நிசப்த ரீங்காரம் பகுதி 2

வருத்தப்பட்டு உயிர் சுமக்கிறவர்கள்

 


ளமை இருக்கும் வரை இருந்த இறுக்கமான கட்டுக்கள். பிடிமானங்கள் முதுமையில் சற்று தளர்ந்து தான் போகின்றன. உடல் தளர்வுக்கும் மனத் தளர்வுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை, என்றுதான் தோன்றுகிறது. வாழ்க்கை அத்தனை உற்சாகமானது இல்லை போலத்தான் தெரிகிறது, இப்போது.

இதை ஒரு காலத்தில் உற்சாகமாக நான் உணர்ந்து கடந்திருப்பதே இப்போது யோசிக்க வியப்பாக இருக்கிறது.

அதிகம் வெற்றிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்ட மனது. எப்போது அது தோல்வி சார்ந்து கவனப்பட அல்லது கவலைப்பட ஆரம்பித்தது தெரியவில்லை. உடல் சுணக்கம் காட்டும்போது யோசனைகள் உட் சுருண்டு கொள்கிறது போலும். குளிர் தாளாமல் தன்னையே சுருட்டிக் கொண்டு ஒடுங்கிக் கொள்ளும் நாட்டு நாய் போல.

இடுக்கண் வருங்கால் நகுக, என்கிறார் வள்ளுவர். அது வயசான காலத்தில் அவர் தனக்குத் தானே சொல்லிக் கொண்டதாய் இருக்கலாம்.

இடுக்கண் மாத்திரமே வந்தால் என்ன செய்வது?

நான் மறு கன்னத்தைக் காட்டினேன். இரண்டிலும் அறை வாங்கியவன், இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

பஸ் நிறுத்தத்தை அடையுமுன் வந்து நின்ற பேருந்தை ஓடி எட்டி நான் ஏறிக் கொண்ட காலம் ஒன்று இருந்தது. அது என் இறந்த காலம். இப்போது அது என்னால் முடியாது. என் ஓட்டங்கள் அடங்கி விட்டன. இது நிகழ்காலம். எனது நிகழ்காலம் ஒருவிதத்தில் எனக்கு, நான் இறந்த காலம்.

சில நாட்களில் நான் பஸ்ஸைத் தவற விடும் கவலையுடன் நடந்தபடி பரபரப்பாவதை உணர்ந்த கண்டக்டர் எனக்காக பஸ்ஸை நிறுத்தி காத்திருந்து என்னை ஏற்றிக் கொண்டு விசில் தருகிறார். நன்றி நண்பா.

விசில் அடிக்கும் எல்லாப் பையன்களும் கெட்டவர்கள் அல்ல, என்று புரிகிறது.

இப்போது இவ்வாறாக இந்த கண்டக்டருக்கு நான் கடன்பட்டு விடுகிறேன். இவர் என்றில்லை. என்மேல் இரக்கம் சுரக்கும் எல்லாரிடத்தும் நான் கடன்பட்டு விடுகிறதாக அல்லவா ஆகி விடுகிறது.

எனக்கு கடன் வாங்குவது ஒப்புதல் இல்லை. ஒரு காலத்தில் நான் கடன் இல்லாமல் வாழ்ந்தவன்.

இலங்கை வேந்தனாகக் கலங்குகிறேன்.

இதை எப்படி எவ்வாறு நான், என் இந்த முதுமைக் காலத்தில் திருப்பி அளிக்க முடியும்?

கடன் அன்பை முறிக்கும் என்றால், நான் கடன் படாமல், அந்தக் கண்டக்டர் இரக்கம் காட்டாமல், நான் முனைந்து ஓடி அந்த பஸ்சில் ஏற முயன்று தடுமாறிக் கீழே விழுந்திருந்தால், அதுவும் எலும்பை முறிப்பதாக ஆகி விடாதா?

நாம் எப்படி வாழ வேண்டும் என நாமே முடிவு செய்கிறாற் போல, நமது இறுதி நாட்களையும் நாமே முடிவு செய்தால், செய்துகொள்ள முடிந்தால், உலகம் இப்போது ஒருவேளை பாதி காலியாகி யிருக்கும்.

வாழ்கிற ஆசைக் காலம், அது போய் இப்போது சாகிற ஆசைக் காலமாக அல்லவா ஆகிவிட்டது.

நான் காத்திருக்கிறேன் ரயில் நிலையத்தில். என் ரயில் இன்னும் வரவில்லை. எப்போது வரும்? யாரிடம் கேட்க முடியும்?

பிறை நிலவு சூடிய சிவனாம். வழுக்கைத் தலையை அப்படிப் பார்த்திருப்பர்.

வயதானதில், புலன்கள் ஒடுங்க ஆரம்பித்து விட்டன. புலன் ஒடுக்கம் அவசியம் என்ற முன்னோர் வாக்கு, அது இப்போது தன்னைப்போல பலிதம் ஆகி விட்டது. ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது.

‘பாட்டும் பரதமும்’ என்று ஒரு திரைப்படம். பி.மாதவன் படம் அது. அதில் ஒரு நாட்டியப் பெண்ணைப் பற்றி இப்படி வசனமும் அதற்கு பதிலும் வரும்.

“இவங்கதான் பரத நாட்டிய தாரகை •••••ஆறு வயசில் ஆட ஆரம்பிச்சாங்க. இப்ப வயசு அறுபது. இன்னமும் ஆடிட்டு இருக்காங்க.”

இதற்கு அடுத்த நபர், நாகேஷ் என நினைவு. பதில் சொல்லுவார். “அறுபது வயசானால் இவங்க ஏன் ஆடணும்? உடம்பு தன்னால ஆடுமே.”

இன்னொரு நகைச்சுவை கூட நினைவு வருகிறது.

“அந்த வீட்டு வாசல்ல ஆம்புலன்ஸ் நிக்குதே?”

“அந்த வீட்டுத் தாத்தாவுக்கு ஐம்புலன்சும் அடங்கிட்டதாம்.”

என் கண்கள் அத்தனைக்குத் தெளிவாகப் பார்க்கும் திறனை இழந்து விட்டன. நான் கண்ணாடி அணிகிறேன். காதுகள் ஒடுங்கி விட்டன என சிலர் ஒலிகளை விஸ்வரூபித்துக் கேட்கும் கருவிகள் அணிகிறார்கள்.

இதைப் பற்றியும் ஒரு பிரபல நகைச்சுவை உண்டு.

ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அவர். எதோ கல்யாணத்துக்கு அழைப்பு வரப் பெற்றவர், அலுவல் முடிந்து அந்தக் கல்யாண வரவேற்புக்குப் போக நினைத்தார். மாலையில் அவர் அலுவலகத்தில் இருந்து கிளம்பி வெளியே கார் வரை வந்துவிட்டார். கல்யாண மண்டபம் பெயர் என்ன, என யோசித்துப் பார்த்தார்.

அவரிடம் கல்யாணப் பத்திரிகை இருந்தது. ஆனால் அதைப் பிரித்து வாசிக்க அவருக்குக் கண்ணாடி தேவைப் பட்டது. கோட் பாக்கெட்டுக்குள் கைவிட்டுப் பார்த்தால் கண்ணாடி இல்லை. அவர் கண்ணாடியை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு வந்திருந்தார்.

பரவாயில்லை, என்று தெருவில் எதிரே வந்த ஒருவனிடம் அவர் கல்யாணப் பத்திரிகையைக் காட்டிக் கேட்டார். “இதுல என்ன கல்யாண மண்டபம்னு போட்டிருக்கு?”

அதற்கு அவன் சொன்ன பதில், பல்கலைக் கழகத் துணைவேந்தரையே தூக்கிவாரிப் போட்டது.

அவன் சொன்னான். “சாமி எனக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. நானும் உங்களை மாதிரிதான்…”

உடல் தளர்ந்து விட்டது. எனது நடைவேகம் மட்டுப்பட்டு அபார நிதானம் வந்துவிட்டது. நடக்கையில் பிடித்துக் கொள்ள கை எதையாவது தேடுகிறது.

இரண்டு கால்கள் அல்ல, இப்போது எனக்கு கால்கள் மூன்று. இனி? அடுத்து… நான்கு கால்களும் அற்ற கட்டில், என்னைத் தூக்கிச் செல்ல ஒருவேளை வரும். அதுவரை நான் மூன்று கால்களுடன் நடமாடிக் கொண்டு, காத்துக்கொண்டு தான் இருக்க வேண்டும்.

மரணத்தை விட, இந்தக் காத்திருத்தல் உக்கிரமான விஷயமாய் இருக்கிறது. மரணம், அது கிட்டே வராமல் தூரத்தில் இருந்தே போக்கு காட்டுகிறது. மரணம் என் முன்னே கேலியுடன் அடிக்கடி வந்து நின்று போக்கு காட்டிவிட்டு காணாமல் போகிறது. அது கடைசியாக எப்போது வந்தது? நான் காத்திருப்பதை அது எப்படி அறிந்து கொண்டது?

ஒரு காலத்தில் எனது உற்சாகத்தில் என் மனக் கேணி தொட்டனைத்து ஊறியது.

இப்போது என் மனக் கிணற்றில் சொற்கள் வற்றி விட்டன. ஒலிகளே எனக்கு அலுப்பாய் இருக்கிறது. என் நிசப்தமோ ரீங்கரிக்கிறது. காதுகளில் தேவையற்ற ஒலிகள். சட்டென எழுந்துகொள்ள முயன்றால் என் மூளையில் எதோ மிருகம், கிர்ர் என உறுமுகிறது.

இத்தனை நாள் எனக்குப் பணிந்து வேலைசெய்த அவயவங்களின் வலி முனகல் அது.

தெருவில் தூரத்தில் இருந்தே மணியடித்தபடி வரும் தபால்காரன். எனக்குச் சொல்ல அவனிடம் சேதி எதுவும் இல்லை. கடிதம் எதுவும் எனக்கு வருவது இல்லை.

ஒருவேளை என்னைப் பற்றிய கடைசிச் செய்தியை நாளை ஒருநாள் அவன் பிறருக்குச் சொல்வானாய் இருக்கும்.

ஹ்ம். பிரச்னை என்னவென்றால், வயதான காலத்தில் இளமையாய் உணர ஆசைப் படுவது அதைவிட அபத்தமானதாய், ஆபாசமாய் அல்லவா ஆகி விடுகிறது.

ஒரு பிரபலமான ஆங்கிலக் கதை சொல்வோம். எழுதியவர் குஷ்வந்த் சிங். கதையின் தலைப்பு ‘பாட்டம் பின்ச்சர்ஸ்.’ அதாவது, புட்டம் கிள்ளுகிறவர்கள் என்று சொல்கிறார். குஷ்வந்த் சிங் என்ன இளந்தாரியா? வாலிப மிடுக்கனா என்ன? அதொன்றும் இல்லை. அட, அது தனி பஞ்சாயத்து.

இப்போது கதை. என் நினைவில் இருக்கிற அளவில் சொல்கிறேன்.

ஓர் இளைஞன். சந்தைப் பகுதி வழியாக நடந்து போய்க் கொண்டிருக்கிறான். அவன் எதிர்பாராத அளவில் ஒரு காட்சியை கவனிக்கிறான். கிழவர் ஒருவர். சந்தைப் பகுதியில் பெண்கள் பிளாட்பாரம் பார்க்க குனிந்தபடி சாமான்கள் எதோ வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கிழவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவர் பாட்டுக்கு அந்தக் கூட்டத்தின் நடுவே புகுந்து புறப்படுகிறார். யாரும் அவரை கவனிக்கவில்லை.

நல்ல நெரிசல். உள்ளங் கையை விரித்தபடி கிழவர் கூட்டத்தில் கலக்கிறார். குனிந்த வாக்கில் சாமான்கள் வாங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் ஒவ்வொரு புட்டமாக அவர் கை தடவி வருடிக் கொண்டே செல்கிறது. யாரும் நிமிர்ந்து அவரைப் பார்க்கவில்லை. யாராவது பார்த்தாலும் அதற்குள் அவர் அவர்களைக் கடந்து போயிருப்பார்.

கிழவர் மாட்டிக் கொள்ளவில்லை.

பையனுக்குச் சிரிப்பு. நல்ல ரசனைக் காரராக இருப்பார் போல இருக்கிறதே. கிழவரானால் எனன, அவருக்கு இப்படி ஓர் ஆசை.

மறுதரம் அதே சந்தைப் பகுதி வழியாக பையன் போனபோது அவனுக்குக் கிழவன் நினைவு வருகிறது. அதிர்ஷ்டக்கார மனுசன், என னநினைத்துக் கொண்டவனுக்கு திடீரென ஓர் உந்ததுதல் வருகிறது. நாமும் அவரைப் போல அனுபவித்தால் என்ன?

தன்னை அவனால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

அந்தக் கூட்ட நெரிசலில் அவன் பார்க்கிறான். வியாபார மும்முரம். பெண்கள் குனிந்த வாக்கில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பையன் மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த நெரிசலுக்குள் நுழைகிறான். தன் உள்ளங் கைகளை விரித்துக் கொண்டு ஊடே கடந்து நடக்கிற சாக்கில், ஓர் இளம் பெண்ணின் பிருஷ்டப் பகுதியை அவன் வருடித் தந்தபோது, சட்டென நிமிர்ந்து அவள் அவன் கையைப் பிடித்து விடுகிறாள்.

“ராஸ்கல் என்ன காரியம் பண்ணினே?” என அவனைச் செருப்பைக் கழற்றி அடித்து கூச்சல் போடுகிறாள். அவனால் திமிர முடியாமல் அவனை அழுத்தித் தரதரவென இழுத்துக் கொண்டு போலிஸ் நிலையம் விரைகிறாள்.

அவன் எவ்வளவோ மன்னிப்பு கேட்டும் அவள் விடுவதாக இல்லை. போலிஸ்காரனுக்கும் இவனை எச்சரித்து விட்டுவிடலாம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவள் சமாதானம் அடையவில்லை.

போலிஸ் நிலையத்தில் இருந்து அவள் தன் அப்பாவுக்கு அலைபேசியில் அழைப்பு விடுக்கிறாள்.

அவள் அப்பா போலிஸ் நிலையத்துக்கு வருகிறார். பையன் அவரைப் பார்த்ததும் அதிர்ந்து போகிறான்.

அவன் நேற்று சந்தையில் பார்த்தானே, பெண் புட்டங்களை வருடியபடி போன அதே ரசனைக்கார மனுசன். அவர்தான் அவளது அப்பா.

“என்ன விஷயம்?” என்று அப்பா மகளை விசாரிக்கிறார். “இவன்… என் பின் பக்கத்தைத் தடவினான் அப்பா” என அவள் முறையிடுகிறார்.

அப்பா திகைத்து அப்படியே நிற்கிறார்.

ஒருவிநாடியில் சமாளித்துக் கொண்டு சொல்கிறார்.

“பாவம் சின்னப் பையன் தெரியாமப் பண்ணிருப்பான். விட்ருங்க.” கதை இப்படி முடிகிறது.

இப்படியான கதைகளை யெல்லாம் எப்பவாவது தான் வாசிக்க வாய்க்கிறது. வெல்டன் குஷ்வந்த் சிங்.

முதுமையான கதாநாயகன் கொண்ட ஓர் ஆங்கிலப் படம் ஞாபகம் வருகிறது.

வயதான மனுசனுக்கு இந்த வயதில் காதல். அதுவும் ஓர் இளம் பெண்ணிடம் என்பது கதை. அவர் காதலியைச் சந்திக்கிற உற்சாகத்துடன் வீட்டில் இருந்து கிளம்பி காரில் ஏறி அமர்ந்தால் காரில் ‘செல்ஃப்’ எடுக்காது!

எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள்…

ஒரு மலையாளக் குறும்படம். டி.வி தொடர் என்று ஞாபகம்.

ஒரு பெண்ணை லாம்ஜ் ஒன்றுக்குத் ‘தள்ளிக்’ கொண்டு வந்தவன், அவன் ஆள் குட்டை. லாட்ஜ் அறைக்கு அவளை அழைத்துப் போனால் அந்த அறைக்கு தாழ்ப்பாள் உயரத்தில் இருக்கும். குட்டையான அவனுக்கு எட்டாது. துள்ளித் துள்ளி தாள் போடத் தவிப்பதாக காட்சி!

எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ‘ஓல்ட் மேன் அன் தி சீ’ நினைவில் உள்ளதா? நிற்க. இடைச் செருகலாய் ஒரு சேதி பரிமாறி விட்டு மேலே செல்ல விருப்பம். இந்தத் தலைப்பில் வரும் ஓல்ட் மேன், என்ற வார்த்தையைத் தமிழில் ‘கிழவன்’ என மொழிபெயர்க்கிறார்கள். அது தவறு. ஓல்ட் மேன், என்பது ஆங்கிலத்தில் ஒரு மரியாதையான விளிச்சொல். தமிழில் கூட கிழவன், கிழத்தி என்ற சொற்கள் மரியாதையாகவே சங்க காலத்தில் குறிப்பிடப் பட்டன.

ஓல்ட் மேன், என்றால் ஒரு கப்பற் படையின் தலைவன், கடலை நன்று அறிந்தவன் என்ற உள்ளடக்கத்தில் தான் ஹெமிங்வே அந்தச் சொல்லைப் பயன்படுத்தி யிருக்கிறார். கடல் சார்ந்த அநேக விஷயங்கள் அறிந்த அவனை இக்காலச் சூழலில் வெறுமனே கிழவன், என அழைப்பது அவனது இயலாமைத் தன்மையைத் தூக்கிப் பிடிப்பது போல ஆகவில்லையா?

இதே நாவலை நான் தமிழில் மொழிபெயர்த்தேன். ஓல்ட் மேன் அன் தி சீ, தலைப்புக்கு என் மொழிமாற்றம் ‘பெரியவர் மற்றும் கடல்’ என அமைகிறது. என் மொழிபெயர்ப்பில் இந்த நாவலை வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப் பார்க்கலாம்.

பெரியவர் மற்றும் கடல், நாவலின் கதாநாயகன் சாண்டியாகோ. எண்பது நாட்களாய் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று ஒரு மீன் கூட அவன் வலையில் சிக்காமல் வெறும் கையுடன் கரை திரும்புகிறான்.

அசோகமித்திரன் எழுதிய ஒரு சிறுகதையில் ஒரு வயதான மனிதர் வருகிறார். ஏறத்தாழ எழுபது வயது டாக்டர் ஒருவர். தினசரி அவர் தன் கிளினிக் வருவார். அவரது கிளினிக்கின் மூடு கதவுகள், தனித் தனி மரப் பலகைகளால் ஆனவை. ஒவ்வொன்றாக எடுத்து வைத்து கதவைத் திறக்க வேண்டும்.

அவரைப் பார்க்க பார்வையாளர் என்று யாருமே வர மாட்டார்கள். அவரும் நம்பிக்கை இழக்காமல் தினசரி வருவதும் கதவுகளை சிரமப் பட்டுத் திறந்து வைத்துக் கொண்டு தனது நோயாளிக்காகக் காத்திருப்பதுமாக இருப்பார்.

ஒருநாளும் அவர் சம்பாத்தியம் என்று பணம் வீட்டுக்குக் கொண்டு வந்ததே இல்லை. அவர் மனைவிக்கு இது குறித்து எரிச்சலும், தன் கணவர் மீது ஆத்திரமும் உண்டு. சில நாட்களில் அவர் இரவு வீடு திரும்பும் போது, வாசலில் அவர் வந்துநின்று கதவைத் தட்டிக் கூப்பிட்டாலும் அவள் திறக்க மாட்டாள். அவருக்கு அது அவமானமாய் இருக்கும். இதற்கு என்ன செய்வது?

அன்றைக்கும் டாக்டர் கிளினிக்கை மூடிவிட்டு வீடு திரும்பினார். கதவுப் பலகைகளை எடுத்துச் சாத்த யாராவது உதவி செய்வார்களா என்று பார்த்தார். அவரைத் தெரிந்த நண்பர் ஒருவர் தெருவில் போய்க் கொண்டிருந்தவர் “டாக்டர், கிளம்பிட்டீங்களா?” என்றபடி வந்து கதவுப் பலகைகளைச் செருகி மூட உதவி செய்தார்.

“வாங்களேன் வீடு வரை பேசிட்டே போகலாம்…” என்றார் டாக்டர். இருவரும் பேசிக் கொண்டே தெருவில் நடந்து போனார்கள்.

தன் வீட்டு வாசல் வந்ததும் டாக்டர் அந்த நண்பரிடம் “என் பேரைச் சொல்லி சத்தமாக் கூப்பிடுங்க…” என்றார். நண்பருக்குப் புரியவில்லை. என்றாலும் அவர் கதவைப் பார்த்து சத்தமாய் “டாக்டர்?” என்று கூப்பிட்டார்.

டாக்டரின் மனைவி கதவைத் திறந்தபடி “அவர் இல்லியே. கிளினிக் போயிருக்கார்” என்று பேசிக் கொண்டிருக்கும்போதே விருட்டென்று டாக்டர் தன் வீட்டுக்குள் நுழைந்தார். புன்னகையுடன் நண்பரிடம் “போய்ட்டு வாங்க” என்றார்.

இந்தக் கதைக்கு சிரிப்பதா அழுவதா?

இப்படி ஒரு இரண்டுங் கெட்டான் சம்பவத்தை தாஸ்தயேவ்ஸ்கி கூடச் சொல்கிறார். ஒரு மிருகக் காட்சி சாலையில் அவரும் நண்பரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள். முதலை ஒன்று நீண்ட வாயைப் பிளந்தபடி இருந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நண்பன் சட்டென தடுமாறி அந்தக் குளத்துக்குள் நேரே முதலையின் வாய்க்கு உள்ளேயே விழுந்து விடுகிறான். ஒரு நிமிடம் சத்தம் போடக் கூடத் தோன்றாமல் விக்கித்து விட்டார் தாஸ்தயேவ்ஸ்கி.

வாய்க்குள் போன நண்பன் போராடியபோது முதலை திரும்ப வாயைத் திறந்தது. விர்ரென்று வெளியே வந்தான் நண்பன். அவனது துடிப்பில் அவனது கண்ணாடி தெறித்து வெளியே விழுந்தது. திரும்ப முதலை அவனை வாயை மூடி உள்ளே இழுத்துக் கொண்டது.

திடீரென்று அவன் இப்படி வெளியே வந்ததும் கண்ணாடி தெறிந்து விழுந்தபின் மறுபடியும் முதலை வாய்க்குள் போனதுமான அந்த நிகழ்வில் நான் கடகடவென்று சிரிக்க ஆரம்பித்தேன். என எழுதுகிறார் தாஸ்தயேவ்ஸ்கி.   

அடுத்த வரியை இரண்டு பத்தி முன்னால் சேர்த்து வாசிக்கலாம். வெல்டன் அசோகமித்திரன்.

•••

Comments

Popular posts from this blog