Amudhasurabi - Deepavali malar 2022

யாவரும் கேளிர்

எஸ்.சங்கரநாராயணன்

 ங்கள் எல்லாருக்குமே ஜெகதீச மாமாவை ரொம்பப் பிடிக்கும். மாமா சென்னையில் மத்திய அரசு வேலை பார்க்கிறார். இன்னும் ஐந்தாறு வருடத்தில் பதவி ஓய்வு பெற்று விடுவார். எப்பவுமே உற்சாகமான கலகலப்பான மனிதர். நாங்கள் யாருமே எதிர்பாராத அளவில் திடீர் திடீரென்று அதிகாலையிலோ முற்றிய இரவிலோ இங்கே மதுரை வந்து எங்கள் வாசல் கதவைத் தட்டுவார். இப்படி நேரங் கெட்ட நேரத்தில் விசிட் அடிப்பது என்றால் அவர்தான், என்று எங்களுக்குத் தெரியும். ஒருதரம் அம்மா தன் தங்கை ரேவதியுடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். ரேவதி திருநெல்வேலியில் இருக்கிறாள். பாதிப் பேச்சில் ரேவதி “யாரோ வாசல் கதவைத் தட்டறாப்ல இருக்குடி. இரு வரேன்…” என்று போய்க் கதவைத் திறந்தால்… ஜெகதீச மாமா திருநெல்வேலி போயிருந்தார்.

கதவைத் திறந்த ஜோரில் புன்னகையுடன் நிற்கிற மாமா. “என்ன பாஸ்கர் எப்பிடி இருக்கே?” என்றபடி செருப்பைக் கழற்றுவார். “என்ன மாமா திடீர்னு?” என்று அவரிடம் கேட்க முடியாது. “ஏன்டா நான் சொல்லிட்டு தான் வரணுமா?” என்று அதே புன்னகையுடன் கேட்பார். “திடீர்னு வந்தா அதுதான் மாமா…” என்பார். மாமா கடிதம் என்று எழுதியதே இல்லை. தோணினால் லீவு லெட்டர் எழுதுவார். சி எல், இல்லாவிட்டால் ஈ எல். போறது போ. சம்பளத்தோட லீவு தரானா இல்லையா? கிடைக்கிற பஸ். பஸ் ஸ்டாண்டுக்குள் இவர் நுழைய பஸ் வெளியே வந்தால் கைகாட்டி மறித்து உள்ளே தாவுவார்.

எங்கள் அம்மாவின் அண்ணா அவர். ஜெகதீச மாமா கல்யாணமே பண்ணிக் கொள்ளவில்லை. அதுபற்றிய யோசனையே அவரிடம் இருந்ததாகத் தெரியவ்ல்லை. அவரது சிரித்த முகம் சிறிது கூட மாறாமல் வந்து எங்களோடு இருந்த நாட்களில் அதே மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டு கிளம்பிப் போவார். வயசு வித்தியாசமே இல்லாமல் எல்லாரோடும் ஒரே மாதிரி பழகுகிற மாமா. எங்களுக்கே அப்படிப் பழக வராது. என் தம்பி சரவணனோடு என்னால் அத்தனை இயல்பாய் இருக்க முடியவில்லையே…

அத்தோடு அந்த வெள்ளைச் சிரிப்பு. மனசில் இருந்து வந்தது அந்தச் சிரிப்பு. புவனா, எங்கள் அம்மா காபி எடுத்து வருவாள். “என்ன புவனா, உன் காபியக் குடிக்கலாம்னு வந்திருக்கேன். என்ன நீ, இளைச்சிப் போயிட்டியேன்னு விசாரிக்கலாம்னா, நீ இளைக்கவே மாட்டேங்கறே?” என்பார். மாமாவிடம் யாரும் எதைப் பற்றியும் பேசலாம். அவருக்குக் கோபம் வந்து நாங்கள் பார்த்தது இல்லை. அவரிடமும் யாராலும் கோபப்பட முடியாது.

எனக்கு முதன் முதலில் கிரிக்கெட் மட்டை வாங்கித் தந்தது, என் தம்பி சரவணனுக்கு முதல் வாட்ச். இப்படி எங்கள் சொந்தத்தில் அநேகம் பேரின் ‘முதல்’களின் நாயகராக அவர் இருந்தார். யாருக்கு என்ன பிடிக்கும், அல்லது ஒருத்தரின் தற்போதைய ஆசை அல்லது தேவை என்ன, அவருக்குத் தெரிந்தது. மாமாவால் அதை நிறைவேற்றித் தர முடிந்தது.

மாமாவிடம் ஒரு கட்டுப்படாத சுதந்திரம் இருந்தது. வீட்டுக்கு வந்தாலும் மொட்டை மாடிக்குப் போய்ப் படுத்துக் கொள்வார். எங்களையும் கூப்பிடுவார். கூடப்போனால் தூங்க முடியாது. அவருக்கு உற்சாகமாகப் பேச விஷயங்கள் ஊறிக் கொண்டே யிருக்கும். அவருக்கு உற்சாகம் தருபவை, என்று இல்லை... நம்மிடம் பேசும்போது நமக்கு சுவாரஸ்யமான விஷயங்களை மாமா அடுக்குவார். எங்கள் அப்பாவின் அம்மா எங்களுடன் தான் இருந்தார். அவருடன் பேசுகையில் அவர்களுக்குப் பிடித்த விஷயங்கள் பேசுவார். எங்களுக்கு ஆச்சர்யமாய் இருக்கும். ஒரு வீட்டுக்கு வந்தால் வந்தவேலை என்று இல்லாமல் எல்லாரையும் விசாரிப்பார். எத்தனை அருமையான பழக்கம் அது.

தினசரி கல்லூரி போய் வந்தாலும் வார இறுதிகளில் கர்நாடக சங்கீத வகுப்புகள் இருந்தன எனக்கு. மாமாவுக்கு சங்கீதம் எல்லாம் தெரியாது. ரசனையும் சந்தேகம் தான். தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களில் அவர் எதுவும் பாடியோ, எந்தப் பாடலையாவது முணுமுணுத்தோ நான் பார்த்தது இல்லை. என்றாலும் “ஒரு பாட்டு பாடு மாப்ளே…” என்பார் பிரியமாய். பாடினால் பாடி முடிக்கும் வரை கேட்பார் பொறுமையாய். “இது என்ன ராகம்?” என்று நம்மிடமே கேடடுத் தெரிந்து கொண்டு தலையாட்டுவார். “இதே ராகத்தில் சினிமாப் பாட்டு…” என நான் பாடிக் காட்டினால் கண் விரிய “அடேடே” என்று புன்னகை செய்தபடி என் முதுகில் தட்டுவார்.

அவர் என்னைப் பாடச் சொல்வதே என்னை சந்தோஷப் படுத்தத்தான், இது எனக்குத் தெரியும். அந்த சினிமாப் பாடலை நான் நினைவுகூர்ந்த போது அவர் சந்தோஷப் பட்டதே எனது சங்கீத ஈடுபாட்டை சிலாகித்துத் தானே யொழிய அவரது ரசனையை மேம்படுத்திக் கொள்ள அல்ல, என பின்னாளில் நான் நினைத்துக் கொண்டேன். எவ்வளவு நல்ல பண்பு. நம்மை சந்தோஷப் படுத்தி நம் சந்தோஷ முகம் பார்த்துத் திருப்தியுறுவது. மாமாவின் இதயம் விசாலமானது. அது அன்பின் ஊற்று. மாமா எப்போதும் சந்தோஷமான சூழலில் இருக்க விரும்பினார். அப்படிப்பட்ட சூழலைத் தானே ஏற்படுத்திக் கொண்டார், என்று சொல்லத் தோன்றுகிறது. அ’னுமார் தன் வாலைச் சுருட்டி தன் இருக்கையைத் தானே ஏற்படுத்திக் கொள்ளவில்லையா, அதைப் போல.

காசிவரை போய்விட்டு வந்துவிட்டார். புது ஊர் எங்காவது போய்வந்தால் அவரிடம் புது அனுபவம் எதாவது இருக்கும். காசியில் போய் ஒருவருக்கு ‘தர்மக் கொள்ளி’ போட்டுவிட்டு வந்திருக்கிறார். யாரோ காசிக்கு வந்து இறந்திருக்கிறார்கள். அவரது மகன் வெளிநாட்டில் இருந்து வர முடியாத சூழ்நிலை. “ஐய அதுக்கென்ன… இதெல்லாம் புண்ணியம்” என்று கர்மகாரியம் செய்திருக்கிறார். அவர் அப்பாவுக்கு, அதாவது எங்கள் தாத்தாவுக்கு அவர் மூத்தபிள்ளை இல்லை. “ஆனாலும் இப்ப வாய்ச்சதே…” என்று புன்னகை செய்வார். ஒரு வேடிக்கை என்னவென்றால் எங்கள் தாத்தாவுக்கு மூத்த பிள்ளை விநாயகம். அவருக்குப் பெண் குழந்தைகள் தாம். பிள்ளை இல்லை. விநாயகம் இறந்தபோது அவருக்கு இவர்தான் கொள்ளி போட்டார்.

யாராவது ஊருக்குக் கிளம்பினால், “வரீங்களா?” என்று புன்னகையுடன் கூப்பிட்டால் உடனே கிளம்பி விடுவார். “உங்க ஊர்ல என்ன விசேஷம்?” என்று விசாரிப்பார். “எனக்கும் சேர்த்து டிக்கெட் போட்டிர்றீங்களா? நான் பைசா தந்துர்றேன்” என்பார். கிளம்பி விடுவார். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு முகம் இருக்குடா. அதுபோல ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வாசனை, அடையாளம் இருக்கு. அது அதுவா அமையற அடையாளம். “இராமேஸ்வரம்னா என்ன தோணுது?” என நிறுத்தி, “குதிரை வண்டி…’ என்று சிரிப்பார்.  “அது அந்தக்கால அடையாளம்னு சொல்வே. அதனால் என்ன?”

இங்கே மதுரைக்கு எங்கள் வீட்டுக்கு வந்து ஒரு நாலு நாள் இருக்கிற மாதிரிச் சொல்வார். திடுதிப்பென்று “திருச்சி உச்சிப் பிள்ளையாரைப் பாக்கணும். நான் திருச்சி போயிட்டு அப்பிடியே ஊர் போயிருவேன்…” என்று கிளம்பி விடுவார். எதிலும் நிலையான முடிவுகள் அவருக்கு இல்லையோ என்று தோன்றும்.

பெரிய பக்திமானா என்ன? அதொன்றும் இல்லை. நல்ல நாள், விசேஷம் என்றால் கோவிலுக்குப் போவார். அந்தக் கூட்டத் திரளில் கலந்து திளைப்பது அவருக்கு வேண்டி யிருந்தது, என்று நானே உணர்ந்து கொண்டேன். இரு கரையும் தொட்டு பரந்து விரிந்த ஆற்றில் முங்கித் திளைத்துக் குளிக்கிறோம் அல்லவா? அதேபோன்றதொரு மகிழ்ச்சிப் பரவசம், அது அத்தனை பக்தர்களின் ஊடே கலந்துகொள்வதில் அவருக்குக் கிடைத்தது. உணர்ச்சி மிக்க கூட்டத்தில் தன்னைக் கரைத்துக் கொள்ள விரும்பினார் அவர்.

தெரிந்த ஊர் என்று இல்லை. புது ஊர்களையும் போய்ப் பார்க்க அவருக்குப் பிரியம் இருந்தது. அந்த ஊரில் மக்கள் கூடும்போது அவரும் போய்க் கலந்து கொண்டார். அந்த ஊரின் விசேஷ நாள் என்று அறிந்து கிளம்புமுன் ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் அமையாது. வெய்ட்டிங் லிஸ்ட் நூறு தாண்டும். போய் இறங்கினாலும் எங்கே தங்க, தெரியாது. ஊரே தெரியாது. போய்விட்டால் ஊர் ஜே ஜே என்றிருக்கும். மக்கள் திரள் திரளாகப் போவதும் வருவதுமாய். அதைப் பார்க்க அவருக்கு இஷ்டம்.

குளக்கரை மண்டபம் அது இது… என்று கிடைச்ச இடம் ஒதுங்கிக்க வேண்டிதான், என்பார் புன்னகையுடன். நம்மால் முடியாத எளிமை அது. மண்டபத்தில் யாருடன் படுத்துக் கொள்வார்? நல்லவனோ கெட்டவனோ? பிச்சைக்காரனோ நோயாளியோ? அவரிடம் அதைப் பற்றியெல்லாம் யோசனை கிடையாது. அவர் பாட்டுக்கு கிடைத்த இடத்தில் தன்னைச் செருகிக் கொள்கிறாப் போல இருக்கும். சில பௌர்ணமி நாட்களில் அப்படிப் படுத்துக் கிடப்பது ரொம்ப உற்சாகமாக இருக்கும். யாராவது பீடி அல்லJது சிகரெட் ஊதுவார்கள். புகை வேறு கிளம்பும். “ராத்திரி சாமி புறப்பாடு இருக்கு. பத்து பத்தரை மணிக்கு. ரொம்ப அம்சமா இருக்கும் இந்த ஊர்ல. தூங்கிறாதீங்க சாமி” என்பார்கள். “இல்ல மாட்டேன்” என்பார் மாமா.

மண்டபத்து இருட்டு. பக்கத்தில் படுத்திருப்பவர் யார் தெரியாது. அவர் முகம் தெரியாது. அவருடன் இயல்பாய்ப் பேசிக்கொண்டே படுத்துக் கிடக்க மாமாவால் தான் முடியும்.

“சாமி புகைய மாத்திரம் அப்படிக்கா விடுங்க.”

“பசியைச் சமாளிக்க புகைவிட்டே பழக்கம் ஆயிட்டது…”

இரவில் திருவிழா வாண வேடிக்கை யெல்லாம் பார்த்து, மரக் கூட்டம் பக்கம் போய் காலைக்கடன் முடித்து, ஊர்க் குளத்தில் குளித்து கட்டிக் கொண்டிருக்கும் வேட்டியை அங்கேயே அலசிப் பிழிந்து சிறு வெயிலில் உலர்த்திக் கொண்டு அதுவரை டிரௌசர் மாடல் ஜெட்டியில் காத்திருப்பார். இரவில் படுத்திருந்தவருடன் ஒரு டீ சாப்பிடுவார். காலையில் ஒருதரம் சுவாமி தரிசனம் செய்ய என்று அவருடன் உத்தரவு வாங்கிக் கொண்டு கிளம்புவார்.

அந்த சந்திப்புகள் பற்றியெல்லாம் நாமாகக் கேட்டால் பேசுவார். எத்தனைவிதமான சந்திப்புகள். ஒரு மந்திரவாதி. ஒரு குடுகுடுப்பை. ஒரு பிச்சைக்காரனும் அவனுடன் கூடவே வாழும் நாயும் என்று படுத்திருந்தார். “பில்லி சூனியம் எடுக்கற ஆட்களை யெல்லாம் நான் பார்த்திருக்கேன்டா” என்றார் ஒருமுறை. பேய்கள் பற்றியும் அநேக சுவாரஸ்யமான கதைகள் அவரிடம் இருந்தன.

நான் சின்ன வயசில், அதாவது என் பள்ளிப் பருவத்தில் நாங்கள் இருந்த ஊர் வேதபுரிஸ்வரம். அங்கே சிவன் கோவில் பிரசித்தம். நாங்களே ஊர்மாறி வந்து இப்போது நான் கல்லூரி முடித்து வேலைக்கும் போக ஆரம்பித்து விடடேன். வேதபுரிஸ்வரத்தில் இப்போது எங்கள் சொந்தமாக யாருமே இல்லை. என்றாலும் வருடம் ஒருமுறை அந்த ஊர்க் கடவுளுக்கு என் பிறந்த நள் என என் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு விபூதிப் பிரசாதம் தபாலில் வரும். ஒருநாள் வந்த ஜோரில் எனக்கு விபூதி கொடுத்தார். “இது உங்க ஊர் பிரசாதம் தாண்டா” என்றார். ஆக யாரும் இல்லாவிட்டாலும் அந்த ஊரையும் ஒரு விசிட் அடித்திருக்கிறார்.

எங்கள் பாட்டிக்கு கண்புரை அதிகமாக திண்டாடினாள். அம்மா வேலைக்குப் போக வேண்டி யிருந்தது. நான் சின்னப் பையன். அப்பாவுக்கு அடிக்கடி மூச்சிறைப்பு வரும். வெளியே சிறு மழை, குளிர் என்றாலும் அவர் மார்பில் தயிர் கடைகிறாப்போல சத்தம் கிளம்பி விடும். அந்த முறை எங்கள் வீட்டுக்கு வந்த மாமா அவரே பாட்டியை ஆஸ்பத்திரி அழைத்துப் போய் அறுவைச் சிகிச்சை முடித்து வீட்டுக்குக் கூட்டி வந்து கூடவே இரண்டு மூன்று நாள், கண் கட்டு பிரிக்கும் வரை இருந்தார். பெரிய உதவி அல்லவா? அதுவும் மாப்பிள்ளை வழி பாட்டிக்கு…

உதவி என்றால் அவள் பக்கத்திலேயே இருந்து வேளைக்கு காபி வேணுமா, தண்ணி வேணுமா என்று கேட்டுத் தருவது, தலையணை வசதியா இருக்கா?... என சரிபார்ப்பது. பக்கத்தில் மொபைலில் அவளுக்குப் பிடித்த பாடல் வைத்துத் தருவது. கிரேசி மோகன், எஸ்.வி சேகர் என்று நகைச்சுவை நாடகம் கேட்பாள் விரும்பி… தான் வாசித்த கதைகள் சொல்வது, பாட்டி பேசப்பேச கேட்டுக் கொண்டிருப்பது… என அவர் சமாளித்தது பாட்டிக்கே திருப்தி ஆயிற்று. “எம் பிள்ளை மாதிரி பாத்துக்கிட்டேடா…” என மனசாரச் சொல்வாள் பாட்டி.

“அண்ணா அதெல்லா எங்க போனாலும் நல்ல பேர் எடுத்துருவான்” என்றாள் அம்மா. ஆயினும் மாமா பற்றி அவளுக்குக் கவலை உண்டு. ஜெகதீச மாமா கல்யாணமே பண்ணிக் கொள்ளாததில் அவளுக்கு வருத்தம். “அதானே ஏம்மா அப்டி?” என்று கேட்டேன் வியப்புடன். “எதும் காதல் தோல்வின்றாப்போல… நம்ம கிட்ட சொல்லாத கதை ஒன்று அவருள் இருக்குமோ?” அம்மா ‘ம்ஹும்’ என மறுத்துத் தலையாட்டினாள். “அவங்க ஆபிஸ்ல, மத்த சிநேகித வட்டத்துல எலலாம் நாங்க விசாரிச்சிட்டோம்டா. அப்படி யொண்ணும் தெரியல…”

இதற்கிடையே மாமா ஒருநாள் திடுதிப்பென்று என் அக்கா பாகீரதியைப் பார்க்க விழுப்புரம் போய் இறங்கி யிருக்கிறார். அன்றைக்கு அந்த வீட்டில் நிலைமை அத்தனை சுமுகமாய் இல்லை. கதவைத் திறந்து விட்டுவிட்டு மாப்பிள்ளை ஸ்ரீதர் உள்ளே போயிருக்கிறான். அதுவே மாமாவுக்கு ஒரு மாதிரி ஆகியிருக்கிறது.

பாகீ வாங்க, என்று சொல்லாமல் தலையை மாத்திரம் ஆட்டினாள். நம்ம வீட்டுப் பிரச்னை மாமாவுக்குத் தெரிஞ்சிட்டதே என்று அவளுக்கும் ஒரு ‘இது’தான். என்னடா எக்கு தப்பான நேரத்தில் வந்திட்டமோ என்று இருந்தது மாமாவுக்கு. வந்தது வந்தாகி விட்டது. இப்போது இந்தப் பிரச்னையைத் தீர்க்காமல் அவர் கிளம்பவும் முடியாது. வீட்டில் அவளும் மாப்பிள்ளையும் தான். அவர்கள் இருவரும் உர்ர் உர்ரென்று இருந்தார்கள்.

 ‘‘சரி. நான் கிளம்பறேன்” என்று கூடத்தில் நின்று பொதுவாக சத்தமாகப் பேசினார் மாமா. மாப்பிள்ளை அவன் அறையில் இருந்து வெளியே வந்தான். பாகீ அவருக்காக அடுப்படியில் காபி கலந்து கொண்டிருந்தவள் வெளியே வந்து பார்த்தாள். “ஏன் மாமா?” என்றான் மாப்பிள்ளை. பாகீ பேசாவிட்டாலும் மாமாவையே பார்த்தாள்.

“இன்னிக்கு நாம மூணு பேருமே வெளிய சாப்பிடுவோம்” என மாமா அவர்களை அழைத்துப் போனார். ரெண்டு பேருமே அலுவலகத்துக்கு லீவு எடுத்தார்கள். அவர்களுக்குள் என்ன பிரச்னை என்றே தெரியாது. “மாப்ளை இப்ப ஸ்ரீரங்கம் போறேன். உங்களைப் பாத்திட்டுப் போலாம்னு இருந்தது. நீங்க வரீங்களா?” என்று கேட்டார் அவனிடம். அதேபோல அவளிடமும் சில ஸ்வீட் நத்திங்கஸ்’ போலப் பேசினார். முதலில் சிறிது தயங்கித் தயங்கிப் பேச ஆரம்பித்த இரண்டு பேரும் பிறகு மெல்ல சகஜமாகப் பேச ஆரம்பித்தார்கள். இப்போது அவர்கள் இரண்டு பேரிடமுமே மாற்றி மாற்றி அவர் பேச ஆரம்பித்தார். மாப்பிள்ளையின் அம்மாவின் உடல்நலம் விசாரித்தார். ஹோட்டல் பில்லை அவரே தந்தார்.

அவர்கள் தங்களுக்குள் சகஜப் பட்டார்களா தெரியாது. என்றாலும் ஸ்ரீரங்கம் ரெண்டு பேருமா வாங்களேன்… என்றபோது இருவருமாகச் சேர்ந்தே “இல்ல. இன்னொரு வாட்டி பாக்கலாம்” என்று ஒரே குரலில் சொன்ன்து அவருக்குப் பிடித்திருந்தது. கெமிஸ்ட்ரியில் வாசித்தது போல அவர்கள் இருவரும் இயங்க, செயல்பட அவர் ஒரு ‘கிரியாவூக்கி’ (கேட்டலிஸ்ட்) எனச் செயல்பட்டிருந்தால் அவருக்கு மகிழ்ச்சியே. சரியான நேரத்தில் தான் அங்கு வந்திருக்கலாம். அதாவது அவர்களுக்குள் மூணாம் நபர், இருவரையும் விசாரணை வளையத்தில் கொண்டுவராத ஒரு நபர் தேவைப் பட்டிருக்கலாம்… நான் வந்தது நல்லதாயிற்று, என நினைத்தார். அதல்ல விஷயம். இப்போது இனியும் அவர்கள்கூட நான் இருப்பது தான் அவர்களுக்கு இடைஞ்சல். லீவு வேறு போட்டிருக்கிறார்கள்.

உண்மையில் அவர்களே முன்யோசனையாய் லீவைக் கைக்கொண்டிருக்கலாம். கொண்டுவந்த பையை ஹோட்டலுக்கு எடுத்து வந்திருந்தார். அப்படியே அங்கிருந்து மாமா ஸ்ரீரங்கம் பஸ்ஸேறினார். இதையெல்லாம் அடுத்தமுறை எங்கள் வீட்டுக்கு மதுரை வந்தபோது மாமா பேசினார். நானும் மாமாவும் மொட்டைமாடியில் படுத்திருந்தோம். நல்ல அமைதி. அருமையான காற்று. பின்னிரவில் நிலா வருமாய் இருந்தது. திடீரென்று நான் மாமாவிடம் கேட்டேன். “நீங்க ஏன் மாமா கல்யாணமே பண்ணிக்கலை?”

“உங்க அம்மா கேட்கச் சொன்னாளா?” என்று சிரித்தார் மாமா. “கல்யாணம்னா என்னடா? நம்ம சந்தோஷத்துக்காக நாம பண்ணிக்கற ஏற்பாடு தானேடா?” என்றார் மாமா. என் பக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டார். நான் ம், என மாமாமீது என் காலைப் போட்டுக் கொண்டேன்.

“ஆனால் சந்தோஷம்ன்றது நமக்குள்ள இருக்கு. அது வெளியில இல்லை.”

“எனக்கு என் சந்தோஷம் முக்கியம். ஆனால் ஒரு கல்யாணம்னு பண்ணிக்கிட்டேன்னு வெய்யி… எந் சநேதாஷங்களுக்கு ஒரு சுயநலமான கோட்டிங் வந்திருதுன்னு நினைக்கிறேன். கல்யாணம் ஒரு கமிட்மென்ட். அது இந்த உலகத்தை விட்டு ஒரு சுயநலத்தோட நம்மை ஒடுக்கிர்றதா எனக்குப் படுது. பாசு, நான் மனிதர்களை நேசிக்கிறேன். உன்னை நேசிக்கிறதைப்போல எதிரவீட்டுப் பையனையும் நேசிக்கிறேன்… உலகத்தை, உலகத்தின் அத்தனை மனிதர்களையும் நேசிக்கிறேன்…” என்றார் மாமா.,

அவர் யோசனை எனக்குப் புதுசாய் இருந்தது.

“இப்ப கல்யாணம்னு எனக்கு ஆயிருந்தா நான் இப்படி ஊர் ஊரா சுத்தி, புதுப்புது சந்தோஷங்களை அடைய முடியுமா? என் மனைவிக்கு ’குழந்தைக’ளுக்கு நான் கட்டுப் பட்டவன் ஆயிர்றேன். நான் இப்படிக் கிளம்பறதுல அவங்க சம்மதம் எனக்கு தேவையாயிருது. என் இஷ்டப்படி நான் இருக்க முடியுமா? இப்ப என் தங்கையைப் பார்த்து நான் காட்டுகிற அதே புன்னகையை எதிர்வீட்டுப் பெண்ணிடமும் நான் காட்டலாம். அது தப்பாகாது. அவங்களும் என்னை எளிமையாப் புரிஞ்சிப்பாங்க… புரிஞ்சிப்பாங்களா இல்லையா?”

“புரியுது மாமா” என்றேன்.

“நீ மாறுபடலாம். இதான் நான்…” என்றார் மாமா. பெரிய கொட்டாவி விட்டார். “மணி என்ன தெரியல்ல. தூங்கலாமா?” என்றார்.

•••

 


Comments

  1. பிரம்மச்சரியம் என்னும் சமூகப் பிரச்சினையை வேறு கோணத்தில் அலசியிருக்கிறீர்கள். சுவையாக இருக்கிறது.

    ReplyDelete
  2. ஆஹா..பரந்துபட்ட அன்பு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog