குறுந்தொடர் / நன்றி லேடிஸ் ஸ்பெஷல் மாத இதழ்

பறவைப்பாதம்

பகுதி நான்கு

 

ட்டைப்பையில் அவளது கையெழுத்தில் அவளது தொலைபேசி எண்... என்பதே தனி உற்சாகம் தருகிறது. இதை ஹெச் எம் கிட்ட குடுத்திறவா?...

அவருக்குதான் கல்யாணம் ஆயிட்டதே... என்றாள் பிருந்தா சிரிக்காமல்.

எனக்குந்தான் பிருந்தா.... என முணுமுணுத்துக் கொண்டார்.

பிருந்தா சிரிக்கிறாள். “எனக்கும் தான் மிஸ்டர்!”

காதல் என்பது ஒரு வகை நட்பு. அது வெண்ணெயாய்த் திரட்சி காண்பதும் உண்டு. திருமணம் அதன் பெயர். என்றாலும் காதல்... அது ஒரு வாழ்வின் சுவை தானே.

போட்டது தாயம், இறக்கிவிட்டது பாம்பு... என்கிறாற் போல, காலம் உருட்டிவிட்ட கணங்களில் திசை பிரிந்து தள்ளித்தள்ளி விழுந்து கிடந்தார்கள். இடையில் ஏ அப்பா, தலைமுறை அகழி. என் பெரிய பிள்ளை பிளஸ் ட்டூ. சின்னவன் எட்டாவது வாசிக்கிறான்.

உனக்கு எத்தனை குழந்தைகள் பிருந்தா?

இரவில் அவர் உறங்கவில்லை. கண்ணை மூடிக் கிடந்தாலும் கண்ணுக்குள் அந்தப் பாவாடை சட்டை தாவணி பிருந்தா. அது ஒரு கனவு. நிஜமாக நடந்த ஒரு கனவு.

ரெட்டைச் சடையுடன் கார்த்திகையன்று புடவை கட்டிய பிருந்தா.

இளமை அவர்களை ஒரே போர்வையில் போல போர்த்திக் கொண்டது. எனினும் காலம் பிற்பாடு அவர்களைக் கத்தரித்தது. உடனடி நடவடிக்கை என அவர்கள் வகுப்பு மாற்றப்பட்டு விட்டார்கள். ஜல்சா இல்லாமலேயே பிரிந்து விட்டார்கள். அந்த கழிவறை அறிவிப்புகள். அவற்றை எழுதியவன் ஸ்ரீதர் என்று கண்டுபிடித்தார்கள். பாவம் அவனும் ஜல்சா காணாத ஏக்கத்தில் இப்படி எழுதி யிருக்கலாம். அந்தக் குட்டு வெளியானபோது அவனும் ஹெச் எம்மிடம் அடி வாங்கி, அவன் அப்பாவிடமும் மொத்து வாங்கி... என சம்பிரதாய அமர்க்களங்கள்.

ஆனால் பிருந்தாவின் அப்பா கெட்டவர் அல்ல, என்றுதான் கடைசியில் தெரிந்தது. கோபம் வரும் அவருக்கு. கோபம் வந்தால் கெட்டவர் என்பது சின்னவர்களின் கற்பிதம். சின்னவர்களைத் தப்பு சொன்னால் அவர்களுக்கு மட்டும் கோபம் வராதா என்ன?

கோபம் கெட்டது. அவ்ளதான்.

யாரும் கெட்டவர் அல்ல. ஒரு உணர்ச்சிக் கணத்தில் உதிரம் உத்திரத்தில் தெறிக்கிறாற் போல ஏதாவது ஆகிப்போகிறது.

தனித்தனியே அவனையும் பிருந்தாவையும் கூப்பிட்டு ஆசுவாசமாய்ப் பேசினார் பிருந்தாவின் அப்பா. “டேய் படிக்கற வயசுடா. மனசை அலைய விடக் கூடாது. கவனத்தைச் சிதற விட்டால் பாடம் பதியாது. நல்லா படிச்சி நல்ல மார்க் வாங்கி முன்னேர்ற வழியைப் பாருங்கோ குழந்தைகள்லாம். அதான் உங்களுக்கும் நல்லது. உங்களைப் பெத்தவங்களுக்கும் நல்லது. தெரிஞ்சுதா?”

“ஆமாம்” என்றான் அவன்.

“சரிப்பா” என்கிறாள் பிருந்தா.

அந்த வருடம் முழுப் பரிட்சையில் பிருந்தா முதல் மார்க். அவன் ரெண்டாவது. ஸ்ரீதர் கூட நல்ல மதிப்பெண் வாங்கினான். கழிவறைச் சுவரை வெள்ளையடித்து விட்டார்கள்.

ராஜகோபாலின் அப்பாவுக்கு வேலை இடமாற்றம் அமைந்தது தற்செயலாக. அவை துயரமான கணங்கள். அப்பாவுக்கு பதவி உயர்வு என்று அம்மாவுக்கானால் சந்தோஷம். அம்மா இதைப் பற்றியெல்லாம் எதுவுமே பேசவில்லை என்பது ஆச்சர்யம். பெரியவர்கள் பல சந்தர்ப்பங்களில் மௌனமாக எல்லாம் கவனிக்கிறார்கள். எனக்கு பின்தலையில் ஒரு கண் இல்லையா பிள்ளைகளையிட்டு... அது பெற்றோருக்கே இயல்பாய் அமைந்து விடுகிறது.

ஊருக்குக் கிளம்புகிற கணங்ளில் மனத்தில் பாரம் கட்டியது. இனி பிருந்தாவைப் பார்க்க முடியுமா? கடிதம்... என நினைக்கவே சிரிப்பு வந்தது. சனியனே... இதான் இந்த வயசின் ஒரு கோமாளித்தனம். அழும்போதே அது சிரிக்க ஆரம்பித்து விடுகிறது.

பெரயவனானதும் அதை நினைத்து சிரித்தபடியே ஆனால் உள்ளுக்குள் அழுவோம்.

அது ஒரு வயது. என்னவோ உலகம் கடிதம் போடுவதில் இருக்கிறாற் போல. பிருந்தாவின் அப்பா சொன்னது சரிதான். சினிமா மனுசாளைக் கெடுத்துதான் விட்டது. கெட்டதை ரொம்ப சுவாரஸ்யமாகக் காட்டுகிறார்கள் அவர்கள். படிக்காத ஆட்கள் காதலிக்க மாட்டார்களா? பார்வையற்றவர்கள் காதல் வசப்பட மாட்டார்களா?

சுடிதார் போட்ட பெண்ணை அம்மா எனக் காட்டினால் சினிமாவில் எடுபடாது. அதற்கு புடவை கட்டி யிருக்க வேண்டி யிருக்கிறது. துக்கக் காட்சி என்றால் வயலின் அழுகிறது. வானம் அழுகிறது. அதெல்லாம் இல்லாமல் துக்கக் காட்சி இல்லை. சிலாளுக்கு காலைல காபி சாப்பிட்டால் தான், ஆய் போகும். துக்கத்துக்கு சினிமாவில் வயலின் இசை என்பது மலமிளக்கி வில்லை போலத்தான். அந்த நிலைமைக்கு வந்தாகி விட்டது. உண்மையான பிரச்னைகள் மரத்துவிட்டன. ஒண்ணுமில்லா விஷயத்தைப் பெரிசாய் அழகாய்க் காட்டுகிறார்கள்.

நேரே பிருந்தாவின் அப்பாவிடம் போய் “அப்பாவுக்கு வேலை மாறிட்டது மாமா. நாங்க ஊரைக் காலிபண்ணிப் போறோம்” என்று தைரியமாய்ப் பேசினான். “ஓகோ” என்று தலையாட்டினார். “எப்ப?” என்று கேட்டார். “தெரியல. கூடிய சீக்கிரம். அப்பாவுக்கு பெங்களூருக்கு மாத்தி யிருக்கு...” என்றான். என்ன தோன்றியதோ எழுந்து வந்து அவன் நெற்றியில் முத்தமிட்டார். “நீ நல்ல பையன். எங்கருந்தாலும் நல்லாருப்பே. பெரிய உத்யோகத்தில் உட்காருவே...” என்றார். அவனை எத்தனை பெரிய மனிதனாக நடத்துகிறார். எத்தனை நம்புகிறார், என்று திகைப்பும் பெருமிதமுமாய் வீடு வந்தான். காதலைத் தாண்டி உலகத்தைப் புரிய வைக்கிறாரா என்று தோன்றியது.

ஆகா, சினிமாவில் இதெல்லாம் வராது... என்று தோன்றியது.

“பிருந்தா?” என்று உள்ளே பார்த்துக் கூப்பிட்டார். “நம்ம ராஜுவோட அப்பாவுக்கு பெங்களூர் மாத்திட்டாங்களாம்...”

“வசுமதி சொன்னாப்பா” என்றபடி பிருந்தா வெளியே வந்தாள்.

அவர்களைத் தனியே விட்டுவிட்டு எழுந்துனோர் அப்பா. அவன் அழ நினைத்தான். அழுகை வரவில்லை. அழுகை வரும். ஆனால் அழக் கூடாது என நினைத்திருந்தான். வரவே இல்லை. மனம். அதன் விசித்திரங்கள்.

ஆனால் அவள் அழுதாள். பெண்கள் இடுப்பில் தண்ணீர்க்குடம் சுமப்பதைப்போல கண்ணில் கண்ணீர்க்குடம் சுமக்கிறார்கள். சேஷாத்ரியிடம் இதைச் சொல்லிக் காட்ட வேண்டும்.

செருப்படி வாங்கற வரை கவிதை நம்மை விடாது போலுக்கே, என்று அவன் சொல்லலாம்.

எதிர்பாராத காரியம் ஒன்றைச் செய்தாள் பிருந்தா. கிட்ட வந்தாள். அவன் கன்னத்தைப் பற்றினாள். அழுத்தமாய் ஒரு... ஆமாம். முத்தங் கொடுத்தாள்.

அவன் அவளையே பார்த்தபடி கன்னத்தைத் துடைத்துக் கொண்டான். “ஜல்சா” என்றான். பிறகு விறுவிறுவென்று வெளியேறினான்.

போதுமே போதுமே... என்று மனம் கரைப் படகாட்டம் ஆடிக் கொண்டிருந்தது. இது ஜல்சா அல்ல. ஐ ல சா.

“நீ புதுசா கவிதை எதுவும் எழுதினியா சேஷாத்ரி?” என்று கேட்டான் ராஜகோபால்.

“நான் கவிதை எழுதறதை நிறுத்திட்டேன்” என்கிறான் சேஷாத்ரி.

••

ஏன் அழுதாள் அப்படி? எனக்கு வரவில்லையே, என்றிருந்தது. நான் அழுதிருக்க வேண்டும். சினிமா சில கணங்களை அழுத்துவது போலவே, சில சந்தர்ப்பங்களை மரத்துப்போகச் செய்து விடுகிறது. வில்லன் என்று இருந்தால் கதாநாயகியின் தங்கை பாடு கஷ்டந்தான். பார்வையற்ற பெண் கதாநாயகி பாத்திரம் என்றால் அவள் கற்போடு வாழ்வது பெரிய சவால்தான். மிகக் கடுமையான கணங்கள் சினிமாவில் சகஜம். துப்பாக்கி இல்லாமல் சினிமா கிடையாது. தொலைபேசி இல்லாமல் வீடு கிடையாது. கதாநாயகனை வரவழைக்க கதாநாயகியைக் கட்டிப்போடும் வில்லன் ஏன் அப்படிச் சிரிக்க வேண்டும் தெரியவில்லை.

இளமை திரும்பி விட்டாற் போலிருந்தது. ஸ்கூட்டரை உதைத்த உதையில் உற்சாகம். யார் இந்த ஸ்கூட்டரைக் கண்டுபிடித்தானோ. கழுதைப் பிறவி அவன்.

சினிமாவில் கதாநாயகர்கள் ஸ்கூட்டரிலும், வில்லன்கள் பைக்கிலும் வருகிறார்கள்.

நான் நல்லவனா கெட்டவனா? ஹீரோவா வில்லனா?

“அப்பிடின்னு உலகத்தில் தனியா யாரும் கிடையாது” என்றாள் பின்சீட்டில் ஈஸ்வரி. நாமளே சில சமயம் வில்லனாவும் சில சமயம் நாயக பாவனையிலும் நடந்துக்கறோம். கண்டதையும் பேச வேண்டாம். நாழியாச்சி. ரோட்டைப் பார்த்து ஓட்டவும்...”

“நீ நல்லவதான். பின்சீட்டில் உட்கார்ந்தா...” என நிறுத்தினார் ராஜகோபால்.

அலுவலகம் பரபரத்துக் கிடந்தது. மின்சாரம் இல்லை. லிஃப்ட் வேலை செய்யவில்லை. நான்கு மாடிகள் ஏறவேண்டி வந்தது. வந்து தன் இருக்கையில் அமர்கையில் ஹா, என ஓர் அலுப்பு. ஜெனரேட்டர் ஓடிக் கொண்டிருந்தது பெருஞ்சத்தத்துடன். மின்சாரம் இல்லை என்று அது கோபத்தில் கடுமையான வார்த்தைகளால் இரைந்து கொண்டிருந்தாற் போல. அதுபாட்டுக்கு தெருநாய் போல ஓரமாய்ச் சுருண்டிருக்கும். அதை யாரோ கயிறு போட்டு ர்ர்ர் என இழுக்க உசுப்பப்பட்ட ரௌத்திரத்துடன் அது குரைக்க ஆரம்பித்து விட்டது.

நேற்றே பிருந்தாவுக்கு ஃபோன் செய்ய நினைத்தார். சட்டென்று... என்ன பேச, எப்படித் துவங்க என ஒரு திணறல். மனசைக் கட்டுப்படுத்திக் கொண்டார். என்னவோ ஒரு தயக்கம். அப்படி என்ன கட்டுப்படுத்த முடியாமல், என ஒரு வீம்பு. ஓர் உள் குரல், டேய் இந்த ஜல்சால்லாம் வேணாம். உன் வாழ்க்கை அமைதியாய்ப் போயிட்டிருக்கு...என சிவப்பு காட்டுகிறது மனது.

அடக்க முடியல்லியே, என்றிருந்தது. சரி, அடக்கணும். அப்படித்தானேடா?

ஆமாம்.

அப்ப அந்தக் காகிதத்தைப் பார்க்காமல் எடுத்து எறிந்துவிடு.

கொஞ்சம் யோசித்தார். பிருந்தா... இது, எனக்கு ஏன் இந்தப் பிரச்னை? இந்த சேஷாத்ரி ஏன் அவளைப் பார்த்தான். நீ ஏன் அவனிடம் உன் தொடர்பு எண் தரவேண்டும். அதெல்லாம் சரி. நீ வேலை மெனக்கெட்டுக் கூப்பிட்டு அவளது எண்ணை வாங்கிப் பையில் வைத்துக் கொண்டாயா இல்லையா?

பூனையை மடில கட்டிக்கிட்டு சகுனம் பார்த்த கதை.

அவள், பிருந்தா... அவனைப் பார்த்ததுமே என்னைப் பற்றி விசாரித்திருக்கிறாள். அதைக் கேட்டபோதே ஒரு சிலீர். திரும்ப மின்சாரம் வந்தாற் போல ஒரு விர்ர்.

வேறெதாவது நினை... அந்த எண்ணை சேஷாத்ரியும் தன் டிஜிடல் டயரியில் குறித்துக் கொண்டானோ என்று தோன்றியது. “சார் மைசூரில் இருந்து எஸ் அன்ட் எஸ் பேசறாங்க” என்று ரிசப்ஷனிஸ்ட், நாயை அவரிடம் அனுப்பி வைத்தாள். தொலைபேசி நாய்! பிடிவாதமாய் சட்டைப்பையில் இருந்த, பிருந்தாவின் கையெழுத்தில் துண்டுச் சீட்டு, தொலைபேசி எண்ணைக் குப்பைத் தொட்டியில் வீசினார். அந்த ஜோரில் வேலையாள் வந்து குப்பைத் தொட்டியைக் காலி செய்து எடுத்துப் போனான். ஐயோ, என்றிருந்தது. மற, என்றார். இது உனக்கு அதிகபட்சம் என்று சொல்லிக் கொண்டார். ஈஸ்வரியோடு சிரித்துப் பேசிப் பழகி மகிழ்... எவ்வளவு நல்லவள் அவள், ஈஸ்வரி. எத்தனை உன்னை நம்புகிறாள்...

ஏன் போய் பிருந்தாவைப் பார்த்தால் பேசினால் தான் என்ன? பேசினால் ஒன்றும் இல்லை. ஆனால் பேசினால் என்ன, என மனம் கேள்வி கேட்டால்? போகக் கூடாது. பேசக் கூடாது... அதுதானே முறை?

அவளை மறந்தாக வேண்டும். அது காதல் அல்ல. அட காதலோ மண்ணாங்கட்டியோ, இப்ப எதுக்கு அது? இந்த வயசுக்குப் பொருந்தாத சட்டை அது. பார் தொப்பையை. கீழ் பட்டன் போட வர மாட்டேனென்கிறது.

மீண்டும் ஃபோன் அடிக்கிறது. ஆமாம். வேலை கிடக்கிறது. இப்போது அழைத்தது ராமேந்திர ரெட்டி. அவரது மேலதிகாரி. “மதுரைல ஒரு கஸ்டமர் மீட்டிங். போயிட்டு வரீங்களா ராஜு?” திடுக்கென்றது. இல்ல சார்... என்று சொல்ல நினைத்தார். நாக்கு தன்னைப்போல “சரி சார்” என்றது. தொலைபேசியை வைத்தபோது அசட்டுச் சிரிப்பு வந்தது. யாரும் தான் வெட்ப்படுவதைப் பார்த்து விடுவார்களோ என்றிருந்தது.

ஆ மதுரை போனாலும்... நான் அவளை... பார்க்கப் போகப் போவதில்லை, என்று சொல்லிக்கொண்டபோது சிரிப்பு தாளாமல் வாயே திறந்து விட்டது.

நல்லவேளை. யாரும் கவனிக்கவில்லை.

••

நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும்போது திடுமென கலைந்தது உறக்கம். மனதில் ஏதோ அதிர்வு போல. அவளைச் சந்திக்கிற கணங்களுக்காக சிறு ஒளி உள் கதகதப்பாய் விகசித்துக் கொண்டிருந்தது போலும். மௌன ஸ்வரங்கள். ஆறாவது விரலின் அபிநயம்.

சேஷாத்ரி திருச்சியில் இருந்து பேசினார். “என்னடா சேதி? பிருந்தா என்ன சொல்றா?” ஒரு விநாடி திகைத்துப் போனது. என்ன பதில் சொல்ல தெரியவில்லை.

“வேலையா இருக்கேன்டா...”

“சௌக்கியமா இருக்காளாமா?”

“நான் இன்னும் அவகூட பேசலடா...” என்றார் வேறு வழியில்லாமல்.

“அடாடா ஏன்?”

“நம்பரை எங்கியோ... மிஸ்பிளேஸ் பண்ணிட்டேன்...”

“அடாடா என்கிட்ட கேட்டிருக்கக் கூடாதா? எழுதிக்கோ...” என்றார் சேஷாத்ரி.

அவர் சொல்ல அவர் கேட்டுக் கொண்டார். குறித்துக் கொள்ளவில்லை.

“பேசுடா. பேசச் சொன்னாளா இல்லியா?”

இனி பார்க்காமல் மனம் ஓயாது என்றிருந்தது. அவன் பார், ராஸ்கல் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறான். எண்களைச் சொல்லிப் பார்த்துக் கொண்டார். அவருக்கே நினைவு இருந்தது.

அறையில் சிறிது நடந்தார். எப்பவும் அருகே சிறு குவளையில் தண்ணீர் வைக்கச் சொல்லிவிடுவார். ஈஸ்வரி வைத்திருந்தாள். கண்ணாடி ஜாடிக்குள் தண்ணீரின் அளவு தெரிந்தது..

குவளைக்கு அருகில் தொலைபேசி இணைப்பும் இருந்தது. இரவில் அலைபேசியை படுக்கைக்குப் பக்கத்தில் வைத்துக் கொள்வது இல்லை. வரவர தொலைபேசியைப் பார்த்தே பயப்படும் அளவுக்கு ஆகிவிட்டதே.

தைரியமாப் போ. போனார். தண்ணீர் குடித்தார். தொலைபேசி இருந்தால் என்ன, என நினைத்துக் கொண்டார். வந்து மனைவியை அணைத்துப் படுத்துக் கொண்டார்.

ஈஸ்வரியின் உறக்கம் கலைந்தது. “என்னப்பா?” என்று அவர்பக்கம் திரும்பினாள் ஈஸ்வரி.

“ஐ லவ் யூ ஈஸ்வரி.” என்றார். “அதுக்கென்ன?” என்றாள் ஈஸ்வரி. “இல்ல சும்மா...” என்றார். “சும்மா யாராச்சும் சொல்வாங்களா?” என்று ஈஸ்வரி புன்னகை செய்தாள். “டூ யு ஸ்டில் லவ் தட் பிருந்தா?” என்று அவர் தலையைத் தடவிக் கொடுக்கிறாள். இப்படி ஆளுக்காள் குழப்பினால் அவர் என்ன செய்ய முடியும்?

“ஐ டோன்ட் நோ...”

“யு நோ...” என்று அவள் சிரிக்கிறாள். பிறகு “இட்ஸ் ஆல்ரைட். தூங்குங்க” என்றாள்.

அவர் மேலும் எதோ பேச விரும்பினார். ஆனால் அவள் திரும்பிப் படுத்து தூங்க ஆரம்பித்திருந்தாள்.

••

மனசின் குட்டிக் கரணத்துக்கு அளவே இல்லை. மதுரைக்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் தெரியவில்லை. சிறிது பரபரப்பாய்த்தான் இருந்தது. முதல் வகுப்புப் பெட்டி. சுகமாகத் தாலாட்டும் ரயில். ரயில் மனிதர்களைக் குழந்தையாக்கி விடுகிறது.

ஹா ஹா. அந்த ஸ்ரீதர். அவனைப் பார்த்தாரே சமீபத்தில். பத்திரிகை ரிப்போட்டிங்கில் பெரிய ஆளாகி விட்டான் இப்போது. சுவரில் எழுதியதை கிசுகிசுன்னு பேப்பர்ல எழுதிட்டிருக்கியா, என்று கேட்டார் வேடிக்கையாய்.

தடக், என ரயில் நிற்க... மதுரை! நீ வந்தது கிளயன்ட் கூட்டத்துக்கு, ஞாபகம் வெச்சிக்க, என்று சொல்லிக் கொண்டார். எத்தனையோ கூட்டம் பாத்தாச்சி. அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை தான். அந்தத் தொலைபேசி எண்... அட சும்மா இருப்பா, என தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

மீனாட்சி அரசோச்சும் ஊர். அவருக்கு பிருந்தாவின் ஊர். பிருந்தாதான் மீனாட்சி.

பெங்களூருக்குக் கிளம்பியபோது குடுத்தா பார் ஒரு முத்தம்!

மறந்துறாதடா...

திரும்பவும் கவிதை கிவிதை எதும் முயற்சி பண்ணலாமா?

லேசான குளிரான பனி. குள்ளக் குளிர் என்கிறாள் ஆண்டாள் திருப்பாவையில். சுகமான பனி. அதிகாலை குளிக்குமுன் அந்தத் தண்ணீர் எப்படி சில்லிட்டுக் கிடக்கும், என கற்பனை எடுக்கும் குளிர். அது குள்ளக் குளிர் என்கிற உள்ளக் குளிர். முதல் குவளை நீர் எடுத்து மேலே ஊற்றிக் கொள்ளுமுன் வரும் தயக்கம். பிருந்தா பற்றிய தயக்கம், அதுவும் அப்படிப் பட்டது தானா? முதல் குவளைத் தண்ணீரை, பரவாயில்லை என்று எடுத்து மேலே கொட்டிக் கொள்ளலாமா?

பிருந்தாவுக்கு ஃபோன்... செய்யலாமா? செய்யலாமா? செய்யலாமா?... என்று உள்ளே எதிரொலி அளபெடை. பெரிய விடுதி. தனி அறை. ஏசியின் குள்ளக் குளிர். வேண்டாம், என்கிறது மனது.

என்னது வேண்டாம். பேச வேண்டும், என்பது வேண்டாம்.

ஹலோ ஈஸ்வரி மேடமா? (எஸ்?) உங்க கணவர் மதுரை போயிருக்கார் தெரியுமா? (நீங்க யாரு?) ரிப்போர்ட்டர் ஸ்ரீதர்.

ஆமாம். அவர் பிருந்தாவைக் காதலிக்கிறார்... என்கிறாள் ஈஸ்வரி.

அறையில் இங்குமங்குமாய் உலவினார்.

அப்பா?... என்று கூப்பிட்டான் நந்தகுமார். ஃப்ரெண்டுக்குப் பரிசு... வாங்கிட்டீங்களா?

ம். வாடிக்கையாளர் சந்திப்பு மாலைதான். காலையிலேயே வந்திறங்கி விட்டிருந்தார். மாலைவரை என்ன செய்வது?

ஆ, நான் வாழ ரொம்ப அலட்டிக் கொள்கிறேன். ஒரு சிறிய சாதாரண சந்திப்பு... எனக்கு இப்போது வயது 45 பிளஸ். ‘அந்த‘ ரெண்டுங் கெட்டான் சிறுவன் அல்ல நான் இப்போது. அவளுக்கும் குழந்தைகள் இருக்கலாம். அவளும் சிறுமி என்கிறதாக நான் மிதக்கிற பாவனை கொண்டாடத் தேவை இல்லை. அது யதார்த்தமும் அல்ல.

அவள் எப்படி எளிமையாக என்னை விசாரித்தாள், என்னைப் பேசச் சொன்னாள். அது முக்கியம். நான் நல்லாருக்கேன். உன் நலம் அறிய அவா. குசலோபரி என்று வீட்டு வைபவப் பத்திரிகையில் போடுவார்கள். அவ்வளவே.

அவள்தான் பேசச் சொன்னாள். எண் தந்தாள். சாதாரண விஷயம் அது. நாகரிகமான விஷயம் அது. ஈயச் சொம்புக்கு முலாம் பூசினாற் போல. எல்லாத்தையும் பளபளன்னு எடுத்துக்கறதா? மைக்ராஸ்கோப் வழியே கொசுவைப் பார்த்து விட்டு பயந்து கொள்வதா?

நீ ஃபோன் அட்றா மாப்ள.

சற்று தயக்கமாய்த்தான், ஆனால் தொலைபேசி நோக்கிப் போகிறார்.

“ஹலோ?”

அதே... அதே குரல்! பிருந்தாவின் குரல். உடல் விதிர்விதிர்த்து அழுகையே வந்திட்டடேய்யா.

கட்டுப்படுத்திக் கொண்டு பேசுகிறார். “நான்... ராஜகோபால்.”

“உங்களுக்கு யார் வேணும்?”

“ஆர் யூ மிசஸ் பிருந்தா?”

“அவங்க ஆஸ்பத்திரில இருக்காங்க. நீங்க?”

“அவங்ககூட ஸ்கூல்ல படிச்ச ஃப்ரெண்ட். உனக்குத் தெரியாது.”

“தெரியும்” என்றது அந்தப் பெண். “அம்மா உங்களைப் பத்திச் சொல்லி யிருக்காங்க.”

ஆகாவென்றிருந்தது அந்த உரையாடல். யாரோ பட்டத்தை உயரே பறக்க விட்டுச் சுண்டுகிறார்கள்.

”நீ அவ பொண்ணாம்மா?”

“ஆமா அன்க்கிள்.”

“உன் பேர் என்னம்மா?”

“ரா... ஜி-” என்ன குரல். அதே குரல். அம்மாவின் வார்ப்பான குரல்.

நான் ராஜகோபால். அவள் ராஜி.

அம்மா சொல்லியிருக்காங்க...

அடடா. பிருந்தா. உன் வேகத்துககு நான் எம்மாத்திரம். வெறும் பார்வையாளன் மாத்திரம் என என் பாத்திரம். உன் அன்புக்கு நான் தகுதியற்றவன் பிருந்தா. நான் சுகவாசி. காதல் என்பதன் சுகமான பக்கம், அதை மாத்திரமே நான் பார்த்து வந்திருக்கிறேன். கொண்டாடி யிருக்கிறேன். நீ அதுசார்ந்த துக்கங்களையும் சவாலுடன் சுமந்தவள்.

ஆ அவளை உசுப்பிவிட்டவன் நான். பிறகு நான் விலகிக் கொண்டேன். ஆண்கள் கெட்டவர்கள், என்றாள் பிருந்தா. நான் கெட்டவனா? நான் நல்லவன் இல்லை பிருந்தா.

“எங்கேர்ந்து பேசறீங்க அன்க்கிள்,”

சுதாரித்து “இங்கதாம்மா. உங்க ஊர்ல இருந்துதான். ராம் பேலஸ். அறை 112. அப்பா... அவருக்கு இன்னும் சரியாகல்லியா?”

“ரொம்ப மோசமா இருக்காரு அன்க்கிள்...” சொல்லும்போதே ராஜி அழுகிறாள். ஐயோ என் செல்லமே, என அவளைத் தடவிக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.

“அடாடா. எந்த ஆஸ்பத்திரிம்மா?” என தழுதழுக்கிறார்.

“செயின்ட் மேரிஸ். ஐசியூ.”

“நான் வரேன். உடனே வரேன்...” என்றவர் “பயப்படாதே குழந்தே. உங்ப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது. ஐ ப்ரே ஃபார் யூ ஆல்.”

“நான் அங்கதான் அன்க்கிள் கிளம்பிட்டிருக்கேன். வெச்சிறவா?”

தொலைபேசியை வைத்ததும் பெரும் இருள் ஒன்று அவரைக் கவ்வி ஒரு ஆட்டு ஆட்டி பார்வை பொய்த்து திரும்ப கண்ணுக்கு ஒளி மீண்டது. உள் உணர்வின் இந்த வெருட்டலில் ஐயோ, உன்னைப் பார்க்காமல் போகத் தெரிந்தேன், என்கிற பதட்டம். கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

உடனே வருகிறேன் பிருந்தா. நான் உன் பக்கத்தில் இருக்கிறேன் பிருந்தா.

அதானே? உடனே அந்த மருத்துவமனை ஐசியூ எண்ணை அழைத்துப் பேசினால் என்ன?

“ஹலோ?” அதே குரல். இது ராஜி அல்ல. “நீங்க பேசுவீங்கன்னு தெரியும்” என்கிறாள் பிருந்தா.

“எப்பிடித் தெரியும்?”

“இப்பதான் ராஜி சொன்னா.”

ஆ, என்றிருந்தது. நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். “நீங்க வேணாம். நீன்னே கூப்பிடு பிருந்தா.”

“பார்க்கறேன்.”

“உன் கணவருக்கு எப்பிடி இருக்கு?”

“நீங்க... வா ராஜகோபால்!”

“உடனே வரேன்” என்று ஃபோனை வைத்தார்.

**

வெள்ளிதோறும் தொடர்கிறேன்

storysankar@gmail.com

mob 91 97899 87842 / 91 94450 16842   

Comments

Popular posts from this blog