ஜன, - மார்ச் 2022 சங்கு இதழில் என் சிறுகதை

டிங்கு

எஸ்.சங்கரநாராயணன்

 

குழந்தையின் பெயர் சரவணமூர்த்தி. தாத்தாவின் பெயர் அது. பெயர்சூட்டும் வைபவத்தில் அதன் காதில் ஓதிய பெயர் அதுதான். என்றாலும் குழந்தைகளுக்குச் செல்ல அடிப்படையில் ஒரு பெயர் அமைந்துதான் விடுகிறது. குழந்தையின் பெயர் டிங்கு. எப்படி யார் வைத்தார்கள் அந்தப் பெயர் அதுவே யாருக்கும் நினைவில்லை. என்றாலும் அந்தப் பெயர் நிலைத்துவிட்டது. வயிற்றை எக்கி எக்கித் தவழ ஆரம்பித்ததில் இருந்தே அவனிடம் ஓர் அசாத்திய வேகம் இருந்தாற் போலிருந்தது. உலகைக் கட்டியாள்கிற வேகம். பெற்றவளுக்கு மூச்சு திணறியது அவனைச் சமாளிக்க. தவழ்ந்து போய்ச் சுவரைப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்ற குழந்தை தானே நடக்க முயன்று பொத்துப் பொத்தென்று விழுந்தது. என்றாலும் திரும்ப எழுந்துநின்று ஒரு குடிகாரத் தள்ளாட்டத்துடன் சிரித்தது அம்மாவைப் பார்த்து. ஒரு ராணுவ உடற்பயிற்சி பொல காலைத் தூக்கித் தூக்கி வைத்து சற்று தடுமாறி, ஆனால் அம்மாவை எட்டிவிட்டது குழந்தை. அதற்கு ஒரே சிரிப்பு.

நடக்கத் தெரிந்தபின் அதை வீட்டில் கட்டுப்படுத்த முடியவில்லை. அதைக் கட்டிப்போட வேண்டி யிருந்தது. இடுப்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது அது அடிக்கடி. அதை ஏமாற்ற அம்மா சில சமயம் ஒரு கயிற்றால் அதன் இடுப்பைத் தொட்டுவிட்டு கட்டிப்போடாமல் விட்டுவிட்டாள். அது தெரியாமல் குழந்தை உம்மென்று உட்கார்ந்திருந்தது. பாவமாய் இருந்தது அதைப் பார்க்க. அம்மாவை அது வா வா என்று கூப்பிட்டு அவிழ்த்துவிடச் சொல்லி அழுதது. அழுகை ஜாஸ்தியாகும் வரை அவள் பொறுத்துப் பார்த்தாள். பிறகு வேறு வழியில்லாமல் அவிழ்த்து விட்டாள். சட்டென முகம் பூரித்தது குழந்தை. ஏற்கனவே அதற்கு கன்னமும் தொப்பையும் சற்று பூரி உப்பல்தான். அதன் மடைகள் திறந்து கொண்டன.

துணி துவைக்கிற பிளாஸ்டிக் அண்டாவில் தண்ணி நிரப்பி உள்ளே உட்கார்த்தி வைத்தால் டப் டப் என்று தண்ணியை அடித்து விளையாடிக் கொண்டிருக்கும். தவழ ஆரம்பித்த போதே சிறு அறை தாண்டி வீடு முழுதும் வளைய வந்த குழந்தை. நடக்க ஆரம்பித்த பின் தன் உலகத்தை, அதன் விஸ்திரணத்தை இன்னும் பெரிசாக்கிக் கொள்ள ஆவேசப் பட்டது.  அந்த மொத்த வீடும் அதற்குப் போதவில்லை. வெளியே போக அது ஆசைப்பட்டது. வாசல் வரை போய், கதவின் கம்பிகள் வழியே வெளியே பார்த்துக்கொண்டு நின்றது. யப்பா, வெளி உலகம் எத்தனை பெரியது. எத்தனை விதவிதமான ஓசைகள் அங்கே. பரபரப்பு மிக்க வெளி உலகம். ஹ்ம். நான் இங்கே உள்ளே மாட்டிக் கொண்டிருக்கிறேன்,  என குழந்தை துக்கப் பட்டது.

அது அம்மாவை வரச்சொல்லி தூக்கிக் கொள்ளச் சொல்லி அடம் பிடித்தது. வேறு வழியில்லாமல் வந்து தூக்கிக் கொண்டால், என்ன கனம்… வெளியே கையைக் காட்டியது. உள்ளே ஆயிரம் வேலை கிடக்கிறது. இதை இப்ப வெளியே தூக்கி வெச்சிக்கிட்டு நிக்க முடியுமா? மாட்டேன்னா விடாது… என நினைத்துக் கொண்டாள். முளைச்சி மூணு இலை விடல்ல. அதற்குள் இந்த வேலை வாங்குகிறது. அதிகாரம். அடாவடி. பிடிவாதம். என்றாலும் அம்மாவை ஐஸ் வைக்க அவ்வப்போது கிட்ட வரச்சொல்லி ஒரு முத்தம், கன்னத்தில் ப்ச்க்… கொடுத்து விடுகிறது. அத்தோடு சிலிர்த்துப் போகிறது அவளுக்கு. குழந்தையை எப்படிச் சமாளிக்க வேண்டும் என அம்மா கற்றுக் கொள்ளுமுன் இந்த லங்கிணி அம்மாவைச் சமாளிக்கக் கற்றுக் கொண்டு விட்டது!

அதை நீளக் கயிற்றில் கட்டிப் போட்டுவிட்டு அம்மா உள் வேலைகள் செய்தாள். கயிறு அனுமதிக்கும் தூரம் வரை போய் வாசல் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றது டிங்கு. தாழ்ப்பாள் அதற்கு எட்டாத உயரத்தில் இருந்தது. கையை நீட்டி உயரம் எட்டுமா என்று பார்த்தது அது. துள்ளிக் கூடப் பார்த்தது. நிற்பது பலப்பட்டதும் துள்ளுவது அதனால் முடிந்தது இப்போது. ஒரு துள்ளல் துள்ளி சப்பென கீழே உட்காரும். தாழ்ப்பாளைத் திறந்தால் வெளியே ஓடிவிடலாம். முடியவில்லை. உள்ளே வேலை பார்த்தபடியே அம்மா டிங்குவிடம் ஒரு பார்வை வைத்துக் கொண்டிருந்தாள். எப்போ என்ன திரிசமன் செய்யுமோ என திக் திக் என்றிருந்தது அவளுக்கு.

ஜன்னலின் இரும்புக் கம்பிகளை நக்கிச் சுவைக்கிறது குழந்தை. கம்பியைப் பிடித்து ஆட்டுகிறது. பெரிய பீமன் என்று நினைப்பு அதற்கு. தொடைகள் தூண்கள். என்றாலும் சாப்பிட அடம். சாப்பிட்டால்தானே உடம்பில் தெம்பு இருக்கும்? கைச்சூட்டில் சாதம் எடுத்துக் கொண்டு அதில் வேகவைத்த பருப்பு சேர்த்து நெய் ஊற்றி மையாய்க் குழைத்துப் பிசைந்து சிறிது காரம் சேர்க்கலாம் என்று ரசத்தையும் அதன் மேல் விட்டுப் பிசைந்து எடுத்துக் கொண்டு வருவாள். நமக்கே சாப்பிட ஆசையாய் இருக்கும். குழந்தை முதல் வாயையே த்தூ என்று துப்பிவிடும். பிறகு அதைச் சாப்பிட வைக்க அம்மா உபாயங்கள் செய்வாள்.

முதல் கட்டமாக வாசல் கதவைத் திறந்து, (ஆகா… என உடலை அலையாய்ப் பொங்க வைக்கும் டிங்கு.) வாசல் வாத மரத்தடியில் அதை இடுப்பில் ஏந்திக்கொண்டு காக்காய் குவ்வி காட்ட வேண்டும். அப்படியே எதாச்சும் அதனுடன் கதை போலப் பேச வேண்டும். “ஒரு ஊர்ல ஒரு குவ்வி இருந்திச்சாம்… என்ன இருந்தது?” வ்வி. வேடிக்கை பார்த்தபடியே அது கதை சுவாரஸ்யத்தில் வாயைத் தன்னைப்போலத் திறக்கும். சாதம் உள்ளே போவதே தெரியாது.

“காக்கா எப்டிக் கத்தும்?”

“க்கா… க்கா…” என்று சொல்லிக் காட்டும் குழந்தை. இப்போது அதற்கு ஒலிகள் வாயில் இருந்து எழும்ப ஆரம்பித்திருந்தன. க்கா, என அது வாயைத் திறக்க அம்மா ஒருவாய் ஊட்டுவாள். “ஆட்டோ எப்பிடிப் போகும்?” அதற்குத் தெரியும். குழந்தைக்குத் தடுப்பூசி போட அவள் அதை ஆட்டோவில் கூட்டிப் போயிருக்கிறாள். வழியில் நெரிசலை விலக்க டிரைவர் ஹாரனை (ப்பாய்ங்! பாய்ங்க்!) அடித்தபோது சட்டென அந்தப் புது ஒலியில் குழந்தை பரவசப் பட்டது. அம்மாவைப் பார்த்து அது சிரித்தது. அம்மா “ஆமாண்டா கண்ணு..” என அதைத் தொப்பையை அமுக்கி (ப்பாய்ங்! பாய்ங்க்!) குனிந்து முத்தமிட்டாள். எப்படியும் சிறிது நேரத்தில் ஊசி போடும்போது அது அழப் போகிறது, என நினைக்க அவளுக்குப் பாவமாய் இருந்தது.

குழந்தை அம்மாவைவிட்டு எகிறி அந்த ஹாரனை அடிக்க முயன்றது.

வாசலில் போகும் எல்லாரையும் அது விளையட வா என்று அழைத்தது. தெருவில் யாராவது அதைப் பார்த்து விட்டு நின்றால் வரச்சொல்லி பூட்டிய கதவைத் திறக்கச் சொல்லி கை காட்டியது. ப்பா, ம்மா, வா, த்தூ… (துப்புவது அல்ல. தூக்கு, என்பது பொருள்.) சிறு சிறு உடைபட்ட வார்த்தைகள். சில ஒலிகள். டுர்ர். க்கா. அதன் உலகின் மொழி மெல்ல விரிவு பட்டு வந்தது. தா, என்றால் கொடு. த்தா, என்றால் தாத்தா. சென்னைப் பக்கம் அதுவொரு கெட்ட வார்த்தை.

வெகு சுருக்கில் அது பேச ஆரம்பித்து விட்டது. அதையிட்டு அம்மாவுக்கு ஒரு அலுப்பான பெருமிதம். “நல்லா ஷ்பஷ்டமாப் பேசறதே…” என்று எல்லாரும் பாராட்டினார்கள். மதியம் அவள் சிறிது தூங்கினாள். அது அவளுக்கு முன் எழுந்து கொண்டால், “அம்மா அம்புட்டு மணியும் ஆயாச்சு. எந்திரி” என அவளை உலுக்கியது. முதல் பிறந்தநாள் வந்தபோது ஊரார் கண்ணே பட்டுவிடுமோ என்று பயந்தாள். முழுக்க முழுக்க அவளே குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டி யிருந்தது. அவள் கணவனுக்கு பணி மாற்றலாகிப் போனதில் இருந்து தனியொரு மனுஷியாய் அவள் டிங்குவுடன் அல்லாடினாள்.

அவள் தாய் கொஞ்சநாள் வரை ஒத்தாசை என்று கூட இருந்தாள். பிறகு மூத்த பிள்ளையிடம் போய்விட்டாள். இல்லாவிட்டாலும் டிங்கு பாட்டிக்கு அடங்கவில்லை. அவள் மடியில் இருந்து இறங்கி ஓட்டமாய் ஓடி தெருவுக்குத் தாவியது. தெருவில் எதாவது காரோ ஆட்டோவோ வந்தால்?... என கதி கலங்கியது பாட்டிக்கு. டிங்குவுக்கு இருக்கிற அறிவுக்கு இப்போது அது தெருவில் வருகிற மாடு, ஆடு, ஐஸ்வண்டி எல்லாவற்றையும் அம்மாவுக்கு அறிமுகம் செய்ய ஆரம்பித்தது. அம்மா எல்லாம் பார்த்துவிட்டு ஆமாண்டா, என்று அதைப் பாராட்டியாக வேண்டும்.

அதைச் சமாளிக்க முடியாமல் அம்மா டிங்குவைத் தூக்கிக் கொண்டு கோவிலுக்குப் போனாள். அநேகமாக தினசரி அவள் கோவிலுக்குப் போவது என்று வழக்கமாகி விட்டது அவள் இருந்ததே ரங்கநாத சுவாமி கோவில் தெருதான். முன் பக்கம் மேட்டுத் தெரு. கோவில் பக்கம் பள்ளத் தெரு. அவள் பள்ளத் தெருவில் இருந்தாள். கோவிலின் பூஜை மணிகள் இயங்கும் தோறும் குழந்தை சிலிர்த்து விரைத்தது. பரபரப்பானது. பூஜை என்பது ஒலிப் பிரளயமாய் இருந்தது அதற்கு. என்னவோ நடக்கிறது அங்கே. உடனே போய்ப் பார்க்கத் துடிப்பாய் இருந்தது டிங்குவுக்கு.

பழைய காலப் பெரிய கோவில். முன்னே பெரிய வளாகம் இருந்தது. நல்ல பத்து நாற்பது தூண் எடுத்த மண்டபம் இருபுறமும். கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள் என்று விழாக் காலங்கள் அமர்க்களப் படும். திவ்யப் பிரபந்த வகுப்புகள் வாரம் ஒரு நாள் இருக்கும். நடுவே பாதை. யாரோ மன்னன் கட்டிய அந்தக் காலக் கோவில். கோவிலைப் பார்க்கப் போகும்போதே குழந்தை உற்சாகம் அடைந்தது. உடனே அம்மாவிடம் இருந்து கீழே வழுகி இறங்க முட்டியது. அதன் ஓட்டமும் சாட்டமும் அவளால் சமாளிக்க முடியவில்லை. ஒண்ணை நினைத்தால் உடனே அதைச் சாதிக்க அதற்குத் தெரியும். இந்த வயதிலேயே இப்படி நமக்குத் தண்ணி காட்டுதே என்று அவள் மலைப்பாள்.

காலையில் மாலையில் என்று அந்தக் கோவில் திண்ணைகளில் சிறுவர்கள் சிறுமிகள் அலை பாய்வார்கள். விட்டுவிட்டு சதுர எல்லை அளவில் தூண்கள் இருந்ததால் ஒன்றில் இருந்து மற்றதற்கு அவர்கள் தாவித் தாவி விளையாடுவார்கள். அத்தனை பேரோடும் போட்டி போட டிங்கு ஆர்வப்பட்டது. யாராவது பந்து வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தால் டிங்கு அங்கே போய் நின்று “நானும்…” என்றது.

தெருப் பிள்ளைகளுக்கு டிங்குவைப் பிடிக்கும். அதை நடுவில் நிறுத்தி அதனிடம் பந்தைக் கொடுத்து எல்லாரும் வட்டமாய் நிற்பார்கள். டிங்கு ஒவ்வொருவருக்காய்ப் பந்தைப் போடும். டிங்கு எல்லாரையும் தன் வீட்டுக்கு விளையாட அழைத்தது. “எங்க வீட்லயும் பெரிய பந்து இருக்கு” என்றது. எல்லாரும் சிரித்தார்கள். ”நீ சாக்லேட் பிஸ்கெட்னு சாப்பிட்டால் எங்களுக்குத் தர மாட்டேங்கறியே?” என்று ஒரு பெண் கேட்டாள். குழந்தை சிறிது யோசித்தது. “அம்மா தருவா” என்றது. எல்லாரும் திரும்ப ஹோ என்று ஒரு சத்தம் கொடுத்தார்கள். வீட்டிலானால் அம்மா டிங்கு கூட விளையாடுவாள். ஊரிலிருந்து அப்பா வந்திருந்தால் அவர் விளையாடுவார். “ஸ்சோ. ஒருநாள் ரெண்டுநாள் என்னால சமாளிக்க முடியல்ல இவனை. நீ எப்பிடித்தான் சமாளிக்கறியோ…” என்பார் அப்பா.

பக்கத்து எதிர் வீட்டுக் குழந்தைகளுடன் விளையாட விடலாம். தன் மேற்பார்வை இல்லாமல் டிங்குவை அனுப்ப அம்மா சம்மதப் படவில்லை. சட்டென எங்காவது விழுந்து வைத்தால் அவளால் தாங்க முடியாது. அவள் தன் அம்மாவையே இந்தளவில் நம்புவது இல்லை. இது பற்றி அவள்அம்மா “ஏண்டி நாங்கள்லாம் உங்களை வளர்த்து ஆளாக்கல்லியாக்கும்…” என்று நொடித்துக் கொள்வாள்.

அதனால் தான் கோவிலுக்குக் குழந்தையை எடுத்து வந்தாள் அம்மா. அம்மாவுக்கு ஆசுவாசமான கணங்கள் அவை. அப்படிப் போய் விளையாடினால்தான், ஆட்டம் போட்டால்தான் ராத்திரி தூங்கும். இல்லாவிட்டால் அவ்வளவுதான். விடிய விடிய அது அம்மாவிடம் என்னவாவது பேசிக் கொண்டே யிருக்கும். அதைத் தூங்க வைப்பது பெரும்பாடாகி விடும். ஓடியாடி விளையாடி விட்டால் வீட்டுக்கு வந்து நாலு வாய் அவள் ஊட்டுமுன்னரே தலை துவண்டு தூக்கம் அதற்கு ஆளைத் தள்ளும், தோசைக்கு மாவாட்டும் குழவிக் கல் போல!

அதனால்தான் அதற்குக் குழவிக் கல் என்று பெயர் வந்ததோ என்னவோ!

கோவில் பக்கம் நிறையக் கடைகள் இருந்தன. அரைஞாண் கயிறு, மஞ்சள் கருப்புக் கயிறுகள், சோழிகள், பல்லாங்குழிகள், குழந்தைகளுக்கான பொம்மைகள், மேலே மெத்தென்று விழுகிற பந்துகள், கீச் கீச் ஷுக்கள், ஊதல்கள், பீப்பீ, வாசனை சீயக்காய்த் தூள், ஃப்ரேம் போட்ட சுவாமி படங்கள், மண் மற்றும் பீங்கான் தீப விளக்குகள், சிம்னி, விளக்குத்திரி, தீப எண்ணெய், விபூதி, குங்குமம், நாமக்கட்டி, வயர்க் கூடைகள், கிளிப்புகள், அலுமினியப் பாத்திரங்கள், சுலோகப் புத்தகங்கள் என்று விற்பனை செய்யும் கடைகள். விளக்கு போட்டு வெளிச்சமாய்க் கிடந்தது வளாகம்.

கோவிலில் யானை ஒன்றும் இருந்தது. தாழ்வாரத்தில் தென்னையோலை பிய்த்துப் போட்டிருப்பார்கள். அதன் காலடியில் பாகன் இருப்பான். ஆடியாடி அது ஓலையைக் கடித்துக் கொண்டிருக்கும். சில சமயம் அது கவளம் கவளமாய் பாகன் ஊட்ட ஊட்ட சாப்பிடுவதைக் கூட்டிப்போய் டிங்குவுக்குக் காட்டி யிருக்கிறாள் அம்மா. அந்தப் பாகனுக்கு டிங்குவைப் பிடிக்கும். டிங்குவிடம் கொடுத்து ஒரு வாழைப் பழத்தை யானைக்குக் கொடுத்தாள் அம்மா. “எனக்கு வேணும்” என்று வைத்துக் கொண்டது டிங்கு. பாகனுக்குச் சிரிப்பு.

அம்மா பாகனிடம் ஐந்து ரூபாய் கொடுத்தாள். பாகன் சந்தோஷப்பட்டு குழந்தையை வாங்கி அது அழ அழ யானையின் மேல் தூக்கி வைத்துக் கொண்டான். பிள்ளைகள் எல்லாரும் சுற்றி நின்று கை தட்டினார்கள். அதைப் பார்த்ததும் டிங்குவும் அழுத கண்ணுடன் கை தட்டியது. எல்லாரும் சிரித்தார்கள். அப்பவே அது யானையிடம் பயம் கொள்வதை விட்டுவிட்டது.

சிறிது விளையாடியதும் அம்மா சுவாமியைப் பார்க்க என்று குழந்தையைக் கூப்பிட்டாள். “நான் வர்ல” என்றது குழந்தை. அம்மாவுக்குச் சிரிப்பு. “அப்ப அம்மா உன்னை விட்டுட்டு நான் மட்டும் போட்டுமா?” என்று கேட்டாள். “நீங்க பத்திரமா டிங்குவைப் பாத்துக்குவீங்களா?” என்று மற்ற சிறுவர் சிறுமிகளிடம் கேட்டாள். “நீங்க போயிட்டு வாங்க மாமி” என்றார்கள் பிள்ளைகள். “போகாதே. நீ இரும்மா” என்றது டிங்கு. அதன் விளையாட்டை அம்மா பார்த்து ரசித்துச் சிரிக்க வேண்டும், என்று இருந்தது. “அப்ப நீ வா என் கூட..” என்றபடி அம்மா குழந்தையை வாரிக்கொண்டு உள்ளே போனாள். விரைப்பாய்க் கொஞ்சம் முரண்டிப் பார்த்தது டிங்கு. பிறகு ஒன்றும் வேலைக்காகவில்லை என்று அடங்கி விட்டது.

கோவிலுக்குள் என்றால் அம்மா இறக்கி விட மாட்டாள். அதற்குத் தெரியும். முன்பு போல இல்லை டிங்கு. ரெண்டு வயதாகப் போகிறது. உடம்பு கனத்தது.  அந்தப் பெரிய வளாகமும் அதன் ஓடியாட வசதியான திடலும் திண்ணைகளும் டிங்குவைப் பரவசப் படுத்தின. குறிப்பாக குழந்தைகளின் ஹோவென்ற இரைச்சல். அவர்கள் எதற்குச் சிரிக்கிறார்கள் என்றே புரியாத போதும் டிங்குவும் கூடச் சேர்ந்து கொண்டு கை தட்டி ஹோவென்று கொக்கரித்தது.

ரங்கநாத சுவாமி சந்நிதியில் கூட்டம் இருந்தது. காத்திருக்க வேண்டி யிருந்தது. டிங்குவுக்குப் பொறுமை இல்லை. அம்மாவின் இடுப்பில் இருந்தது அது. கீழே வழுகி யிறங்க முயன்றது. அம்மா விடவில்லை அதை அடக்க என்ன செய்வது… அம்மா அங்கே கட்டி யிருந்த மணியைப் பார்த்தாள். டிங்குவை அங்கே அழைத்துக்கொண்டு போய் டிங் என மணி அடித்துக் காட்டினாள். சட்டென அதன் உடம்பில் அந்த அதிர்வலைகள். குழந்தை தான் பயந்ததை நினைத்துச் சிரித்தது. “நீயும் அடிக்கறியா?” என்று அம்மா அதை மணிக்குக் கிட்டத்தில் கொண்டு வந்தாள். டிங் என மணி அடித்தது டிங்கு. அதற்கு ஒரே சிரிப்பு. மெல்ல வரிசை நகர ஆரம்பித்தது. திரும்ப மணி அடிக்க என்று மணியையே பார்த்தபடி வந்தது டிங்கு.

“அங்க பார் சாமி பார்…” என்று காட்டினாள் அம்மா. “பொம்மை” என்றது டிங்கு.

அம்மா சிரித்தாள். வீட்டில் நிறைய மரப்பாச்சி பொம்மைகள் இருந்தன. அதை சட்டென டிங்கு ஞாபகம் வைத்துக் கொண்டு சொன்னதாக அவளுக்குச் சிரிப்பு. அதன் உலகில் கடவுளா? குழந்தைகளே கடவுள்தான்… என நினைத்துக் கொண்டாள்.

“வாம்மா போலாம் வீட்டுக்கு…” என்றது டிங்கு. அர்ச்சகர் கற்பூரம் கொண்டு வந்தார். அம்மா அந்த தீபத்தைத் தொட்டு டிங்குவின் கண்ணில் ஒத்தினாள். டிங்குவிடம் ஐந்து ரூபாய் கொடுத்து கற்பூரத் தட்டில் போடச் சொன்னாள். “எனக்கு…” என்றது டிங்கு. அவள் சிரித்து “தட்டுல போடணும்..” என்றாள். “சாக்லேட்” என்றது டிங்கு.

அம்மா அந்தப் பணத்தை அதனிடமிருந்து பிடுங்கி கற்பூரத் தட்டில் போட்டாள். குருக்கள் சிரித்தபடி அதன் தலையில் சடாரி வைத்தார். “தொப்பி!” என்றது டிங்கு.

டிங்கு அவசரமாய்க் கீழே இறங்க மீண்டும் முயற்சி செய்தது. அம்மா அதற்கு சுவாமியைக் காட்டி, “பொம்மை இல்லடா உம்மாச்சி” என்று சொல்லி அதன் கைகளைப் பிடித்துக் குவிக்க வைத்தாள்.

“வேண்டிக்கோ” என்றாள் அம்மா. “சரி” என்று சமத்தாகக் கையைக் கூப்பியது டிங்கு.

“சுவாமி…” என்றாள் அம்மா. “சுவாமி” என்றது டிங்கு.

“எனக்கு நல்ல புத்தி குடு” என்றாள் அம்மா.

“அம்மாவுக்கு நல்ல புத்தி குடு” என்றது டிங்கு.

***

(சங்கு)

Comments

  1. ஒருசிறு குழந்தையின் மனநிலையைப் படம்பிடிக்கும் அழகான கதை. தடையே இல்லாத சீரான கதை. ஒவ்வொருவருக்குள்ளும் குழந்தை இருப்பதை உணரச் செய்யும் உக்தி. சபாஷ்.

    ReplyDelete
  2. ஒரு பயம் கடைசி வரை இருந்து கொண்டே இருந்தது. யானை, வெளி உலகம், குழந்தை கள் விளையாட்டு எல்லாவற்றிலும். நன்றி சங்கர்.

    ReplyDelete
  3. அருகிலிருந்து பார்ப்பதுபோல் இருக்கிறது
    குழந்தையின் நடவடிக்கையை கதையில்
    ஆசிரியர் எடுத்துச்சொன்னவிதம்.(style)
    மகிழ்ந்தேன். வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog