சிந்தனைத் தொடர் / நிசப்த  ரீங்காரம் • 4

நன்றி பேசும் புதிய சக்தி – பிப்ரவரி 2022

 

சுஜாதாவின் ‘பூனை’

ஞானவள்ளல்

டீன் ஏஜைக் கடக்குமுன் எல்லாருக்கும் அந்த வயதுப்பகுதியை ஒரு ‘ஹை ஜம்ப்’ தாண்டிக் குதித்துவிட வேகம் வருகிறது ஏனோ. நாம பெரியாம்பளைடா, அல்லது நாம இப்போது வளர்ந்த பெண், என்கிற ஒரு மயக்கம். இருப்பின், சூழலின் போதாமை பூதாகரமாக நம்மால் உணரப்படும் வயது அது.

நினைவு பிடிக்குள் வருகிற எனது அந்த வாலிப வயதில் முதல் யோசனை, நாம வேற எங்கியோ பிறந்திருக்க வேண்டிய ஆளப்பா, இங்க இந்த அப்பாம்மா கிட்ட வந்து மாட்டி யிருக்கிறோம், என்கிற விசனமே. அநேகமாக எல்லா வாலிப ஆளுக்கும் இப்படியோர் சலிப்பு வந்துதான் இருக்கும். நம்மைப் பற்றி அதிகமாகவும், மத்தாள் நம்ம தரத்துக்கு ஒரு படி தாழ்வாகவும் நினைப்பு. பெரியவர் என்ன சொன்னாலும் ஒரு கன்னுக்குட்டியாய் முட்டித் தள்ளும் வேகம். கயித்தை அவுத்து விடுங்கப்பா, என ஆத்திரக் கூக்குரல். அவுத்து விட்டால்? எங்க போய் முட்டிக்குவோம் தெரியாது. ஆனால் கட்டுக்கள் எரிச்சல் படுத்தின.

அந்த வயசில் புதுசாய்க் கதை எழுத வேறு வேகம் எனக்கு வந்தது. எப்படி கதை எழுத வந்தேன்?

எந்தப் பெருங் கூட்டத்திலும் மேலடி அடித்து காமெடி பண்ணி அதைக் கேட்டு நாலு பேர் சிரிக்க வேண்டும் என்று ஒரு நமநமப்பு. (அரிப்பு என்பதைக் கொஞ்சம் கௌரவமாகச் சொல்கிறேன்.) எந்தக் கூட்டத்திலும் நமக்கு அடையாளமான கவனம் கிடைக்கா விட்டால் ஒரு வெறுப்பு. உடனே அங்கே யிருந்து நகர்ந்து விடுவேன்.

நம்மைப் பிறர் பாராட்ட வேண்டும், கவனிக்க வேண்டும் என்ற உந்துதலே என்னை எழுதக் கூட்டி வந்தது. கையில் பேனாவை எடுத்த உடனேயே ஒரு பரபரப்பு. இன்று புதிதாய்ப் பிறந்தேன், என்று நான் நினைத்தால் பரவாயில்லை, இனி புது உலகம், நான் தோற்றுவிப்பேன் என்கிற உச்சகட்டப் பித்தம்.

எல்லாப் பிரச்னைக்கும் கனவுகளில் தீர்வு காண்பது சௌகர்யமாய் இருந்தது.

ஆ விதவைகள், இளம் விதவைகள் இருக்கிறார்களே? இருக்கலாமா? உடனே ஏ கேடு கெட்ட சமுதாயமே, என என் மனம் பொங்கியது. விதவை என்றால் யார்? ஒரு நபர் எதற்குக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறார், எதுவும் தெரியாது. காதலும் தெரியாது. ஆனால் தேவை, உடனடித் தேவை சமுதாய மாற்றம்.

உக்கிரமாய்ப் பிரச்னைகளைக் கதையில் எழுது. விதவை கொண்ட சமுதாயம் நோயுற்ற சமுதாயம், என்று எழுது. சாதாரண நோய், உடல் நோய் அல்ல இது. மன நோய். அடாடா, என என்னை நானே மெச்சிக் கொண்டேன்.

உண்மையில் விதவை பற்றி நான் எழுதிய ஒரு சிறுகதை ஆனந்த விகடனில் வெளியானது. கதையின் தலைப்பு ‘ஒரு வெள்ளை உடுத்திய தேவதை.’ கதை வெளியான மறுநாள் நான் வெளியே வந்து உலகத்தைப் பார்த்தேன். அதே வாசல் குப்பைத்தொட்டி. கோவிலின் சுற்றுச் சுவர் பக்கம் மூத்திர வாடை. இந்த உலகம் மாறவே இல்லை. திருந்தவே இல்லை.

ஓர் இளம் பெண், என் பக்கத்து வீட்டு அக்காவிடம் இந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன். ஒரு மிகப்பெரும் புரட்சியாளன் உருவான தருணத்தை அவள் உணரட்டும். அவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை. ஒரு பெண் எதற்குக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறாள். அவள் ஏன் எப்படி விதவை ஆகிறாள்… என அவளுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம்.

கதையை வாசித்து விட்டு அவள் சொன்ன விமரிசனம் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

ஒரு விதவையைப் பற்றி பரிதாப் பட்டு கதை எழுதியிருக்கே இல்லியா?... என்று கேட்டாள் அவள். எனக்கு அது மகிழ்ச்சி அளித்தது. எத்தனை பொறுப்பான பிள்ளை நான். அதை அவள் உணர்ந்து கொண்டிருக்கிறாள். ஆக அவளும் பொறுப்பான பெண்தான் என நினைத்துக் கொண்டேன்.

ஆனால் தனது பூவை பொட்டை இழக்கிற அவளைப் பற்றி கதை எழுதும் போது, என்ன தலைப்பு இது? ‘ஒரு வெள்ளை உடுத்திய தேவதை?’ தலைப்பில் இத்தனை அலங்காரம் தேவையா?... என்று கேட்டாள் அவள்.

விதவையாவது, தேவதையாவது? யாருக்கு அதெல்லாம் தெரியும்.

சைக்கிள் கற்றுக் கொள்கிற ஆரம்ப காலத்தில் முழு வேகத்தில் சர்ர்ரென்று போய்த் தரையில் விழுந்து வாரினாற் போல இருந்தது.

நான் பதட்டத்தில் பக்கத்து வீட்டு அக்கா மேல் மோதி விழுந்து விட்டாற் போல இருந்ததது.

அந்த ரெண்டுங் கெட்டான் வயதில், நாமாக இப்படி உடலைத் திருகிக் கொள்வது போல, பெரியவர்கள், பெற்றவர்களும் நம்மைத் திருகிவிட முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கும் கனவுகள் இருந்தன. நிறைவேறாத கனவுகள். அல்லது தோற்றுப்போன கனவுகள். அவர்கள் தங்கள் தோல்விகளை மறுக்க விரும்பினார்கள். அதை அவர்கள் ஒத்துக்கொள்ள மறுத்தார்கள். அதற்கு அவர்களுக்குக் கிடைத்த வடிகால் தங்கள் பிள்ளைகள் என நினைப்பது தான் கொடுமை.

பிள்ளைகள் என்பவர்கள் பெற்றவர்களின் கனவுகளின் குப்பைத் தொட்டியா என்ன?

“நீ நல்லாப் படிடா. உன்னை டாக்டர் ஆக்கறேன்” என்பார்கள். அவனுக்கு டாக்டர் ஆகும் குறைந்தபட்ச உத்தேசமாவது இருக்கிறதா, என அவர்கள் கேட்பது இல்லை. நீ யாரா ஆக ஆசைப் படுகிறாய், என்றுகூட குறைந்த பட்சம் அவர்கள் பிள்ளைகளிடம் கேட்பது இல்லை. இன்றைக்கு மார்க்கெட்டில் டிமாண்ட் உள்ள படிப்பு, படிச்சி முடித்தவுடன் கை நிறைய சம்பளம் தருகிற வேலை அமைகிற படிப்பு நீ படித்தால் போதும், நீ புத்திசாலிப் பிள்ளை அவர்களுக்கு.

தங்கள் எதிர்பார்ப்பின் படி பிள்ளை வளர்க்கிறவர்கள் செருப்புக்குத் தக்ன காலை வெட்டுகிறார்கள். இதனால் பெத்தவருக்கும் பயன் இல்லை. பிள்ளைகளுக்கும் பயன் இல்லை. ரெண்டுங் கெட்டானாக இருந்த வயதில் இருந்து இப்போது அந்தப் பிள்ளைகள் ரெண்டுங் கெட்டான் பெரியவர்கள் ஆகிறார்கள், தங்கள் அப்பா அம்மாவைப் போல.

ஒரு சமுதாயம் எப்பவும் ரெண்டுங் கெட்டான் ஆசாமிகளையே அச்சு மாதிரிகளாக உருவாக்கித் தள்ளுகிறது. இதில் அநேகமாக தப்பிப் பிழைத்தவர் இலர்.

அவர்களையும், அதாவது அந்த சிலரையும் சாகடிக்க இந்த சமூகம் முயற்சி செய்கிறது.

ஆன்டன் செகாவ் நம்ம ஊர் கி.ரா அண்ணாச்சி மாதிரி. இவர் ருஷ்ய மகா சனங்களின் கி.ரா என்று சொல்லலாம். சாமானிய மக்களின் ஆசா பாசங்களை, பைத்தாரத் தனங்களைப் புட்டுப் புட்டு வைப்பதில் சமர்த்தர். எகத்தாள மன்னர். பெண் பிள்ளைக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்து அதில் தன்னைப் பற்றிய பெருமை கொண்ட ஒரு அப்பா பற்றி ஒரு கதையில் காட்சி அமைக்கிறார் ஆன்டன் செகாவ்.

வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். வந்த ஆட்களிடம் பீற்றிக்கொள்ள அவருக்கு ஒரு தலைக் கிறுகிறுப்பு. எம் பொண்ணு ரொம்ப நல்லாப் பாடுவா… என்று முகம் வீங்கிய பெருமையுடன் அவர் தன் பெண்ணை அவர்கள் முன் அழைத்து அறிமுகப் படுத்தி, “ஒரு பாட்டு பாடுடி” என் ஊக்குவிப்பார். மகா அவலட்சணமாய் அந்தப்பெண் பாட்டெடுக்கும். இருக்கிற ஏழு ஸ்வரமும் அபஸ்வரமாய் ஒருத்தியால் பாட முடியுமா? அந்தப் பெண்ணால் முடிந்தது.

விருந்தாளிகள் முகத்தில் ஈயாடாது. அவள் பாடி முடிக்கும் வரை வேறு வழியில்லாமல் அவர்கள் பல்லைக் கடித்தபடி பொறுமையாய் இருப்பார்கள். அவள் பாடி முடித்ததும் அந்த அப்பா விருந்தாளிகளைப் பார்த்து, பிரமாதமாப் பாடறா இல்ல, என்று சொல்ல வந்தவர், விருந்தாளிகள் முகம் வேப்பெண்ணெய் குடித்தாற் போல இருந்ததைப் பார்த்துவிட்டு தன்னை அடக்கிக் கொண்டு, “மோசமில்லை அல்லவா?” என்று கேட்பார்.

எழுதி எத்தனை வருடம் ஆனதோ? நான் வாசித்தே நாற்பது வருடம் ஆகிவிட்டது. அதுவும் ஆங்கிலத்தில் வாசித்த கதை. இப்போது இத்தனை வருடம் கழித்தும் நினைவில் மின்னுகிறது. மொழி தாண்டி இதன் நகைச்சுவை புன்னகையை வரவழைக்கிறது.

இளம் வயதில் படிக்க ஆசை இருந்தும், பெற்றவர்கள் பெண்ணைப் படிக்க அனுப்பாமல் பள்ளியில் இருந்து நிறுத்தி விடுகிற அவலமான கதை ஒன்றும் கூடவே நினைவு வருகிறது. அநேகமாக வண்ணநிலவன் எழுதி யிருக்கலாம் இந்தக் கதையை.

“இனி நீ பள்ளிக்கூடம் போகவேண்டாம், போ, போயி சாணி பொறக்கிட்டு வா,” என அவள் கையில் இருந்த புத்தகப் பையைப் பிடுங்கிவிட்டு சாணிக் கூடையைத் தருகிறாள் அவள் அம்மா.

அவள் தெருத் தெருவாய்ப் போய் எங்கெல்லாம் மாடு சாணி போட்டிருக்கிறதோ அதைக் கூடையில் அள்ளி வந்தால் அம்மா அதை வரட்டி தட்டி விலைக்கு விற்று சம்பாதிப்பாள்.

பெண்ணுக்குப் பள்ளிக்கூடம் போக முடியாத துக்கம். சாணிக் கூடையுடன் அவள் கால்கள் தன்னைப்போல பள்ளிக்கூடம் நோக்கி நடக்கின்றன. பெரிய விளையாட்டுத் திடல். அதற்கு உள்ளே பள்ளி நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்க்கவே இவளுக்கு துக்கம். அழுகை வருகிறது.

இந்நேரம் அவளது வகுப்பும் நடந்து கொண்டிருக்கும். இவள் தனது வகுப்பறைக்கு வெளியே யிருந்து எட்டிப் பார்க்கிறாள். உள்ளே பாடம் நடந்து கொண்டிருக்கிறது. இவள் வழக்கமாக உட்காரும் பெஞ்சில் வேறொரு சின்னப் பெண். தன் பெஞ்சில் இன்னொருத்தியா? இவளுக்கு ஆத்திரம் வருகிறது.

தற்செயலாக அந்தப் பெண் திரும்பி சன்னலைப் பார்க்கிறாள்.

இவள் சன்னலில் இருந்து, என் பெஞ்சிலயாடி உட்கார்ந்திருக்கே? கொன்னுருவேன் உன்னை… என நாக்கு துருத்தி ஜாடையில் மிரட்டுகிறாள். அதைப் பார்த்து பயந்து கொண்டு அந்தப் பெண் வேறு இடத்தில் போய் அமர்ந்து கொள்கிறது.

மதிய இடைவேளை. பெல் அடிக்கிறது. வகுப்பே காலி இப்போது. யாரும் கிளாசில் இல்லை. இந்தப் பெண் விறுவிறுவென்று காலி வகுப்புக்குள் நுழைகிறாள். தனது பெஞ்சில் தனது இருக்கையைப் பார்க்கிறாள்.

இனி யாரும் அந்த இடத்தில் அமரக் கூடாது…

சட்டென்று அவள் ஒரு காரியம் செய்கிறாள். தன் சாணிக் கூடையில் இருந்து கைநிறைய சாணி எடுத்து அந்த பெஞ்சில் தன் இடத்தில் பூசிவிட்டு வெளியேறுகிறாள்.

ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்குப் பின் இந்தக் கதை, இதுவும் இப்போது மேல் அலையாய் வருகிறது, என்பது ஆச்சர்யமே. நல்ல கதைகளின் இயல்பு அது.

மூளையில் ஆக்கிரமிப்பு நடத்தும் பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளின் வெறுப்பையே சம்பாதிக்க நேர்ந்து விடுகிறது.

பிள்ளைகளின் கவனமும் ஆர்வமும் எதில் ஈடுபாடு காட்டுகிறது, என அறிய முற்பட நாம் தயாராகவே இல்லை. இது அப்பாவுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான கால காலமான துக்கம் தான்.

அப்பாவின், அம்மாவின் எதிர்பார்ப்பின்படி வளராத குழந்தைகள் பெற்றவர்களை பயமுறுத்துகின்றன.

அவரவர் மனது, அவரவர் உலகம் என்பது தனிதான். நிர்ப்பந்தங்கள் நம் விருப்பமான முடிவுகளை நோக்கி நிகழ்வுகளை நகர்த்த முடியாமல் போய்விடும். ஆன்டன் செகாவின் கதை போல, நமக்கு உவப்பான சூழல் அடுத்தவருக்கு உவப்பு இல்லாமல் போகிற சந்தர்ப்பங்கள் உண்டு.

அட ஆமாம். சுஜாதாவின் ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது.

ஒருவன் தன் பூனைக்கு மனிதர்கள் போல பேசக் கற்றுத் தந்திருப்பான். அந்தப் பூனையின் திறமையை எல்லாரும் அறியச் செய்யவேண்டும் என அவனுக்கு ஆசை.

ஒரு ஸ்டூடியோவில் சினிமா ஷுட்டிங் நடக்கிறது. பிரபல நடிகன் நடித்துக் கொண்டிருக்கிறான். அங்கே போய் அந்த சினிமா டைரக்டரிடம் பூனையை அறிமுகம் செய்து அதற்கு சினிமா சான்ஸ் வாங்கிவிட அவன் முயற்சி செய்வான்.

வேடிக்கை பார்க்கிற கூட்டத்தைத் தாண்டி, உதவி இயக்குநர்களைத் தாண்டி அவன் டைரக்டரின் பார்வையில் படுவான். அவரிடம் ரொம்பப் பெருமையாய் “என் பூனை மனிதர்கள் மாதிரி நல்லாப் பேசும் சார்…” என்று காட்டுவான்.

அவர் உடனே ஆர்வப்பட்டு படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவனிடம் வருவார். இது புது விஷயமா இருக்கே, என நினைத்தார் அவர்.

“எங்க உன் பூனையப் பேசச் சொல்லு பார்ப்பம்…” என்று வந்து உட்கார்வார்.

சுற்றிலும் அத்தனை கூட்டம். பழகாத இடம். தெரியாத முகங்கள். பூனை வெறிக்கும். ஷுட்டிங் பாதியில் நின்று டைரக்டர் காத்திருப்பார்.

அவன் பூனையிடம் பேசச் சொல்லிச் சொல்லுவான். பூனை ஒரு வார்த்தை கூடப் பேசாது. அப்படியே உள்ளொடுங்கிப் போய் உட்கார்ந்திருக்கும்.

நேரம் வீணாகிக் கொண்டிருக்கிறது, என ஹீரோ நடிகர் சலித்துக் கொள்வார்.

இன்னும் கொஞ்சம் பொறுமையாப் பாக்கலாம், என நினைத்துக் காத்திருப்பார் டைரக்டர். அவன் பூனையைத் தூக்கிச் கொஞ்சுவான். பிரியமாய் வருடித் தருவான். எப்படியெல்லாமோ அதை உற்சாகப் படுத்த முயற்சி செய்வான்.

நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. பூனை பேசவே பேசாது. அது உள் பதுங்கி பயத்துடன் அவன் கையில் ஒடுங்கிக் கிடக்கும்.

டைரக்டருக்கு ஏமாற்றம். “என்னப்பா, பூனையைப் பத்தி என்னன்னமோ சொன்னியே?...” என்று அவனைக் கேட்பார்.

“அருமையாப் பேசும் சார். இப்ப என்னாச்சி தெரியல. இந்தக் கூட்டத்தைப் பார்த்து அது வெறிக்குது…” என்பான்.

“சரி. இனியும் எங்க வேலைகளைத் தள்ளிப் போட முடியாது. இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்…” என டைரக்டர் எழுந்து கொள்வார். திரும்ப எல்லாரும் படப்பிடிப்பில் பரபரப்பாவார்கள்.

அவனுக்கானால் ஏமாற்றம். ச்சே, நல்ல வாய்ப்பு. டைரக்டர் கூட நேரம் ஒதுக்கித் தந்தார். ஆனால் இந்தப் பூனை… ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அழிச்சாட்டியம் பண்ணிட்டது.

கூட்டத்தை விலக்கி அவன் ஸ்டூடியோவை விட்டு வெளியே வருத்தமாய் நகர்ந்தான். இப்போது தனிமை. கூட்டம் இல்லை. அந்தப் பூனை அவனோடு எதோ பேச வாய் திறந்தது.

சட்டென்று அந்தப் பூனையை வாலைப் பிடித்துச் சுழற்றி ஸ்டூடியோ சுவரில் அடித்தான்.

க்யுக் என்று சின்னதாகத்தான் சத்தம் கேட்டது – என்று கதையை முடிக்கிறார் சுஜாதா.

மேற்சொன்ன பத்திகள் அத்தனையிலும் பொதுவான நீதி ஒன்று உள்ளது. அது என்ன?

நிர்ப்பந்தம் எந்தக் காலத்திலும் போணி ஆவது இல்லை. அநேக சந்தர்ப்பங்களில் அவை எதிர்மறை விளைவுகளைத் தந்து விடுகின்றன.

கவிஞர் கலில் ஜிப்ரன் சொல்வது என்ன?

குழந்தைகள் உங்கள் மூலமாக இந்த உலகத்தைப் பார்க்க வந்தவர்கள். அவர்களை உங்கள் கண்கள் மூலமாக உலகத்தைப் பார்க்க நிர்ப்பந்திக்காதீர்கள், என்கிறார் கலில் ஜிப்ரான்.

•••

Comments

Popular posts from this blog