தமிழ்ப் பல்லவி – ஜன. மார்சு 2022 இதழ்

வாழை


 எஸ்.சங்கரநாராயணன்

ம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று தகவல் வந்தபோதே ராதாவுக்குப் பதட்டமாகி விட்டது. “எதுக்கெடுத்தாலும் பதறாதே ராது. உடம்புன்னா அதுக்கு நோவுன்னு வராதா என்ன?” என்றான் மணிவண்ணன். “எங்கம்மா ஒருநாள் கூட தலை வலி உடம்பு வலின்னு ஓய்ஞ்சி படுத்ததே கிடையாதுங்க” என்றாள் ராதா. “அந்தக் காலத்து மனுஷா எல்லாருமே அப்படிதான். தனக்கு ஒரு சிரமம்னா காட்டிக்க மாட்டாங்க…” என புன்னகைத்தவன், அவள் முகத்தைப் பார்த்துவிட்டு “நீ வேணா உங்கம்மாவைப் போயிப் பார்த்திட்டு வரதானா வாயேன். உங்கம்மாவுக்கும் ஒரு சமாதானமா யிருக்கும்” என்றான்.

“குழந்தைக்கு ஸ்கூல்…” என இழுத்தாள்.

“பெரிய ஐ ஏ எஸ் பரிட்சை பாழாப் போற மாதிரி யோசிக்கறே? யூகேஜி தானே? பரவால்ல. லீவு போட்டுக்கலாம்…” அவன் எப்படிப் பேசவேண்டும் என்று அவள் எதிர்பார்த்தாளோ அதேபோல அவன் பேசினான். அவனுடைய நெருக்கடி நேரங்களில் அவளும் அப்படித்தான் பேசுவாள். அப்படித்தான் பேசிக் கொள்வார்கள். எப்பேர்ப்பட்ட அம்மா. காலையில் குளித்துவிட்டு வருகையில் திடீரென்று தலைசுற்றி, சமாளித்து அப்படியே சிறிது நின்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். கிறுகிறுப்பு அடங்கியதும் போய்ப் புடவை மாற்றிக்கொண்டு பூஜையறைக்குப் போய், குனிந்து… கொஞ்சம் புஷ்பத்தை அள்ளி சுவாமி படத்துக்கு முன் போடுமுன் ஆளைக் கீழே சரித்துத் தள்ளி யிருக்கிறது.

ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறதாக அப்பா ஃபோனில் சொன்னார். அவரே சற்று பயந்திருந்தார் போலிருந்தது. “நீ கவலைப் படாதப்பா. இதோ நான் வரேன்” என்று சட்டென்று ராதா பதில் சொல்லி விட்டாள், என்றாலும் இங்கே எல்லாவற்றையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டுப் போக எப்படி முடியும்? அவள் இல்லாமல் தன் வேலை ஒருவேலை பார்த்துக் கொள்ள இவருக்குத் தெரியாது.

“எல்லாம் சமாளிச்சிக்கலாம்…” என்று புன்னகைத்தான் மணிவண்ணன். என்ன சமாளிக்கப் போகிறான். ஸ்விக்கி, சொமேட்டோ என்று உணவு வருத்திக் கொள்வான். தினசரி ஒரு செட் புது உடை அயர்ன் பண்ணி வைத்ததில் இருந்து எடுத்துப் போட்டுக்கொள்வான். அவள் வரும்போது வாஷிங் மிஷினில் போட என ஒரு வண்டித் துணி குவிந்து கிடக்கும். எதாவது சொன்னால், “வெளியில டிரை கிளீனிங் குடுத்துறலாமா?” என்பானே ஒழிய, தானே வாஷிங் மிஷினில் போட்டு எடுக்கிற யோசனை அவனிடம் கிடையாது.

அவனிடம் வாதிட முடியாது. “உன்னையுங் கூட வாஷிங் மிஷினைக் கட்டிக்கிட்டு அழச்சொல்லலியே நானு…” என்று பேச ஆரம்பிப்பான். பாதிக் காலம்தான் அந்தத் துணிகள் உழைக்கின்றன. கையால் துவைத்தால் நல்லது. அதற்கெல்லாம் நேரம் கிடையாது. காலையில் ராதிகாவைப் பள்ளிக்கு அனுப்புதல் தனி புராணம். இரவில் அதைத் தூங்க வைக்கவே படாத பாடு படவேண்டும். அம்மாமேல் காலைப் போட்டுக் கொண்டு கதை சொல்லச் சொல்வாள். சில நாட்கள் குழந்தை தலையைக் கோதியபடி பாட்டு எதாவது பாடவேண்டி யிருக்கும். காலை எழுப்புவது தனிப் படலம். வாசலில் ரிக்ஷா வந்து ஹாரன் அடித்து அவளை ஏற்றிவிட்ட பின் மழை ஓய்ந்தாற் போன்ற அமைதி வீட்டில் நிலவும். ஆட்டோவில் ஏறும்போது திடுதிப்பென்று ராதிகா… “அம்மா ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். நேத்திக்கு மிஸ்சு…” என எதாவது தகவல் சொல்லும்.

தன்னை மையமிட்டு அந்த வீட்டில் அனைத்தும் நடந்ததாக நினைத்தாள் அவள். இதுபற்றி நல்லதா கெட்டதா என்றுகூட யோசிக்க நேரம் இல்லை அவளுக்கு. அலுவலகம் போய்விட்டு சாயந்தரம் சீக்கிரமே வந்து விட்டாள். உடைகளைப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது மணிவண்ணன் வந்துவிட்டான். ஆறுமணிக்கு ரயில். அவளது கைப்பெட்டியை வாங்கி ஸ்கூட்டரின் முன்னால் வைத்துக் கொண்டான். அவளுக்கும் அவனுக்கும் நடுவே ராதிகா உட்கார்ந்து கொண்டது. பாட்டியைப் பார்க்க ஊருக்குப் போகிறோம், என்கிற சந்தோஷம் அதன் முகத்தில் தெரிந்தது.

அப்பா ரயில்வே ஸ்டேஷன் வரை வருவதாகச் சொன்னார். காலையில் கார் டிரைவரை வரவழைக்க வேண்டும். வேண்டாம் என்றுவிட்டாள் ராதா. ஸ்டேஷனில் இறங்கி ஒரு கால் டாக்சி வைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டாள். மதுரை பரபரப்பாய் இருந்தது. மீனாட்சி அம்மனை மானசிகமாக வணங்கிக் கொண்டாள். அம்மாவுக்கு முடியவில்லை என்றதுமே ‘தாயே மீனாட்சி…’ என்றுதான் மனதில் வார்த்தை வந்தது. “இப்ப அம்மா எப்பிடி இருக்காப்பா?” என்று கேட்டபடியே வாசலில் டாக்சிக்குப் பணம் கொடுத்தாள். “தேவல…” என்றபடி அப்பா வந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டார்.

“ஹாய் தாத்தா!” என்றாள் ராதிகா.

ஆஸ்பத்திரியில் ராத்திரி உதவிக்கு என்று அப்பாஅலுவலகத்தின் உதவியாள்ப் பெண் ஒருத்தி இருப்பதாக அப்பா சொன்னார். “நீ வர்றதா அம்மாட்டச் சொன்னேன் ராதா…” என்றார் அப்பா. “என்னத்துக்கு அவளை வேற அலைக்கழிக்கணும்..னா உங்க அம்மா.” “எனக்கு அங்க இருப்பு கொள்ளாதுப்பா…” என்றபடி ராதா முகம் கழுவிக்கொண்டு வந்தாள். “உனக்கு காபி வேணுமா?”

அவர் காலையில் எழுந்ததுமே தானே போய் ஃபில்டரில் டிகாஷன் இறக்கி காலைக்காபி குடித்து விடுவார். அம்மா எழுந்து வரும்போது அவளுக்கும் கலந்து தருவார். அது குடும்ப வழக்கம். ராதாவுக்குத் தெரியும். ”ஆச்சிம்மா. நீ வேணா உட்காரு. நான் உனக்கு காபி கலக்கறேன்” என்றார் அப்பா. கல்லூரி தாண்டி வேலைக்குப் போனாலும் ராதாவை அவரோ அம்மாவோ வீட்டுவேலை வாங்கியதே இல்லை. “இருக்கட்டும் கல்யாணம் ஆகிப் போனால் இருக்கவே இருக்கு” என்பாள் அம்மா.

கையில் காபியுடன் ராதா சமையல் அறையை விட்டு வெளி வந்தாள். குழந்தை பாத்ரூம் போயிருந்தது. தானே அலம்பிக் கொள்ளத் தெரியும். ராதா போய் நின்றால் வெட்கப்பட்டது. “இப்ப அம்மாவுக்கு எப்பிடி இருக்கு அப்பா?” என்று கேட்டாள் ராதா. “இரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகம் ஆயிட்டது போல. அத்தோட சோடியம் அளவு கம்மியாம்  நமக்கு என்ன தெரியும்? அவங்க சொல்றாங்க. ‘டிரிப்ஸ்’ ஏத்தினாங்க. இப்ப பரவால்ல… காலைல பேசினா ஃபோனில்” என்றார் அப்பா.

காலையில் ராதா வந்து விடுவாள் என்று கேள்விப்பட்டாள் அம்மா. இவள் எதற்கு இப்படி அலறி யடித்துக்கொண்டு ஓடி வர வேண்டும், என்று இருந்தது. என்றாலும் பெண்ணைப் பார்க்க அவளுக்கும் சந்தோஷம்தான். வீட்டுக்கு வந்ததுமே ராதா, தான் வந்துவிட்ட தகவல் சொன்னாள். “உங்கப்பாதான் காபரா பண்ணிட்டாரா?” என்று சிரித்தாள் அம்மா. “நல்லாருக்கே? தகவல் சொல்லாம இருக்க முடியுமா?” என்றாள் ராதா. “அது சரி…” என்றாள் அம்மா. “குழந்தை? அவளையும் கூட்டிக்கிட்டு வந்திருக்கியா?” என்று கேட்டாள் “பின்னே? அவர்ட்ட எப்பிடி விட்டுட்டு வரது அம்மா. அவருக்குத் தன் காரியத்தையே பாத்துக்கத் தெரியாது…” என்றாள் ராதா.

அம்மாவுக்கு அந்தக் குரலில் தெரிந்தது பெருமிதமா, கவலையா என்று புரிந்துகொள்ள முடியவில்லை. இரண்டும் இருக்கலாம். ராதாவும் குழந்தையுமாய் பாட்டியைப் பார்க்க ஆஸ்பத்திரி வந்தார்கள். படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தாள் அம்மா. “எப்பிடி இருக்கேம்மா?” அம்மா புன்னகைத்தாள். ராதிகாவைக் கூப்பிட்டு பக்கத்தில் உட்கார்த்திக் கொண்டாள். “பாட்டி உனக்கு உடம்பு சரியில்லையா?” என்று கேட்டது குழந்தை. பாட்டி குழந்தைக்கு முத்தம் கொடுத்தாள். “அதான் நீ வந்திட்டியே. எனக்கு எல்லாம் சரியாப் போயிரும்” என்றாள் பாட்டி.

அப்பா கலவரப் பட்டது சரி. முதல்நாள் சுய நினைவில்லாமல் தான் அம்மா ஆஸ்பத்திரி வந்திருக்கிறாள். ‘டிரிப்ஸ்’ ஏற்றியதில் மறுநாள் சிறிது ஆசுவாசம் அடைந்தாள் அம்மா. அடுத்த நாளே இட்லி சாப்பிட ஆரம்பித்து விட்டாள். உடல் சோர்வு தான். திரும்ப தெம்பு மீள வேண்டும். உடனே அங்கே கொண்டுவந்து சேர்த்தது என்பது நல்ல விஷயம்.

காலம் எப்படி உருண்டோடுகிறது. ராதாவுக்குக் கல்யாணம் இப்பதான் ஆன மாதிரி இருந்தது அம்மாவுக்கு. வீட்டு வேலை ஒரு வேலை தெரியாது. படுக்கை மேலே ஈரத் துண்டை வீசிவிட்டு வேலைக்கு ஓடுவாள். கல்யாணத்துக்குப் பிறகு கணவனின் ஊருக்கே மாற்றலும் கிடைத்தது அவளுக்கு. சமையல் அறைப் பக்கமே வரமாட்டாள். அம்மாவும் அவளிடம் எதிர்பார்க்கவில்லை. நாளைக்கு புகுந்த வீட்டுக்குப் போனால் இருக்கவே இருக்கு கரண்டி உத்தியோகம். நானும் அப்படித்தானே? இந்த வீட்டுக்குக் கல்யாணம் ஆகி வரும்போது எனக்கு என்ன தெரியும்? முதல் நாளே பாலை அடுப்பில் பொங்க விட்டேன். மாமியார் ஓடோடி வந்தார். “உனக்கொண்ணும் ஆகல்லியே?” என்கிறார் மாமனார். பக்கத்தில் இவர். எல்லாருமாய்ச் சிரிக்க இவளுக்கு அழுகை வந்தது.

அம்மா பக்கத்தில் அந்த வார விகடன், குமுதம் கிடந்தது.  அப்பா தினசரி நாளிதழ் இந்து வாங்குவார். பேப்பர்க்காரனே வாரா வாரம் இந்தப் பத்திரிகைகளைக் கொண்டுவந்து போடுவான். தீபாவளி பொங்கல் மலர்களும் அம்மா வரவழைப்பாள். ஸ்ரீ சங்கராச்சாரியார் அருளுரையுடன் ஆரம்பிக்கும் இதழ்கள். உள்ளே வரும் வண்ண வண்ண சுவாமி படங்களைத் தனியே பிரித்து சட்டமிட்டு பூஜையறையில் மாட்டி வைக்கலாம். அந்தக் காலத்தில் சாண்டில்யன், சுஜாதா என்று தொடர்கதை ஸ்பெஷலிஸ்டுகள் இருந்தார்கள். இப்ப புது ஆட்கள் வந்து விட்டார்கள். என்றாலும் தொடர்கதைகளை வாரம் விடாமல் வாசிக்கிற அந்தப் பழைய மவுசு இப்போது இல்லை. இப்போது டிவி சானல்களில் தொடர்கள் நிறைய வர ஆரம்பித்து விட்டன. பத்திரிகையில் படிக்கிறதை விட இப்படி நாடகமாய்ப் பார்க்கிற அளவில் எல்லாருக்கும் ருசி மாறி விட்டது. சினிமாவில் வாய்ப்பு குறைந்த நடிக நடிகைகள் டிவிக்கு வந்தாயிற்று.

ராதா ஆஸ்பத்திரிக்கு வருமுன்னாலேயே அந்த உதவிக்காரப் பெண், ஸ்ரீநிதி கிளம்பிப் போய்விட்டாள். பாவம் அவளுக்கும் வீடு வாசல் குடும்பம், என்று இருக்காதா, என நினைத்துக் கொண்டாள் ராதா. இதுவே ஊரில் பெரிய ஆடிட்டர் என்று அப்பாவிடம் வேலைக்குச் சேர்ந்த பெண். கூடிய விரைவில் அவள் தனியே அலுவலகம் போடலாம். அவள் இங்கே அம்மாவுடன் இரா தங்கினால் அவள்கணவன் இரவில் குழந்தையை அல்லது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வானாய் இருக்கும். ஒருவேளை கல்யாணமே ஆகவில்லையோ? ராதா ஸ்ரீநிதியைப் பார்த்தது இல்லை.

யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஊரில் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. மணிவண்ணன் தான். அதை அவளும் எதிர்பார்த்திருந்தாள் என்றுதான் அம்மாவுக்குப் பட்டது. ராதா அம்மாவைப் பார்த்துத் தலையசைத்துவிட்டு அலைபேசியில் பேசியபடி வெளியே போனாள். “உனக்கு உடம்புக்கு என்ன பாட்டி?” என்று கேட்டது குழந்தை. “எனக்கு ஒண்ணில்லடா கண்ணு” என்றாள் பாட்டி. “நான் வீட்டுக்கு வந்து இந்தக் குட்டிக் கைக்கு மருதாணி இட்டு விடறேன். சரியா?” என்று அந்தக் கைக்கு முத்தம் தந்தாள் பாட்டி. அவள் குனிந்தபோது தலைக்குள் லேசாய் கிர்ர் என்றது.

ஒரு சாயலுக்கு அவள் ராதா போலவே இருந்தாள்! அவள் சிரிப்பது அவள்அம்மா மாதிரியே இருந்தது பார்க்கப் பரவசமாய் இருந்தது. நல்ல சூட்டிகையான பெண். வீட்டில் ஃபோன் அடித்தால் அவளே போய் எடுத்துப் பேசுவாள். “அம்மா அயர்ன் பண்ணிட்டிருக்காங்க. பத்து நிமிஷத்ல கூப்பிடறீங்களா? இல்ல, அவங்களைப் பேசச் சொல்லட்டுமா?” என்று தானே விவரமாகப் பேசத் தெரியும் அவளுக்கு. “எங்க கிளாஸ் மிஸ்சுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும் பாட்டி…” என்றாள். “அடித் தங்கமே. ராதிகாக் குட்டிய யாருக்குதான் பிடிக்காது?” என்று பாட்டி அவள் தலையில் முத்தம் தந்தாள். திரும்ப மூளைக்குள் சிறு சீறல்.

ரயிலில் எப்படி தூக்கம் வாய்த்தது ராதாவுக்கு, தெரியவில்லை. என்றாலும் வந்தவுடன் ஓய்வெடுக்காமல் ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறாள். வந்தவுடன் தொந்தரவு செய்யாமல் அவள் கணவனும் எட்டு ஒன்பது மணிக்கு மேல் அலுவலகம் கிளம்புமுன் இவளுக்குப் பேசுகிறான். முகம் பூரிக்க ராதா பேசிக் கொண்டிருப்பது இங்கேயிருந்தே தெரிந்தது.

மணிவண்ணன் நல்ல பையன் தான். பெண்டாட்டியை மனம் கோணாமல் வைத்துக் கொள்ளத் தெரிந்தவன். ராதாவும் கணவனைப் பற்றி எதுவும் குறையாகப் பேச மாட்டாள். அவர்களுக்குள் பிரச்னை எதுவுமே வரவில்லையா தெரியாது. என்றாலும் தன் கணவனை இங்கே. பிறந்த வீட்டில் விட்டுக் கொடுக்காத நாசூக்கு அவளிடம், ராதாவிடம் இருந்தது. அது அம்மாவுக்குத் திருப்தி அளித்தது.

சமைத்து எடுத்து வந்திருந்தாள் ராதா. கல்யாணம் ஆகிப் போகும்வரை சமையல் அவள் கற்றுக் கொள்ளவே இல்லை. நிமிர்ந்த வாக்கில் வளைய வந்து கொண்டிருந்த பெண்தான். ராதிகாவை கருக் கொண்டிருந்தபோது துணையாள் என்று அம்மா ஊருக்குப் போயிருந்தபோது அயர்ந்து போனாள். வீட்டை அத்தனை துப்புரவாக வைத்திருந்தாள் ராதா. இத்தனைக்கும் வேலைக்கு என்று ஆள் யாரும் கிடையாது. “ஐய அவ வராளேன்னு அவ கடிகாரத்துக்கு நாம ஓடணும். அதெல்லா சரியா வராது அம்மா” என்றாள் ராதா. “இன்னிக்குதான் இப்பதான் வந்திருக்கே… மெதுவா கரண்டியக் கையில பிடி” என்று ராதா சிரித்தாள். பேச்சு பாட்டுக்குப் பேச்சு. அடுப்படி வேலைகள் பரபரவென்று நடந்தபடி யிருந்தன. ஒற்றை வேலை என்று இல்லாமல் இரண்டு மூன்று வேலைகளை வரிசை மாறாமல் செய்தாள் ராதா. குளியல் அறையில் வெந்நீர் கீசர் ஆன் பண்ணிவிட்டு வீடு பெருக்கினாள். அடுப்படியில் குக்கர் வைத்தாள். எழுந்துகொண்ட கணவனுக்கு காபி கலந்தாள். அவளது பம்பரப் பரபரப்பு அம்மாவுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. “குக்கர் அம்மா… மூணு விசில்…” என்றபடி கொடியில் உள்ள துண்டை உருவிக் கொண்டே குளிக்கப் போனாள்.

ராதா படிக்கிற புத்தகங்கள், எழுத்தாளர்கள் வேறு. தொடர்கதைகள் எல்லாம் வாரா வாரம் ஞாபகம் வைத்துக் கொண்டு படிக்க முடிகிறது இல்லை அவளுக்கு. அவள் பையில் எப்பவும் பெண்கள் மாதம், வாரம் இருமுறை இதழ்கள் இருந்தன. தடி தடியான ஆங்கில நாவல்கள் இருந்தன. எடுத்துப் போகிறாளே யொழிய வாசிக்க நேரம் கிடைக்குமா தெரியாது. சில பேர் பஸ்சில் வாசிப்பார்கள். ஆனால் ராதா பஸ்சில் ஏறி அமர்ந்து டிக்கெட் வாங்கி விட்டால் உடனே தூங்கி விடுவாள். கல்லூரிக் காலத்தில் இருந்தே அப்படித்தான். கூட வரும் தோழி யாராவது எழுப்புவார்கள்! இப்போது அவள் கணவனுடன் ஒன்றாக இரு சக்கர வாகனத்தில் அலுவலகம் போகிறாள். அவன் அவளை அலுவலகத்தில் இறக்கி விட்டுவிட்டு தன் அலுவலகம் போவான்.

ராதா கொண்டு வந்திருந்த சாப்பாட்டை பத்து பதினோரு மணிவாக்கில் சாப்பிட்டாள். அந்தஅறை டிவியில் கிரிக்கெட் ஓடிக் கொண்டிருந்தது. எதோ பழைய மேட்ச். “சாம்பார் இருக்கு. ரசம் மட்டும் போதும்னா ரசஞ் சாதம் சாப்பிடு அம்மா. தட்டு கொண்டு வந்திருக்கேன். இப்ப சாப்பிட்டுர்றியா?” என்று கேட்டாள் ராதா. அவள் போட சாப்பிடுவது இதமாய் இருந்தது. உப்பும் காரமும் திட்டமாய் இருந்தது. எப்படி எங்கே இப்படி சமைக்கக் கற்றுக் கொண்டாள்… ஆச்சர்யமாய் இருந்தது அம்மாவுக்கு. மணிவண்ணன் வெளியே சாப்பிடவே மாட்டான். ராதாவின் சமையல் அவனுக்கு அவ்வளவு இஷ்டம். தட்டில் மீதி இருந்த ரசத்தை உறிஞ்சிக் குடித்தாள் அம்மா. லேசான ஏப்பம் வந்தது.

“அவ்ளதான். உனக்கு உடம்பு சரியா ஆயாச்சி…” என்று சிரித்தாள் ராதா. “ச்சீ. உனக்கு முடியல்லன்னு கேழ்விப்பட்டப்ப ஒரு நிமிஷம் பதறிப் போச்சு தெரியுமா?” என்றாள் ராதா. அம்மா சிரித்தாள். “இதுல பதட்டப்பட என்ன இருக்கு? ரொம்ப நாளா உடம்பைப் பாத்துக்காமயே இருந்தால் திடுதிப்னு இப்படி ஆளைத் தள்ளும். அப்பதான் நாம ஒடம்பைப் பாத்துப்போம்” என்றாள் அம்மா. “‘உங்க அப்பாதான் சித்த பயந்துட்டார்” என்று சிரித்தாள். “ஈசிஜி மாதிரி எதுவும் பாக்கணும்னா இங்கயே பாத்துக்கிட்டுப் போகலாம் அம்மா” என்றாள் ராதா.

அடுத்து ஒருநாள் அம்மா அங்கே இருந்தாள். ராதா மறுநாள் போனபோது சங்கரா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். சின்னக் குழந்தைகள் மழலையாய் சுலோகங்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  “பேசாம இங்க ஓய்வெடுத்துக்கோ அம்மா. வீட்டில் வேலை இருக்கோ இல்லியோ. இல்லாத வேலையை நீயா இழுத்து விட்டுக்குவே” என்றாள் ராதா. அன்றைக்கு மீனாட்சி யம்மன் கோவிலுக்கு மாலையில் போய் வந்தாள் ராதா. அங்கே போய்வந்தாலே மனசுக்கு சாந்தி கிடைக்கும் அவளுக்கு. கல்லூரிக் காலங்களிலேயே கூட தோழிகளுடன் அவள் எங்காவது வெளியே போய் வரலாம் என்றால், மீனாட்சி யம்மன் கோவிலுக்கு வரியா, என்றுதான் கேட்பாள்.

அம்மா வீட்டுக்கு வந்தாள். ராதா தான் ஆஸ்பத்திரி பில்லை செட்டில் பண்ணிவிட்டு அப்பா அலுவலகம் போய்வரும் காரில் கூட்டி வந்தாள். அலுவலக நேரத்துக்கு என்று தனியே டிரைவர் வைத்திருந்தார் அப்பா. அலுவலக வேலை தவிர, எப்பவாவது வேறு ஊருக்கு மாநில அளவில் ஆடிட் என்றோ இன்ஸ்பெக்ஷன் என்றோ போய்வர வேண்டி யிருந்தால் காரிலேயே போய்வருவார். பொதுவாக அப்பா சாப்பிட மதியம் வருவது இல்லை. இப்போது ராதா இருப்பதால் வந்திருந்தார். அவரை விட்டுவிட்டு டிரைவர், அவனும் தன் வீட்டுக்குச் சாப்பிடப் போனான்.  அம்மா எழுந்து கொண்டபோது “நான் சாப்பாடு போடறேம்மா” என அவளைக் கையமர்த்திவிட்டு ராதா அடுக்களைக்குப் போனாள்.

கையில் தட்டுடன் வெளியே வரும் ராதாவைப் பார்க்க தன் மனைவி போலவே தெரிந்தது அப்பாவுக்கு. அவளது சிறு சிறு அசைவுகள் அம்மாவையே நினைவு படுத்தின. அம்மாவும் பெண்ணும், முக அமைப்பில் ஒரு ஜாடை கொண்டவர்கள். உதடு சிரித்தால் கூடவே கண்ணும் சிரிக்கிற அமைப்பு. கூட இருந்த சந்தர்ப்பங்களை விட இப்போது ராதா கல்யாணம் ஆகிப் போனபின் இந்த அடையாளங்களை அவர் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதேபோல இந்தப் பெண் ராதிகா! யூகேஜி. போன வருடம் பார்த்தது அவளை. போன வருடத்துக்கு இந்த வருடம் எத்தனை உயர எடுப்பு எடுத்திருக்கிறது…

பின்கட்டில் வாழை போட்டிருந்தார் அப்பா. பெரிய வாழை மரத்தின் அருகிலேயே சின்ன மரம் ஒன்று. கூடவே குட்டி ஒன்றும் இருந்தது இப்போது. அப்பா பின் கட்டில் வாழை மரத்தின் பக்கமாகக் கை கழுவினார். அந்தத் தண்ணீர் எல்லாம் மரத்துக்குப் போகும்.

ராதா மூன்று நான்கு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். அவள் வந்திருக்கிறாள் என்று கேள்விப்பட்டு அவளது கல்லூரித் தோழி நிர்மலா ராதாவை வந்து பார்த்தாள். தோழிகள் ரேழியில் அமர்ந்து கொண்டு கலகலக்கிறார்கள். ராதிகா பாட்டி பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது. பாட்டி வேடிக்கை வேடிக்கையான கதைகள் எல்லாம் சொல்வாள். ஒரே சிரிப்பாய் இருக்கும். தெனாலிராமன், மரியாதைராமன், பீர்பால், முல்லா கதைகள்.

ஒரு ஊர்ல ஒரு தாத்தா. அவர் சாகும்போது அவரது சிநேகிதர்கிட்ட நூறு பொற்காசுகள் கொடுத்து வைத்து, ஒருவேளை நான் இறந்து விட்டால் என் பேரன்கிட்ட இந்த நூறு பொற்காசுகள், இதுல உனக்கு எவ்ள இஷ்டமோ அதை அவன்கிட்டக் குடு, என்று சொன்னார். தாத்தா இறந்து போனதும் அந்த சிநேகிதர் பேரனிடம் இரண்டே இரண்டு பொற்காசுகள் மாத்திரம் தந்தாராம். பேரனுக்கு தன் தாத்தா நூறு பொற்காசுகள் கொடுத்து வைத்திருந்தது தெரியும். அதைச் சொன்னபோது, எனக்கு எவ்வளவு இஷ்டமோ அதை உனக்குக் கொடுக்கச் சொல்லித்தானே உன் தாத்தா சொன்னார், என்று ஏமாற்றி விட்டாராம்.

“ஐயோ” என்றாள் ராதிகா. “அப்பறம் என்னாச்சி?”

சின்னப் பையன் போய் மரியாதைராமன் கிட்ட முறையிட்டான். “வெரி குட்” என்றது குழந்தை. “அவரு என்ன தீர்ப்பு சொன்னாரு?”

“உனக்கு எவ்வளவு இஷ்டமோ அவ்வளவுதானே தாத்தா கொடுக்கச் சொன்னாரு? அந்த மீதி 98 பொற்காசுகள்… அது அத்தனையையும் உனக்கு இஷ்டப்பட்டு தானே உனக்குன்னு எடுத்துக்கிட்டே? அதைப் பையனிடம் கொடுத்துவிடு… அப்டின்னு மரியாதைராமன் சொன்னாராம்!” ராதிகாவுக்கு ஒரே சிரிப்பு.

சில சமயம் புளியமுத்தைக் கொட்டிக் கொண்டு, பாட்டியும் பேத்தியும், ஒத்தையா ரெட்டையா பம்பையா பரட்டையா, விளாயாடுவார்கள். ஊரில் புளிய முத்துக்கு எங்கே போவது. தாத்தா பாட்டி வீட்டில் புளியை சிப்பமாய் வாங்கி உக்கிராண அறையில் வைத்திருந்தார்கள். அதில் புளியைப் பிரித்தபோது முத்துகள் விளையாட என பாட்டி எடுத்து வைத்திருப்பாள். பேத்தி வராத நாட்களில் அவற்றை தனியே கட்டி பரணில் போட்டு விடுவாள் பாட்டி.

அந்த சனிக்கிழமை மணிவண்ணன் ஊரில் இருந்து வந்திருந்தான். அப்பாவைப் பார்த்ததும் ராதிகாவுக்கு ஒரே சிரிப்பு. “அப்பா, பாட்டி எனக்குப் பட்டுப் பாவாடை வாங்கிக் குடுத்தாங்க…” என்று சிரிப்புடன் நின்றாள். “தாத்தா பாட்டியப் படுத்தாம நல்ல பெண்ணா இருந்தியா?” என்று கேட்டான் மணிவண்ணன். ராதிகாவை உட்கார்த்தி வைத்துக்கொண்டு கையிலும் காலிலும் மருதாணி இட்டு விட்டிருந்தாள் பாட்டி. அதைப் பெருமையுடன் காட்டினாள் குழந்தை. “மாமி இப்பதானே ஆஸ்பத்திரிலேர்ந்து வந்தீங்க. இதெல்லா என்னத்துக்கு?” என்றான் மணிவண்ணன். “இருக்கட்டும் குழந்தை வந்திருக்கு, பின்ன பண்ண வேண்டாமா?” என்றாள் பாட்டி.

சமையல் வேலைகளை ராதா பார்த்துக் கொண்டதால் நிறைய பொழுது இருந்தது பாட்டிக்கு. பாட்டி குழந்தைக்காக வீட்டில் தேன்குழல் பிழிந்தாள். “இப்ப திரும்ப அடுப்படில . எண்ணெச் சட்டியோட இறங்கியாச்சு…” என்று மணிவண்ணன் தடுத்தான். பாட்டி கேட்கவில்லை. மைசூர் பாகு, பிறகு தேன்குழல் என்று கையில் கட்டி ஊருக்குத் தந்துவிட பாட்டி விரும்பினாள். தினசரி பாட்டியோடு கதை பேசிவிட்டு அம்மாவிடம் படுக்க வந்து விடுவாள் ராதிகா. அன்றைக்கு ராத்திரி பாட்டி குழந்தையைத் தன்னோடு படுத்துக்கொள்ள வைத்துக் கொண்டாள்.

மறுநாள் ரயிலுக்கு எல்லாரும் ஊருக்குக் கிளம்ப வேண்டும். பாட்டிக்குதான் அவர்களை அனுப்ப மனசே இல்லை. “பாட்டிக்கு நமஸ்காரம் பண்ணுடி” என்றாள் அம்மா. குழந்தை சமர்த்தாகப் பண்ணியது. “தீர்க்காயுசா இரு” என்றாள் பாட்டி. குழந்தை கையில் ஐந்நூறு ரூபாய் தந்தாள். ”நேராச்சி. கிளம்புங்கோ.” வாசலில் கால் டாக்சி வந்து விட்டது. எட்டரை மணிக்கு ரயில். காலை வெளிச்சத்தோடு ஊரில் இருக்கலாம். மணிவண்ணன் வரும்போதே முன்பதிவு செய்துவிட்டு வந்திருந்தான்.

“அம்மா டேக் கேர். என்னன்னாலும் தகவல் சொல்லு. நாங்க ஓடி வந்திருவோம்… என்ன?” என்றபடி ராதா அம்மாவைக் கட்டிக்கொண்டாள். பெட்டியைத் தன் கையில் எடுத்துக்கொண்டு மணிவண்ணன் முன்னால் போனான். “சரி. அப்பறம் பாக்கலாம்” என்று மணிவண்ணனிடம் கை கொடுத்தார் அப்பா. அன்றைக்கு அம்மாவின் புடவை ஒன்றை எடுத்துக் கட்டிக் கொண்டிருந்தாள் ராதா. அம்மாவின் புடவையில் பெண்ணைப் பார்க்க அப்பாவுக்கு சிலிர்த்தது. நேரமாகி விட்டது. கால் டாக்சியில் ஏறி அமர்ந்து கொண்டார்கள். மணிவண்ணன் முன்பக்கமாக அமர்ந்து கொண்டான். அவர்கள் கிளம்பிப் போனதும் வீடே வெறிச்சோடிப் போன மாதிரி இருந்தது. டாக்சி போவதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் பாட்டி. தாத்தா கிட்ட வந்து அவளை அணைத்துக் கொண்டார்.

(தமிழ்ப் பல்லவி)

Comments

Popular posts from this blog