குறுந்தொடர்/ நன்றி லேடிஸ் ஸ்பெஷல் மாத இதழ்
பறவைப்பாதம்
எஸ்.சங்கரநாராயணன்
1
பெரியவனின் மீசை சார்ந்த கவனங்கள் ஆச்சர்யம் அளிக்கின்றன. வாழ்க்கையில்
இது ஒரு பருவம். எதையும் மகிழ்ச்சியின் ஊற்றாய் உள் கதகதப்போடு அனுபவிக்கும் வயது.
டீன் ஏஜ். நடையில் சற்று கனவின் ஒயில் தன்னைப்போல வந்திருக்கிறது. தன்னைத்தானே மாப்பிள்ளையாய்
உணர்கிற நடை. தேவாதி தேவருடன் வீதிகளில் சஞ்சரித்து சுயம்வர உலா. பெண்பார்க்கும் படலம்
அது. அடேய், பார்க்கும் படலமா? பார்த்த படலமா?
அது காதல் அல்ல... என்கிறார்கள். இது காதல், இது காதலல்ல, என்பதெல்லாம் நம்புவதற்கு
இல்லை. தொடர்ந்த நல் வாய்ப்புகள் அதைக் காதலாக முகிழ்க்கவும் சாத்தியம் உண்டு. சில,
தொட்ட அலை விட்ட அலை, என மனதுள் மூழ்கி விடவும் கூடும். அவ்வலைகள் குபீரென சந்தர்ப்பங்களில்
மேல் மட்டத்துக்கு பொக்கிஷங்களை எடுத்துவந்து கரைகளில் சேர்த்து விடுவதும் நடக்கிறது.
ராஜகோபால் புன்னகை செய்து கொண்டார்.
இன்றைய காலை... மனசின் தாளக்கட்டு என்ன இன்றைக்கு இப்படி அமைகிறது தெரியவில்லை.
தலைவாரிக்கொள்ள வீட்டுப் பொதுக் கண்ணாடி, பெரிய கண்ணாடி முன்னால் போய் நந்தகுமார் இடப்புறம்
வலப்புறம் திரும்பி உத்து உத்துப் பார்க்கிறான், தொலைத்த பொருளைத் தேடுகிறாற் போல.
ஆச்சர்யம். தொலைத்த பொருளைக் கண்ணாடியில் தேடுவதா? எப்பிடிக் கிடைக்கும்... அட, மீசையைத்
தேடுகிறான். இது ‘இந்த’ வயசுக் கவலை. ம். ப்ளஸ் ட்டூ வந்தாச்சே. இன்னும் மீசை, அது
வரவில்லையே. வந்திருக்க வேணாமா. தாமதமாகிறதா? மீசையே எனக்கு வளராதோ. சிலபேர் கடைசிவரை
ஆட்டுத் தாடி மீசையுடன் மளுக்கென்று அலைவான்கள். அப்படி ஒருவேளை... என மருள்கிறானா.
வந்து விட்டாலும் கூட அந்தக் கவலை விடாது. புசுபுசுவென்று அடர்த்தியாய் வர வேண்டும்
அது. பளீரென்று பால் தெறிக்கும் முகத்துக்குச் சிறு மீசை அழகோ அழகு. ஒரு பார்வைக்கு
பெற்றவர்களுக்கே புன்னகையையும் கிறுக்குப் பாசமான உள் கிளர்ச்சியையும் கிடைக்கச் செய்கிற
இள வயசு அது.
ஆ, நான் அதை இழந்தேன். இருபது வயதுக்கு ஒருமுறை மனம் மீண்டும் அடுத்த கட்ட,
அடுத்த வளைய வாழ்க்கையை உணர வைக்கிறது, சிக்னலில் வாகனத்தில் காத்திருக்கையில் உள்ளங்கையில்
திணிக்கப் பட்ட நோட்டிஸ் போல. கூடவே, இழந்த அந்தக் காலப் பொற் கணங்களுக்கு, பொற் கிரணங்களுக்கு
ஏங்கவும் வைத்து விடுகிறது.
மனசின் குதியாட்டங்களை அடக்கினார். கனவுகள் காத்திருக்கட்டும். ஓய்வு நேர அசைபோடல்களுக்கு
உதவும் அவை. நல்ல விஷயம் அது. நந்தகுமார், உனக்கு மீசை முளைக்கவும் அதன் அடர்த்திக்கும்
என் ஆசிகள். ஆ, உன் வருங்காலக் காதலிக்கும் என் வாழ்த்துகள்!
நேரமாகி விட்டது. இப்படி வேட்டி தடுக்க தடுக்க நடக்கிறாற் போல, இந்தக் காலையில்
கனவு தடுக்கினால் கட்டுப்படி ஆகாது. இது நகரம். சென்னை மாநகரம். வெளியே உலகம் வேறு
மாதிரியானது. கனவின் மேகம் கொண்டது அல்ல அது. நிஜத்தின் புழுதியும் புகையும், புன்னகையைப்
பிடுங்கி யெறியும் குரூரமும் கொண்ட வாழ்க்கை. காலப் பேய் முன்னே நின்று வா வாவென அழைக்கிறது.
போயாக வேண்டும். நானும் குட்டிப் பேயாக வேண்டும். சுயநலமான, பிறரை மதிக்காத பேய். தன் காரியம் மாத்திரமே
பிரதானமான பேய், நாய் குதறிய மாமிசமாய் மனசை மாற்றி விடுகிறது நகர வாழ்க்கை. தவிர்க்க
முடியவில்லை. தப்ப வழி கிடையாது. முன்னெட்டு எடுத்து வைத்த கணங்களில் பின் வாங்கும்
வழிகள் இங்கே அடைபட்டுப் போகின்றன. கல்யாண வீட்டில், சாப்பிட்ட ஜோரில் இலைகளை எடுத்து
வீசிவிடுகிறாற் போல.
தலைவாரி முடித்து பௌடர் பூசிக் கொண்டார். நகரத்துகேற்ற ஒப்பனை முகம். வெள்ளைப்
புழுதிதானே பௌடர். வீட்டிலேயே ஒத்திகை பார்த்துக் கொள்வது போல சிறு மயக்கம். மனசு எப்படியாயினும்
ஒரு கவிதைத் தெறிப்பை வெளிச்சமாய் கார்த்திகைத் தீவட்டிப் பொறிகள் போல விட்டுக் கொண்டேதானே
இருக்கிறது. ஆச்சர்யம். இன்னும் இங்கே இந்த நெருக்கடியில், மனிதன் மிச்சமிருக்கிறான்.
காரின் அடியில் சிக்கியும் டயரில் அடிபடாமல் தப்பித்தாற் போல... நல்ல விஷயம் அது.
“கொஞ்சம் பணம் வேணும்ப்பா” என்கிறான் நந்தகுமார். ம்... என அவனைப் பார்க்கிறார்.
“ஃப்ரெண்டு ஒருத்தனுக்குப் பிறந்தநாள். நாங்க எல்லாருமாச் சேர்ந்து அவனுக்கு பிரசன்ட்
பண்ணணும்.”
“ரைட். ஒரு அம்பது ரூவா...”
“போதும்” என்கிறான்.
சிநேகிதனா சிநேகிதியா தெரியவில்லை, என்ற மனசை மீண்டும் அடக்குகிறார். வளர்ந்த
இரு பிள்ளைகளும் அழகான மனைவியும் என வாழ்க்கையில் உற்சாகத்துக்குக் குறைவு ஒன்றும்
இல்லை. பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறார்கள். இவள்தான் சற்று அலட்டலான கவலைக்காரி. சந்தோஷமான
ஆள்தான் என்றாலும் கவலைப்பட்டு அலட்டிக் கொள்கிற பாவனைகள் பெண்களைப் பொறுப்புள்ளவர்களாக
உணர வைக்கின்றன. பொறுப்புகள் சிறு மன நிறைவும் பெருமிதமும் தருகின்றன, பர்ஸ் நிறையப்
பணத்துடன் ஷாப்பிங் கிளம்பினாற் போல. மனுசாளுக்கு அதுவும் வேண்டித்தானே இருக்கிறது?
“கரண்ட் பில் கட்டணும். போன தடவை போல கடைசிநாள் வரை விட்டுட்டு... அமர்க்களமாயிடப்
போவுது” என்று பேசிக்கொண்டே வந்தவளை பார்க்க மனம் பொங்கியது. அருகே இழுத்து உதட்டோடு
உதடு உரசியாகிறது. “நந்தா வந்திறப் போறான்‘’ என்றபடி அவள் அதை ஓர் அலங்கார அலட்டலுடன்
ஏற்றுக் கொள்கிறாள்.
“நேரமாறது உங்களுக்கு...”
“ஆமாம்.”
“பின்னே? இப்பிடி ஆடிட்டிருந்தா...?” என்று உதட்டைத் துடைத்துக் கொள்கிறாள்.
“வா, நானே துடைச்சி விடறேன், என் உதட்டால்...” என்கிறார். வயது எப்பவோ பின்னோக்கிப்
போயாச்சு. இனி உறங்காது. உள் பரபரப்பு, உற்சாகம்... காலைக்கு நல்லது. அலுவலகம் கிளம்பு
முன்னான இந்த முத்தம் நாள் பூராவுக்குமான உற்சாக டானிக் என அமையும். அவளுக்கு அது தெரியும்.
அவளுக்கும் அது வேண்டும். அவளாகவே தந்த நாட்களும் உண்டு.
ஈஸ்வரியும் வேலைக்குப் போகிறாள். அண்ணா சாலையின் அடுக்குமாடிக் கட்டடங்கள் ஆண்,
பெண் இயந்திரங்களால் நிரம்பி வழிகின்றன. அந்த வளாகங்களின் லிஃப்ட்கள் கிறீச் கிறீச்சென
ஓயாது இயங்குகின்றன. காங்கிரீட் காட்டில் யந்திர அணில். மேலும் மனிதர்கள் அதை வேலை
வாங்க அந்தந்த மாடிகளில் காத்திருந்து பொத்தான்களை அழுத்துகிறார்கள். காலத்தின் தொப்புள்கள்
அவை, அந்தப் பொத்தான்கள்.
நந்தகுமாரின் பின்னால் அவர் வந்து நின்றாற் போல அவர்பின்னே இப்போது மனைவி வந்து
கண்ணாடியில் எட்டிப் பார்க்கிறாள். நாடகத்தில் பாத்திரங்கள் வரிசையாய் அறிமுகம் செய்து
கொள்கிறாற் போல. கண்ணாடியிடம் சொல்லிக் கொண்டு எல்லாரும் வெளியே புறப்படுகிறார்கள்.
சட்டென்று கவன ஈர்ப்புடன் ஈஸ்வரி கண்ணாடியை உற்றுப் பார்க்கிறாள். அடாடா, இவளும்
தேடலாச்சு. அவள் தேடல் என்ன, என அறிய ஆசை கொண்டார்.
நந்தகுமார் மீசையைத் தேடினான். எனக்கு, இழந்த வாலிபப் பருவம். இவள் சமாச்சாரம்
என்னவோ?
சற்று அதிக நீளமாய் வளர்ந்திருந்த வெள்ளை முடி. கண்டுபிடித்து தனியே பிரித்து
பிடுங்கி எறிகிறாள். அதைப்பற்றி அவள் அலட்டிக் கொண்டது அவருக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது.
“இருக்கட்டுமே அதுபாட்டுக்கு” என்றார் புன்னகையுடன்.
“உங்களுக்கு நரைக்கவில்லை” என்றாள் சிறு ஆதங்கத்துடன்.
“அடி பெண்மணி, உனக்கு நரைச்ச கவலையா, எனக்கு நரைக்காத கவலையா... எது உன் பிரச்னை?”
என்று கிண்டல் செய்தபடி அவளைப் பின்பக்கமாக அணைத்துக் கொள்கிறார்.
ஆமாம். அலுவலகத்துக்கு நேரம் ஆகி விட்டது.
••
வீட்டைவிட்டு வெளியே வந்து ஸ்கூட்டரை உதைத்த கணம் வேறொரு உலகத்துக்கு அவர்கள்
வந்திருந்தார்கள். காலம் அவரை ஸ்கூட்டராய் உதைத்து முடுக்கிய கணம் அது!
வெயில் இந்தப் போதிலேயே இந்தப் போடு போடுகிறது. நகரத்தின் சீதோஷ்ண நிலையை, ஹாட்
ஹாட்டர் ஹாட்டஸ்ட், என்று சொல்வார்கள். வியர்வை துளிர்க்கிறது முகத்தில். ஒப்பனைகள்
கற்பனைகள் கனவுகள் அழிகின்றன. வேகம். மேலும் வேகம். முந்துதல். அவயத்து முந்துதல்.
முந்தாவிட்டால் காலம் பின்னிருந்து உதைபந்து போல் உங்களை ஓர் உதையில் உந்தி முன்னே
தள்ளும். தனியே தான் மட்டும் வண்டி ஓட்டிப்போகிற நிலை வேறு. பின்சீட்டில் மனைவி. அதிக
கவனமாயும் பொறுப்பாயும் வண்டி ஓட்டிப் போகிறார்கள் ஆண்கள். இது ஆண் கர்ப்பம் என்கிற
மாதிரி!
அவள் சௌகர்யமாய் உட்கார்ந்து கொண்டாயிற்று. சும்மா இருந்தால் நல்லது. ஓயாமல்
என்னவோ பேசிக்கொண்டே வருகிறாள். பேச பெண்களுக்கு இத்தனை விஷயங்களா என்று திகைப்பாய்
ஆண்கள் உணர்கிறார்கள். இரகசியங்கள் அற்ற பெண்கள்... அதுதான் விஷயம். தலைக் கவசம், காதுக்
கவசம் அணிந்தும், விடுகிறார்கள் இல்லை.
பேசினால் கூட பரவாயில்லை. பாதிதான் காதில் விழும், அட்சதை போட்டால் எல்லாமா
மணமக்கள் வரை போய்ச் சேர்கிறது, அதைப்போல. பாதி காற்று பிடுங்கிக் கொள்ளும். ஆனால்
பின்னால் இருந்து எதாவது வழிகாட்டுதல் “பாத்து... லெஃப்ட் ஒடிங்க” என்ற பதட்ட எச்சரிக்கை
வரலாம். அல்லது “நேராச்சி. சீக்கிரம்...” என அவசரப் ‘படுத்தலாம்.’
தன் அலுவலகம் வந்தபின் இறங்கிக் கொண்டாள். அத்தோடு விட்டாற் போலவும் தெரியவில்லை.
“மிச்சம் வைக்காம மதியம் சாப்பிடுங்க. சாம்பார் சுடச்சுட வெச்சிருக்கேன். ஆபிஸ் போயி
கொஞ்சநேரம் தொறந்து வைங்க.”
“வண்டில வரும்போதே நேராச்சின்னியே!” என்று சிரித்தபடி ஞாபகப் படுத்தினார்.
“அடாடா. ஃப்ரிட்ஜ் டீஃப்ராஸ்ட் பண்ணினேன். திரும்ப ஆன் பண்ணிட்டு வந்தேனா ஞாபகம்
இல்லை.”
“ரொம்ப ஞாபகமா இங்க வந்து ஞாபகம் இல்லைங்கறே.”
“உள்ளபால் வெச்சிருக்கேன். சாய்ந்தரம் வந்தவொடனே காபியக் கொண்டாம்பீங்க. உக்காந்த
இடத்தில் எல்லாம் வேணும் உங்களுக்கு. கிண்டல் வேற எங்களைப் பார்த்து...” என்றபடி அவள்
போய் காலத்தின் தொப்புளை அழுத்துகிறாள்.
ராஜகோபாலன் அலுவலகம் மேலும் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. பாம்புக்
கழுத்துடன் சிவபெருமான் போல டையுடன் நடமாடும் ஆண்கள். கைகுலுக்கல்ள். புன்னகைகள். நுனிநாக்கு
ஆங்கிலம். டீ கிளாசுகள் உரசுகின்றன. பீரோக்களைத் திறந்து காகிதங்களைப் பசியுடன் கண்கள்
சாப்பிடும் உலகம். அறிவின் வேறு எல்லை அது. அறிவின் இந்தப் பகுதியில் வெறும் எண்கள்,
அர்த்தம் அற்ற எழுத்துகளின் அடுக்குகள். போதாக்குறைக்கு மேஜைகளின் மேல் அவசரத்துக்குத்
தொலைபேசி, சதா குரைக்கிற நாய்கள் போல. ஒரு வித்தியாசம். நாய்கள் புதிய மனிதர் வந்தால்
குரைக்கும் அவர்களைப் பார்த்து. தொலைபேசியில் அழைப்புகள் வர நம்மைப் பார்த்துக் குரைக்கின்றன.
காதில் பெண்கள் நகைகளை மாட்டித் திரிகிற ஃபேஷன் ஒன்று வந்தது. காதின் மேற்புறம்
முதல் கீழ்க் காது வரை, கோட் ஸ்டாண்டில் மாட்டிய குடை போல, அந்த நகைக்குப் பேரே ‘மாட்டல்’
தான். யானையின் அங்குசம் போல. ஆனால் அந்த மோஸ்தரும் மாறிப் போனது. இப்போது ஆண்களாயினும்
பெண்களாயினும் காதில் செல்லுலர் ஃபோன் மாட்டித் திரிந்தாகிறது. சட்டையில் இடுப்பில்
போன். காதில் கரப்பான் பூச்சி போல. இனி அடுத்த ஃபேஷன் என்னவோ? ஒரு காதுக் கடுக்கன்
காலம் மாறி ரெண்டு காதிலும் கடுக்கன், ஃபோனின் ஒலிப்புனல்... என வரலாம்.
இந்த வளையச் சுழற்சியில் இருந்து ஆசுவாசம் இல்லையா, என ஏங்கினார்.
ஆனால் நாய் இனிமையாய்க் குரைக்கிறது. எடுத்தால் சேஷாத்ரி. பால்ய நண்பன். நல்ல
சேதி சொல் நண்பனே.
“அடேய், எப்ப வந்தாய் மெட்ராசுக்கு?” என்கிறார் உற்சாகமாய். “வாயேன் இந்தப்
பக்கம்...”
“வரேன்” என்கிறார் அவர் சம்பிரதாயமாய். ரங்க ராட்டின வாழ்க்கை. மரக்குதிரை கிட்ட
வந்தாற் போலிருக்கும். சட்டென விலகி தூரப் போய்விடுகிறது. அவரவர் பொழுதுகள், நியதிகள்
என மனதை காயலான் கடையாய் காலம் பிரித்து உதிர்த்துப் போட்டு விடுகிறது. எந்திர யுகம்.
“நல்ல சேதி சொல்லவா ராஜகோபால்...”
“சொல்லு...”
“உன் பிருந்தாவைப் பார்த்தேன்!”
ஹா, என்று சலூனில் தண்ணீர் தெளித்தாற் போல சிலிர்த்தது. பிருந்தா!
“எப்ப எங்க எப்பிடி? அதெல்லாம் இருக்கட்டும். எப்பிடி இருக்கா?”
“சௌக்கியம். உன்னைப் பத்தி விசாரிச்சா... உன் லவ் லெட்டரை ஹெட் மாஸ்டர் கிட்ட
குடுத்ததை நினைச்சி என்கிட்ட வருத்தப் பட்டா...”
ராஜகோபால் சிரித்தார். “அதை இன்னும் மனசில் வெச்சிருக்காளே, அது போதும்.”
“டாய் நீயும் வெச்சிருக்கியா இல்லியா?...” என்று சிரித்தார். “அது ஒரு வயசு.
ஒரு அலட்டலான கோபம் அவளுக்கு. நீ அவளுக்கு நேர்ல குடுத்திட்டே. நான் பயந்துகிட்டு மொட்டைக்
கடிதாசியா அனுப்பிட்டேன் அன்னிக்கு!”
“அவ ஹெட் மாஸ்டர் கிட்ட குடுத்தது மொட்டைக் கடிதாசியா என் கடிதாசியா தெரியலியே!”
இருவரும் சிரித்தார்கள்.
“நேர்ல உன்னைப் பார்க்கணுண்டா... வாயேன்.”
“என்னையா பிருந்தாவையா?”
“இப்போதைக்கு நீதான் பிருந்தா! எங்கே பார்த்தே அவளை?”
“மதுரைல. ஃபோன் நம்பர் குடுத்திருக்கா. உன்னைப் பேசச் சொன்னா...”
அவர் முகம் சட்டென சுடரேறியது. சமாளித்தபடி “உன்னைப் பேசச் சொல்லலியா?”
“நான் வெறும் மொட்டைக் கடிதாசி தந்தவன். அது என் கடிதம்னே அவளுக்குத் தெரியாது
இல்லியா?” என்று சிரித்தார் சேஷாத்ரி.
“நான் மாட்டிக்கிட்டதும் நீ படவா கப்புனு அடக்கி வாசிச்சிட்டே. இல்லே?” என்றார்
உற்சாகமாய்.
“இல்லை” என்றார் சேஷாத்ரி. ராஜகோபால் விடவில்லை. “பின்னே?” என அவரை வம்புக்கு
இழுத்தார்.
“நீ விரும்பறேன்னு தெரிஞ்சதும் நான் அடக்கி வாசிச்சேண்டா” என்றார் சற்று மென்மையாய்.
அந்த அன்பு மனசைத் தொட்டது. “ரொம்ப சென்ட்டிமென்ட்டலா இறங்கிறாதே மாப்ள. நான் இங்க
வேலை செய்யணும். ஒண்ணு செய்யேன்? மதியம் லன்ச் சேர்ந்து சாப்பிடலாம். வந்துர்றியா?”
“சரி” என்றார் சேஷாத்ரி.
“ஃபோன் நம்பர் கொண்டா...”
“ஃபோன் நம்பரா?”
“மதுரை நம்பர்...” என்று சொல்ல வெட்கமாய் இருந்தது. தன் வெட்கத்தைத் தானே ரசித்தார்.
ஃபோனை வைத்ததும் மனைவியின் குரல் ஞாபகம் வந்தது. “சாப்பாட்டை மிச்சம் கொண்டு
வராதீங்க.”
ஸாரி ஈஸ்வரி... என்றார் இப்பவே மனசுக்குள்.
யாராவது மதிய உணவு கொண்டு வராதவரைப் பார்த்துக் கொடுத்து விடலாம்.
பிருந்தா! எப்பிடி இருக்கே? அட உன்னைப் பார்க்கிற வாய்ப்பு கிடைக்குமா?
மனசின் ஆசுவாசத்துக்கு சிறு நடை நடந்து பாத்ரூம் வரை போய் வந்தார். உள்ளே கண்ணாடி
பார்க்கையில் நந்தகுமார் ஞாபகம் வந்தது. அவன் 16 வயது ராஜகோபால். நான் 48 வயது நந்தகுமார்.
“நந்தகுமார், பணம் வேணும்...”
“எதுக்கு?”
“என் சிநேகிதிக்கு பிரசன்ட் வாங்கணும்...” சிரிப்பு வந்தது.
மனசில் நந்தகுமார் பேசினான். “அப்பா இந்த லவ் லெட்டர்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக்.
கரெக்ட் பண்ணித் தாங்க.”
***
வெள்ளிதோறும் தொடர்கிறேன்
storysankar@gmail.com
Mob 91
976899 87842 / 91 9445016842
Comments
Post a Comment