குறந்தொடர் / லெடிஸ் ஸ்பெஷல் மாத இதழ்

ப ற வை ப் பா த ம்

பகுதி இரண்டு

 

து நடைவண்டிதான். நடக்கவே தடுமாறுகிறது குழந்தைக்கு. தத்தக்கா பித்தக்கா என்று ஒரு போதைத் தள்ளாட்டம். என்றாலும் உள்ளே உற்சாகக் கடல் பொங்குகிறது. முகமெங்கும் நுரைச் சிரிப்பு. மூச்சிறைப்பு. கொந்தளிப்பு. அது ஒரு காலம். தனி உலகம் அது.

எறும்புக்குத் துளி நீரும் வெள்ளம் அல்லவா. நடைவண்டி அல்ல அது. பேரோட்டம், தேரோட்டம் என உணர்ந்த பரபரத்த இளமைக்காலம் அது. இப்போது அதை நினைத்துப் பார்க்க மனதில் தென்றல் தடவிச் செல்கிறது.

எப்போதும் எதைப் பார்த்தாலும் மிரட்சி காட்டும் பிருந்தா. பயில்வான் கையை மடித்து சதை உப்பலைக் காட்டிய மாதிரி பஃப் வைத்த மேற்சட்டை அணிவாள். எந்த ஆண் எதிரில் வந்தாலும் ரெட்டைச்சடையில் ஒரு விலுக் விலுக்கி அதைப் பின்பக்கத்துக்கு மாற்றிக் கொள்வாள். எதிரே ஒருநாள் வந்தாள். அட தனியே வந்தாள்.

இவனுக்கானா பரபரப்பு. மனசு டீக்கடை டபாராசெட்டில் பார்சல் எடுத்துவந்த காபித்தம்ளர் போல குட்டிக்கரணமாய்க் கவிழ்ந்து விட்டது. கதாநாயக அந்தஸ்தில் எதாவது பேசத் துடிக்கும் உள்ளம். உடம்பே நடுங்குகிறது. ஆ அவள் விலுக்கினாள். “பாத்துடி கழுத்து சுளுக்கிக்கப் போறது” என்றான் தைரியமாய். உள்ளமெல்லாம் நுரைத்து வழிகிறது. வெளியே குப்பென வியர்வை.

அவளுக்கு அழுகை வந்தது எதற்கோ. “எங்கப்பா கிட்ட சொல்றேன் இரு...” என்றாள் மூச்சுமுட்ட. “சொல்லேன் எனக்கொண்ணும் பயமில்லை” என்றான் பயத்துடன்.

“ஆம்பளைங்க கூட பேசப்டாது. சேரப்டாதுன்னு எங்க பாட்டி சொல்லீர்க்கா. வழியை விடுடா.”

அவள் அவ்வளவு பேசியதே அவனுக்கு ஆச்சர்யம்.

“ஏன்?” என்றான் அவளையே பார்த்தபடி.

“ஆம்பளைங்கல்லாம் கெட்டவங்க...” அவனைத் தாண்டிப்போக முயன்றாள். முடியவில்லை. வழி மறைத்து நின்றிருந்தான்.

“நான் நல்லவன்” என்றான் நெஞ்சை நிமிர்த்தி.

”நீ ஆம்பளை இல்லியா?” என்று கேட்டாள். அவமானமாய் இருந்தது.

”நீ கெட்டவன்.”

“நான் நல்லவன்.”

“அப்ப வழியை விடுடா...”

சற்று கோபம் வந்தாற் போல ராஜகோபால் “அப்ப ஏண்டி நேத்திக்கு என்னைப் பார்த்துச் சிரிச்சே...?” என்று கேட்டான்.

“நானா?” என்று கேட்டாள்.

“ஏய் நீ சிரிக்கலே?” என்றபோது அவன் இதயம் படாதபாடு பட்டது. அவமானம். அவமானம்.

“ஞாபகம் இல்ல...” என்றாள் பிருந்தா.

“நீ சிரிச்சே...” என்றான் மூச்சிறைப்புடன். “இப்ப சிரிக்கலைன்னு பொய் சொல்றே... நீ கெட்டவள்.”

சிரிக்கலையாமே? தாள முடியாதிருந்தது. அவள் சிரித்ததைப் பார்த்து வெலவெலத்திருந்தான் அவன். ஓர் இரவு திரும்பத் திரும்ப அவள் சிரித்தபடியே தெரிந்தது. தூங்க முடியவில்லை. அவள் சிரித்தாள் என்று பசங்கள் எல்லாரும் கூடி அவனை உசுப்பேற்றி விட்டிருந்தார்கள். பேப்பரில் காத்தாடி செய்து முள்ளில் மாட்டி ஸ்வைங்கென்று அவனைப் பறக்க விட்டிருந்தார்கள். இவ என்னடான்னா, ஒரே அடில... சிதறு தேங்கா போடறாப்ல...

“வழிய விட மாட்டேங்கறியே. நீ கெட்டவன். ரௌடி!” என்றாள் பிருந்தா.

குப்பென ஆத்திரம் பொங்கியது. ”எய்?” என கையைத் தூக்கினான்.

இதில் ஒரு சங்கடம் என்னவென்றால்... ஆத்திரப்பட்டாலும் ரௌடி என ஆகிவிடும். பேசாமல் இருந்தாலும், நான் ரௌடி, என அவள் சொன்னதை ஒத்துக் கொண்டதாகிவிடும்.

அவள் மேலும் திகைப்புள்ளாகி அழ ஆரம்பித்து விட்டாள். பயமாகி விட்டது.

சட்டென்று வழியை விட்டான். அவனைத் தள்ளிக் கொண்டு அவள் ஓடுவாள் என அவன் எதிர்பார்த்திருக்கலாம். அது நடக்கவில்லை. பாவாடை சரசரக்க ஓடுகிறாள் பிருந்தா. இந்த அவசரத்துக்கு நேரே அவள்அப்பாவிடம் போய் அவள் கதறலாம் என்று படபடப்பாய் இருந்தது. அவளது அப்பா முகமே ஒருமாதிரி கடுவன்பூனை முகம். அவர் கெட்டவர். சிகரெட் எல்லாம் குடிப்பார்.

பெண்ணைப் பெற்ற எல்லா அப்பாக்களுமே இளைஞர்களுக்கு வில்லன்களாகத் தான் இருக்கிறார்கள்.

இந்த அப்பாவை வெச்சிக்கிட்டு என்னைக் கெட்டவன் என்கிறாள்.

அடுத்த பத்தாவது நிமிஷம் அவள்அப்பா சைக்கிளில் விர்ரென்று தெருவில் வருவதைப் பார்த்ததும் ஒண்ணுக்கு நெருக்கி விட்டது.

தாண்டிப் போனது சைக்கிள்.

அடச்சீ. ஒரு விநாடி உள்ள கலக்கிட்டதேய்யா. இருந்தாலும் எதோ தெருவோரம் ஒண்ணுக்கை வெளியேற்றிவிட்டு வீடடைந்தான்.

அவள் தன் அப்பாவிடம் சொல்லவில்லை, என்று பிறகு புரிந்தது. பசங்கள் ஊயென்று கொந்தளித்தார்கள். அவனுக்கு அடி வாங்கித் தராமல் அவர்கள் ஓயப் போவதில்லை போலிருந்தது.

இளமை வாழ்க்கையே எங்கும் காலூன்றாத அளவில், கரணம் தப்பினால் மரணம், என்றே நகர்கிறது. ஊயென்று விசிலடித்தபடி அடுத்த தெருவில் நுழைந்தால் எப்போதோ கல்லெறிந்த நாய் இவனை ஞாபகம் வைத்துக் கொண்டு ஆத்திரப்பட்டு துரத்தி விடுகிறது.

பிறகு அந்த மகத்தான் நிமிடங்களை திரும்பத் திரும்ப மனம் அசைபோட்டது. அடுத்த சந்திப்புக்கு பெரும் ஒத்திகைகள் துவங்கியிருந்தன. உங்க தாத்தா கெட்டவரான்னு உங்க பாட்டிகிட்ட கேளுடி! ஆகா, இதை அப்பவே சொல்லி யிருக்கலாம். விட்டு விட்டது. உங்க அப்பா ஆம்பளைதானே? அவர் கெட்டவரா?... அட நாயே. எப்பவோ கேட்க வேண்டிய கேள்வியை இப்ப மருகி மருகி யோசிச்சி என்ன பிரயோசனம்? பசித்தவன் பழங்கணக்கு பார்த்தாப் போல.

பிருந்தாவின் பாட்டியைத் தற்செயலாக கோவிலில் வைத்துப் பார்த்தான். ஆத்திரமாய் வந்தது. கிழவியா இவள், ராமாயணக் கூனி. தொலைக்காட்சி சீரியலுக்கு அன்னிக்கே எழுதிய கதை ராமாயணம். யார் எழுதியது. ராமானந்த சாகரின் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டன்.

“அம்பி...” என்று கூப்பிட்டாள் மெகா சீரியல் கூனி.

“என்னையா?” என்று வந்தான். “ரோட்டைத் தாண்டி விட்ரு...” என்று கையைப் பிடித்துக் கொண்டாள். சரி, என்று செய்தான். ”நீ ரொம்ப நல்லவன்” என்றாள். ஜில்லென்று ஆகிவிட்டது.

ஒரு நெளிசலுடன் சொன்னான். “பிருந்தாவும் நானும் ஒரே கிளாஸ்தான் பாட்டி.”

“பொண்ணா அது, ஷனி. வீட்ல ஒரு வேலை செய்யாது” என்றாள் பாட்டி.

••

அந்த பிருந்தா திரண்டு குளித்தாள் என்று வீட்டில் புட்டு தந்தாள் அம்மா. பார்க்க சலித்தெடுத்த மண் போல இருந்தது. உலர்ந்த வேப்பம்பூக் குவியல் பார்த்திருக்கிறான். திரண்டு குளிக்கறதுன்னா என்ன, தெரியாது. அம்மா மோர் கடைவாள். வெண்ணெய் திரளும். அதுதான் தெரியும். அந்த மோர் கடைகிற போது தெறித்தால் திரண்ட குளியலா...

“புட்டு நல்லாருந்தது பிருந்தா...” என்றான் வழிமறித்து.

“எங்கம்மாட்ட சொல்லுடா...”

“அவளா திரண்டு குளிச்சா?”

சிரித்தாள். ஆ, சிரிக்கிறாள். இப்போது அந்த பயம் இல்லை. நான் நல்லவன் என்று நம்புகிறாளா. திரண்டு குளித்தால் வாலிபர்கள் நல்லவர்கள் ஆகிவிடுவார்களோ என்னவோ.

நண்பர்களிடம் சொல்ல வேண்டும். அவ சிரிச்சாடா. சத்தியமாடா. பிராமிஸ்டா. உங்கப்பா ஆணை. இந்தப் பயலுகள்... இல்லாதபோது சிரித்தா மாதிரி ஏத்திவிடுவார்கள். உண்மையிலேயே நடந்து விட்டால், போடா அந்தாண்ட, உம் மூஞ்சியும் மொகரைக் கட்டையும். இந்த மூஞ்சியப் பாத்துதான் சிரித்தாளாக்கும்... என வேற எடுப்பு எடுக்கிறார்கள்.

இயல்பா ஒரு சிரிப்பு. விர்ரென்று முள்ளுக் காத்தாடிக்கு உயிர் வந்தது. ஆத்தாடி இது காதல் காத்தாடி.

“ஏன் தாவணி போட்டிருக்கே?”

“அது அப்படித்தான்...” என்று திரும்பவும் சிரிக்கிறாள். லூசாயிட்டாளா என்றிருந்தது. எதுக்கெடுத்தாலும் சிரிக்க ஆரம்பித்திருந்தாள். என்னமோ தெரியாது. ஆனால் முன்னைவிட அழகாய் இருந்தாள். சிரிச்சதுனால தானோ என்னவோ. கடுப்பேத்தினால் எப்படி இருப்பாள் தெரியாது.

அவனுக்கும் சிரிப்பு சிரிப்பாய் வந்தது. நானும் லூசாயிட்டேனா... இல்லை. அவளுக்கும் சிரிப். எனக்கும் சிரிப். இது கானா தானா இல்லன்னா. அதை நினைக்கவே சிரிப்பு எக்களித்தது.

“திரண்டு குளிச்சா தாவணி போடணுமா?”

“ம்.”

“அப்ப எப்ப புடவை கட்டுவீங்க?”

“தெர்ல” என்றாள்.

••

ஆண்களின் பதின் பருவ மாற்றங்கள் வேறு மாதிரியானவை. அவன் சைக்கிள் கற்றுக் கொள்கிறான். முதல் போது அவளை மோதினான். அந்த பிருந்தாவை. தண்ணிக் குடம் எடுத்து எதிரே வந்தாள். குளித்து முடித்து ஈரத்துண்டில் சுற்றிய கூந்தல். ஒரு... ஸ்ரீவில்லிபுத்தூர் வாசனைத் தூள் மணத்தது. இதுதான் திரண்டு குளியலா தெரியவில்லை. அதுக்கு ஏன் வீடு வீடாப் போயி புட்டு தர்றாங்க? நாட்டில் குளிக்கறதை யெல்லாம் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. அத்தனைக்கு தண்ணிப் பஞ்சமும் இல்லை. அட அதுகூடப் பரவாயில்லை. நம்ம மணிகண்டனோட அக்காவுக்கு போன வாரம் சீமந்தம். சீமந்தம்னா என்னடான்னா, அக்கா குளியாம இருக்கா, அப்டின்றான். அவனுக்கே அர்த்தம் தெரியவில்லை. பொம்பளைங்க நினைச்சா விசேஷம்தான் போலுக்கு. குளிச்சா ஒரு விசேஷம், குளிக்காட்டி அதும் விசேஷம்... என்றெல்லாம் யோசித்தபடியே வந்து டமார். “சனியனே...” என்று அருகிலேயே அவளும் விழுந்தாள். அவளுக்கு அடி என்று பெரிதாய் இல்லை. அந்தக் குடம் தான் சற்று சப்பளிந்து உருண்டு... வாந்தி யெடுப்பது போல தண்ணீரை சிறிது சிறிதாய்க் கொட்டியது. அவனுக்குத்தான் சிராய்ப்பும் வலியும் பின்னி யெடுத்தது.

“ஸாரி” என்று சொல்ல வந்தவன் அவளைப் பார்த்துவிட்டு “ஹாஃப் ஸாரி” என்றான் இளித்தபடி.

புது தாவணி அழுக்காகி விட்டது. அத்தனை அலங்காரமும் வீணாகி விட்ட ஆத்திரம். “கண்ணு தெரியலியா நாயே...” என்று கத்தினாள். இவள் என்ன லூசா. ஒருநேரம் சிரிக்கிறாள். திடீரென்று கழுதையாய்க் கனைக்கிறாளே. அவளுக்கு பெரிதாய்க் காயம் எதுவும் இல்லை. அடிபட்டது அவனுக்கு. பிரேக் பிடிக்க சட்டென்று மறந்து விடுகிறது. ஆனால் அடியும் பெற்றுக் கொண்டு அவளிடம் திட்டும் வாங்க வேண்டியதாகி விட்டது.

அதைவிட ஆத்திரமான விஷயம். ரெண்டு பேரும் ஒரே வகுப்பு. ஒரே வித்தியாசம், அவள் திரண்டு குளித்தாள். அதனால் அந்தஸ்தும் அறிவும் அவள் கூடிவிட்டதாக உணர்கிறாள். அதற்கு முன்னிருந்தே அவள் அப்படி உணர்கிறாளோ என்னவோ. எல்லாம் அந்தக் கூனிப் பாட்டியின் சதி. வரட்டும். அடுத்த முறை சைக்கிளை அவ மேலயே விடுகிறேன்.

••

கார்த்திகை மாதம் தெரு பூராவும் விளக்கு வரிசை. என்ன அழகு. தெருவே திரண்டு குளித்தா மாதிரி. எல்லா வீட்டு வாசலிலும் பெரிய பெரிய கோலங்களில் வித வித உயரங்களில் குத்துவிளக்குகள். புதுப் புது வண்ண உடைகளில் பெண்கள். இருட்டே அலங்கரித்துக் கொள்கிறது. தீச்சுடரைத் தேங்காய்ச் சில்லு போட்டாற் போல விளக்கில் நாலாய் ஐந்தாய் திரி போட்டு ஏற்றுகிறார்கள். தூரப் பார்வைக்கு அது நட்சத்திரக் கூட்டம் என ஜ்வலிக்கிறது.

சைக்கிள் விட வாய்ப்பே இல்லை. பெண்கள் சட்டுச் சட்டென்று புது உடைளுக்கு மாறி சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆண்கள் அதே அழுக்கு பனியனுடன் திரண்டு குளித்த பெண்களுக்கு ஒத்தாசை செய்கிறார்கள். சேந்தி உயரங்களில் இருந்து வெங்கல விளக்குகளை எடுப்பது. சுத்தமாய்த் துடைத்து திரி போட்டுத் தருவது. அதைத் துடைக்கிறதுக்கும் அவர்களிடம் வேறொரு அழுக்கு பனியன். அதை வாசலில் கொண்டு வைப்பது, எண்ணெய் விடுவது எல்லாம் ஆம்பளை வேலை. விளக்கேற்றுவது மாத்திரம் அவளுகள் சோலி என்றால் எப்படி. ஒரு நியாயம் வேணாமாடி.

பிருந்தாவின் புதிய உடையைப் பார்க்க திடுமென்று ஓர் ஆசை. பசங்களானால் அவள் நிச்சயம் அவனைக் காதலிப்பதாய்ச் சொல்கிறார்கள். அவள் பார்க்க அவன் சட்டையில்லாமல் நிற்க கூச்சப் பட்டான். டவுசர் வேணாமாய் இருந்தது. பேன்ட் என்றால் பரவாயில்லை. ரெண்டுங் கெட்டான் நிலை அவனுக்கு. ராத்திரி தூக்கம் போய்விட்டது. தெருவே வெளிச்சச் செடிகளாய்ப் புதர் மண்டிக் கிடந்தது. சுடர்ப் பூ பூத்த விளக்குச் செடி.

சில வீடுகளில் மெழுகுவர்த்திகள். மண் சட்டிகள். ஒளிக் கண்காட்சி. எதற்கு இதெல்லாம் வைக்கிறார்கள். வாசலில் வைத்துவிட்டு ஆண்களைக் காவல் போட்டுவிட்டு பெண்கள் உள்ளே பொரி சாப்பிடுகிறார்கள்.

முட்டைப்பெரியை உதடால் ஓரத்தில் கவ்வி ராட்சஸப் பல்க்காரி போல அகோரம் காட்டி ஒரு விளையாட்டு அப்ப அந்த வயசில் விளையாடுவார்கள்.

விளக்குகளின் அணிவரிசைக்குப் போட்டி போடும் பெண்களின் சிரித்த பல்வரிசை. பந்தாவாக சைக்கிள் எடுக்க முடியாது. இப்ப யார் மேலும் மோதாமல் ஓட்டிப்போகப் பழகி யிருந்தான். பிருந்தா உன்னையே டபுள்ஸ் அடிப்பேன்டி. ஆனா... அவ பாட்டி ஏறி உக்காராம இருக்கணும். நடந்தே போனான் தெருவில். வீட்டு வாசலில் பிருந்தா இல்லை. உள்ளே பொரி தின்கிறாளா? அது ரொம்ப முக்கியமா. எமாற்றமாய் இருந்தது. இந்த இளவயசு என்பதே கதாநாயகனாக உணர்ந்து பெரும்பாலும் காமெடியனாக முடித்துவைத்து விடுகிறது. எட்டிப் பார்த்தான். அவங்கப்பா உட்கார்ந்திருந்தார். குப்பென்று ஆகிவிட்டது. திடீரென்று பிருந்தா எண்ணெய்க் குப்பியுடன் வெளிப்பட்டாள். மலைத்து நின்றான். பெரியாள் தினுசில் புடவை கட்டி... பெருந் திரட்சியாய் இருக்கே. பிரமிப்பாய் இருந்தது.

அவனை கவனிக்காமல் சரேலெனத் திரும்பியவள் உடையில் ஆ... தீ பற்றிக் கொண்டது. அவளுக்கு அது தெரியாது. சட்டென்று பாய்ந்து காலைப் பிடித்து அவளை நிறுத்தி, குனிந்து தீயை அணைத்தான்.

எதிர்பார்க்கவே யில்லை அவள். பதறிப்போனாள். பளாரென்று விட்டாள் ஒரு அறை. பிறகு விஷயம் புரிந்தது. “ஸாரி” என்றாள்.

“ஆமாம். அதுதான் பத்திக்கிட்டது...”

உள்ளே யிருந்து அவள் அப்பாவும் சிநேகபூர்வமாய் கவனித்தது நல்ல அம்சம். உள்ளே கூப்பிட்டு பொரி தந்தார்கள்.

“நல்லா இருக்கா?”

“எது... அறையா?” என்றான் கன்னத்தைத் தடவிக் கொண்டே. உங்க கற்பு பாவனைக்கு ஓர் அளவே இல்லையா? சும்மா சொல்லக் கூடாது. அந்தப் புடவை அவளைப் பெத்தம் பெரியவளாய்க் காட்டியது. அந்த பாவனைக்கே அந்த அறை அத்தனை அழுத்தமாய் விழுந்ததோ என்னமோ. பார்க்கவே பரவசம். லேசாய் பைத்தியம் பிடிக்க ஆரம்பிக்கிற நிலையில், தான் இருப்பதைப் போல உணர்ந்தான். அவள் முன் டவுசருடன் நிற்கக் கூசிய கணம் அது. அட பொண்ணு வெட்கப் படணும். பொண்ணு முன்னால் அவன் வெட்கப் பட்டான். பேன்ட் போட வேண்டும். பெண்ணுக்கு வளர்ந்த அடையாளம் என்றால் புடவை. சரி. ஆணுக்கு? மீசை. ஆமாம் மீசை வேண்டும். “நல்லாருக்காடா?” என்று கேட்கிறாள் அவள். எதைக் கேட்கிறாள். புடவை கட்டியது அழகோ அழகு பிருந்தா.

“பொறி பறக்க விட்டியே அறை. அதை சமாதானப் படுத்த இந்தப் பொரியாக்கும்?”

“கவிதை எழுதறா மாதிரி... நல்லா பேசறே” என்றாள் பிருந்தா.

எழுதிக் கட்டறேண்டி, என்று வெளியே வந்தான்.

சினிமாவில்... இங்க வலிக்குதா, இங்க வலிக்குதா, என்று அந்த இடங்களில் பெண்கள் முத்தம் தருகிறா மாதிரி காட்சி வைப்பார்கள். சரி. பரவாயில்லை.

கவிதையாப் பேசறேனாடி?  எழுதிக் கட்டறேன், என்று நினைத்தபடி வெளியே வந்தான். ஏ மாப்ள. இது காதலேதான்! உன்னைப் பத்தியே எழுதறேண்டி.

உள்ளெல்லாம் தம்புராவை மீட்டிய மாதிரி ஒரு ரும்ம் அதிர்வு. காதல் என்பதே தம்புரா மீட்டல்தானா?

அவன் சிநேகிதர்களில் சேஷாத்ரி வீட்டில் குமுதம் விகடன் எல்லாம் வாங்குவார்கள். நடுப்பக்கம் பெரிய உதடைப் போட்டு இது எந்த நடிகையோடது என்ற அறிவுக் கேள்விகளுடன் பத்திரிகை. அதில் வரும கவிதைகளைப் படித்துவிட்டு சேஷாத்ரி கவிதை என்று எதோ எழுதிக் கொண்டுவந்து வாசித்துக் காட்டுவான். அதை வாசிக்கும்போதே அவனுக்கு ஒரு புன்னகை. பெருமிதம். “போடா தமிழய்யா போதாதுன்னு இவன் வேற...” என்பான் கடுப்போடு. இப்போது அவன் அறிவாளியாகவும் ஞானகுருவாகவும் பட்டது ராஜகோபாலுக்கு.

மொட்டைக் கவிதை அவனிடம் கேட்டிருக்கலாம். அது அப்போது தோன்றவில்லை.

 

வெள்ளிதோறும் தொடர்கிறேன்

storysankar@gmail.com

Mob 91 97899 87842 / 91 94450 16842

 

 

Comments

Popular posts from this blog