
Amudhasurabi - Deepavali malar 2022 யாவரும் கேளிர் எஸ்.சங்கரநாராயணன் எ ங்கள் எல்லாருக்குமே ஜெகதீச மாமாவை ரொம்பப் பிடிக்கும். மாமா சென்னையில் மத்திய அரசு வேலை பார்க்கிறார். இன்னும் ஐந்தாறு வருடத்தில் பதவி ஓய்வு பெற்று விடுவார். எப்பவுமே உற்சாகமான கலகலப்பான மனிதர். நாங்கள் யாருமே எதிர்பாராத அளவில் திடீர் திடீரென்று அதிகாலையிலோ முற்றிய இரவிலோ இங்கே மதுரை வந்து எங்கள் வாசல் கதவைத் தட்டுவார். இப்படி நேரங் கெட்ட நேரத்தில் விசிட் அடிப்பது என்றால் அவர்தான், என்று எங்களுக்குத் தெரியும். ஒருதரம் அம்மா தன் தங்கை ரேவதியுடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். ரேவதி திருநெல்வேலியில் இருக்கிறாள். பாதிப் பேச்சில் ரேவதி “யாரோ வாசல் கதவைத் தட்டறாப்ல இருக்குடி. இரு வரேன்…” என்று போய்க் கதவைத் திறந்தால்… ஜெகதீச மாமா திருநெல்வேலி போயிருந்தார். கதவைத் திறந்த ஜோரில் புன்னகையுடன் நிற்கிற மாமா. “என்ன பாஸ்கர் எப்பிடி இருக்கே?” என்றபடி செருப்பைக் கழற்றுவார். “என்ன மாமா திடீர்னு?” என்று அவரிடம் கேட்க முடியாது. “ஏன்டா நான் சொல்லிட்டு தான் வரணுமா?” என்று அதே புன்னகையுடன் கேட்பார். “திடீர்னு வந்தா அத...