நிசப்த ரீங்காரம் / பகுதி 5

வியத்தலும் இகழ்தலும்

 
ஞானவள்ளல்

மிழின் முதல் நாவல்களில் ஒன்றான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ அதன் இயல்பான நகைச்சுவைத் தன்மையால் தனி அடையாளம் பெற்றது. நாவல் ஆரம்பமே களை கட்டுகிறாப் போல ஒரு நுணுக்கமான கேள்வியும் அதற்கு விவேகமான பதிலுமாய் அமைந்திருக்கும்.

கேள்வி இதுதான்.

வாழ்க்கையில் புத்திசாலியும் நிறையத் தடவை தவறுகள் செய்கிறான். முட்டாளும் செய்கிறான். என்றாலும் அவனை ஏன் எல்லாரும் முட்டாள் என்கிறார்கள். இவனை ஏன் புத்திசாலி என்கிறார்கள்?

அதற்கு நாவல் ஆசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை சொல்கிற விளக்கம் இது.

ஒரு முட்டாள் தவறு செய்தால் அதைத் தவறு என அவன் உணர மாட்டான். ஆனால் அது அவனைத் தவிர பிற எல்லாருக்கும் தெரிந்துவிடும். அதேசமயம் புத்திசாலி தவறுசெய்தால் உடனே அதை உணர்ந்து விடுவான். அது தவறு என்று அவனுக்குத் தெரியும். மற்றவருக்குத் தெரியாது.

நகைச்சுவை உணர்வில் தமிழன் சளைத்தவனே அல்ல. வள்ளுவர் உட்பட. கள்ளுண்ணாமை அதிகாரத்தில் வள்ளுவர் ஓர் உவமை சொல்கிறார். தண்ணீரில் தொலைந்து போனவனைத் தீப்பந்தம் கொண்டுபோய்த் தேடாதே! வள்ளுவரின் நகைச்சுவை பற்றியே தனியாய் எழுதலாம்.

புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போகிற கணங்கள் உண்டு. அதிக கவனம், மற்றும் ஆழ்ந்த ஈடுபாடு சில சமயம் எளிய விஷயங்களை நம் மனதில் மழுங்கடித்து விடும். ஒரு பெரிய விஞ்ஞானி. தனது ஆராய்ச்சிசாலையில் எலிகளைப் பராமரிக்க அதற்கு ஒரு கூண்டு தயார் செய்ய விரும்பினார். ஆசாரியை வரவழைத்து, “இரண்டு எலிகளுக்கு ஒரு கூண்டு, இரண்டு அறைகளாக அமைய வேண்டும். ஒரு அறையில் இருந்து மற்ற அறைக்கு அந்த எலிகள் போய் வர நடுவே துளை இருக்கட்டும். பெரிய எலி போய் வர பெரிய துளை, சின்ன எலி போய்வர சின்ன துளை…” என யோசனை சொன்னபோது, அந்த ஆசாரி இடைமறித்து, “ஒரே துளை போதும் ஐயா. பெரிய துளை ஒன்று வைத்தால் சின்ன எலியும் அதே துளை வழியே போய்க் கொள்ளுமே” என்றானாம்.

அவசரத்தில் அண்டாவுக்குள் கை போக மாட்டேங்குது, என்பார்கள் கிராமத்தில். அந்த அவசரம்.

முட்டாளா புத்திசாலியா என்பது அல்ல பிரச்னை. எப்படி ஒரு நெருக்கடியைச் சமாளிக்கிறான் ஒருத்தன், என்பது தான் முக்கியம். ‘தியரி ஆஃப் ரிலேடிவிடி’ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தவுடன் அவர் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார். பல்வேறு விவாதங்கள், கருத்தரங்குகள் என்று தினசரி இரண்டு மூன்று அவைகளில் அவரைப் பேச அழைத்தார்கள்.

அவரது காரோட்டி அவரை அழைத்துச் செல்லும்போது, “ஒரே பேச்சு. தினசரி அதையே பேசுகிறீர்கள். எனக்கே எல்லாம் மனப்பாடம் ஆகிவிட்டது” என்று கேலி பேசியிருக்கிறார். ஐன்ஸ்டீன் ஆச்சர்யப்பட்டார். “இப்போது நாம போகப் போற இடம் புது இடம். அங்கே யாரும் என்னை இதுவரை பார்த்தது இல்லை. இன்றைக்கு நீ மேடையேறி, நீயே ஐன்ஸ்டீன் போல என் உரையை வாசியேன், ஒரு மாறுதலுக்காக…” என்றாராம்.

காரோட்டி அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். அந்த அரங்கத்தில் காரோட்டியே ஐன்ஸ்டீன் போல மேடையேறி, தட்டச்சு செய்த காகிதத்தை வாசித்தார். முன் வரிசையில் ஐன்ஸ்டீன் அமர்ந்து அவரை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்க்கிறார்.

திடீரென்று எதிர்பாராமல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. காரோட்டி பேசி முடித்ததும், பார்வையாளர்களில் இருந்து ஒருவர் எழுந்து மேடையைப் பார்த்து அந்த உரையைப் பற்றி ஒரு சந்தேகம் கேட்டார்.

அந்தக் காரோட்டி சொன்னாராம். “இது மிகவும் எளிய சந்தேகம். இதற்கு பதில் சொல்ல என் காரோட்டி போதும்” என்று சொல்லி ஐன்ஸ்டீனைப் பேச மேடைக்கு அழைத்தாராம்.

இதுதான் சமயோசிதம் என்பது.

இதற்கு நேர் உல்ட்டாவான அபத்தமும் நடந்து விடுவது உண்டு.

ஒரு அலுவலகத்தின் மேனேஜரைக் கூட்டம் ஒன்றிற்குப் பேச அழைத்தார்கள். “ஐய எனக்கு மேடையில் பேச வராது” என அவர் சங்கோஜத்துடன் மறுத்திருக்கிறார். அங்கே அவர் அருகில் இருந்த அவரது உதவியாளப் பெண்மணி, “தைரியமா ஒத்துக்கோங்க சார். நான் சொல்லித் தர்றேன்… அதுமாதிரிப் போய்ப் பேசுங்க” என்றாள். அவள் தந்த தைரியத்தில் மேனேஜரும் கூட்டத்தில் பேச ஒத்துக் கொண்டார்.

செக்ரட்டரிப் பெண் “முதன் முதலா மேடையில் பேசறீங்க இல்லையா? அதிரடியா ஆரம்பிங்க…” என்று சொன்னாள். “எப்பிடி?” என்று கேட்டார் மேனேஜர். “மேடைல ஏறியதும் எல்லாருக்கும் அதிர்ச்சி தர்றா மாதிரி இப்பிடி ஆரம்பிங்க. என் மனைவி அல்லாமல், இன்னொருவரின் மனைவி மடியில் நான் படுத்துக் கொண்டிருக்கிறேன்…”

“ஐயோ” என்றார் மேனேஜர். லேடி செக்ரட்டரி சிரித்தபடி, “எல்லாரும் யாரது யாரது…ன்னு ஆர்வமாய்க் கேட்பார்கள். உடனே அதன் பதிலாக, என் அம்மா மடியில்…னு சொல்லுங்க” என்றாள்.

குறிப்பிட்ட நாளன்று கூட்டத்தில் போய்ப் பேச நின்றார் மேனேஜர். முன்வரிசையில் அந்த லேடி செக்ரெட்டரி.  மேனேஜர் சொன்னார். “என் மனைவி தவிர இன்னொருவர் மனைவி மடியில் நான் படுத்துக் கொண்டிருக்கிறேன்…” எதிர்பார்த்தபடியே கூட்டத்தில் பரபரப்பு. “யாரோட மடியில்? யாரோட மடியில்?” என்று கேட்டார்கள்.

“என் செக்ரட்டரியோட அம்மா மடியில்…” என்றாராம் மேனேஜர்.

முன்வரிசையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த லேடி செக்ரட்டரியின் முகம் எப்படி இருந்திருக்கும்?

மாமியார் மருமகள் நகைச்சுவை ஒன்று. படிக்காத மாமியார். அவளுக்குப் படித்த மருமகள் வந்து வாய்த்தாள். மாமியாருக்கு, தான் படிக்காதவள் ஆதலால் தன் மருமகள் மரியாதை தர மாட்டாள் என்று பயம் வந்தது. மருமகளிடம் தன் புத்திசாலித்தனத்தைக் காட்ட நினைத்தாள்.

மணப்பெண்ணுக்கு வந்திருந்த கல்யாண சீர்வரிசையைப் பார்த்தாள் மாமியார். குடம் ஒன்று கவிழ்த்தி வைக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டு மாமியார் மருமகளிடம் சொன்னாளாம். “என்னடி இது. மேல்பக்கம் அடைச்சி ஒரு குடம் குடுத்திருக்காங்க உங்க வீட்டுல. இதுல எப்படி தண்ணி பிடிக்க முடியும்?” என்றவள் தொடர்ந்து “அப்பிடியே  ஒரு சொட்டு உள்ள போயிட்டாலும் கீழ பாரு இத்தனை பெரிய ஓட்டையில் அந்தத் தண்ணி வெளிய போயிறாதா?” என்று சலித்துக் கொண்டாளாம்.

செத்தது நீயா உன் தம்பியா? – என்று இழவு வீட்டில் கேட்டானாம், என மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு.

குழந்தைகளுக்குச் சொல்கிற முட்டாள், புத்திசாலி கதைகளில் மரியாதைராமனோ, தெனாலிராமனோ வருவார்கள்.

பரமார்த்த குரு கதை எத்தனை அற்புதமான கற்பனை… அத்தனை சிறிய வயது வாசகர்களுக்கு எழுதுவது எத்தனை கடினம்… அந்தக் காலத்திலேயே தமிழில் சாத்தியப் பட்டிருக்கிறது… என்பது சாதனை தான். அது நம் பெருமை.

நோபல் பரிசு பெற்ற பெண் எழுத்தாளர் பேர்ல் எஸ் பக். அவர் எழுதிய ‘அதர் காட்ஸ்’ (கடவுளராய்ப் பிறர்) என்ற நாவலில் அவர் ஒரு விஷயம் பேசுகிறார். உலக சாதனை செய்த ஒருவர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதுமுதல் அவர் உலகப் பிரபலம் பெற்று விடுகிறார். உலகமே அவரைக் கொண்டாடும்போது அவருக்கு, எல்லாம் அறிந்த வல்லாளன் என்ற தகுதியை இந்த உலகம் வழங்கி விடுகிறது. உண்மையில் அவருக்கு மலை ஏறுவதைத் தவிர துவரம் பருப்பு விலை கூடத் தெரியாது.

ஒரு பிரபல பத்திரிகை சார்பில் அவர் வாசகர் கேள்விகளுக்கு பதில் சொல்வார் நாவலில். எனக்கும் என் மனைவிக்கும் ஒத்துப் போகவில்லை. அவளுடன் எப்படி சமாதானமாய்ப் போவது? வழி சொல்லுங்கள்… என ஒரு வாசகர் கேள்வி கேட்டிருப்பார் அவரிடம், என்று எழுதுகிறார் பேர்ல் எஸ் பக். முட்டாள்களின் பீடத்தினை இப்படிக் கிண்டல் பண்ணுகிறார் ஆசிரியர்.

இதுமாதிரி நம்ம ஊர்க் கதை ஒண்ணு சொல்லி விடலாம்.

ஒரு நாதஸ்வரக் கச்சேரி. அதற்குத் தலைமை தாங்க மாஜிஸ்ட்டிரேட்டை அழைத்தார்கள். ஊர்ப் பெரிய தலை அல்லவா? அதனால் அழைத்தார்கள். அவருக்கு இசை பற்றி ஒரு அட்சரம் தெரியாது. அவரும் போலிப் பெருமையுடன் ஒத்துக் கொண்டார். நாதசுரக் கச்சேரி நடந்தது. கச்சேரி முடிந்து அவரைப் பேசவும் சொன்னார்கள். அவர் பேசினார். “நாதஸ்வர வித்வான் எத்தனை கஷ்டப்பட்டு வாசித்தார் என்று புரிந்துகொள்ள முடிந்தது. அங்கங்கே மூச்சு விட என்று இடைவெளி விட்டு அவர் வாசித்தார். ஆனால் அவர் கூட அமர்ந்து மூச்செடுக்காமல் ஒருவர், ஒத்து வாசித்தாரே? அவரது திறமை வியக்க வைக்கிறது… ஒத்து ஊதியவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.”

கச்சேரிக்குத் தலைமை தாங்க அவரை அழைத்தவர்களின் நிலையையும், அட அந்த நாதஸ்வரக் கலைஞரின் முகத்தையும் பார்க்க நமக்குக் கொடுத்து வைக்கவில்லை.

இதேபோல ஒரு பஞ்ச தந்திர பாணி விலங்கு கதை உண்டு.

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. காட்டிலேயே பலசாலி தான்தான் என அதற்கு நினைப்பு. அது போய் ஒரு மானின் முன் நின்று மிரட்டும் தொனியில், “ஏய் மான்… இந்தக் காட்டிலேயே பலசாலி யார்?” என்று கேட்டது. “நீங்கதான் மகராஜா” என்று பயந்துகொண்டே சொன்னது மான். அடுத்து அந்த வழியே போன ஒரு நரியை நிறுத்தியது சிங்கம். “ஏய் நரி, நில்லு. இந்தக் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டுப் போ. இந்தக் காட்டிலேயே பலசாலி யார்?” நரி பயந்தபடி “நீங்கதான் மகராஜா” என்றதும் அதற்கு திருப்தி. “சரி போ” என்று அதை அலட்சித்துத் தாண்டிப்போனது.

அங்கே யானை ஒன்று குனிந்து புல்லை மேய்ந்து கொண்டிருந்தது. நான் வருகிறேன்… என்னைக் கொஞ்சங்கூட சட்டை செய்யாமல் இந்த யானை… என்ன திமிர் இதற்கு… என்று சிங்கத்துக்குக் கோபம். இருந்தாலும் அடக்கிக் கொண்டு யானையின் முன்னால் போய் நின்று, “ஏய் யானை, என் கேள்விக்கு பதில் சொல்லு. இந்தக் காட்டிலேயே பலசாலி யார்?” என்று கேட்டது.

யானை தன் துதிக்கையால் அந்தச் சிங்கத்தைப் பிடித்து தலைக்கு மேலே ஒரு சுழற்றி சுழற்றி சிங்கத்தைத் தூர வீசி யெறிந்துவிட்டு திரும்ப புல்லைத் தின்ன ஆரம்பித்தது.

தூரப்போய் விழுந்த சிங்கம் திகைத்துப் போனது. சிறிது நேரத்துகுப் பின் சுதாரித்து உடம்பை உதறி எழுந்து கொண்டது. பின் “கேட்டால் கேட்ட கேள்விக்கு பதில் தெரியல்ல. உனக்கெல்லாம் ஒரு கோபம்…” என்றபடி எழுந்துபோனது.

படித்தவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களை மட்டம் தட்டிப் பேசுவதும், பிற்பாடு மூக்குடை படுவதுமான வட்டார வழக்குக் கதைகள் உண்டு.

ஒரு பண்டிதர் படகில் போய்க் கொண்டிருக்கிறார். படகோட்டியைப் பார்த்து, “உனக்குத் திருக்குறள் தெரியுமா?” என்று கேட்டார். “தெரியாது” என்றான் படகோட்டி. “அடாடா வாழ்வில் கால் பகுதியை வீணாக்கி விட்டாயே…” என்றார் பண்டிதர். பிறகு “உனக்கு கம்பராமாயணம் தெரியுமா?” என்று கேட்டார். “இல்லை தெரியாது…” என்று தலையாட்டினான் படகோட்டி. “அடாடா அடாடா வாழ்வில் பாதியை நீ வீணாக்கி விட்டாயே…” என்றார். அப்போது படகோட்டி சொன்னான். “ஐயா துடுப்பு தண்ணீரோடு போய்விட்டது. இனி படகு நகராது. நாம் நீந்தித்தான் கரையேற வேண்டும். உங்களுக்கு நீச்சல் தெரியுமா?” என்று கேட்டான். “ஐயோ தெரியாது” என்றார் பண்டிதர்.

“ஐயா உங்க மொத்த வாழ்க்கையுமே வீணாகி விட்டதே” என்று சொல்லி படகோட்டி தான் மட்டும் தண்ணீரில் குதித்து நீந்திக் கரையேறினான், என ஒரு செவிவழிக்  கதை.

இந்தப் பாணியின் மறுகரையாக, முட்டாள் எப்பவும் முட்டாள்தான்… என்றுகூட ஒரு கதை நினைவு வருகிறது. அதையும் பார்த்து விடலாம்.

“உனக்கும் எனக்கும் பந்தயம். காலி வயித்தில் எத்தனை வாழைப்பழம் சாப்பிடுவே?”

“ரெண்டு…” என்றான் முட்டாள்.

“சரி. 50 ரூபாய் பந்தயம். காலி வயித்தில் ரெண்டு வாழைப்பழம் சாப்பிட்டுக் காட்டு…”

பரவாயில்லை இன்றைக்கு 50 ரூபாய் வருமானம், என்று அந்த முட்டாள் அவனுடன் கடைக்குப் போனான். கடையில் இரண்டு வாழைப்பழங்கள் வாங்கித் தந்தான் பந்தயம் வைத்தவன். அதை வாங்கி முதல் பழத்தை உரித்து முதல் கடி கடித்துச் சாப்பிட்டான் முட்டாள். இரண்டாவது தடவை பழத்தைக் கடிக்குமுன், முட்டாளின் கையைப் பிடித்துக் கொண்டான் வந்தவன். “இப்ப உன் வயிறு காலி வயிறு அல்ல. ஏற்கனவே ஒரு வாய் அளவு பழம் உள்ளே இருக்கிறது… பந்தயத்தில் நீ தோத்துட்டே.” வெட்கத்துடன் அதை ஒத்துக்கொண்ட முட்டாள் அவனிடம் 50 ரூபாய் பணம் தந்தான்.

முட்டாளுக்கு எப்படியாவது விட்ட பணம் 50 ரூபாயைத் திரும்ப சம்பாதித்து விட வேகம் வந்தது. அவன் இன்னோரு ஆளிடம் இதேமாதிரி பந்தயம் வைக்க முடிவு செய்து ஒருவனிடம் போனான். ”ஏ நீ காலி வயித்தில் எத்தனை வாழைப்பழம் சாப்பிடுவே?”

“மூணு” என்றான் அவன்.

“அடச்சே. நீ மட்டும் ரெண்டுன்னு சொல்லியிருந்தால் உன்னைப் பந்தயத்தில் ஜெயிச்சிருப்பேன்” என்று சொல்லி அவனிடம் 50 ரூபாய் தந்துவிட்டு முட்டாள் ஏமாற்றத்துடன் திரும்பினான்.

நம்மிடையே எத்தனை விதவிதமான கதைகள் உலவுகின்றன என ஒரு வட்டம் அடித்துப் பார்க்கையில் வியப்பு மேலிடுகிறது.

சில கேள்விகள் ஒருவன் புத்திசாலியா முட்டாளா என்றே கண்டுகொள்ள முடியாத அளவு அமைந்து விடுவதும் உண்டு.

“வலது கால்ல குடைச்சலா வலி இருக்கு டாக்டர்.”

“வயசானா சில சமயம் அப்பிடி வரும்” என்று டாக்டர் சொன்னார்.

“அதெப்படி? இடது காலுக்கும் அதே வயசுதானே ஆகுது டாக்டர்? அது வலிக்கலியே?” என்றானாம் வந்தவன்.

கற்ற கல்வி மமதை தரக் கூடாது. தலைக் கனம் தரக் கூடாது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு, என்பார்கள்.

அறிவாளிகள் மமதை காரணமாக எளியவர்களிடம் நஷ்டப் படுதல் பற்றி நிறைய வேடிக்கைக் கதைகள் உண்டு.

ரயிலில் ஒரு மேதாவி அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் எதிரே ஓர் எளிய மனிதன், மேல் சட்டை கூட அணியாதவன் பயணம் செய்தான். மேதாவிக்கு அவனைக் கண்டதும் அலட்சியம். இளக்காரம். அவன் அவரைச் சட்டை செய்யவே இல்லை. வெளியே பார்த்தபடி பயணம் செய்து கொண்டிருந்தான்.

மேதாவிக்கு அவனைச் சீண்டிப் பார்க்க ஆசை. “இங்க பார்… நான் உன்னை ஒரு கேள்வி கேட்பேன். அதுக்கு நீ சரியா பதில் சொல்லி விட்டால் உனக்கு நான் 100 ரூபாய் பரிசு தருவேன்…” என்றார். அதெல்லாம் வேணாம் சாமி, நீங்க படிச்சவர்… என்றெல்லாம் அவன் மறுத்துப் பார்த்தான். அவர் விடுவதாக இல்லை.

பிறகு அவன் “சரி சாமி. நான் உங்களை ஒரு கேள்வி கேட்டு, உங்களால அதுக்கு பதில்சொல்ல முடியலைன்னா?” என்று கேட்டான். ஏற்கனவே மூளை நிறைய திமிர் கொண்ட அந்த மேதாவி, “உன் கேள்விக்கு எனக்குத் தெரியாத பதிலா?” என்று சிரித்துவிட்டு, “உன் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாவிட்டால் நான் உனக்கு இரண்டு மடங்கு பணம்… 200 ரூபாய் தருகிறேன்…” என்று மார் தட்டினார்.

“சரி. கேள்வியை நீங்க கேக்கறீங்களா? நான் கேட்கட்டுமா?” என்று அவன் அந்த மேதாவியைக் கேட்டான். மமதை கண்ணை மறைக்க அவர் “நீயே முதலில் கேள்…” என்றார்.

அவன் கேள்வி கேட்டான். “மூன்று கண்கள், ஐந்து கால்கள், ஏழு கைகள் கொண்ட மிருகம் எது? சொல்லுங்க.”

அவருக்கு எதுவுமே புரியவில்லை. மிருகமா? மூன்று கண்ணா? ஐந்து காலா? ஏழு கையா? என்ன சொல்கிறான் இவன்?

யோசித்து யோசித்துப் பார்த்தார். அவருக்கு பதில் தெரியவில்லை.

“என்ன சாமி, பதில் தெரியலையா?”

வெட்கத்துடன் அவனைப் பார்த்து மேதாவி சிரித்தார். “அப்ப பந்தயத்துல நீங்க தோத்துடடீங்க” என்றான் அவன்.

ஆமாம், என்றபடி அவர் அவனிடம் 200 ரூபாய் தந்தார். பிறகு ஆர்வத்துடன் அவனைக் கேட்டார். “அது என்ன மிருகம் அப்பா?”

“எனக்கும் தெரியாது சாமி…” என்றபடி அவன் 100 ரூபாயைத் திருப்பித் தந்தானாம்.

தலைக் கனத்தால் 100 ரூபாய் அந்த மேதாவி நஷ்டப்பட்ட கதை இது.

எப்பவுமே நமது தகுதிக்கு மீறி ஆட்டம் போடுவது நல்லது அல்ல, என்று சொல்கிறது இந்தக் கதை.

பெரியோர் என்று யாரையும் வியத்தலும் வேண்டாம். எளியோர் என்று இகழ்தலும் வேண்டாம்… என்கிறார் கணியன் பூங்குன்றனார்.

ஒரு செருக்கு மிக்க மனிதர் சலூனுக்குப் போனார். படிக்காத பாமர சலூன்காரன் என்று அவனைப் பார்க்க அவருக்கு எள்ளல்.

“முடி வெட்ட எவ்வளவு? ஷேவிங்னா எவ்வளவு?” என்று கேட்டார் அவனிடம்.

“முடிவெட்ட 100. ஷேவிங் மட்டும் என்றால் 50” என்றான் அவன்.

“அப்ப எனக்கு தலையே ஷேவ் பண்ணிரு…” என்றபடி சேரில் அமர்ந்தார் அவர்.

பார்க்க வசதியான ஆள் போலத்தான் இருந்தார். இருந்தாலும் சின்ன புத்தி இவருக்கு, என நினைத்து வருந்தினான் சலூன்காரன். என்றாலும் ஒன்றும் சொல்லவில்லை.

அவனைப் பேச்சில் மடக்கி விட்ட சந்தோஷம் தாள முடியவில்லை அவருக்கு. தேன் குடித்த நரி என்பார்களே, அந்த உற்சாகத்துடன் அவனை மட்டந் தட்டிப் பேசியபடி இருந்தார் அவர். அவன் எல்லாம் கேட்டுக்கொண்டு பொறுமையாகவே இருந்தான்.

பிறகு தாடியை ஷேவ் செய்கிற நேரம். “ஐயா மீசை வேண்டுமா?” என்று கேட்டான் அவன். “வேண்டும்” என்றார் அவர்.

சட்டென்று அந்த மீசையை மழித்து அவர் கையில் கொடுத்தான் அவன்.

அவர் திகைத்துப் போனார். என்ன இப்படிப் பண்ணிவிட்டானே, என்று பதறிப் போனார்.

“சாமி புருவம் வேணுமா?”

போனமுறை வேணும் என்றபோது மீசையே பறிபோய்விட்டது. அதனால் அவசர அவசரமாய் “வேண்டாம்” என்றார்.

சட்டென அவர் புருவங்களை மழித்து அவர் கையில் கொடுத்தான் அவன். “நீங்கதான் வேணான்னீங்களே?”

அன்றோடு அவர் அகந்தை ஒழிந்தது. மீசையும் புருவங்களும் திரும்ப முளைக்கும் வரை அவர் பத்து இருபது நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்பதுதான் இந்தக் கதையின் முடிவு.

•••

நன்றி – பேசும்புதியசக்தி மார்ச் 2022 இதழ்

Comments

Popular posts from this blog