வெண்ணெயில் இருந்து பாலுக்கு

எஸ்.சங்கரநாராயணன்

                                                                        

ன் எழுதுகிறாய், என்ற கேள்வி திகைப்பாய்த்தான் இருக்கிறது. மற்றவருக்கு அது, அதாவது எழுதுவது ஆச்சர்யமாய் இருக்கலாம். ஆகவே இந்தக் கேள்வி எழுப்பப் பட்டிருக்கலாம். வேறொன்றறியேன் பராபரனே, என்று மாத்திரமே இதற்கு பதில்சொல்ல முடியும். சில சமயம் ஓர் ஆவேசக் குரலாகவும், சில சமயம் ஊமையின் குரலாகவும் அது அமைகிறது. ஒருவனுக்கு பேசுவது சுலபமாய் இருப்பதைப் போலவே இன்னொருவனுக்கு எழுத்து வாய்த்திருக்கலாம். சிலரோ எழுதவும் பேசவும் செய்கிறார்கள். அத்தனைக்கு போதாமை உள்ளவர்களோ அவர்கள்! பேசாதவன் எழுத வந்ததும் எழுதாதவன் பேசுவதும் கூட ஒரு போதாமையின் அடையாளமாய் எடுத்துக்கொள்ளப்பட முடியும்.

 

வாழ்க்கை நம்மை சம்பவங்களால் புரட்டியபடி இருக்கிறது. அனுபவப்பட்டு நாம் மெருகேறி கூழாங்கல்லாக மாறுகிறோம். காலத்தின் அனுபவ வீச்சுகள் தவிர்க்க முடியாதவை. சதா அது நம்மை ஆதிக்கம் செய்தபடி இருக்கிறது, நமது ஐம்புலன்களின் கவனத்தின்படி.

 

ஒரு மனிதரை அல்லது ஒரு நிகழ்வை நாம் திரும்ப நாம் அறியாமல் அசைபோடுகிறோம். யோசனை என்பது அறிவுசார் வெண்ணெய்த் திரளல். அந்த மனிதரை அல்லது சம்பவத்தை நினைவுகூரும்போது அதன் அடிப்படையில் சில மதிப்பீடுகளை நாம் கண்டடைவது அதன் பயனாக இருக்கிறது. இயங்கும் மனதின் கதி அது. காலத்தின் கதியோடான தொடர் ஓட்டம் அது. பின்தங்குதல் இல்லை. வாழ்க்கை சில பாடங்களுடன் நம்மை முன்னெடுத்துச் செல்கிறது. ஒரு விளக்கு போல நமக்கு அது, அந்த மதிப்பீடுகள் வழிகாட்டிச் செல்ல வல்லவை.

 

கலை அல்லது எழுத்தும் அப்படியானதொரு முயற்சியைக் கைக்கொள்ள பிரயத்தனம் செய்கிறது எனலாம்.

 

ஒரு நண்பருடனான பழக்கத்தை அதில் அவரது நடத்தையை, அது சார்ந்த சம்பவத்தை நாம் நினைவுகூர்கிறோம். அதை மனதில் மீண்டும் காலத்திரையில் ஓட்டிப் பார்க்கிறோம். இப்போது, முதல்கட்டத்தின் போது கிடைக்காத மதிப்பீடுகள் நமக்கு பிறகு கிடைக்கலாம். அதை மனது பத்திரப்படுத்திக் கொள்கிறது. அடுத்தமுறை அந்த நபரை சந்திக்கும்போதோ அல்லது அதேபோன்றதொரு சம்பவம் இன்னொரு முறை வாய்க்கும்போதோ நமது ஞாபக வைப்பில் இருந்து அந்த மதிப்பீடு முன் குதிக்கிறது. இப்போது இந்த சம்பவத்தை அல்லது நபரை நாம் முன்னைப்போல அல்லாமல் சமாளிக்கிற விதமே மேலும் பண்பட்டதாக இருக்கிறது.

 

எழுத்தும் அதே வேலையைச் செய்ய முனைப்பு காட்டுகிறது.

 

எழுத்தாளன் சாமானியனை விட அதிகமாய் உணர்வு பூர்வமாயும் அறிவு பூர்வமாயும் இயங்குகிறான். அவனது அடிப்படைத் தகுதி அது. அவன் எழுத்தாளன் ஆனதின் தாத்பர்யமே அல்லது ரகசியமே அதுதான். எழுத்தாளன் மதிப்பீடுகளின் குவியல் என்று சொல்லலாம். சதா அவன் தானறியாமல் ஒரு நபரை அல்லது சம்பவத்தை தன் அறிவில் புடம் போட்டுக் கொண்டே யிருக்கிறான். சம்பவங்களாக அல்ல அவன் மதிப்புகளாகவே அந்த அனுபவத்தைச் சேமிக்கப் பழகிக் கொண்டவனாக இருக்கிறான்.

 

இந்தப் பயிற்சி அவனுக்கு, எழுத்தாளனுக்கு வேறொரு வகையில் உதவி செய்கிறது.

 

எழுத்து என்பது வாழ்க்கை அனுபவங்களின் நிஜத் தொகுப்பாகுமா? அல்ல. ஆகாது. அப்பா ஆவது கட்டுரை. புனைவு வெளி என்பது அந்த அனுபவத் திரட்சியை எடுத்துக் காட்டுவது. அந்த அனுபவத்தை அல்ல அதன் அடியாழ மதிப்பை வாசகனுக்கு முன் நிறுத்துவது. நாம் மதிப்பீடுகளுடன் உரையாடிக் கொள்வோம்.

 

வாழ்க்கையின் பிரதிபலிப்பாக அது அமையும் போதுதான் அது நம்பகத்தன்மை பெறுகிறது. அப்போதுதான் அது வாசகனை முழுசாய் எட்டி அடைகிறது. இங்கேதான் எழுத்தாளனின் மனதில் அந்த மதிப்பு மீண்டும் சம்பவமாக புனைவு பெறுகிறது. அது வாழ்வில் அவன் சந்தித்த நேரடி சம்பவ விவரமாக அல்லாமல் ஆனால் யதார்த்த வியூகமாகவே அது அவனால் கையாளப் படுகிறது. அந்த மதிப்பைச் சொல்ல எழுத்தாளன் தானே ஒரு சம்பவத்தை, அதாவது வாழ்க்கையை சிருஷ்டித்துக் கொள்ள வாய்க்கிறது.

 

எனது அனுபவத்தின் சில பதிவுகளை  உதாரணம் காட்ட முடியும். தந்தையை விட்டு வெகுதூரம் தள்ளி வாழ்கிற மகன். அப்பாவின் மரணச் செய்தி வருகிறது. தனது பிள்ளைக்கு இரவு பூராவும் சளி ஜுரம். இப்போது ரயில் பயணம் ஒத்துக் கொள்ளுமோ, என்றுதான் முதல் கவலை அவனுக்கு. தன் தந்தையின் மரணம் பற்றிய துக்கத்தை விட தனது இப்போதைய சூழல்தான் அவனது முதல் கவலையாக இருக்கிறது. தன் தந்தையின் மரணத்துக்காக தான் அழவில்லை என்பது அவனுக்கே அவனைப் பிடிக்காமல் இருக்கிறது. இதற்கு ஒரு சம்பவத் தெறிப்பாக கதையில் நான் சம்பவம் எனச் சொன்னது...

 

கதவைப் பூட்டிக் கொண்டு ஊருக்குக் கிளம்புகிறார்கள். பக்கத்து வீட்டுத் தாத்தா வாசல் திண்ணையில் அமர்ந்திருக்கிறார். அவலருக்குக் காது கேட்காது.

 

“எங்க இந்நேரத்தில் கிளம்பிட்டீங்க?”

 

“அப்பா இறந்துட்டார்...” என்கிறான் அவன்.

 

“அப்பா?” என்று அவர் திரும்பக் கேட்கிறார்.

 

‘‘இறந்துட்டார் இறந்துட்டார்” என்று கத்தினான் அவன். உலகத்திலேயே ஒரு மரணத்தை இத்தனை சத்தமாக அறிவித்தவன் நானே, என நினைத்துக் கொள்கிறான். அவனுக்கு பெரியவர் மேல் ஆத்திரம் வருகிறது. கிழவர்களைச் சுட்டுத்தள்ள வேண்டும், என அவன் அப்போது நினைத்துக் கொள்கிறான்.

 

தன்மேலான கையாலாகாத் தனத்தை அவன் இப்படியாக மடைமாற்றிக் கொள்வத நுட்பமான வாசகன் அவதானிக்கலாம்.

 

கதையின் அல்லது வாழ்க்கையின் ஒரு சூடசுமப்புள்ளியை தரிசனப் படுத்த மதிப்புகளை கவனப்படுத்த, வாழ்க்கை தந்த இந்தப் பயிற்சியையே எழுத்தாளன் தான் வடிவமைத்த சம்பவங்களின் ஊடாக, இன்னொரு வாழ்க்கைச் சம்பவமாக ஆனால் கற்பனையாக எழுத்தாளன் படைக்கிறான், வெண்ணெயில் இருந்து திரும்ப பாலை உருவாக்குவது போல.

 

படைப்பதனால் இவனும் இறைவனே, என்பார் கண்ணதாசன்.

 

இந்த மதிப்பீடுகளின் சுய தேர்வு அடிப்படையில், கற்பனையை சம்பவமாக ஆக்காமல் வசனமாக ஆக்குகிறார் கே. பாலச்சந்தர். சட்டென நினைவுக்கு வரும் அவரது ஒரு வசனம். ‘மன்மதலீலை’ திரைப்படத்தில் ஸ்திரீலீலன் கதாநாயகன். அவன்கீழ் வேலை பார்க்க வரும் தட்டச்சுப் பெண் எப்பவும் கண்சிமிட்டிக் கொண்டே இருப்பாள். அதில் தன்வயம் இழக்கும் கமலஹாசன். அவள் அவன் தவிப்பதை உணர்ந்து “சாரி சார் இது என்னோட வீக்னெஸ்” என்பாள்.

 

“எது கண்ணடிக்கிறதா?”

 

“இல்ல. கண் துடிக்கறது...” என்பாள் அவள்.

••

இருவாட்சி பொங்கல் மலர் 2021

Comments

Popular posts from this blog