருவரை ஒருவர் ஒருவழியாக பார்த்துக் கொள்கிறார்கள். பேச எதுவுமே இராது. அவன் பக்கமாகச் சாய்ந்துகொள்ள அவளுக்கு ஆசை. அவன் அவளைப் பார்க்கிறபோது அவளுக்கு உடனே உடலெங்கும் அந்த தாபம் எழுகிறது  பளீரென்ற தெளிவான வெளிர்வண்ண தயக்கமற்ற பார்வை அது...
சாயந்தரங்களில் மொட்டைமாடியில் மற்ற ஆட்களுடன் அவர்களும்... தூரத்துக் கழிமுகத்தைப் பார்த்தபடி. மரத்தின் இலைகளில் விளக்கு வெளிச்சம் மஞ்சள் தீற்றி யிருக்கும். எதிர்பாராத அளவில் அது ஒரு கானகத்துச் சாயலை உண்டாக்கி விடும். அந்தப் பயணி நண்பர்கள்... சின்ன உற்சாக அரட்டைக் கூட்டம் அது. ஒவ்வொருத்தனும் ஒரு தனித் தீவு. நாம அங்க வந்து நம்ம படகைக் கட்டுகிறோம். ஓட்டத்துக்கு சிறு ஓய்வு. தங்கல்... இதைவிட போயிட்டே யிருக்கிறது, நமக்கு அதில்தான் ஆர்வம். இது இடைப்பட்ட ஆசுவாசம்.
குத்துக் செடிகள் மறைப்பில் ஒரு வீடு. அதைச் சுற்றிலுமான உயர வேலி. சந்தடியின்றி அவள் நுழைகிறாள். உள்ளே அவன் இருக்கிறான் என்பது தெரியும். அவனைப் பார்க்க என்றுதான் நுழைகிறாள். திடீரென்றுதான் அவளுக்கு உணர்வு தட்டியது. ஐயோ நான் நிர்வாணமாக இருக்கிறேன். பதறி அவள் சாலையில் இருந்து அந்த குத்துச் செடிகளுக்குள் குதிக்கிறாள். வீட்டின் புறக்கடைத் தோட்டத்துக்கு வருகிறாள். வெளிச்சமான சன்னல், வரவேற்பறையைப் பார்க்க முடிகிறது. எதோ வரவேற்பு நிகழ்ச்சியாட்டம் இருக்கிறது. சன்னல் கண்ணாடித் தகடுகளூடாக சனங்கள் உள்ளே கையில் ஒயின் குவளைகளுடன் நடனம் ஆடுவது தெரிகிறது. அவர்கள் உதடுகள் மௌனமாக அசைகின்றன. கேட்காத தொலைவு இது. அந்தப் பெண், அந்த  நீல ஆடை அழகி... அவனது மனைவி அவள்தான்.  புன்னகையை அவள் திசையெங்கும் பரிமாறிக் கொண்டிருக்கிறாள். என்ன சமத்காரமாக எல்லாக் காரியங்களும் செய்கிறாள்! குத்துமரம் இன்னுமாக வளர்ந்து கூராய் அவளது சருமத்தைக் குத்துகிறது. அவன் இல்லை. மீன்தொட்டி வைத்த அந்த வரவேற்பறை. அங்கே அவனைக் காணோம்.
திடுக்கென்று விழித்துக் கொண்டாள். அவளது தொப்பி கழுத்தடியில் உறுத்திக் கொண்டிருந்தது. எழுந்து கண்ணாடி பார்த்தாள். கண்கள் வீக்கம் கண்டு கலங்கி யிருந்தன. நேரமாகி விட்டது.
அலன்ஸ்டெயின் நகரத்தில் இரு தெருக்கள், சிலுவையாட்டம் குறுக்கு நெடுக்காக அமைந்தவை. தெருக்களில் ஒரு கோட்டை. ஓர் அரங்கம். அத்தோடு பழைய, சென்ற வருட மோஸ்தர்களின் அடையாளங்கள்.  இங்கே வந்துபோகலாம். வாழ லாயக்கில்லை. பெர்சிய ஒழுங்குகள். ஆசியாவின் உம்மென்ற தன்மை. அந்தத் தண்ணீரின் மித வாடை. மணி மூணடித்ததும் காப்பி வரவழைத்துக் கொண்டாள். இந்நேரம் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருப்பார்கள். சட்டென்று அவளுக்கு குழந்தைகளின் வாசம் வேண்டியிருந்தது. குழந்தைகளின் கேசம் காற்றின் வாசமாகவே இருக்கிறது, அதெப்படி? காபி கொண்டு வந்தவன் அவளது பணத்தை எடுத்துக் கொண்டான். அவளை சற்று ஆபாசமாகவே பார்த்தான். ரயில் நிலையத்தை நோக்கி மெதுவாக நடந்தாள் அவள்... திடுதிப்பென்று அவளது அதுவரையிலான அமைதி... ஆவியாகிப் போனாப் போலிருந்தது. முன்னிலும் படபடப்பு அதிகமானது. அவளே இப்போது எப்படியோ, நீள அகல அளவில் பரிமாணம் சுருங்கிப் போனதாய் உணர்ந்தாள். இந்தக் கணம், இதைத் தாண்டி எனக்கு உயிர் இல்லை. அவளுக்கு என எதிர்காலமோ, இறந்தகாலமோ, எதுவும் கிடையாது. ஒரு பெண். ரயில் நிலையம் நோக்கி அவள் போகிறாள். அவ்வளவே. அதற்கு மேல் ஒன்றுமே யில்லை. மரத்துப் போனாள்.
நடைமேடை கிட்டத்தட்ட காலியாய்க் கிடந்தது. கையில் பூங்கொத்து ஏந்திய ஓர் இளைஞன். இரு குழந்தைகளுடன் பெண் ஒருத்தி. அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். எப்பவுமே கால தாமதமாக ரயிலைப் பிடிப்பவள் போல... அவள் உள்ளே வர ரயில் தூரத்தில் வெளியே போவதை அவள் பார்க்கிறாப் போல அவளைப் பார்த்தால் தெரிந்தது. அவளுக்குப் பின்னால் சில பேர் வந்தார்கள். ஆண்கள், முக்கியமாக தாட்டிகமானவர்கள், ஒருத்தர் கம்பிகட்டிய கண்ணாடியுடன், இன்னொருத்தர் சூட் அருமையாகத் தைக்கப் பட்டிருந்தது, ஒரு கண்ணாடி வில்லை கன்னச் சதையோடு நின்றது. (அவனைப் பார்க்க ஏனோ, இவன் நேரே சுடுகாட்டில் இருந்து வந்தானா, என்று தோன்றியது.) மூணாவது நாலாவது ஆண்களிடம் தனி அடையாளம் எதுவுமில்லை. அலன்ஸ்டெயின் மேட்டுக்குடி கனவான்கள். எழுத்தாளர் வருகைக்குக் காத்திருக்கிறார்கள். அடுத்து ஓரளவு பெரிய கும்பலாக மாணவர் பட்டாளம் உள்ளே வந்தது. அந்த இடத்துக்குத் தன்னடையாளம், சலனம், இரைச்சல் வந்திருந்தது. இதென்ன பிள்ளைங்களுக்கான கல்விப் பயணம்... அல்லது உல்லாசப் பயணமா? இந்தப் பெரிசியன் பிள்ளைகளுக்கு இன்றைக்கு பள்ளி விட்டுவிட்டார்களா? வயதில் மூத்த வாத்தியார் அவர்களை ஒழுங்கு செய்ய முடிந்தவரை முயற்சி செய்கிறார். யாரும் அவரை சட்டைசெய்வதாய் இல்லை.
எத்தனை புதிராய் இருந்தது... வெனிசில் அவர்கள் பிரிவு வந்தபோது, அவன் அழுகிறான்! அவள் கையைப் பற்றிக் கொள்கிறான். அவனது இதமான நீலக் கண்கள் அப்போது கண்ணீருடன் பளபளத்தன. “சேச்சே... என்ன மடத்தனம் இந்த அழுகை. நாம திரும்ப சந்திப்போம்.” அக்கணம் அவன் தன் காதலை வெளிப்படுத்த வேண்டும். பொது சம்பிரதாயங்களைப் பேணுகிறவன் தானே அவன்? “என்ன மடத்தனம்... வெளிப்படையா எல்லாம் பேசிக்கிட்டு. நாம எப்படியும் சேர்ந்தே தானே இருப்போம்” என்று நினைத்துக் கொண்டாள். வார்த்தைகள் அவள் தலைக்குள் சுழன்றன. அதல்லாது வேறு எதுவும்  எப்படியும் நடக்கிறதாக இப்போது யோசிக்க முடியவில்லை.
ஒரு நிதானத்தில் அவள் உணர்ந்தாள். அவன்... தன்னலமானதாக்கும் அவனது அழுகை. “நான் உனக்கு நாலு கடிதம் எழுதிட்டேன்...” என ஐந்தாவதில் அவன் நினைவுகூர்ந்தான். “ஆனா ஒண்ணையும் உனக்கு அனுப்பவில்லை. அதுவே குற்றவுணர்வா எனக்குள்ள புண்ணாகி... இப்பதான் லேசா ஆற ஆரம்பிச்சிருக்கு. மகா அழகி நீ. ரொம்பப் பரிசுத்தம். உலகம் உன்னை ஸ்பரிசித்ததே இல்லை போலத் தோணுது.. நீ வேற எங்கே யிருந்தோ வந்தவள். தேவதை போல நீ. நீ என் அருகில் இல்லாத சமயம்... உன்மேல் எனக்கு அத்தனைக்கு அத்தனை மோகம் வருகிறது.” ச். அந்தக் கடிதம் அவளை மேலும் இம்சித்தது. ஏன் அப்படி தெரியவில்லை. எல்லாமே வேறு யாருக்கோ நடக்கிறாற் போல...
காத்திருந்த கும்பல் சலசலத்தது. பூங்கொத்து இளைஞன் பெஞ்சில் இருந்து எழுந்து கொண்டான். அந்த கருப்பு சூட் ஆசாமி கண்ணாடி வில்லையை எடுத்து கைக்குட்டையில் துடைத்து மெருகேற்றினான். அந்தப் பிள்ளைகளை இரண்டு இரண்டு பேராக வரிசைப்படுத்த ஆசிரியர் வம்பாடு பட்டார். அவனுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்... இப்போது தெளிவு பெற்றாள். அவன்... திருவாளர் ‘ட்டி’ அவளுக்கு மாத்திரமே அவன், என்ற கதைக்கு ஆப்பு. அவன் அவர்களுக்கும் ஆனவன். இந்தப் பிள்ளைகள், சூட் அணிந்த பிரமுகர்கள், பூங்கொத்தன், விடுதி வரவேற்பாளன், அவர்களின் வாசிப்பு ருசி அறிந்த மனைவிகள்... எல்லார்க்கும் ஆனவன்.
ஆனா... அவர்களுக்கு அவனைப் பற்றி என்ன தெரியும்? அவனது ஆகப் பிரபலமான நாவல், அல்லது பத்திரிகைச் சிறுகதைகள்... அவைமூலம் அவனைப் பற்றி அறிந்தவர்களா? கதைகள் மூலம் அறிந்தால் போதுமா? யார் அவன் என்று அவர்கள் சொல்வார்கள்? அவனது எழுத்தில் தன்னைப் பற்றி அவன் வெளியிட்டது,  மிக உதிரியான, ரொட்டித் துகள்கள் போல இக்கிணி தகவல்கள். அவனது கதை வரிகளில் தெளிவாக கச்சிதமாக புரிந்துகொள்கிற தெளிவுடன் அவன் அடையாளப் படுகிறானா என்ன? பிறகு? வெனிசில்... நடையா நடந்தார்களே இரண்டு பேரும்... அவன் சுருக்கமா சற்று பதட்ட பாவனையிலேயே வார்த்தைகளை வெளியேற்றினான். இன்னும் முற்றாகப் பழகாத எளிய நிலையாகவே இருந்ததா அது? அதில் ஒரு கமா போலும் அவளுக்குக் கிடைக்கிறதா... என்று ஆலோசித்தாள். தன் வாழ்வின் சம்பவங்களை அவன் விவரித்தானா? அதில் அவன் தன்னை அடையாளங் காட்டிக் கொண்டானா? அவனுக்கு ஜோக்கடிக்க வராது. தான் படைத்துக் காட்டிய பாத்திரங்களை வைத்துக் கொண்டு எப்படி வாசக சனங்களை அவன் ஏமாற்ற முடிந்தது? ஆனால் அது அவனுக்கு சுலபமாய் முடிந்திருக்கிறது. அல்லது முடியவில்லை போல. அல்லது... ஒருவேளை அவர்கள் அல்ல, அவள்... அவள்தான் இதில் ஏமாற்றப் பட்டாளோ? காதலோ ஆசையோ இல்லாத அளவில் முற்றிலும் வேறு ஆளாக இருந்தான் அவன். உறுதி... அவனது எந்த வரிகளிலும் அவளால் அவனை, அவள் அறிந்த அவனை அடையாளங் காண முடியவே இல்லை. கதையை நகர்த்தும் பாத்திரம் அல்லாத அந்த மனிதன்... அந்தப் பேச்சு அவன்பேச்சு அல்ல. அதுதான் இதில் சுவாரஸ்யம். கற்பனையான உலகங்களை சிருஷ்டிக்கிற இடத்தில் உயிருள்ள ஒருத்தரைத் தேடுதல்! வார்த்தையாளர்கள். அவனது மூச்சில் இதை அவன் தூங்குகிற போது தேடுதல். யாதுமறியாத பாவனையில் மல்லாந்தபடி அவனது பார்வை விஸ்தீரணத்தைத் தாண்டி தேடுதல். அவன் கண் என்னும் மதகுகள், அதனுள்ளே ஒளிந்திருக்கிறதைக் கண்டுபிடிக்க முயலுதல். அவன் ஐஸ் கிரீம் சுவைத்தால்... மத்தவர்கள் இதை எந்தளவு விரும்புகிறார்கள், அதே அளவில் இவனுக்கும் அது பிடித்திருக்கிறதா? அவனது நரம்பு மண்டலம் எப்படி? மத்தவர்களின் மண்டலம் போல உணர்வுகளை அதேமாதிரிதான் மூளைக்குக் கடத்துகிறதா? எதோ வித்தியாசம் இருக்கத் தான் வேண்டும். சட்டென ஒரு ஞாபகப் பொறி... வெனிசில் அவன் மீசை வளர்க்க ஆரம்பித்திருந்தான். அவன் கை தன்னைப்போல மேலுட்டுக்குப் போகும். அந்த சொரசொரப்பான இருண்ட கற்றையை வருடித் தருதல், அவனுக்கு விருப்பமாய் இருந்தது.
ரயில் வருகிறது. எதோ உருவ அமைப்பில் அடர்த்தியான புகை அவர்களின் தலைக்குமேலே. ரயில்ப் புகை. அவள் உதடு உலர்ந்து இதயம் படபடத்தது. ரயில் நிலைய உணவு விடுதியின் பெயர்ப்பலகைக்குப் பின்னால் சற்று ஒதுங்கி நின்றாள் அவள். தொப்பியின் துகிலை சற்று இறக்கிவிட்டுக் கொண்டாள். சிறிதே சிறுது நேரம் ரயில் அங்கே நின்றது... எதுவுமே... நிகழவில்லை. ஒரு சில கணங்கள் அந்த நிலையமே பேஸ்தடித்தாற் போல அசைவற்றுக் கிடந்தது. அந்த நாலுபேர் இப்போது தனித்தனியே பிரிந்து ஓடி பெட்டிகளில் தேடினார்கள். திடீரென்று கவனித்தாள். அந்தக் கூட்டம் ரயிலின் வலப்புறமாக, முன் பகுதி நோக்கிப் போனது... ரெண்டு குழந்தைகளுடன் அந்த சாமானியப் பெண்மணி, அவளும் அதே திசையில் போகிறாள். பூங்கொத்தன்... அவன் எல்லார்க்கும் முன்னால், கிட்டத்தட்ட ஓடுகிறான்.
நிலையத்தின் வெளிக்கதவுப் பக்கத்தில் தான் அவனை, ‘ட்டி’யை அவள் பார்த்தாள். அவனைச் சூழ்ந்துகொண்டு வெளியேறும் கும்பல் நடுவே. வியப்புடன் பார்த்தாள். இப்போது அதிக அழுத்தம் மிக்கவனாக, அறிவாளியாக, சிறிது தடுமாறியவனாக... அதே அந்த முகம், அவள் நன்றாய் அறிந்த முகம், இப்போது அதில் சிறு வித்தியாசம், இது அந்தக் கனவில் வரைந்த முகமாக அல்லாமல், பார்வையில் கிட்டிய அதிக நிஜம் கொண்டதாக... அப்படியே கரைந்து போகிறான். இளைஞன் அவனிடம் கையெழுத்துக்கு ஒரு கையெழுத்துப் புத்தகத்தை நீட்டுகிறான். கண்ணாடிவில்லை கனவான் அவனைத் தன் தேகத்தால் பாதுகாப்பு வளையத்தில் வைத்திருந்தாஙர். ‘ட்டி’ - அவன்தான் இந்தப் புயலின் மையக்கண். இலகுவான அமைதியான மனிதன். அவனை எதுவும் ஆச்சர்யப்படுத்தி விட முடியாது.
ஆக... இப்ப இல்லை. பிறகொரு சந்தர்ப்பத்தில். அவள் இதயம் அவளைத் தளர்த்தியது. அவள் வெளியே வந்தாள். கவனிக்கப்படாத தூரத்தில் பின்தங்கி, அவர்கள் ஒரு சாரட்டில் ஏறுவதைப் பார்த்தாள்.
நகரத்தின் அரங்கத்தில் தான் எழுத்தாளருடனான மாலை ஏற்பாடாகி யிருந்தது. நிறைய இடங்களில் அதைப் பற்றிய சுவரொட்டிகள். “பிரபல எழுத்தாளர் ட்டி. கதை வாசிப்பார்.” அரங்கத்தில் முதல் ஆளாக வந்தவர்களில் அவளும் ஒருத்தி. அரங்கத்தில் மெல்ல சனங்கள் நிறைய ஆரம்பித்தார்கள். வந்திருந்த பெண்கள்... அவர்களின் ஆகச் சிறந்த உடைகளில்... நகரப் பெண்களாட்டம் வாசனை பூசிக் கொண்டு.  பானை வயிறு போட்ட அவர்களின் புருஷமார், இடுப்புடன் கடிகாரச் சங்கிலி... பொறுமையில்லாமல் அமர்ந்திருந்தார்கள். அலன்ஸ்டெயினின் மத்திய வர்க்கம். ஒரு மாதிரி கௌரவ உடைகள், வாத்திமார்களாக இருக்கலாம். அறிவுசார்ந்து ஆனால் தன்னடக்க அமெரிக்கை. ரயில் நிலையத்தில் பார்த்த இளைஞன், அவனும் வந்திருந்தான். கையில் பூங்கொத்து இல்லை. மூன்று பெண்கள் கண்களைப் படபடவென்று சிமிட்டியபடி சிரித்துக் கொண்டிருந்தார்கள். நடிகைகளோ? ஒரு மாணவர் கும்பல். ஆக... இதோ இவர்கள் எல்லாரும் மகா எழுத்தாளனும் பிரபலஸ்தனுமான ‘ட்டி’ யின் ரசிகக் குழாம். கீழ்ப் பெர்சியா ரசிகர்கள்.
“வாழ்க்கையில் எனக்கு வேறெதுவும் பெரிதில்லை... எழுத்து மாத்திரமே. என்னை நீ புரிந்து கொள்வாய், எனக்குத் தெரியும்.” அவளுக்கு அவன் எழுதிய கடைசிக் கடிதம் இப்படி முடிந்தது. ஹா அவள் புரிந்து கொள்ளவில்லை. இதில், அவனைப் பொறுத்தவரை ஒரு முரண் அம்சம், அவளுக்கு அப்படி ஒரு முரணும் தெரியவில்லை. பணம் அவளிடம் இருந்தது. அவளுடன் அவன் வெனிசிலோ வெறு எங்கேயும் கூட சேர்ந்து வாழலாம். வாழ்ந்தபடியே எழுதவும் செய்யலாம். இதில் பிரச்னை என்ன... ஒருவேளை அவன் கணக்கில் அவளுக்குப் படிப்பு போதவில்லையோ. என் குடும்பம் அவனுக்கு அத்தனை இதுவாகப் படவில்லையோ. அவளுக்கு ஞாபகம் இருந்தது. “பேராசிரியர்” என்ற அழைப்பில் காதைச் சொறிந்தபடி அவன் எழுந்து நிமிர்ந்து நின்றான். என்ன இப்படி, அவன் மாதிரி ஒருத்தன் இப்படி வெளிச்சப் பிரபலம் சார்ந்து பிரியப்படுவது! ஒரு பேராசிரியரின் மகளையே அவன் கல்யாணம் பண்ணிக் கொள்ளவும் செய்தான். வெனிஸ் நகரில் அவர்களது சந்திப்புக்கு ஒரு வருடத்தில் எப்படி அவனால் வேறொரு பெண்ணை காதலியாய்த் தேர்ந்தெடுக்க முடிந்தது. வேறொரு பெண்ணிடம் எப்படி அவனால் காதல் வயப்பட முடிந்தது... ம்ஹும். அவன் அந்த இன்னொருத்தியை நேசித்தான் என நம்ப முடியவில்லை அவளால். அதில் காதலைத் தாண்டிய கணக்குகள்... அது ஒரு மோசமான கதையின் துவக்கம். அதுசரி, எப்பவுமே நல்ல விசயமாகவே எழுதிட்டிருக்க முடியாதுதான். சறுக்கல்கள் யாருக்கும் இல்லாமல் இராது. தன் சார்ந்த நிறைவுகள், இப்படி காரணங்களைத் தேட ஆரம்பித்திருந்தது. ஒவ்வொரு காரணமும் மற்றதைப் போலவே... அசாத்தியானவையாகவே இருந்தன.
அவனுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினாள். அவனிடம் இருந்து பதில் வரவேயில்லை. வாசித்து அதைக் கசக்கி குப்பைக் கூடையில் எறிந்து விட்டிருக்க வேண்டும். ஒருவேளை கொளுத்தி யிருப்பானா? தன் வாழ்க்கைச் சரிதம் பற்றி அவன் யோசிக்க வேண்டும். அதில் சரியான கோணத்தில் இந்த விஷயத்தை அவன் வெளிப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஒருவன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி அவன் நடந்துகொள்ள வில்லை. வாழ்க்கை யோட்டத்தில் நாமறியாத எல்லைகளை அது தெரிந்து வைத்திருக்கிறது. அதைத் தவிர்க்க முடியாது. நம்மை இழுத்து அந்த எல்லைகளை நோக்கித் தள்ளுகிறது வாழ்க்கை. அம்மாதிரியான நினைப்பே அவளை வெருட்டியது. உடனே அங்கிருந்து வெளியேறி, வெளிச்சமான தெருக்களில் நடமாட விரும்பினாள்.
பிறகு அவன் அவளுக்கு எதுவுமே, ஒரு வார்த்தை கூட, எழுதவில்லை. அவனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதை அவள் அறிந்தாள். குழந்தைகள் இருக்கின்றன அவனுக்கு. இரண்டா? மூணோ? அச்சில் அவனது பெயரை எப்போது கவனித்தாலும் அவளுக்கான சங்கேதக் குறிப்பு எதுவும் இருக்கிறதா என அவள் அலசினாள். அவன் எப்படி அதை எழுதினானோ அதே ஆழத்துடன் வாசித்தாள். அவளுக்கான சங்கேதங்களுடன், அவளுக்காகவே அவன் எழுதுகிறான் என்கிற அவளது அழுத்தமான நம்பிக்கையில்... அவனிடல் இருந்து இந்த மாதிரி வாக்கியம்... இதை எப்படி அவன் விளக்க முடியும்? “வாழ்க்கையில் எனக்கு வேறெதுவும் பெரிதில்லை... எழுத்து மாத்திரமே.”
அரங்கத்தில் மெல்ல சனங்கள் இருக்கைகளை ஆக்கிரமித்தார்கள். அவளும் அவர்களுடன் உள்ளே நுழைந்தாள். கிரிம்சன் வெல்வெட் போர்த்திய மேசைக்கு நல்ல தூரத்தில் அவளும் போய் அமர்ந்தாள். அறையில் இயற்கையான வெளிச்சமே இல்லை. மேடை மேசையில் சிறு விளக்கு. நல்ல விசயந் தான். அங்கே யிருந்து அவன் அவளைப் பார்க்க வாய்ப்பு இல்லை. பெருவிளக்கு அவன் கண்ணை மருட்டிவிடும். அவனால் இவளைப் பார்க்க வாய்க்காது.
கலையரங்கின் சூழல் அது. பார்வையாளர்கள் கிசுகிசுப்பாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள், அரங்கம் முழுவதும் சும்மா பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தனர். உள்ளூர்ப் புகைப்படக்காரர் ஒருவர் மூன்று கால்களுள்ள ஒரு தாங்கியை விரித்துப் பரப்பி புகைப்படப் பெட்டியை அமைதியாய் நிறுவிக்கொண்டிருந்தார். ஒருவழியாக கதவுகள் பக்கமாக ஒரு முணுமுணுப்பான ஒலி. ட்டி. நிஜ உருவமாக! மாசுமருவற்றவனாகத் தோற்றம் தந்தான். மாசுமரு அற்றவன் தான் அவன். மற்ற யாரைப் போலும் அல்ல அவன். தனித்தன்மை கொண்டவன். அதன் தாத்பரியம் அவளுக்குத் தெரியாது. அவன் ஒரு பரிசுத்தத்தை வெளிக் காட்டினான். வெளிறிய முகம். மென்மையாய் ஷேவ் எடுத்திருந்தான். வெள்ளைச் சட்டை. கழுத்துப் பட்டி விரைப்பு. வெள்ளி வரையிட்ட கண்ணாடி. பளபள பழுப்பு சூட். இங்கிருந்து அவன் காலணிகள் தெரியவில்லை. ஆனால் உடனே அவனது, பத்து வருடத்துக்கு முந்தைய காலணிகள் மனதில் வந்தது.  முன்னோக்கி சாய்கோணமாய்க் குறுகிற பழுப்புக் காலணி. காலணி அணியாத அவனது வெற்றுப் பாதங்கள்... அதுவும் நினைவில் வந்தது. வாய் வார்த்தைகள் இன்றி தன்னை எளிமையாய் அடையாளங் காட்டிக் கொள்வது போல. அரங்கத்துக்குள் வெற்றுக் காலுடன் அவன் வருவதாக நினைத்துப் பார்த்தாள்.
வயதாகி யிருந்தது அவனுக்கு. ஆளும் மாறிப் போனான். சனங்கள் யாரையும் அவன் பார்க்கவில்லை. கைவைத்த நாற்காலியில் வசதியாக அமர்ந்து கொண்டான். ஒரு மூடிய குடுவையில் தண்ணீரும் தம்ளரும் அவனிடம் தந்தார்கள். வேண்டாம் என மறுத்துவிட்டான். தனது மேல்கோட்டில் இருந்து சில தாள்களை வெளியே எடுத்து... தொண்டையைச் செருமிக் கொண்டான். பிறகுதான் பார்வையாளர்களையே பார்த்தான். கண்ணைப் பெரிதாய் விரித்தான். அவன் பார்வை தன்மேல் மேய்ந்தாற் போல அவள் சிறிது நடுங்கினாள். அவன் அப்படி கண்ணை விரித்தபோது, இருந்த தெம்பும் உள்ளொடுங்கிப் போனாற் போலிருந்தது. ஆனால் அவன் அவளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. பார்வைக்கு எட்டாத தொலைவில் இருந்தாள். அவனால் கண்டுகொண்டிருக்க முடியாது... அவள்?... அவளால் அவனை எந்தத் திரளிலும் எப்பவும் கண்டுகொள்ள முடியும்... எத்தனை தூரத்திலும்!
“சீமாட்டிகளே கனவான்களே...” அவன் பேசத் துவங்கினான். “என்னை இங்கே அழைத்தது, எனது ... நிலைப்பாடு பற்றி...”
அந்த ஊரைப் பற்றி எதுவும் அவன் குறிப்பிடவில்லை. அவனையே ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்த பர்வையாளர்களைப் பார்த்து புன்னகை செய்யவில்லை. அவர்களை மறுபடியும் பார்க்கவே இல்லை. அந்தப் பூங்கொத்து மாலை மரியாதைகளுக்கோ அல்லது அவனிடம் அவர்களது ஆர்வமயமான ஆதரவுக்கோ நன்றி தெரிவிக்கவில்லை. தன்னை அவன் அவர்கள் முன்னால் அறிமுகப் படுத்திக் கொள்ளவும் இல்லை. தான் யார், தான் இங்கேவரை அழைத்து வரப்பட்டது எப்படி, அதை அவன் விரும்பினானா இல்லையா என்றும் குறிப்பிடவில்லை. மே சன் (பதிப்பகமாக இருக்கலாம்.அவனை அழைத்த அமைப்பாக இருக்கலாம்.) - அதற்கும் தனக்குமான தனிப்பட்ட உறவு பற்றியும் பேசவில்லை. தொப்பியணிந்த நாரிமணிகள், அவர்களின் சங்கிலிக் கணவர்களையும்  விட்டுவிட்டான். தடுமாறாத, நிறுத்தி மூச்சு வாங்காத பேச்சு. முகத்தில் சலனமே காட்டாத உரை. பெரிதாய் ஏற்ற யிறக்கம் இல்லாமல் ஆனால் தெளிவாய்ப் பேசினான். அவனது ‘போ-டை’ - காலர் பகுதியில் அதைச் சரிசெய்கிற சிறு அசைவுதான் அவன் காட்டிய ஒரே சலனம். அது அதன் இடத்தில் சரியாக நகராமல் இருக்கிறதா என்று பார்க்கிற அசைவு. ஒரு மானுடன் என்கிறதாக அந்தக் கூட்டத்தை வசியப்படுத்த எண்ணி யிருக்க வேண்டும் அவன். மொத்த ஐரோப்பாவுக்குமான எழுத்துக்காரன் அவன்... சமூக அறிஞனாகவும், உணர்ச்சிவசப் படாத நடுநிலை யாளனாகவும் காட்டிக் கொள்ள விரும்பினானா. எதைப் பற்றியும் அழுத்திக் குறிப்பிடாத நிலை சிலாக்கியமாய் உணர்ந்திருக்கலாம் அவன். புனிதத்தின் வசிகரம். கூடவும்இல்லை. குறைச்சலாயும் இல்லை... என்கிற நளின நாசூக்கு. அவளுக்கு நல்லாப் பரிச்சயம் ஆனதே இது. சுவாரஸ்யம்தான் இது, ஆனால் இந்த முகமூடி... சடார்னு இப்ப கழன்ரும்டா... என்கிற அந்த நிலை அவளுக்கு அதில் கிடைத்தாக வேண்டும். இதன் மறுபக்கம், அதுதான் சுவாரஸ்யம். இதேதான் அவளிடம் அவனுக்குப் பிடித்த விஷயம். அதில் அவன் கில்லாடியாகி விட்டான்.
அமைதியாய் நேரடியாய்ப் பேசினான். நீலக் கண்ணால் கூரையை வெறித்தபடி சிறிது நிறுத்தி தொடர்ந்து பேசினான். அந்த நிறுத்தங்கள், எழுத்தின் குறிகள் - கமா. இடைவெளி. கோடுகள். அவன் தேறி வந்திருந்தான் நிசமாகவே. இசை பற்றிப் பேசினான். இலக்கியம் பேசவில்லை. கேட்டவர்களில் சிலர் ஏமாற்றம் அடைந்திருக்கலாம். என்ன இது, எழுத்தாளன்னா இலக்கியம் பேச வேண்டாமா?
“... ஒரே குரலிசையில் இருந்து விரிந்து செல்லும் இசை... அதேபோல உரு பெருகும் சேர்ந்திசை... அது பொதுவாக மேன்மையானது என்பார்கள். ஆதிகுடிகளில் இருந்து இது மேம்பட்ட, வெற்றிகரமான மாற்றம் என்பதும் உண்மைதான்....” இந்த அளவு தான் அவள் உள் வாங்கிக் கொண்டது அவன் உரையில்.
அவன் முகம் அவளை நோக்கி பூமி ஈர்ப்பு போல குனிந்தது. ஒரு சிறுவனின் புன்னகை. பாதி குழந்தைமை. பாதி வக்கிரம். வலி கொண்ட புன்னகை, மகிழ்ச்சி இல்லை அதில். வியர்வைத் துளிகள் சிந்தும் முகம். உடையின் பட்டன் தெறித்து விழுகிறாப் போல.
அவன் பேசி முடிக்க, எல்லாரும் எழுந்து கொண்டார்கள். அவன் ஒரு ஓபரா நிகழ்ச்சி தந்தாப் போல கை தட்டினார்கள். நிறையப்பேர் மேடைக்கு அவன் மேசைநோக்கிப் போனார்கள். தன் பையில் இருந்து பேனா ஒன்றை, அரங்க விளக்கில் பளபளவென்று பொலிந்தது பேனா... புத்தகங்கள் மேல் குனிந்தான் கையெழுத்திட.  
வெளியே வந்து விடுதி நோக்கி விரைந்து போனாள். இரண்டு மடங்கு, மூன்று மடங்கு, பல மடங்காக தனிமை அவளை வாட்டியது. அவநம்பிக்கையின் சிகரத்தில் இருந்தாள். அவளால் மாற்றக் கூடியது... எதுவுமே இல்லை. கடவுள் நமக்கு எதைக் கொடுத்திருக்கிறானோ, அதற்காக அவனுக்கு நன்றி செலுத்தலாமே, அவளால் ஏன் முடியவில்லை. அதைப் பாராட்டுவது என்பது ஏன் அத்தனை கடினமானதாய் ஆகிப் போகிறது? இருப்பதை விட்டுவிட்டு இல்லாதையே மனம் விரும்புகிறது ஏன்? மனித மனம் இப்படி இயங்குவதே தவறு அல்லவா? இந்தத் தவறு எங்கிருந்து வந்தது நமக்குள்?
வரவேற்பு பகுதியில் யாருமில்லை. விடுதி மணக்கிறது. புதிதாய்ச் செய்த கேக். சிறிது நேரம் வரவேற்பாளன் வருவனா என்று காத்திருந்தாள். அவன் வரவில்லை. அவனும் அரங்கத்தில் இருக்கலாம்... தனது அறைச்சாவியை அவளே எடுத்துக் கொள்ளப் பார்த்தாள். ஆனால், அவளே எதிர்பாராத காரியம் ஒன்றைச் செய்தாள். இன்னொரு சாவியைப் பற்றினாள். அறை ரோமன் 1.  என்ன அலட்சியம்! எப்படி அந்தச் சாவியை அங்கேயே தொங்கவிட்டுச் செல்கிறார்கள். மாடிகளில் பரபரவென்று ஒரு திருடியைப் போல ஏறினாள்.
சூட்டின் கதவுகளை ஜாக்கிரதையாகத் திறந்தாள். விளக்கைப் போடவில்லை. அந்தி சூரியனின் கதகதப்பான ஒளிப் பிரவாகம் அறையை நிறைத்திருந்தது. எத்தனை பெரிய உப்பரிகை. ஆடம்பரமான, மடிக்கப்பட்ட திரைகள் விலக்கித் திறந்திருந்தன. ஒரு மகா படுக்கை. பெட்டியை முழுசுமாகப் பிரிக்கக் கூட அவனுக்கு நேரம் இல்லை போல. அவனது கைப்பெட்டி வாயைப் பிளந்துகொண்டு படுக்கையில் கிடந்தது. அருகில் அவனது சமீபத்திய புத்தகத்தின் மூன்று பிரதிகள். மிகப் புதிய புத்தகங்கள். இன்னும் வெளியிடப் படவில்லையோ என்னவோ.  கைவைத்த நாற்காலி மேல் மிருதுவான ஒரு ஈரத் துவாலை. அவனுக்காகவே விடுதியில் புதிதாக வாங்கப் பட்டிருக்கலாம் அது. ஈர்ப்புடன் அதை வருடினாள். பக்கத்திலேயே குளியறை. சன்னல் பக்கமாக பெரிய ஷவர். குளியல் தொட்டி. பெர்சிய மோஸ்தரில் மகா பளபளப்பான பித்தளைக் குமிழ்கள். சுவர்ப் பலகையொன்று, சவர சோப் வைத்துக் கொள்ள. எத்தனை அருமை. நம்பவே முடியாத அளவு... அந்த சோப்பை எடுத்து முகர்ந்து பார்த்தாள். அவளுக்குப் பரிச்சமான வாசம்... அதை அவளை இதைவிட அதிகமாக பாதிக்கும் என நினைத்தாள். இதே வாசத்துக்கு இதே சோப்பை வேறு கடைகளில் அவள் தேடி யிருக்கிறாள். பலமுறை அந்த பாதிப்பில் அவள் ஆதங்கப் பட்டிருக்கிறாள். பிரஷ் ஈரமாய் இருந்தது. கிளம்புமுன் ஒரு இழுப்பு இழுத்துவிட்டுக் கிளம்பினான் போல. ஒரு பல்லுப்போன பல்விளக்கி பிரஷ். காய்ந்து கிடந்தது. டைல் பதித்த தரையில் அடர்த்தியான சாக்ஸ் வீசப்பட்டுக் கிடந்தது. தொட்டி ஓரத்தில் அமர்ந்தாள். ஒரு விநோதமான யோசனை வந்தது அவளுக்கு. அவனை அவள் காதலிக்க வேண்டுமானால் தன்னை அவனாக பாவித்துப் பார்க்க வேண்டும். அவனுக்குள் இருக்க வேண்டும். அவனுக்கேயான அவனுடைய கைகளால் அவனுக்கு அளிக்கப் படுகிற ஸ்பரிசம். தன்னை அவன் எப்படிப் பார்த்துக் கொள்வானோ அதைவிட சிறப்பாக அவனைப் பாவித்தல். அவனும் அவளுமாக இப்போது இங்கே இருந்தால்... ரொம்ப அவசியம் என்றால், அவன் எழுதட்டும். அவனைப் பரிவுடன் நான் சீராட்டுவேன். ஒரு சங்கடமும், ஒரு முரண்பாடும், ஒரு தவிர்ப்பும் இல்லை. எளிய, தன்னைத் தானே நேசிக்கிற நேசம். இருவரும் ஒன்றினோம். ஒன்றானோம். குளியல் அறைகளில் மென்மைகள் ஆசிர்வதிக்கப் படுகின்றன. அவனது சருமத்தை ஸ்பரிசித்தல், அது அல்ல பரிவு. அ, அது காதல் பற்றிக்கூட அல்ல... அவன் சருமத்துக்கேற்ற சரியான சோப்பைக் கண்டடைதல்! “அவனது தேகம், அதன் ஒவ்வொரு சென்ட்டிமீட்டரையும் நான் மனப்பாடமாக அறிந்து கொள்வேன்”  என நினைத்தாள். “அவனது வாயின் உட்பகுதிகளை அவனது நாக்கை விட நான் அறிந்து கொள்வேன். அவனது தந்தங்கள்... அவற்றின் வடிவமைப்பு. அவனது வாசம், என்னைப் பொறுத்தவரை, வேறு யாருக்கும் இல்லாதது அது. ஏனெனில் அது எனக்கு சொந்தமானது. அவனைத் தாலாட்டுவேன் நான்...”
கீழே எதோ சத்தம். பரபரவென்று அந்த அறையை விட்டு வெளியேறி தன் தளத்துக்கு வந்தாள்.
உணவறைக்கு முதுகு காட்டி அவள் வாடகைப் பணம் செலுத்திக் கொண்டிருந்தபோது அவர்கள் நிகழ்ச்சி முடிந்து வந்தார்கள். எழுத்தாளனின் பேச்சுக் குரல் கேட்டது.
“அவர்தான் ட்டி.” வரவேற்பாளன் பெருமையடித்துக் கொண்டான். “என் பெண்டாட்டி அவரோட எல்லா புத்தகமும் வாசிச்சிருக்கா.”
திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் கொண்டாள். ஆனால் முடியவில்லை. அப்படியே உறைந்தாப் போல இருந்தாள். விரல்கள் கரன்சியை எண்ணிக் கொண்டிருந்தன. அவ்வளவே.
சாரட்டுக்குள் ஏறிக்கொண்டபோது மொத்த இரத்தமும் வற்றிப்போனாற் போலிருந்தது. உடம்பே ஒரு டன் அளவு எடைகூடிப் போயிருந்தது. குதிரையே கூட அத்தனை கனமாய் உணர்ந்திருக்கலாம். அசமந்தமாகிப் போனது அதுகூட.
ஊர்தியில் ஏறியும் ரொம்ப நேரம் அவள் பேசவேயில்லை. ஓட்டிதான் “எங்க போகணும் மேம்” என்று அவனே வேறு வழியில்லாமல் கேட்டான்.
“ரயில் நிலையம்” என்றாள் அவள்.
அலன்ஸ்டெயின் போன்ற நகரத்தில், எல்லா காரியமுமே ஆரம்பிக்கவும் முடியவும் ரயில் நிலையம் தான்.
••
AN EVENING WITH THE AUTHOR
Olga Thokarczuk (poland)
trs. in English by Jennifer Kroft
கடந்த இருபது ஆண்டுகளாகவே, தனது முதல் நாவல் ‘புத்தக மனிதர்களின் பயணம்’ வெளிவந்த காலத்தில் இருந்தே ஓல்கா தோகர்சுக் போலந்தின் நவீன இலக்கியத்தின் முக்கியப் பெண் குரலாக அறியப் படுகிறார். மனோதத்துவ நிபுணர். வாழ்வின் சவால்களை புதிர்களை உடலை ஒரு வழி எனக் காட்டி மனதின் அலையடிப்புகளை அவர் காட்டுகிறார். இந்தக் கதையிலும் நாயகி மன அளவிலும் உடலளவிலும் தன் காதல் கொண்ட அவனோடு திரும்ப ஒன்றுசேர்வதான கற்பனையைக் காண முடிகிறது. இந்த எழுத்தாளர் தாமஸ் மன், என்கிறார் ஆங்கில மொழிபெயர்ப்பாளர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் தாமஸ் மன் அலன்ஸ்டெயின் நகருக்கு வந்ததே யில்லை.

Comments

Popular posts from this blog