ஆவநாழி – அக். நவ. 2022 இதழில் வெளியான சி’றுகதை

Art - Jeeva

ஆறுமுகத் தாத்தாவின்

ஏழாவது முகம்

எஸ்.சங்கரநாராயணன்

தாத்தா இறந்து போனார். நேற்று இரவு ஒருமணி ஒண்ணரை மணி அளவில், எல்லா விளக்கும் அணைத்துப் படுத்திருந்த நிலையில் “ஏவ்?..” என்ற பெருத்த விக்கல் தாத்தாவிடம் இருந்து வந்தது. தொண்டையில் இருந்து ஓர் ஒலித் துள்ளல். சட்டென்று இவள், என் மனைவி கனகவல்லி விழித்துக் கொண்டு விளக்கைப் போட்டால் தாத்தா படுக்கையில் புழுவாய் நெளிகிறார். உள்ளறையில் கட்டிலில்   உறங்கிக் கொண்டிருந்த பாட்டியை எழுப்பித் தகவல் சொன்னோம். பெடஸ்டல் மின்விசிறி ஒன்று பத்திரிகை ஒன்றை விரித்து என்னவோ வாசித்துக் கொண்டிருந்தது. “என்னது?” எனப் பதறி எச்சில் வழிய எழுந்து கொண்டாள் பாட்டி. சட்டென எழுந்துகொள்ள அவளுக்குத் திகைத்தது. அத்தனை வெளிச்சத்திலும் அவளுக்குக் கண்ணில் இருட்டு கட்டியது. அவளுக்கும் வயதாகி விட்டது அல்லவா? அந்த வயதில் நல்ல தூக்கத்தைக் கலைத்து எழுப்பி விடுவது என்பது பெரும் அவஸ்தை.

கைத்தாங்கலாக தாத்தா அருகில் அமர்த்தினோம். “என்ன செய்யுது உங்களுக்கு…” என்று முன்குனிந்து பாட்டி அவரது கையைப் பிடித்துக் கொண்டாள். அவள் குரல் அவளுக்கே கீச்சென ஒலித்தது. பெல்ட்டாய் ஒல்லியான நீண்ட அவரது கைகள் சாரைப் பாம்புகள் இணைய அவசரப் பட்டாற் போல இப்படி அப்படி ஆடி காற்றில் தவித்தன. இரண்டு கையும் விரித்து, சொல்லத் தெரியல… என்பதாய்த் தாத்தா அசைவு காட்டினார். அப்படியே அந்தக் கை தொய்ந்து பலம் அற்று இற்று தென்னையோலை போல அவரது நெஞ்சுமேல் விழுந்தன. தாத்தா இறந்து போனார். கதையாக இல்லாமல் கதைச் சுருக்கமாக அமைந்து விட்டது ஆறுமுகத் தாத்தாவின் மரணம்.

பாட்டி தாத்தாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். அழவெல்லாம் இல்லை. இத்தனை கால அவள் வாழ்க்கையில் எத்தனையோ நல்லது கெட்டது தாண்டி வந்தவள் அவள். இந்தச் சாவே எப்போது என்பதுதான் கேள்வியே தவிர எதிர்பாராதது அல்ல. எதிர்பாராததை எதிர்பார்க்கிற பக்குவம் இந்நாட்களில் அவளுக்கு, அவர்களுக்கு, தாத்தா பாட்டி இருவருக்குமே வந்துவிட்டிருக்க வேண்டும்.

அவள் வாழ்க்கையில் ஒரு சஸ்பென்ஸ் இருந்தது… அதாவது நாள் இதுவரை. அவர்கள் இருவரில், யார் மரணத்தில் முந்திக் கொள்வோம். என்கிற ரகசியம். வெடித்துத் திறக்கிற வெண்டைக்காயாய் அது இப்போது தெளிந்து அல்லது தெறித்து ஊரறியப் பரவி விட்டது. தாத்தா முந்திக் கொண்டார். அவள் முந்தியை விட்டு தன்னைப் பிரித்துக் கொண்டார்.

ஊரில் அவளுக்கு ‘பழுத்த சுமங்கலி’ என்று ஒரு பெருமித அடையாளம், கௌரவம் இருந்தது. அதற்கு ஒரு முடிவு வந்தது. ச். அதற்கென்ன, என நினைத்தபடி பாட்டி தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு சம்பிரதாய அழுகை அழ ஆரம்பித்தாள். “என்னை இப்பிடித் தனியா விட்டுட்டுப் போயிட்டீரேய்யா” என்பதாக சிறிது யோசித்து, வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டு அழுதாள். துக்கப் பூக்கள் கோர்ததுக் கட்டிய இழவு மாலை அது.

அதற்குள் இவள், கனகவல்லி உளளேபோய் ஒரு குத்துவிளக்கை பூஜை அறையில் இருந்து எடுத்து வந்து அவர் தலைமாட்டில் ஏற்றி வைத்தாள். அதன் தழலாட்டம் அணைந்து விடாதபடி பெரிய சிம்னிக் கண்ணாடி வைத்து தீபம் அதன் உள்ளே காபந்து பண்ணினாள்.

எல்லாம் நிதானமாய் நடந்தன. ஒரு ஐயோ இல்லை. பதட்டம் இல்லை. கனகவல்லி பாட்டியிடம் “இப்ப மணி ஒண்ணே முக்கால் ரெண்டு இருக்கும். பேசாம நீங்க திருப்பியும் போயிப் படுத்துக்கங்க. காலை விடியட்டும், மத்த காரியங்களை யோசிக்கலாம்” என்றபோது பாட்டி தலையாட்டினாள். பெரிதாய் அவளில் இருந்து கொட்டாவி வந்தது. கழிவறை போய் வந்தாள் பாட்டி.

“பிடிச்சிக்கணுமா?”

“வேண்டாம்.”

தன் நிழலையும் கூட்டிக்கொண்டு உள்ளே போனாள் பாட்டி. இந்த ஊரில் எப்பவுமே லோ வோல்டேஜ்தான். வெளிச்சமே மஞ்சளாய்க் காணும். வெளிச்சம் என்றால் வெள்ளையாய்த் தானே இருக்க வேண்டும்?

தாத்தாவை தலைமாட்டு விளக்குடன் கூடத்தில் அப்படியே விட்டுவிட்டோம். கூடத்து விளக்கு எரிந்தபடி இருக்கட்டும் என விட்டு விட்டோம். வெளியே நல்ல காற்று நடமாடிக் கொண்டிருந்தது. இந்த வேளைகெட்ட வேளையில் அதற்கு அப்படியென்ன காரியமோ தெரியவில்லை.

தாத்தாவுக்கு நிறையக் குழந்தைகள். பாட்டி எட்டு பெற்றுப் போட்டு நாலு தங்காமல் போயிற்று.  வீட்டில் ஒரு குழந்தை இறப்பது என்பது மாபெரும் துக்கம். குடும்பத்தின் சாபம், என்பார்கள். “ஐயோ பெத்து பெத்து இப்படி பறிகொடுக்கவா என்னியப் படைச்சே ஆண்டவனே…” என்று கணபதி அழும்போது பாவமாய் இருக்கும், என்று அம்மா சொல்லி யிருக்கிறாள். என்றாலும் அடுத்த சில மாதங்களிலேயே அவள் கருத் தரித்தாள், என்பாள் அம்மா புன்னகையுடன்.

நாங்கள் பிறந்தபோது தாத்தாவின் குழந்தைகள் வளர்ந்து பெரியாளாகி ஊரைத் தாண்டியும் போய்விட்டார்கள். அவர்கள் எல்லாருக்குமே இந்த ஊர் அத்தனை உவப்பாய் இல்லை. இந்த ஊரில் என்ன இருக்கிறது? இங்கே இருக்கிற வரை நாம் முன்னேற முடியாது, என்று அவர்களுக்கு இருந்தாற் போல இருந்தது. எனக்கோ தாத்தாவுக்கோ அப்படித் தோன்றவே இல்லை என்பது ஆச்சர்யம்தான்.

எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். பக்கத்து கிராமம் தான். முத்தாலம்மாவை ஒரு விவசாயக் குடும்பத்தில் பெண் கொடுத்தோம். வீட்டு வாசலிலேயே தொழுவத்தில் மாடுகள் கட்டி வைத்திருப்பார்கள். இப்பவே அலைபேசியில் அவளைக் கூப்பிட்டுத் தொந்தரவு பண்ண வேண்டாம், என இருந்தது. காலை விடியட்டும். சொன்னால் ஒருமணி நேரத்தில் அவள் புருஷனுடன் பைக்கில் வந்து விடுவாள். எனக்கு அப்பா அம்மா இல்லை. இருவருமே இறந்து விட்டார்கள். தாத்தாவும் பாட்டியும் எங்களுடன் இருந்தார்கள். எனக்குத் திருமணம் செய்து வைத்ததே என் தாத்தா தான். முதலில் முத்தாலம்மாவுக்கு முடித்துவிட்டு எனக்குப் பெண் பார்த்தார் தாத்தா.

எங்களுக்கு பூர்விக அம்சமாய் கொஞ்சம் நில புலம் இருந்தது. தாத்தா அவ்வப்போது போய்ப் பார்த்துவிட்டு வருவார். சிறு சிறு பிளம்பிங் வேலைகள் கற்றுக் கொண்டதில் என் பாடு பரவாயில்லை. சைக்கிளில் அளக்கிற அளவில் அதிக பட்சம் பக்கத்து ஊர் பஜாரோடு என் எல்லை முடிந்தது. பெரிய துட்டாசை இல்லாவிட்டால் வாழ்க்கை ஒன்றும் சிரமமானது அல்ல. வாழ்க்கையைக் கொண்டாடவும் வேணாம். வாழ அலுத்துக் கொள்ளவும் வேணாம்…

விளக்கு எரிகிறதா என்று இங்கே யிருந்தே பார்த்துக் கொண்டேன். யாரோடோ பதறிப் பதறி அது பேச முயற்சிப்பதாகத் தோன்றியது. வீட்டு நாய்கள் இப்படித்தான் நம்மைத் தொட்டுத் தொட்டுக் கொஞ்சக் கூப்பிடும். ஆறுமுகத் தாத்தா, வீட்டில் திடீரென்று கரண்டு போகுமே. அதைப்போல சட்டென அவர் உயிர் பிரிந்து விட்டது. அதெல்லாம் ஒரு அதிர்ஷ்டம் அல்லவா? கரண்டாவது காத்திருந்தால் திரும்ப வந்துவிடும். தாத்தா வர வாய்ப்பு இல்லை.

கடைசிக் காலம் வரை அவருக்குக் கண் நல்லா இருந்தது. கண்ணாடி போடவே இல்லை. வயல்வரை சைக்கிளில் போய் வருவார். தாத்தா நல்ல உயரம். அவர் சைக்கிளும் என்னிதை விட உயரமானது. இந்த வயசிலும் அவர் சளைக்காமல் சைக்கிள் ஓட்டுவார். உடம்போடு உடை மாதிரி அவரோடு எப்பவும் கூடவே சைக்கிள் இருந்தது. ஸ்டாண்டு உடைந்த சைக்கிள். பம்புசெட் பக்கமாய் சைக்கிளைச் சாய்த்து நிறுத்திவிட்டு வேலை எதும இருந்தால் பார்ப்பார். பாத்திகளைச் சீராக்கி தண்ணீர் பாய்ச்சுவார். உபரித் தண்ணீர் பாய்ந்து வளர்ந்து கிடக்கும் தென்னை மரம் ஏறி இளநீர் பறித்து வருவார். வரப்புகளில் பாம்பு படுத்துக் கிடந்தால் சட்டென பிடித்துத் தூர எறிவார். இருந்த காலம் வரை ஒரு நோய் நொடி கிடையாது.

பாட்டி கை வைத்தியம் மாதிரி பார்ப்பாள். குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் பாட்டியிடம் வந்து மந்திரித்துக் கொண்டு போவார்கள். வீட்டில் வேப்பிலை பறித்து வைத்திருப்பாள் பாட்டி. அதை வைத்து குழந்தையைச் செல்லமாய் அடித்தபடி என்னவோ முணுமுணுப்பாள் பாட்டி. வியாதியை அடித்து விரட்டுகிறாற் போல இருக்கும்.

பாட்டிதான் தாத்தாவுக்கு நாடி பார்த்து, அது துடிப்பு அடங்கி விட்டதைச் சொன்னாள். அவள் உடம்பு சிறிது சிலிர்த்து அடங்கியது. ஐம்பது வருடம் வரையிலான தாம்பத்தியம் அது. பாட்டி இன்னமும் திரண்டு குளிக்கிறாள். பின்னே எட்டு பெத்த உடம்பு அல்லவா? பெரிய சண்டை சச்சரவு இல்லை அவர்களிடம். எங்களுக்கு, எனக்கும் கனகவல்லிக்கும் அதுதான் ஆச்சர்யம்.

ஆறுமுகத் தாத்தா வாசல் திண்ணையில் அமர்ந்து சுருட்டு பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். என்னவோ அந்த ஊர் மக்கள் எல்லாருமே சுருட்டு பிடிக்கிறவராய் இருந்தார்கள். பெண்கள் கூட வீட்டில் பின்கட்டில் சுருட்டு குடிக்கிறதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். என்ன, பார்க்க கொஞ்சம் ஆபாசமாய் இருக்கும். அந்தக் கற்பனைக்காகவே அவர்களும் குடிக்கிறார்களோ என்னவோ. சுருட்டு குடிக்கிற ஆண்களிடம் உதட்டு முத்தம் வாங்கி வாங்கி அவர்களும் புகை பிடிக்கப் பழகிக் கொண்டிருக்கக் கூடும்.

சுருட்டு, பீடி இவற்றுக்கெல்லாம் கவர்னர் பீடி, மகாராஜா சுருட்டு என பேர் வைக்கிறார்கள். எந்த கவர்னர், எந்த மகராஜா இதெல்லாம் குடிக்கிறான் தெரியவில்லை. தாத்தாவின் சுருட்டு சற்று அதிக நீளமாய் இருக்கும். இங்கே கிடைக்காது. பஸ்ஸேறி கிருட்டினமங்கலம் வரை போய் அந்த ‘பிராண்ட்’ சுருட்டை மொத்தமாய் நாலு ஐந்து பாக்கெட் வாங்கி வருகிறார். அப்படி பஸ்ஸேறி ஊர் போவதும் வெளியூரில் சினிமா பார்த்துவிட்டு வருவதும்… அதெல்லாம் ஒரு பெருமையாக அவர் நினைத்தாரா தெரியாது.

போன வருடம் தாத்தாவின் இரண்டாம் மகன் வட நாட்டில் தவறிப் போனான். வேலை என்று ஆள் எடுக்க வந்திருந்தபோது அவர்களோடு அப்படியே லாரியேறிப் போனவன் அவன். வருடம் ஒருமுறை அவன் வந்துபோனால் அதிகம். தினக்கூலி. இன்னவேலை என்று இல்லை. உடல் வளைத்து வேலைகள். அவன் இறந்தபோது தாத்தாவும் பாட்டியும் போகவில்லை. ஊரும் தெரியாது. பாஷையும் தெரியாது. எங்கே எப்படிப்போய்த் தேடி அவர்கள் இடத்தைக் கண்டுபிடிப்பது.

அவன் வட நாட்டுப் பெண் ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு அப்படியே அங்கேயே தங்கி விட்டான். இவன் இந்தி கற்றுக் கொண்டானா, அவளோடு எப்படிப் பேசுவான், என்றெல்லாம் தாத்தாவுக்கு ஆச்சர்யமும் சந்தேகமும் இருந்தது. அவன் காலம் முடிந்தபிறகு அவனது குழந்தைகள் என்ன செய்கிறதோ. (இரண்டு பெண் குழந்தைகள் அம்மா சாயலில். படம் அனுப்பி யிருந்தான்.) அவன் பெண்டாட்டி சாமர்த்தியம் எப்படி தெரியாது. தாத்தா சிறிது கவலைப் பட்டுவிட்டு சில மாதங்களில் அதுவும் தேய்ந்து போனது.

சொந்த ஊரும் வயலும் அவருக்கு முக்கியமாய் இருந்தது. ஊர் எல்லை ஐயனார் மேல் அவருக்குப் பிரியம் அதிகம். இரவுகளில் சுருட்டு பிடித்தபடி காலாற நடந்து ஐயனார் கோவில்வரை போய் உட்கார்ந்திருப்பார். சுருட்டுக் கங்கு ஒளிர இருட்டில் அவர் நடப்பது தூரத்தில் இருந்து ரயில் வருவதைப் பார்க்கிறாப் போலக் காணும். வெளிச்சமும் வருது, புகையும் வருது. கூந்தல் பிரிகளாய் விழுது எடுத்த பெரிய ஆலமரம். கோவில் காம்பவுண்டு பூட்டிக் கிடக்கும். அந்தக் காம்பவுண்டுச் சுவரைச் சட்டை செய்யாமல் இங்கேயும அங்கேயுமாய் வளர்ந்து பரவி யிருக்கும் ஆலமரம்.

ஐயனாரை அப்படி அடைத்துப் போட முடியுமா? ஆல மரத்தையும் அப்படித்தான்… அடைத்துப் போட முடியாது, என்று தோன்றும். ஐயனார் குதிரைக்காரர். ஆலமரம் காம்பவுண்டு சுவருக்கு இந்தப் பக்கம், அந்தப் பக்கம் கால் போட்டு உட்கார்ந்திருக்கும்.

அவருக்கு? சைக்கிள்.

பள்ளிக்கூடம் போகுமுன் அம்மாவிடம் பிரித்த தலையைக் காட்டிக் கொண்டிருக்கும் சின்னப் பெண் போல ஆலமரம்.

மின்மினி வெளிச்சம் போல திடீர் திடீரென்று சுருட்டு மின்ன கோவில் வளாகத்து வாசலில் உட்கார்ந்திருப்பார் ஆறுமுகத் தாத்தா. இருட்டு. குளிர். அந்த இருட்டே அவரைக் கம்பளியாய்ப் போர்த்தி யிருக்கும். சுருட்டு இலையில் புகையிலை பொதிந்தாற் போல இருட்டு அவரையே பொதிந்து கொள்ளும். இருட்டு அம்மையில்லா, என்று தோன்றும். ஏட்டி, பால் இருந்தாக் கொடு… என்பாரோ தாத்தா. இருட்டுடனான தனிமை கிறுக்குத் தனமான சிந்தனைகள் தருகின்றன. எனக்கு மொட்டைமாடியில் பௌர்ணமியில் ஐயோ இத்தனை பால் வீணாய்க் கொட்டிக் கிடக்கிறதே, என்று தோன்றும்.

அந்த அமைதிக்கும் தனிமைக்கும் ஒலிகள் துல்லியப்பட்டு ஆலமரத்தின் ஊடே காற்று நீரோட்டமாய் சலசலவென்று பாயும். அந்தச் சத்தமே நம் மார்பில் சிலுசிலுவென்று இருக்கும். “வக்காளி, பொம்பளைப் பிள்ளை மாதிரி வேட்டிய வேட்டியத் தூக்குது” என்று மார்பு முடிகளை அளைந்து கொள்வார் தாத்தா. உற்சாகமோ சந்தோஷமோ வந்துவிட்டால் தாத்தா வாயில் கெட்ட வார்த்தை புழங்க ஆரம்பித்து விடும்.

ஒரு பழைய நோட்டில் தாத்தா தன் வாரிசுகளின், பிற சொந்தக்காரர்களின் முகவரி எழுதி வைத்திருந்தார். அந்த நோட்டைத் திறந்தபோது உள்ளே புழுக்கைப் பென்சில் ஒன்று இருந்தது. அலைபேசி எண் இருந்த ஆட்களுக்கு தகவல் சொல்லவும், மத்த ஆட்களுக்கு அலைபேசித் தகவல் சொன்ன ஆட்களிடமே தகவல் பரிமாறவும் சொன்னோம். அதிகம் இல்லை. பத்து பதினைந்து பேர் இருக்கலாம். செய்தி கேட்ட யாரும் அதிர்ச்சி அடையவில்லை. ஓ… என்றார்கள். எப்ப, என்ன்ச்சி, என்ற கேள்விகள் இல்லை. அவர்களில் பெரும்பாலோர் வர மாட்டார்கள். அவர்களுக்குத் தகவல் போக வேண்டும். அவ்வளவுதான். தாத்தா இருந்த காலத்திலேயே பார்க்க வராதவர்கள், இறந்த பிறகா வரப் போகிறார்கள். செய்தி கேட்டதற்கு வீட்டிலேயே தலைக்குக் குளிப்பார்கள். அத்தோடு சரி.

மூத்தவன் மதுரை தாண்டி சின்னாளப்பட்டியில் கல்யாணம் முடித்து பெண்வீட்டோடு போய்விட்டான். அவனுக்குக் கால் போட்டபோது ரொம்ப நேரம் அவன் அலைபேசி அடித்துக்கொண்டே யிருந்தது. பிறகு சிறிது கழித்து அவனே பேசினான். செய்தி கேட்டுக்கொண்டு “ம்” என்றான். பிறகு சிறிது போசித்தாற் போல “நான் வரணுமா?” என்று கேட்கிறவனை என்ன சொல்வது?

பாட்டிதான் போனை வாங்கி, “ஏல இருக்கறப்பதான் வாரதில்லை போறதில்லை. சாவுக்கு வரலன்னா எப்பிடிறா?” என்று கத்தினாள். “சரி சரி” என்கிறான் அம்மாவிடம். எனக்கென்னவோ பிறகு தனியே என்னைத் திரும்பக் கூப்பிட்டு, தான் வரவில்லை, என்று சொல்வான் போல இருந்தது.

தாத்தா அத்தனைக்கு யாரிடமும் ஒட்டவில்லை. பாட்டிகூட அத்தனை பிரியத்தைக் காட்டினாள் என்று சொல்ல முடியாது. எனக்குக் கல்யாணம் ஆகி நான்கு வருடம் ஆகிறது. எங்களுக்குக் குழந்தை இல்லை. எனக்கு வயது இப்போது இருபத்தி ஆறு. இத்தனை வருடத்தில் தாத்தா பாட்டி நெருக்கமாக எங்களுடன் கூட அத்தனை ஒட்டுதலாகப் பழகினார்கள் என்று சொல்ல முடியாது.

முன்னெல்லாம் நாங்கள் ராத்திரிக்கு மாடி அறைக்குப் போய்விடுவோம். சில நாட்கள் அறைக்குள்ளே படுத்துக் கொள்வோம். அறைக்கு வெளியே பெரிய வராந்தா போல மொட்டைமாடி. பௌர்ணமி தினங்களில் வெள்ளியாய்ச் சிரித்துக் கிடக்கும் மாடி. அப்போது நானும் இவளும், கனகவல்லியும் மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு தூக்கம் வராமல் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருப்போம். இப்போது தாத்தா பாட்டிக்கு வயதாகி விட்டது… என்று நாங்களே படுக்கையைக் கீழே மாற்றிக் கொண்டோம்.

வெளியில் தாத்தா நடமாடுகிற உற்சாகத்தைக் கூட வீட்டில் காட்டுவது இல்லை. என்றாலும்  இத்தனை குழந்தைகள்… அது அந்தக் காலத்தில் இயல்பானதுதான் என்று தோன்றியது. “அட அந்தக் காலத்துல வேற என்டர்டெய்ன்மென்ட் என்ன இருந்தது? இருட்டினா யாரும் வெளிய கூட வாரதில்லை…” என்று அப்பா சிரித்தபடி ஒருமுறை அம்மாவிடம் சொன்னார். எனக்கு வெட்கமாக இருந்தது. அப்போது நான் பள்ளிக்கூடம் படிக்கிற பையன். என்றாலும் அவருக்கு நானும், முத்தாலம்மாளும் என இரு குழந்தைகள் தான். அவருக்கு வேற என்டர்டெய்ன்மென்ட் இருந்திருக்கலாம்!  

காலை ஏழு மணிக்கெல்லாம் முத்தாலம்மாள் வந்து விட்டாள். அவள் புருஷன் அவள் என்ன சொன்னாலும் தலையாட்டி கேட்டுக் கொள்வான். அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும். தாத்தாவைப் பார்த்துவிட்டு அவள் ஒரு அழுகை அழுதாள் பார்க்க வேண்டும். தாத்தா கூட இருந்த எங்களுக்கே அத்தனை அழுகை இல்லை. என்றாலும் அழுகை என்பது இறந்த மனுசனை கௌரவப் படுத்துகிறது. இருக்கட்டும்… என்று தோன்றியது. பெண்களே சற்று தண்ணிப் பிறவிகள் தான். சட்டுச் சட்டென கண்ணில் மழை வந்து விடுகிறது அவர்களுக்கு. இல்லாட்டி கூட வீட்டில் அப்பா கொஞ்சம் திட்டினாலுமே அவளுக்கு அழுவாச்சி பொங்கிரும். “கேடுகெட்ட சிறுக்கி. இப்ப அந்த சினிமா பாக்காட்டி என்ன? நல்லா அலையிறே… துட்டுக்குக் கேடா…” என்று அப்பா சொல்லி முடிக்குமுன் இவள் கண் திரண்டு விடும்.

அவள் அழுததை விட வேடிக்கை, அவள் அழுகிறதைப் பார்த்துவிட்டு அவள்புருஷன், இசக்கிமுத்து அவனுக்கும் கண்ணில் நீர் கட்டி விட்டது. சில பிறவிகள் மகா இரக்க சுபாவம். டாக்டர் ஊசி போட்டாலே அவர்களுக்கு அழுகை வந்துவிடும். இன்னுஞ் சில ஆட்கள்… அவர்கள் குழந்தைக்கு ஊசி போட்டாலே இவர்கள் அழுவார்கள்!

தாத்தா வயது ஒத்த பெரியவர்கள் ஏழெட்டு பேர் வந்திருந்தார்கள். மற்றபடி சொந்தக்காரர்கள் அதிகம் இல்லை. அந்தத் தெருக்காரர்கள் வந்திருந்தார்கள். தாத்தாவே அதிகம் வெளியிடம் என்று போவது கிடையாது. சம்பிரதாயங்கள் தன்னைப்போல நடந்தன. பாட்டிதான் அவளது மூத்த பையன் கொள்ளி போடவாவது வருவான் என எதிர்பார்த்தாள். தனக்குப் பிறந்த குழந்தைகள் யாருமே வரவில்லை என்பது சோகம்தான். பாட்டி அதிகம் காட்டிக் கொள்ளவில்லை. “ம். சரி. ஆனது ஆவட்டும்” என்றாள்.

சனிப்பிணம் தனி போகாது, என்பது வசனம். சனிக்கிழமை இறந்த ஆத்மா இன்னொரு உயிரையும் கேட்கும், என்று சொல்கிறார்கள். ஒரு சேவலை அடித்து பாடையில் முன்னே தொங்க விட்டபடி தாத்தாவை எடுத்தார்கள். ஈர வேட்டி கட்டி, நெருப்புச் சட்டியைத் தூக்கிக்கொண்டு நான் நடந்தேன். “கோவிந்தா கோவிந்தா…” என்று கோஷம் இட்டபடி நாலு ஐந்து பேர் கூட வந்தார்கள். நாற்பது ஐம்பது அடி முன்னே ஒருத்தன் வேட்டு போட்டபடி போனான். கூடை மலரைத் தெருவெங்கும் தூவிக்கொண்டே ஒருத்தன் சப்பரத்திலேயே அமர்ந்தபடி கூட வந்தான். இதெல்லாததுக்கும் வேலை செய்ய தனிக்காசு. ஆள் இருக்கிறார்கள்.

தாத்தாவை சிதையில் வைத்து நெஞ்சில் தீ மூட்டி அடுப்பில் உள்ளே தள்ளியபின் போய்க் குளித்தேன். ’சுடுகாட்டிலேயே மோட்டார் போட்டு குழாயில் தண்ணீர் வசதி இருந்தது. தாத்தாவின் சடலம் உள்ளே எரிய ஆரம்பித்து மேலே புகைபோக்கி வழியே புகை வந்தது. தாத்தாதான் சுருட்டு பிடிக்கிறதாகத் தோன்றியது.

வீட்டு வாசல் பக்கமாகவே அக்கன்னா கல் வைத்து சமையல். ஆடு எடுத்தோம். அது ஒரு கௌரவம் போல, கட்டாயம் எங்களுக்கு. தெருவில் பாதிப்பேர் வந்து சாப்பிட்டார்கள். நாளை போய் அஸ்தி எடுத்துக் கரைக்க வேண்டும். பிறகு பதினாறாவது நாள்தான் காரியம். 

இருந்த காலங்களில் தாத்தா பாட்டி அதிகம் பிரியத்தைப் பரிமாறிக் கொண்டவர்களாய்த் தெரியவில்லை. எட்டு பெற்று அதில் சில இறந்து, என்றெல்லாம் கடந்து வந்தவர்கள். பாட்டி தலைக்குக் குளித்தது தடுமன் பிடித்துக் கொண்டது. போர்வையால் மொத்த உடம்பையும் மூடிக்கொண்டு ஆவி பிடித்தாள். சின்னக் குழந்தைக்கு “பேய்!” என விளையாட்டு காட்டுவது போல இருந்தது.

தாத்தா பாட்டி இருவர் இடையே ஒரு மௌனமான மர்மம் இருப்பதாக நான் உணர்ந்திருக்கிறேன். அதை விளக்கத் தெரியவில்லை. இதுபற்றி இவள், கனகவல்லியிடம் கூட நான் பேசியது இல்லை. அவளுக்கும் எனக்கும் இடையே எந்த ரகசியமும் கிடையாது. தாத்தா பாட்டியிடம் என்ன ரகசியம் இருக்கும் தெரியவில்லை. பையன்களும் அப்படி ஆசையாய்த் தேடி வந்து இரண்டு நாள் அப்பா அம்மாவுடன் இருந்ததும் இல்லை. தங்கள் குழந்தைகளைக் கூட்டிவந்து காட்டியதும் இல்லை.

தாத்தாவின் பூணலைப் பார்த்தபோது, அதில் தாத்தாவின் பீரோ சாவி இருந்ததைக் கண்டு அதைப் பிரித்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். எங்கள் குடும்பத்தில் பெண்கள் தாலிக் கொடியோடு எப்பவும் ஊக்குப் பின் மாட்டிக் கொண்டிருப்பார்கள். எங்காவது போகையில் காலில் முள் குத்திவிட்டால் உடனே ‘பின்’னால் முள்ளை சதையைக்கீறி வெளியே எடுத்துவிட்டு எருக்கம் பால் அடித்துவிட்டு திரும்ப எதுவுமே நடக்காதது போல் நடந்து போவார்கள். ஆண்கள் பூணலில் சாவியை முடிந்து வைத்திருப்பது சகஜம்தான்.

எனக்கு ஆச்சர்யமான ஒரு விஷயம் நடந்தது. பாட்டி உள்ளறையில் படுத்துக் கொண்டிருந்தாள். கனகவல்லியும் பக்கத்தில் இல்லை. நான் தாத்தாவின் பீரோவைத் திறந்தேன். தாத்தாவின் கையெழுத்து மிக அழகாக இருக்கும். தாத்தா அதிகம் படித்தவர் அல்ல. என்றாலும் தினசரி ஒரு நடை சலூன் வரை போய் தினத்தந்தி படித்துவிட்டு வருவார்.

பீரோவில் மூட்டைப்பூச்சி போல் வயிறு பெருத்த ஒரு பர்ஸ் இருந்தது. சுருட்டு பாக்கெட். நிறையக் காகிதங்கள் இருந்தன. எப்போதோ வந்த கடிதங்கள் பலவாறாக மடிந்து கிடைத்தன. தனது குழந்தைகளின் ஜாதகங்கள் பத்திரமாய் அவர் வைத்திருந்தார். ஒரு பித்தளை டம்ளரில் சில்லரைக் காசுகள் போட்டு வைத்திருந்தார். அத்தோடு… என்ன இது?

ஒரு பாக்கெட் ஆணுறை. தாத்தாவின் பீரோவில் கட்டு பாதி பிரித்துக் கிடைத்தது. எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. நான் எதிர்பாராதது இது. தாத்தா சில சமயம் கெட்ட வார்த்தைகள் பேசுவார், என கவனித்திருக்கிறேன். அத்தோடு சரி. மற்றபடி தெருவில் பெண்கள் அடுத்தடுத்த வீடுகளில் நின்றபடி சண்டை என்று வாய் கூசும் வார்த்தைகளால் ஒருத்தியை ஒருத்தி திட்டிக் கொள்வார்கள். தெருவில் போகிற வருகிற ஆட்கள் அதை முகம் நிறையச் சிரிப்புடன் வேடிக்கை பார்ப்பார்கள். இவள் அவள்புருனைப் பற்றியும், அவள் இவள்புருஷனைப் பற்றியும் ஆபாசச் சொற்போர் நிகழ்த்துவார்கள். காதுகூசும் வசை. அந்தப் பெண்களுக்கே அப்படியோர் வக்கிரம் இல்லாமல் அப்படிப் பேச முடியுமா என்று இருக்கும்.

தாத்தா பார்த்தால் அங்கே நிற்க மாட்டார். “இதுங்க இப்டி கட்டி உருளுதுங்களே. ரெண்டு பேர் வீட்டுக்கும்தானே கெட்ட பேர்?” என்பார் தாத்தா. எனக்குத் தெரிந்தவரை தாத்தாவுக்கு மறைவான தொடர்பு என்று வேறு எந்தப் பெண்ணிடமும் இருந்ததாகத் தெரியவில்லை. அதுவும் இத்தனை வயதுக்குப் பிறகு…

அந்த ஆணுறைப் பாக்கெட் எப்படி எப்போது எங்கிருந்து அவர் வாங்கினார்? ஒருவேளை இதற்காகத்தான் அவர் சுருட்டு வாங்குகிறேன், என்று பஸ்சில் போய்வந்தாரோ, என்று தோன்றியது. அடேடே, ஜகதலப் பிரதாபன்… ஆனால் அவரது இந்த விஷயம் இதுநாள் வரை எனக்கும் கனகவல்லிக்கும் தெரியாதபடி தாத்தா காப்பாற்றி வந்தது ஆச்சர்யம்தான்.

அவளுக்குத் தாத்தா குணம் பற்றித் தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால் பாட்டி பற்றித் தெரிந்திருக்கலாம். ஒரே வீட்டில் இருக்கும் பெண்கள். இருவருக்கும் சகஜ பாவனை வந்திருக்கும். பின்கட்டில் கதவைச் சாத்திக்கொண்டு பாட்டி குளித்துக் கொண்டிருக்கும்போது கனகவல்லி துணி துவைப்பாள் சகஜமாய். ஒரு பெண் முன்னால் இன்னொருத்தி உடை மாற்றுவது, நிர்வாணமாய் நிற்பது என்கிற சந்தர்ப்பங்களில் வெட்கப் படுவது இல்லை. இதுபோன்ற விஷயங்களில் அவர்களுக்குள் விகல்பம் தெரியாது. மாதவிடாய் போன்ற விஷயங்களை அவர்கள் யதார்த்தமாகப் பேசிக் கொள்ளவும் கூடும். ஒரு பெண்ணாக இன்னொரு பெகண்ணுக்கு அந்தரங்க விஷயங்கள் நிறையத் தெரியும்.

ஆனால் இந்த விஷயம்… தாத்தா பற்றி… அவளுக்கு எப்படித் தெரியும்? தெரிய நியாயமே இல்லை. தாத்தா இந்த வயதிலும் சரச பாவம் கொண்டாடுகிறாராக்கும். கனகா உனக்குத் தெரியுமா?

அன்றைக்கு ராத்திரி அவள் பக்கத்தில் படுத்தபடி புன்னகையுடன் ஆரம்பித்தேன். “உனக்கு ஓர் அதிர்ச்சிகரமான செய்தி…” என்றேன். “தாத்தாவோட பீரோவுல…”

“சொல்லுங்க.”

“ஆணுறைகள் …” என்று சிரித்தேன்.

அவள் திரும்பி என்னைப் பார்த்தாள்.

“இந்த வயசிலும்… ஆனா நம்ம கண்ணுல இத்தனை நாளில் ஒரு உறைகூட படவே இல்லியே?” என்றேன். “பையங்க கூட அவரு அதிகமா ஒட்டிப் பழகறதே இல்லை. அப்பவே என்னடான்னு நினைச்சேன். இந்தாளுக்கு இன்னும் உடம்பு ருசி அடங்கல்ல. அதான் காரணமா?” என்று கேட்டேன்.

கனகவல்லி புன்னகை செய்தாள். “ஒரு திருத்தம்…” என்று நிறுத்தி, பிறகு சொன்னாள். “தாத்தா இல்ல. பாட்டி.”

•••

Comments



  1. அனுபவத்தின் சொல்லாடல் கதை முழுக்க நிறைந்திருக்கின்றது.

    எட்டு குழந்தைகள் பெற்றெடுத்து, அதில் நான்கை பறிகொடுத்து, பேரக்குழந்தைகளோடு வழ்ந்து வரும் தாத்தா பாட்டியில், தாத்தாவின் மரணத்திற்குப் பின் வெளிப்படும் இன்னொரு முகம்.

    எதிர்பார்த்த முடிவென்றாலும்...
    முடிவுக்குள் ஒரு "ஜெர்க்" இருப்பதாக உணர்ந்தால்....
    அது ஆண்மனம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog