
உறைவு எஸ்.சங்கரநாராயணன் (published in kanayazhi monthly) யா ரோ நடமாடுவதுபோல் இருந்தது. சட்டெனத் திரும்பிப் £ ர்த்தாள் மாதங்கி. ஒருவேளை பிரமையோ? அப்படி ஓர் உணர்வு அடிக்கடி ¢ அவளுக்கு வந்துகொண்டே யிருந்தது. யாரோ பார்க்கிறார்கள். யாரோ நம்மை உற்றுக் கண்காணிக்கிறார்கள். யாரோ கூட நடமாடுகிறார்கள். ஏன் இப்படி தெரியவில்லை. நினைவுதெரிந்த நாளில் இருந்தே இந்த பிரமை அவளுக்கு இருந்துவந்தது. பெண்கள் அப்படியொரு சூட்சும மோப்பத்துடனேயே வளர்க்கப் படுகிறார்கள். அம்மாவுக்கு எப்பவுமே தன்னையிட்டு அல்ல, இவளையிட்டு பயம் அதிகம். தன்சார்ந்த பயங்கள் இயல்பாகவே அவளுள் விதைக்கப்பட்டவை. ஆண் குழந்தை பெற்றால் அது, அந்த பய உணர்ச்சி, கொஞ்சம் மேடு தட்டியும், பெண் குழந்தை என்றால் மேலும் பள்ளம் பாரித்தும் போகிறது. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு. பெண்ணின் முதல் இலக்கணம் பயம். ஆண் அச்சம் மடம் ரெண்டையுமே சேர்த்து எள்ளுகிறான். அச்சம் என்பது மடமையடா. யாரோ பார்க்கிறார்கள், என்பதற்கும் யாரோ பார்க்கக் கூடும் என்று உள்ளே ஒலிக்கிற எச்சரிக்கைக்கும் பேதமில்லையோ...