
2006ம் ஆண்டின் சிறந்த நாவல் - தமிழக அரசு பரிசுபெற்றது நீர்வலை எஸ். சங்கரநாராயணன் 2 கி ருட்டினமணிக்கு ராப்பயணத்தில் பாட்டு கேட்டுக் கொண்டே போவது பிடிக்கும். பழம் பாடல்களின் ரசிகன் அவன். சில சமயம் கூடவே பாடவும் செய்வான். பழம் பாடல்களில் செக்ஸ் இலைமறை காய்மறை என இருந்தது. வெகுஜன ஈர்ப்புக்கு அவை தேவை என வைத்தார்கள் போலும். ஆனால் அதைமீறிய சுவை அதில் காணக் கிடைக்கும். வார்த்தை எளிமையும் அதை குரல்தெளிவுடன், கேட்கிற அளவில் பாடும் பாடகர்களும். எளிய வாத்திய இசை. இப்ப மாடிப்படியில் இருந்து உருண்டு விழுந்தாற்போல எல்லாம் சத்தங்கள் பாடல்களில் வருகின்றன. தமிழ் உச்சரிக்க வராத ஆட்கள் நிறைய பாட வந்துவிட்டார்கள். தமிழே தெரியாத பாடகர்கள் நடிகர்கள் எல்லாம் வந் து விட்டார்கள். பார்வையற்ற காமெராமேன் கூட வரக்கூடும்! பையனுக்கு நம்ப முடியவில்லை. திடுதிப்பென்று அவன் கேட்டது.... எந்த ஊர் தெரியாது. கூட வரியா, என்று கேட்டான். இவன் யாரைக் கேட்க வேண்டும்... ம், என்று தலையாட்டினான். எதிர்பாராத கேள்வி... திக்குமுக்காடிப் போனது. டிரைவரை நம்பலாம் போலிருந்தது. அந்த சிநேகத்தில் சிரிப்பில் நம்பிக்கை...