கு று ந் தொ ட ர்

 

பறவைப்பாதம்

எஸ்.சங்கரநாராயணன்

இறுதிப் பகுதி

சிற்றமைதி நிலவும் மருத்துவ வளாகம். எல்லாரும் பைநிறைய சில்லறை போல கனமான சொற்களுடன் ஆனால் மௌனமாக நடமாடுகிறார்கள். ஐசியூ என வழி கேட்கவே மனம் படபடத்தது. வியர்வை முத்துக்கள் குளித்தன. ரத்தத்தில் குளிர். படபடப்பாய் உணர்ந்தார். அட ஆம்பளையே. நீ அவளுக்கு தைரியம் சொல்ல வேண்டாமா?

முடியுமா?

பெண்களை ஆண்கள் அடக்கி யாள்கிறதான பாவனை எல்லாம் சும்மா. துயர கணங்களில் பெண்களே ஆண்ளை வழி நடத்துகிறார்கள். அவர் பின்சீட்டில், வாகனத்தில் அமர்கிற மனைவி. ஆனால் அலுவலகத்து நெருக்கடி, அல்லது எதிர்பாராமல் திகைத்துப் போகிற தருணங்களில், அவர் அவள் மடிக்குழந்தை. துக்கம் பெண்களுக்குப் புதிது அல்ல என்பது போல, அக்கணங்ளில் அவர்கள் பலங்கொண்டு விஸ்வரூபம் எடுக்கிறார்கள். புடம் போட்டாற் போல பொலிகிறார்கள்.

கவனித்துப் பார்த்தால், கணவன் இல்லாமல் இவர்கள் சமாளித்துக் கொள்கிறதாகத் தான் தெரிகிறது. தங்களையும் கவனித்துக் கொண்டு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கிக் காட்டுகிறார்கள் பெண்கள்... என ஆயிரம் பேரை உதாரணம் காட்ட முடிகிறது.

ஆனால் மனைவியை நேசிக்கிற கணவர்கள் அவளது இழப்பினால் வீழ்ந்து படுகிறார்கள். பெண்டாட்டி போய்ச் சேர்ந்து விட்டால் பிள்ளைகளை வளர்க்க என்று சாக்கு சொல்லி அவசர அவசரமாக, வேறொரு பெண் வேண்டியிருக்கிறது ஆண்களுக்கு. அவர்களின் தைரிய லெட்சணம் இதுதான். பிறகு அந்த இரண்டாம் தாரம் முதல் தாரத்துப் பிள்ளைகளைப் படுத்துகிற பாடு தனிக்கதை. இவனுக்கு அதுபற்றி தட்டிக்கேட்கக் கூட முடியாது.

மனசில் குழப்பமான நினைவுகளின் மங்கல் வெளிச்சம். லிஃப்ட் தவிர்த்து மாடியேறிப் போகிறேன். லேசான மூச்சிறைப்பு. இப்படி லிஃப்ட்டில் தான் சேஷாத்ரி பிருந்தாவைச் சந்தித்திருக்கிறான்.

முதலில் அவன் காதல் கடிதம் கொடுத்த வேகம் என்ன. பின் மின்சாரத்தைத் தொட்டாற் போல விலகி கையை உதறிய அவசரம் என்ன? அவள் இதில் கலங்கி, பின் தெளிந்தாள். ஆம். தெளிந்தே விட்டாள். எதுபற்றியும் சுருக்காக அவளுக்கு முடிவுகள் எடுக்க அப்பவே முடிந்திருக்கிறது. அதை இப்போதுதான் நான் உணர்கிறேன்.

இப்போதும் அந்த முடிவெடுக்கிற வேகம்... விவேகம் என்னிடம் இல்லை.

பிருந்தா பெண்மையின் எழுச்சி நாயகி, என்று நினைத்தபடியே சிறிது நின்று மூச்சிரைத்து சமாளித்து மாடியேறினார். லிஃப்டில் ஏறி யிருக்கலாம். எப்போதும் போலான தேவையற்ற வீம்பு. அதுதான் என் பிரச்னை.

ஐசியூ - என கதவில் பார்க்கவே திக்கென்றது. அவரும் ஒருமுறை ஐசியூ வரை போய் வந்தவர்தான். முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொள்கிறார். வெளியே காத்திருக்கும் கலவர முகங்கள். அவர்களின் உலகம் நின்றுபோய் விட்டிருக்கிறது. உள் நோயாளி வெளியே வரும்போதுதான் இவர்கள் மீண்டும் வேறு இயக்கம் கொள்ள முடியும்.

ஆஸ்பத்திரியில் டெட்டால், சானிடைசர் மற்றும் துயரங்களின் நெடி.

என்னைப் பார்த்தவுடன் அழுதுவிடாதே பிருந்தா. இப்பவே எனக்கு கால்களில் சிறு சோர்வு. நடுக்கம். எங்காவது உட்கார முடிந்தால் நல்லது. வயது அல்ல காரணம். பயம். என்ன பயம்? எதற்கு பயம்? சாவு என்ற சொல்லே அதன் எதிர்பார்ப்பே பயமுறுத்துகிறது. நம் காதில் விழ வேண்டாத சொல்லாக இருக்கிறது அது. இரு. அவசரப்படாதே. சாவு. என்ற சொல் இங்கே ஏன் தேவை?

உள்ளே இருப்பவர்களின் மரணச் செய்திக்காக இவர்கள் எல்லாரும் காத்திருக்கிறார்களா என்ன?

பயம். அதன் கிளையாட்டல்கள். கிளைவிரி கோலம்.

நான் நந்தகுமாரின் அப்பா. பிரயோசனம் என்ன? பிருந்தா நான் உன்... ஈஸ்வரியின் சந்நிதிக் கதவம். அவ்வளவே.

கண்ணாடி ஜன்னல் வழியே உள்ளே எட்டிப் பார்த்தார். வரிசையாய்ப் படுக்கைகள். ஹாவென வாய்பிளக்க உடல்பொங்க மூச்சிறைத்தபடி இளைக்கும் எலும்பு உடல்கள். தனித் தனி கேபின் போன்ற மறைப்புகள். இதில் பிருந்தாவின் கணவர்... ராமமூர்த்தி யார்?

மனசை ஈரத்துணி உதறினாற் போல தேற்றிக்கொள்ள முயன்றார். எப்படி அழைப்பது. அந்தக் கண்ணாடியில் லேசாகச் சுண்டுவோமா? யாராவது உள்ளே யிருந்து அவரைப் பார்த்தால் நல்லது. நர்ஸ் மாதிரி யாராவது வெளியே வந்தால் நல்லது. அந்த பிருந்தாவே... பார்க்க மாட்டாளா உள்ளே யிருந்து?

“ஆர் யூ மிஸ்டர் ராஜகோபால்?” என முதுகில் குரல். அது ராஜி, பிருந்தாவின் பெண் என உடனே... திரும்புமுன்னரே அடையாளம் தெரிந்து விட்டது. ஆகா என்று அவளைப் பார்க்கத் திரும்பினார். என்ன பளீரென்ற முகம். நல்லமைதி. பொறுமை. எளிய புன்னகை. “வாங்க அன்க்கிள்.” சட்டென அந்தக் குளுமையான கைகளைப் பற்றிக் கொள்கிறார். ஒரு ஸ்பரிசப் பரிமாற்றம். இதுவும் மனசில் பத்திரமாய் இருக்கும்.

“நான் அம்மாவை அனுப்பறேன்...” உடனே அதை ஏற்றுக் கொள்கிறார். கையைக் கட்டிக்கொண்டு வாயிற் சேவகன் போல காத்திருக்கிறார். அம்மாபோலவே அச்சசலாய்க் குரல். உடல் அசைவுகள். இப்படிக்கூட வாய்க்குமா? சம்பந்தம் இல்லாமல் அவருக்கு வசந்த் செந்திலின் ஒரு ஹைகூ நினைவு வந்தது.

இழவு வீட்டின்

ஒப்பாரி எடுப்பில்

இறந்தவளின் குரல்

ச். சாவு நினைவு இப்போது வந்திருக்க வேண்டாமாய் இருந்தது.

அடாடா. இப்படி நினைவுகள் கன்றுக்குட்டியாய் வந்து வந்து முட்டுகிறதே.

“ராஜு?” என்று ஒரு குரல் சாட்டை மறுபடியும் அவரைத் துள்ளச் செய்தது. ஆ கண்டேன் பிருந்தாவை. ஐயமும் பண்டுள துயரும் இனி துரத்தி... என்று அனுமன் காதில் சொல்கிறாப்போல மயக்கம். இது என்ன தருணம், சந்தோஷமும் துக்கமுமான தருணமாக... இதை நான் எப்படி எதிர்கொள்ள வேண்டும், என்றே திகைக்கிறது.

“அடேடே... ராஜு, நீ மாறவே இல்லை ராஜு...” என்று ஒரு கைக்குட்டையில் கையைத் துடைத்தபடியே வெளியே வந்தாள் பிருந்தா. சிகெரெட் கையைச் சுட்ட மாதிரி விர்ர்ரென்றது அந்தக் கணம். சற்று தடுமாறித்தான் போனார். எவ்வளவு எதிர்பார்த்திருந்தார் இந்தக் கணத்தை. ஆனால் முற்றிலும் வேறு இடத்தில்... இது நிகழ்கிறது.

அணைத்துக்கொள்ள கைநீட்டிய நபரிடம் போய்ச் சரண் அடையாமல் சற்றே வெட்கத்துடன் நிற்கிற குழந்தையாகிப் போனார்.

“எப்படி இருக்கே பிருந்தா?”

“அதான் பாக்கறியே. நீ சொல்லு. நான் எப்பிடி இருக்கேன்?” என்றவள் “வா. வெளியே போகலாம்...” என முன்னே நடந்தாள். மிகப் பெரும் துயரப் பெருங்கடலான அந்த இடத்தில் நமது நல விசாரிப்புகள் அபத்தமாக அவளுக்குப் பட்டிருக்கலாம். அவருக்கும் அந்தச் சூழலை விலகி வெளியே நடப்பது ஆசுவாசமாய் இருந்தது.

வெளியே வர என்று சிறிது முகங் கழுவி யிருந்தாற் போல இருந்தது. மிகைப்படாத பௌடர் பூச்சு. பெண்கள் எப்பவுமே மேக்அப் செய்யத் தயாராய் இருக்கிறார்கள். அது ஒரு பழக்கம். காதோர நாணல்களின் சிறு நரை. இயற்கை செய்த வெள்ளி ஒப்பனை. சேஷாத்ரி சொன்னாப் போல சிறிது சதை போட்டிருந்தாள். பூசினாப் போல என்று சொல்வார்கள்.

இருந்தாலும் அந்தக் குரல், அந்த உற்சாகம், அந்த ஆளுமை... அவள்முன் நான் விசுவாசமான நாயாய் வாலாட்டி நிற்கிறேன். ஆண் என்பவன் தேர். பெண்ணால் அவன் இழுத்துச் செல்லப் படுகிறான்... என வேடிக்கையாய் நினைத்துக் கொள்கிறார். திடீரென ஒரு வேகம். இன்றைக்கு நான் எஜமானன் ஆவேன். ஒரு வேடிக்கையான சவால் போல அவர் நினைத்துக் கொண்டார்.

நோயாளியின் சொந்தக்காரர்கள் காத்திருக்க என்று ஒரு கூடம். அங்கே டிவி ஓடிக் கொண்டிருந்தது. யாரோ கிரிக்கெட் ஆட்டக்காரன் நூறை நெருங்கிக் கொண்டிருந்தான் போல. கூடமே பரபரத்து கிடந்தது. இந்நேரம் பேஷன்ட் யாரும் செத்து உள்ளே யிருந்து செய்தி வரக்கூடாது, என்று நினைத்துக் கொண்டே தாண்டிப் போனார்.

“அப்றம் என்ன? பேசச் சொன்னா பேசறதில்லையா?” என்று பின்னே பார்க்காமல் பேசியபடியே படியிறங்கிக் கொண்டிருந்தாள் பிருந்தா. புடவை சற்று நெகிழ்ந்தவாக்கில் இடுப்பு காட்டியது. டன்லப் இடுப்பு. ஒரு கிள்ளு கிள்ளலாமா?

“நேரா சர்ப்ரைசாப் போயி நிக்கணும்னு ஒரு இது...” என்றார் உற்சாகமாய். மனசு சட்டென்று ஒரு விஷயத்தைக் குறித்துக் கொண்டது. இவள் தன் கணவன் பற்றிய விஷயங்களைப் பேச விரும்பவில்லை. அவருக்கும் இது வேண்டி யிருந்தது. அவள் யார்? அவருடைய... அவனுடைய பிருந்தா. இப்போது அவள் பிருந்தா ஸ்கொயரா ஆயிட்டா. அதைப் பத்தி என்ன? அவர் அவளை அவளுடைய பிருந்தாவாகத்தானே பார்க்க நினைத்தார். அப்படி வாய்ப்புகள் இந்த சந்திப்பில் கிடைக்காது என நினைத்திருந்தார். ஆனால்... எதிர்பாராமல்... அவளே அந்த வாய்ப்பை வழங்குகிறாள்!

நாட்களாக, வாரங்ளாக உயிருக்குப் போராடும் கணவர். நாளுக்கு நாள் அவர் உடல் மேலும் நலிவடைந்து வருவதை கண்ணில் பார்க்கிறாள் பிருந்தா. வேளை தவறாமல் மருந்தும் சோதனைகளும் மருத்துவர் மேற்பார்வையில் உணவும் உடைமாற்றலும்... உணவுக்காக அல்லாமல், காற்றைக் குடிக்கிற ஆவேசத்தில் வாயைத் திறந்து ஹா ஹா என மூச்சு வாங்குகிறார் அவர். மயக்கமான உறக்கத்த்தில் இருக்கிறவர், எப்பவாவது அசைவு தந்தால், அவர் கண் விழித்தால், சட்டென எழுந்து அவர் அருகில் போய் என்ன, என விசாரிக்க, மருத்துவர் எதுவும் சொல்ல விரும்பினால் கேட்டுக் கொள்ள என தயாராய், எப்போதும் தயாராய் சுய அலுப்பு மறந்து அவள் காத்திருக்கிறாள். எதிர்பார்ப்பது அல்ல, எதிர்பாராததை எதிர்பார்த்து அவள் காத்திருக்கிறாள். எதுவும் நிகழலாம். எந்த நொடியிலும் நிகழலாம். நிகழட்டும். காலத்தின் முன் குனிந்து அதன் அரிவாள் வெட்டுக்குத் தலைநீட்டி அவள் காத்திருக்கிறாள். அல்லது பூமாலை விழ, அவர், அவள் கணவர் நோயில் இருந்து மீண்டும் வரலாம்... ஆனால் அது இல்லை. இத்தனைநாள் போராட்டத்தில் மருத்துவர்களே அத்தனை நம்பிக்கைப் படவில்லை.

அது ஐசியூ வார்டு. வெளி டீவி எனில் சட்டென சேனல் மாற்றி வேறு சூழலுக்கு முயற்சி செய்யலாம். இது ஒரே சீரியல். முழுக்கவே கிளைமேக்ஸ் காட்சிகள் தான்.

“என்ன திடீர்னு மதுரை...”

“உன்னைப் பார்க்கத்தான்...”

“கதை. கவிதை எழுதறவன் எழுதிய கதை. காரியம் இல்லைன்னா நீ எதுக்கு மதுரை வரே? என்னைப் பத்தி ஞாபகமாவது இருக்கா உனக்கு?”

“அலுவலக விஷயமா ஒரு விசிட்... எதிர்பாராம அமைஞ்சது.”

“எதிர்பார்த்து நீயா அமைச்சிட்டிருக்கலாம்... பரவால்ல...” என்கிறாள் பிருந்தா.

நாடகத்தில் அவள் பாட அவர் பின்பாட்டு பாடுகிறாப் போலவே இருந்தது எல்லாம். சரி. நாமே புதுசா ஆரம்பிப்போம்.

“சப்பாத்தி மாவு பிசைஞ்சி நீட்டுக்கு உருட்டி சப்னு அகலமா அமுக்கினாப்ல ஆயிட்டியே பிருந்தா?”

“எம் பொண்ணுக்கு சப்பாத்தின்னா இஷ்டம். அவளுக்கு இட்டுப்போட்டு இட்டுப்போட்டு இப்பிடி ஆயிட்டேனோ என்னவோ. சாப்பிட்டியா நீ? எனக்குப் பசிக்குது.”

“பக்கத்துல நல்ல ஹோட்டல் எதும் இருக்கா சொல்லு.”

“பக்கத்துல வேணாம். நல்ல ஹோட்டல் போவோம்.”

திரும்ப அவளே வழி நடத்துகிறாற் போல ஆயிற்று. அந்த மெலடி மேலடி. அதுதான் பிருந்தா. தன் கை ஓங்கி ஆனால் அது தெரியாத பிரியம். பெண்கள் எக்காலமும் ஆண்களுக்கு ஆச்சர்யம்தான்.

வெளிக் காற்றின் சிலு சிலு இருவருக்குமே வேண்டி யிருந்தது. சிறு குளிரான காலைதான். அவளும் அதி கவன அறையில் குளிர்சாதனத்தில் தான் இருந்திருப்பாள். ஆனாலும் இந்தத் தளர்வு, விடுபட்ட நிலை வேண்டி வெளியே வந்திருக்கிறாள்.

அவளது இயக்கமே அவரை அயர்த்தியது. ஒரு ஆட்டோவை நிறுத்தி “அன்னலட்சுமி” என்றாள் அவள். அவர் நுழைந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டபோது அவரது கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டாள். அவள் கையில் அலைபேசி எதுவும் இல்லை. வேண்டாம் என்று தவிர்த்துவிட்டு வந்திருக்கலாம். இந்த நிமிடங்ளை எனக்காக அல்லாமல் வேறு யாருக்கும் தர அவள் சம்மதப் படவில்லை, என்பதாக நெகிழ்வுடன் உணர்ந்தார்.

அவர் கை அலைபேசி. அதில் என் குழந்தைள், மனைவி படம் இருந்தால் காட்டச் சொல்வாள் என எதிர்பார்த்தார். அட அவளது தேவை நான். என் அருகாமை. இந்த சொற்பமான காலத்தின் இடைவேளை. அதை அவர் உணர்ந்தார். அவளை இன்னும் சந்தோஷமாய் உணர வைக்க என்னால் முடியுமா, என்று யோசித்தார்.

“ஓயாம பேசுவே. மாறிட்டே ராஜு” என்றாள்.

“அப்படியா” என்றார் அவளை நெற்றியில் முத்தம் இட்டபடியே.

“நீ மாறிட்டே ராஜு...” என்றவள் அவர் பார்ப்பதைப் பார்த்துவிட்டு, “எனக்கு முத்தங் குடுக்கற அளவு தைரியம் வந்திட்டது உனக்கு” என்றாள்.

“இது மதுரை. இங்க அதிகாரம் மீனாட்சின்றது சரியா இருக்கு...” என்று சிரித்தார் ராஜகோபால்.

••

ஹோட்டல் தனி அறை. ஏ.சி. உள்ளே நுழைந்த ஜோரில் அடித்தாளே ஒரு முத்தம். திகைத்துப் போனார். “நீ மாறவே இல்ல பிருந்தா...” என்றார். டி போட்டு அவளைக் கூப்பிட தயக்கமாய்த்தான் இருந்தது.

“என்ன சாப்பிடறே?”

“ஸ்வீட்...” என்றாள். “உனக்கு பிடிச்ச ஸ்வீட்.”

“எனக்கு பிடிச்ச ஸ்வீட் நீதான்டி.” என்று இப்போது டி சேர்த்துக் கொண்டார்.

“பில்லுக்கு அழாதேடா. நான் வேணாலும் குடுக்கறேன்.”

“சர்வருக்கு டிப்ஸ் குடுத்து சாப்பிட எதுவும் வேணாம். நீ கொஞ்சநேரம் இந்தப் பக்கம் வராதேன்னு சொல்லிறட்டா?” என்கிறார் தாபத்துடன். அவள் சிரிக்கிறாள்.

“எப்பிடிடி உன் பொண்ணு உன்னை மாதிரியே இருக்கா? அதும் அதே குரல். அசந்துட்டேன் முதல்ல கேட்டதும்...”

“ஏ பாவி. நல்லவேளை. அவகிட்ட ஒண்ணும் கன்னா பின்னானு உளரலியே?”

“இல்லை. இப்பதான்... உன்னைப் பார்த்ததும்தான் உளர ஆரம்பிச்சிருக்கேன்.”

அவள் சிரித்தாள். மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து சிறிது அருந்தினாள்.

“என்ன படிக்கறா?”

“பி ஈ. எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன். இன்னிக்குப் போணியாறது அதுதானே.”

“ஆமாம். இதெல்லா ஒரு சீசன். ஒரு காலத்துல பி காம், பி பி ஏ,..ன்னு பரபரப்பா இருந்தது. என்னைத் தேடினியா பிருந்தா.”

“இல்லை” என்றாள். “அது ஒரு காலம். அது காலமாயிட்டது. இழப்புகளின் காலம். சரி. இழப்புகள் என்றாலும் அருமையான கொந்தளிப்பான காலங்கள். அதை அப்படியே மனசில் வெச்சிக்கிட்டேன். ஒட்டகம் பலநாள் தேவைக்கான தண்ணியை தன் பைக்குள்ள சேமிச்சி வைக்குமாமே. அதுமாதிரி.”

“நீ ரொம்ப அறிவாளி பிருந்தா. பிரச்னைன்னு வரும்போது நல்ல நிதானத்தோட கையாளத் தெரியுது உனக்கு. நான் வெலவெலத்துப் போகிறேன். நான் உன்னைவிட படிச்சவன். வெளிநாடெல்லாம் ஆபிஸ் செலவுல சுத்தறேன். ஆனாலும் சொல்றேன். உன்னோட உள் அழுத்தம், உள் கனல் என்னாண்ட இல்ல. ஐம் ய வீக் பெர்சன்.”

“ஒருத்தன் சொன்னானாம். மை ஒய்ஃப் இஸ் மை ஸ்ட்ரென்த்...” என்று நிறுத்திவிட்டுப் பிறகு சேர்த்தாள். “அன்ட் ஆல் அதர் விமன் ஆர் மை வீக்னெஸ்...” சிரித்தார்கள். பிறகு தொடர்ந்து பேசினாள் அவள்.

“சரி. என்ன சொல்ல வர்றே?”

“உள்ள வந்த ஜோரில் நீ அடிச்சியே அந்த முத் த் தம். அந்த அழுத்தம். அந்த சூடு...” என ராஜகோபால் அவளைத் தன் பக்கம் இழுக்கு முன் சர்வர் வந்தான்.

ரசமலாய் முதலில் கொண்டு வரச் சொன்னார்.

“மிஸ்டர் கொஞ்சம் தள்ளி உக்காருங்க. இவ்ளோ இடம் காலியாக் கெடக்கு.”

“நம்ம ரெண்டு பேருக்கு ஒரு சேர் போதுமே...” என்று மறுபடியும் அசட்டுத்தனமாய் உளறினார்.

“பத்தாது. நான் குண்டு,” என்றவள் “சர்வர் பாத்து சிரிக்கப் போறான்...” என்றாள்.

“சர்வர் கெட்டவன். இந்த ஊரே கெட்டது. உலகமே கெட்டது.”

“நம்ம ரெண்டு பேரைத் தவிர...ன்றீங்களா? வாட் நான்சென்ஸ்” என்றாள். “இன்னும் அந்த வசனத்தை ஞாபகம் வெச்சிருக்கியா ராஜு?”

“ஸ்ரீதருக்கு இன்றைக்குத் தலைப்புச் செய்தி இது.”

“மனுசாளுக்கு ஏன் வயசாறது?” என்று கேட்டாள் அவள். “ஐயோ. நானும் உளர்றேன். இருந்தாலும் திசிஸ் ட்டூ கொயர் மச்.”

கிண்ணத்தில் இருந்த ரசமலாயை ஒரு ஸ்பூனால் உடைத்து ஒரு வாய் சாப்பிட்டாள். “சரி. நீ உளரு ராஜு.”

“பெண்கள் ஆச்சர்யமானவர்கள். கரப்பான் பூச்சிக்கு பயந்து கணவரை அழைத்து அலறுவார்கள். சைக்கிள் விட வெலவெலப்பார்கள். ஆனால் உறவுகளைக் கையாள்கையில் அவர்கள் பலசாலிள். திறமைசாலிகள்.”

நேரக் கணக்கு பிசகி யிருக்கலாம். என்னென்னவோ பேசிக் கொண்டார்ள். அனர்த்த ஆனந்த நர்த்தனம் அது. அந்தப்பிள்ளை சென்சுரி போட்டானா? யாருக்குத் தெரியும்? யார் கவலைப் பட்டார்கள்? என்ன சாப்பிட்டார்கள், என்பதே தெரியவில்லை. வெளியே வெயில் உக்கிரப் பட்டிருந்தது. உள்ளே ஏ சி. மனம் ஏடாய் திவலையாய் மிதந்தது.

எனினும் பிரிவு என்பது மானுட வாழ்வின் நிர்ப்பந்தம். வெளியே வந்து பீடா எடுத்துக் கொண்டார்கள். டாக்சி பிடிக்கையிலேயே லேசான இருள் சூழ்ந்தது அவருக்கு. மனம் படபடவென்று ஆகிவிட்டது. அவளுக்கும் அப்படித்தான் இருக்கும். இருவரும் சட்டென்று அமைதியானாற் போல ஆகியிருந்தது நிலைமை.

இவ்வளவே எனக்கு வாய்க்க முடியும், என்கிறாற் போல அவள் தெளிவாய் இருந்தாள். சிறு விடுதலை. நான் நாற்றெனப் பிடுங்கி நடப்பட்டவள். எனக்கு பருவ வயதில் ஒரு பெண். அவளது எதிர்காலத்தை நான் உளி கொண்டு செதுக்க வேண்டும்.

ஆஸ்பத்திரி திடுமென வந்து நின்றது. அவள் இறங்கிக் கொண்டாள். கை குலுக்கினாள். பிறகு சொன்னாளே... திருவாசகம்.

“என்னை மறந்துரு ராஜு.”

“ஏய்” என்றார் பதறி.

“ஆமாம்” என்றாள். “ஒரு கனவு கண்டேன் நான். இப்போது கண் விழித்து விட்டேன்...” என்றாள். “குட் மார்னிங் எவ்ரிபடி.”

திகைத்து நின்றார் ராஜகோபால். அவள் திரும்பிப் பார்க்காமல் ஆஸ்பத்திரிக்குள் நுழைவதை வாயடைத்துப் போய்ப் பார்த்தார். கடைசியில்... இந்த நிமிடங்களிலும் அவள் ஜொலித்தாள். ஜெயித்துக் காட்டினாள்.

ஒரு குப்பியின் தொடமுடியாத உள் பக்கம் அவள்... என நினைத்துக் கொண்டார்.

அலையென வந்தாள். பொங்கினாள். தழுவிவிட்டு நழுவிப் போனாள். பெருங் கடலில் கரைந்தாற் போல.

பறக்கிற பறவை சற்றே கிளை ஒன்றில் இளைப்பாற வந்தாற் போல. வந்தாள் பாதம் பதித்து சிறிது நேரம் அமர்ந்துவிட்டு மீண்டும் பரந்த வானின் கிளம்பிப் பறந்து ஒரு புள்ளி போல ஆகிவிட்டாள்.

இது கனவுதான்.

பின் எது நினைவு? ஈஸ்வரி நிஜம். ராஜி நிஜம். நந்தகுமார் நிஜம்.

சென்சுரி அடித்தானா தெரியவில்லை, என நினைத்தேன் அந்தக் கணம். அவளது கணவன் பற்றி யோசிக்கவில்லை நான்.. என அவருக்கு திடீரென யோசனை வந்தது.

ஆம். இதுதான் நிஜம்.

டாக்சியில் வர்ணனை ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பையன் சென்சுரி அடித்து விட்டான். பிருந்தாவின் கணவன் பற்றி யாரும் செய்தியில் சொன்னால் நல்லது.

அவள் தகவல் சொல்ல மாட்டாள்... என்று தோன்றியது.

ராம் பாலஸ். டாக்சி ஹோட்டல் வாசலில் நின்றது.

••

நன்றி லேடிஸ் ஸ்பெஷல் மாத இதழ்

அலைபேசி 91 97899 87842 / 91 94450 16842

storysankar@gmail.com

Comments

Popular posts from this blog