
நன்றி தமிழ்ப் பல்லவி ஜுலை 2022 தம்புரா எஸ்.சங்கரநாராயணன் ஒ ரு ராட்சச கரண்டி டிசைனில் இருந்தது அது. தம்புரா. எனக்கு சங்கீதம் அவ்வளவு தெரியாது. அவ்வளவு என்ன, தெரியாது என்றே சொல்லலாம். இது குறித்து என் அம்மாவுக்கு வருத்தம் இருந்தது. “நல்லா ஆச்சி, ஒரு பொண்குழந்தையாப் பிறந்துவிட்டு…” என அவள் அலுத்துக் கொள்ளலாம். சங்கீதம் தெரியாதது மாத்திரம் அல்ல. அம்மாவுக்கு என்னையிட்டு மேலும் நிறைய வருத்தங்கள் இருந்தன. அதில் பிரதான வருத்தம் நான் அவளை சட்டை செய்யவில்லை என்பதாக இருக்கலாம். இதுகுறித்து ஒன்றும் செய்வதற்கு இல்லை. நான் சட்டை செய்வது அவளுடைய ஆர்வக் கனலைக் கிளர்த்தி எரியவிட்டு அம்மா எனக்கு சங்கீத ஞானத்தைப் புகட்ட உக்கிரமான பரபரப்பு காட்ட நேரிடலாம். பொதுவாக ஒரு திறமை தனக்கு இருக்கிறது என உணர்ந்தவர்கள் அதைப் பிறருக்குப் பகிரவும் போதிக்கவும் தினவு அடைகிறார்கள். அது தங்கள் கடமை என அவர்கள் நினைக்கிறார்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம், என்பது கோட்பாடு. வையகம் அதை வேண்டாம் என மறுக்கக் கூடாது. ஆயினும் அது நீ பெற்ற இன்பம், யாம் பெற்ற துன்பம் என ஆகிவிடுவதும் உண்டு. அது அம்மாவின் ...